கம்போடியாவிற்குச் சென்றால் வெறுமனே ஆலயங்களின் தரிசனம் மட்டுமன்றி கீழைத்தேய நாடு ஒன்றின் வாழ்வியல் அமைப்பையும் கண்டு வரலாம். எனக்குக் கிடைத்த கொஞ்ச நாட்களில் கோயில்கள் பலவற்றைப் பார்த்து முடித்ததால் எஞ்சிய இரண்டு நாட்களில் பார்க்கக் கிடைத்தவற்றைப் பார்த்துவிடலாம் என்று முடிவு கட்டினேன். அந்த வகையில் என் பயண நாட்களில் கூடவே வந்த வாகனச் சாரதி பரிந்துரைத்த இடம் தான் மிதக்கும் கிராமம் (Floating Village).
சியாம் ரீப் நகரினை அண்மித்ததாக இருக்கும் இந்த மிதக்கும் கிராமத்தைப் பார்த்து விடுவோம் என்று ஒரு நாள் மதியவேளை கிளம்பினோம். பெருந்தெருவைக் கடந்து, அப்பால் போனால் ஒழுங்கற்ற தார் போடாத கற்களை மட்டுமே நிரவிய சாலை அது. கொடும் வெயிலும் சுட்டெரித்தது.
இந்த மிதக்கும் கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்கட் பிரிவினர் இருக்கின்றார்கள். அவரவர் தராதரத்திற்கேற்ப வசதியான வீடுகளையும் இந்த வாவியின் நடுவே அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள். பெரும்பாலும் சீனர்கள் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தவர்களாக இருப்பதைக் காட்டி நிற்கின்றன அவர்தம் வீடுகள். தனியே குடியிருப்புக்கள் மட்டுமன்றி, பாடசாலை, தேவாலயம், கடைகள் என்று எல்லாமே இந்தக் கடலில் எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்த இடங்களுக்குப் போவதற்கு ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர்க்கெனத் தனியான படகுகளும் உண்டு. அவை இந்த வீடுகளின் முன் புறத்தே கட்டப்பட்டிருக்கும். கம்போடியர்கள், வியட்னாமியர்கள், சீனர்கள் ஆகிய மக்கட் பிரிவினர் இங்கே தலைமுறைகளாக வாழ்ந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
எமது இரண்டு மணி நேரப் பயணத்தில் இடையில் தரிப்பிடமாக ஒரு நிலையம் முன்னே வந்து நிற்கின்றது. மற்றைய படகுகளில் வந்தோரும் ஒருங்கே இளைப்பாறிப் போகும் இடமாக இது விளங்குகின்றது. சாப்பாடு, கழிப்பறை வசதி, புத்தகசாலை என்பனவற்றோடு குறித்த சில கடல் வாழ் உயிரினங்களை காட்சிப்படுத்தும் அமைவிடமாகவும் இது திகழ்கின்றது. அரைமணி நேர ஓய்வின் பின்னர் மீண்டும் நகர்கின்றது படகு.
மாலை நேரத்தில் வந்து உணவருந்திச் செல்ல உயர் ரக நட்சத்திர உணவகமும் இங்கே முளைத்திருக்கின்றது.
வேறு படகுகளில் வந்து அதில் வாழைப்பழத்தைப் பரப்பி விட்டு விற்பனை செய்வோர், சின்னஞ்சிறு குழந்தையின் கழுத்தில் உயிருள்ள மலைப்பாம்பை மாட்டிப் பிச்சை எடுப்போர் என கடல் நடுவே வாழ்வாதாரத்தினைத் தேடி வரும் கம்போடியர்களையும் பார்க்கலாம். ஒரு காலத்தில் மாட மாளிகைகளையும், பெரும் எடுப்பிலான கோயில்களையும் கட்டி வாழ்ந்த சமூகத்தின் இன்றைய நிலையை இந்தக் கடலின் நடுவே காணும் இந்த ஏழ்மை வருத்தத்தை மனதில் விதைக்கின்றது.
6 comments:
அழகும், கலாசாரமும்,பரிதாபமும் ஒருங்கே தெரிந்த பதிவு..
அண்ணா, எனக்கென்னவோ இந்தப் பதிவில் நீங்கள் காட்டியுள்ள படங்கள் மூலமாக அந்த நாட்டு மக்களின் வாழ்வு பற்றிய பரிதாபமே அதிகளவில் தொனித்தது..
வணக்கம் லோஷன்
என்னதான் செழுமையானதொரு கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பிய நாடென்றாலும் போர் என்னும் கொடிய நோய் வந்து இந்த நாட்டினைச் சீரழித்த அவலத்தின் எச்சங்கள் தான் இவை. இன்று இவர்களுக்கு வருமானம் கொடுப்பவையே அந்தக் காலத்தில் எழுந்த இன்று சிதைந்த நிலையில் இருக்கும் கோயில்களை நோக்கி வரும் சுற்றுலாத் துறை தான்.
//ஒரு காலத்தில் மாட மாளிகைகளையும், பெரும் எடுப்பிலான கோயில்களையும் கட்டி வாழ்ந்த சமூகத்தின் இன்றைய நிலையை இந்தக் கடலின் நடுவே காணும் இந்த ஏழ்மை வருத்தத்தை மனதில் விதைக்கின்றது.
//
என்ன சொல்றது..பரிதாபமே மிஞ்சுகிறது!! படங்களே சொல்லிவிடுகின்றன்...அவர்தம் வாழ்வை!!
மிதக்கும் கிராமம் நன்றாக இருக்கு..ஆனா அந்த குழந்தைகளை பார்க்கும் போது தான் ;(
வருகைக்கு நன்றி சந்தனமுல்லை, மற்றும் தல கோபி
மிதக்கும் கிராமத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:
https://goo.gl/photos/CffWRmzBk8GJx6tJ8
- ஞானசேகர்
Post a Comment