Social Icons

Pages

Friday, February 13, 2009

கம்போடிய போர்த்தளபாடக் காட்சியகம் (Civil War Museum)

நட்பு, பகைமை, குரோதம், நம்பிக்கைத் துரோகம், ஆட்சிக் கவிழ்ப்பு, நில ஆக்கிரமிப்பு, அரச பயங்கரவாதம் இவையெல்லாம் விளைந்த ஏனைய யுத்தபூமிகளுக்கு கம்போடியா எந்த வகையிலும் சளைத்தது இல்லை. ஒரு காலத்தில் இரத்தம் தோய்ந்த இம்மண்ணில் எழுதியதற்கான வினையை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதல பாதாளத்தில் போன கம்போடிய நாணத்தின் வீழ்ச்சியும் அதனால் எல்லாப் பொருட்களையும் குத்துமதிப்பாக ஒரு அமெரிக்க டொலரில் இருந்து பாவிக்கும் வழக்கமும், வாழ்க்கைத் தர வீழ்ச்சியும், கை கால் முடமான சந்ததியும், அப்பா, அம்மா, உற்றார் உறவினர்கள் யாரென்றே தெரியாத பரம்பரையுமாக போரின் வடுக்களை இன்னமும் சுமந்து கொண்டு தான் இருக்கின்றது இந்த கம்போடிய சமூகம். பதவி வெறியும், என்னை விட்டால் யாரிங்கே உண்டு என்று எகத்தாளம் இட்ட ஆட்சியாளரும் அவர் தம் அடிப்பொடிகளும் இன்று காணாமல் போனோர் பட்டியலிலும், சிறைக்கதவுகளின் பின்னாலும். கொடுமையான போர் என்ற அரக்கன் ஓய்ந்தாலும் வினை விதைத்தோர் மட்டுமன்றி வினையற்றிருப்போரும் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்குக் கண் முன்னே சாட்சியமாக நிற்கின்றது இப்போது தான் ஓரளவு அமைதிச் சுவாசத்தை ஏற்றி கொண்டிருக்கும் கம்போடிய மண்.

கி.பி முதலாம் நூற்றாண்டில் Funan பேரரசோடு ஆரம்பித்த கம்போடிய மன்னராட்சி கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் ஜெயவர்மனின் கைமர் பேரரசுக் காலத்துக்கு மாறி கம்போடியாவின் ஆளுகையை வந்தேறி வென்றார்களிடம் கைமாற்றுகின்றது, இந்து மதத்தின் பரம்பலையும் கோயில்கள் மடாலயங்கள் மூலம் விதைக்கின்றது. அதனைத் தொடர்ந்து வந்த கி.பி 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் தேரவாத பெளத்தத்தின் ஆளுகை அண்டை நாடான தாய்லாந்து மன்னர்களின் கம்போடியா மீதான படையெடுப்பால் வீரியம் பெற்று வளர்கின்றது. அத்தோடு கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரை இரு பக்கமும் இருந்த வியட்னாம், தாய்லாந்து நாடுகளின் படையெடுப்பும், அதன் விளைவாக ஏற்பட்ட ஸ்திரத்தன்மையும் கம்போடியாவின் கறை படிந்த நாட்கள். குறிப்பாக 1890 ஆண்டு இந்த நாடு பெரும் பேரவலத்தைப் போர் மூலம் சந்தித்தது. ஒரு காலத்தில் வீரம் விளைந்த மண்ணாக விளங்கிய கம்போடியப் பேரரசு பின்னாளில் வீரியம் குறைந்து ஆட்டம் காணத் தொடங்கியது. பக்கத்து நாடுகளும் ஆளுக்காள் இந்த நாட்டைக் கூறு போட முனைந்தன. எதிரிகளுக்கு செக் வைக்க கம்போடிய மன்னன் Norodom சரணாகதி அடைந்த பிரான்ஸ் நாடு காவலன் என்ற பேரில் கள்ளத்தனம் புரிந்து தொடர்ந்து 90 ஆண்டுகள் கம்போடிய மண்ணில் இருந்ததோடு நாட்டின் வளங்களையும் சூறையாடிக் கடல் கடந்து கொண்டு சேர்த்தது.

1953 ஆம் ஆண்டில் Sihanouk என்ற மன்னனின் காலத்தில் கம்போடியா பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது. கூடவே இம்மன்னன் People's Socialist Community (Sangkum Reastr Niyum) என்ற அரசியல் கட்சியையும் ஸ்தாபித்து 1955 இல் குடியாட்சி மூலம் வெற்றி பெற்றான் பின்னாளில் அரசுத் தலைவர் ஆனான். 1960 களில் நிலவிய வியட்னாமிய யுத்தத்தின் போது சோவியத் மற்றும் அமெரிக்க சார்பற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் பின்னர் அமெரிக்காவுடனான இராஜ தந்திர உறவினை வெட்டி விட்டு வியட்னாமிய கம்யூனிஸ்ட் போராளிகளுக்குத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டினான். வியட்னாமியப் போராளிகளின் பாசறைகள் கம்போடியா மண்ணில் பரவின. ஆனால் அன்றைய காலகட்டத்தில் அதல பாதாளத்தில் போன கம்போடியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப எண்ணி மீண்டும் இவன் அமெரிக்காவுடன் கை குலுக்கினான். அத்தோடு வியட்னாமியப் போராளிகளின் பாசறைகளை அமெரிக்க விமானங்களுக்கு இரையாக்கித் தன் எட்டப்பன் நிலைப்பாட்டை நிலை நிறுத்தினான்.

1970 இல் Sihanouk வெளிநாட்டில் தங்கியிருந்த தருணம் பிரதமராக இருந்த General Lon Nol இவனைக் கவிழ்த்து விட்டு ஆட்சிப் பீடம் ஏறக் கிடைத்த வாய்ப்பைப் சட்டெனப் பற்றிக் கொண்டான். Sihanouk சீனாவில் அடைக்கலம் புகுந்து அங்கிருந்து கொண்டே தன் ஆட்சிக்கு ஆப்பு வைத்த General Lon Nol இற்குப் பாடம் படிப்பிக்கும் வகையில் கைமருப் படையணி (Khmer Rouge) என்ற ஒரு விஷப்பாம்பிற்குப் பால் வார்த்தான். Saloth Sar என்ற கைமருப் படையணித் தலைவன், இவன் தான் பொல் பொட் என்று அழைக்கப்பட்ட கொடுங்கோலன் கையில் கம்போடியாவின் ஆட்சியதிகாரம் மாறுகின்றது. குழிக்குள் விழுந்த Sihanouk இற்கும் குழி பறித்த General Lon Nol இற்கும் இல்லாமல் பொல் பொட்டின் கையில் குரங்கின் கைப் பூமாலையாகப் போய்ச் சேர்ந்த கம்போடிய மண் தொடர்ந்து Democratic Kampochea (DK)என்ற பொல் பொட்டும் , படிப்பறிவற்ற கிராமப்புறத்து இளைஞர் படையணியோடும் மானபங்கப்படுத்தப்படுகின்றது.

அறிவுஜீவிகள், சமயப்பற்றுள்ளோர் எல்லோருமே பொல் பொட்டின் ஆட்சியில் வேண்டப் பொருட்களாகின்றன. மதச் சுதந்திரத்திற்கும் தடை விதிக்கப்படுகின்றது. சனத்தொகையில் ஏறக்குறைய 26% மான கம்போடியர்களை அதாவது 750,000 இலிருந்து 1.7 மில்லியன் மக்களை அதாவது குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பொல்பொட் பல்வேறு காரணங்களால் கொடூரமாக இவன் கொன்று குவித்தான். இவனின் கொலைக்களம் (Killing Field) இன்றும் தலைநகரான Phnom Penh இல் மண்டையோடுகள் கொண்ட காட்சியகமாக விளங்குகின்றது. பல கம்போடியாவில் ஒரு அனாதைச் சந்ததியை உருவாக்கி வைத்து விட்ட கொடுங்கோலன் இவன்.

அத்தோடு சும்மாயிருக்கவில்லை. பக்கத்து நாடான வியட்னாமோடு போர் தொடுத்துச் சீண்டினான். சோவியத் யூனியனின் பலத்தோடு விளங்கிய வியட்னம் இதுதான் தருணம் என்று தன் பெரும்படையணியோடு 1975 இல் வியட்னாம் தொடுத்த போரினால் பொல்பொட்டின் படையணி அலறியடித்துக் கொண்டு கம்போடிய - தாய்லாந்து எல்லை வரை ஓடியது. அப்போது வியட்னாமின் எதிரியாக விளங்கிய தாய்லாந்து பொல்பொட்டிட்டிற்கும், அவன் கூட்டாளிகளுக்கும் ஆதரவுக் கரம் நீட்டியது. காடுகளில் மறைந்திருந்த பொல் பொட் 1988 இல் சுற்றி வளைப்பின் போது கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கின்றது. இல்லையில்லை அவன் இன்னும் உயிரோடு தான் எங்கோ இருக்கின்றான் என்றும் இன்னமும் நம்பும் கம்போடியர் கூட்டமும் இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் கம்போடியாவிற்கு வெளியே வியட்னாமை எதிர்த்து உருவாக்கிய Democratic Kampochea (DK)என்ற கைமரு ஆதரவு அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்தனர். பொல் பொட்டில் கையாட்களில் ஒருவராக இருந்த Hun Sen என்பவரே தான் ஜனநாயக வழிக்குத் திரும்பி விட்டோம் என்ற பெயரோடு இந்தக் கட்சியை கொண்டு நடாத்துகின்றார்.

1989 வரை வியட்னாமின் ஆளுகையோடு விளங்கிய கம்போடியாவின் விடுதலை சோவியத் யூனியனின் சிதறலோடு கைவிடப்பட்டு Hun Sen ஐ பிரதமராகக் கொண்ட ஆட்சியோடு இப்போது பயணிக்கின்றது. கொடுமை என்னவென்றால் இந்த நாட்டின் மன்னர் Norodom Sihanouk இனால் வியட்னாமுக்கு எதிராக வளர்த்து விடப்பட்ட கைமரு இயக்கம் இன்று ஜனநாயக வழியில் வந்ததாகச் சொல்லி மன்னர் மகன் Norodom Ranariddh ஐக் கூட ஆட்சியேற விடாமல் செய்தது பின்னாள் வரலாறு.

தான் இப்போது பொல்பொட்டின் ஆள் இல்லை என்று Hun Sen வெளிப்படையாகச் சொன்னாலும், பொல்பொட்டின் படையணியில் இருந்தவர்களுக்கு ராஜமரியாதையோடு கெளரவங்களும் பதவிகளும் வழங்கப்பட்டு இவரால் இன்று வரை வழிநடத்தப்படுவது கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். முன்னர் கைமருப் போராளிகளாக இருந்தவர்கள் இரத்தினக் கல் விளையும் பிரதேசமொன்றில் குடியமர்த்தப்பட்டு இன்று கெளரவமாக வாழ்கின்றார்கள் என்றார் என் வழிகாட்டி. ஆக, பொல் பொட்டால் உருவாக்கப்பட்ட அமைப்பு இன்று அவன் இல்லாவிட்டாலும் இன்னொரு வடிவில் ஆட்சி செலுத்துகின்றது.

1975 இல் நடந்த வியட்னாமிய கம்போடிய யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட இராணுவத் தளபாடங்களை சியாம் ரீப்பில் Civil War Museum என்ற பெயரில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள். ஒரு நாள் எனது வாகனச் சாரதி இந்த இடத்துக்குப் போவோம் வாருங்கள் என்றழைத்து அங்கே கொண்டு போய்க் காட்டினார். வரலாறுகள் எல்லா இடங்களிலும் ஒரே விதமான விதைகளைத் தான் போட்டு விட்டுப் போயிருக்கின்றன. வெளிக்கிளர்ந்த பெருமூச்சுடன் ஒவ்வொரு ஆயுதத் தளபாடங்களைப் பார்த்து விட்டு வெளியேறினேன்.
























கம்போடிய வரலாற்றுக் குறிப்புக்கள் உசாத்துணை:
Asianinfo.org
wikipedia.org
Civil War Museum படங்கள்: என் கமரா வழியே எடுத்தவை
ஆட்சியாளர் படங்கள்: பல்வேறு இணையத்தளங்கள்

11 comments:

புதுகை.அப்துல்லா said...

அண்ணா மீ த ஃபர்ஷ்ட்டு???

புதுகை.அப்துல்லா said...

பயனுள்ள தகவல்கள்.பாராட்டுக்கள்.

ஆமா எப்ப சென்னை வரப் போறீங்க???

கோபிநாத் said...

ம்ம்...காட்சியகம் பார்க்கும் போது வியப்பாக இருக்கு!

கானா பிரபா said...

வாங்க அப்துல்லா தம்பி ;)

சிங்காரச் சென்னைக்கு வரணும், பார்ப்போம் இந்த வருஷ நடுப்பகுதியில் முயல்கிறேன், வரும்போது நிச்சயம் உங்களைச் சந்தித்து விருந்து பகிர்வோம் சரியா

கானா பிரபா said...

//கோபிநாத் said...
ம்ம்...காட்சியகம் பார்க்கும் போது வியப்பாக இருக்கு!//


வாங்க தல ;)

சந்தனமுல்லை said...

//குத்துமதிப்பாக ஒரு அமெரிக்க டொலரில் இருந்து பாவிக்கும் வழக்கமும், வாழ்க்கைத் தர வீழ்ச்சியும், கை கால் முடமான சந்ததியும், அப்பா, அம்மா, உற்றார் உறவினர்கள் யாரென்றே தெரியாத பரம்பரையுமாக போரின் வடுக்களை இன்னமும் சுமந்து கொண்டு தான் இருக்கின்றது இந்த கம்போடிய சமூகம்//

அவலம்!!

கானாஸ்..வரலாற்றை நல்லா தொகுத்திருக்கீங்க பொறுமையா!!

//சந்தித்து விருந்து பகிர்வோம் //

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க கானாஸ்..விருந்து பகிர்வோம்..சொல்லவே அழகா ரசனையா இருக்கு! :-) இங்கே இருக்க RJs-ஐ உங்கக்கிட்டே ட்ரெய்னிங் அனுப்பப் போறோம்!!

கானா பிரபா said...

வாங்க சந்தனமுல்லை

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, என்னாது அங்கே இருப்பவங்களுக்கு நான் பயிற்சி கொடுக்கணுமா ;)

நிஜமா நல்லவன் said...

ஒரு வரலாற்று ஆசிரியர் மாதிரி விவரிக்குறீங்க....படங்கள் எல்லாம் அருமை!

நிஜமா நல்லவன் said...

/
சந்தனமுல்லை said...

இங்கே இருக்க RJs-ஐ உங்கக்கிட்டே ட்ரெய்னிங் அனுப்பப் போறோம்!!
/


வேணாம் தங்கச்சி ...அவங்க கானாஸ் மாத்திட போறாங்க...:)

கானா பிரபா said...

வாங்க நல்லவரே


மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,

யாரும் நம்மை மாத்தமுடியாதுலே ;)

J S Gnanasekar said...

நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:

https://goo.gl/photos/y8s4csU32scwTE6XA

- ஞானசேகர்