Social Icons

Pages

Sunday, February 07, 2016

விசாரணை - என்னுடைய FIR


வழக்கம் போல நல்ல படங்களுக்கு வரும் குறைவான மக்கள் கூட்டத்தோடு சிட்னியிலுள்ள திரையரங்கில் விசாரணை படம் பார்த்தேன். இப்படியான வகையில் நம்பிக்கை கொடுக்கும் ரசிகர்களால் தான் முன்னர் "அவதாரம்" படத்தின் ஆஸி விநியோகஸ்தருக்கும் அதுவே கடைசிப் படம் ஆனது. அப்போது 15 பேருடன் மெல்பர்ன் திரையரங்கில் பார்த்திருந்தேன். "அங்காடித் தெரு" பட சிட்னி விநியோகஸ்தரும் மூன்று பேருடன் படம் காட்டிய அனுபவத்தில் அப்படியான விஷப் பரீட்சைக்கே பின்னர் இறங்கும் நிலை இல்லாமல் போனது. இதுதான் நல்ல படங்களுக்கும் அவற்றைத் திரையரங்கில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்குமான இடைவெளியை ஏற்படுத்தும் சமாச்சாரங்கள்.

சரி இனி "விசாரணை" க்கு வருவோம்.
தாமுண்டு தம் வேலையுண்டு என்றிருக்கும் அப்பாவிகள் நாலு பேர் ஆந்திரா காவல்துறையினரால் கொள்ளையடிப்பு வழக்கின் குற்றவாளிகள் ஆகுமாறு நிர்ப்பந்திக்கப்படும் சூழலுக்கு அவர்கள் ஆட்படும் போது அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள். ஆந்திராவில் இருந்து தம் தாய்த் தமிழகத்துக்கு வந்த போது எப்படியானதொரு சவாலை எதிர் கொண்டார்கள் என்பதே படத்தின் மூலம்.
சொல்லப் போனால் இரண்டு வெவ்வேறு முடிச்சுகளோடு பயணப்படும் கதை, இடைவேளைக்கு முன், பின் என்று பயணிக்கிறது.

உமா சந்திரன் எழுதிய "முள்ளும் மலரும்" நாவலை முழுமையாகப் பயன்படுத்தாமல் அதன் முக்கிய கதையோட்டத்தை வைத்து மீதியைத் தன் பாணியில் கதையாக்கி "முள்ளும் மலரும்" படத்தை இயக்கிய போதும் இயக்குநர் மகேந்திரன், மூல எழுத்தாளக்குரிய கெளரவத்தையும், அடையாளத்தையும் ஒரு போதும் குறைத்துக் காட்டியதில்லை.
அது போலவே  மு.சந்திரகுமார் தன் சுய வாழ்வியல் குறிப்புகளை வைத்து எழுதிய "லாக்கப்" என்ற புதினத்த்தை இந்தப் படத்தின் முதல் பகுதியில் மட்டும் பயன்படுத்தி மீதியை இன்னொரு களத்தோடு இணைத்துப் புதிதாகக் கதை பண்ணிய வெற்றி மாறனும் இங்கே மு.சந்திரகுமாருக்கான முக்கியத்தை என்றும் தவிர்த்ததில்லை.
இயக்குநர் வெற்றி மாறனைப் பொறுத்தவரை அவரின் முந்திய படைப்புகளோடு ஒப்பிடும் போது "விசாரணை" அசுரப் பாய்ச்சல். அதுவும் இரண்டு கதை அம்சங்களை ஒரே காவல்துறை எனும் தளத்தில் நிகழ்ந்தாலும் இரு வேறுபடுத்திக் காட்டிய விதத்திலும் "வெற்றி" மாறன் தான்.

ஆனால் காட்சியமைப்புகளில் ஏற்கனவே பார்த்த இயக்குநர் மிஷ்கின் போன்றோரின் காவல் துறைப் படங்களின் ஒரு சில காட்சியமைப்புகளை நினைவுபடுத்துவது போலத் தோன்றி மறைகிறது.
ஆனந்தியின் பாத்திரமும், தினேஷ் & ஆனந்தி நட்பும் படத்தின் ஓட்டத்துக்கு எந்த விதத்திலும் உதவாத இடைச் செருகல்.
ஒரு மணி நேரம் 40 நிமிடம் ஓடும் படத்தில் பாடல்கள் இல்லை, இருந்தால் படத்தின் இயல்பைக் கெடுத்திருக்கும். ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை உறுத்தாமல் உதவுகிறது.
இடைவேளையே தேவை இல்லை எனுமளவுக்குப் படத்தைக் கவனம் சிதறாமல் எடுத்த விதத்திலும் வெற்றி மாறனுக்கு வெற்றியே.

நடிகர் தேர்வில் "அட்டகத்தி" தினேஷ், ஆடுகளம் முருகதாஸ் போன்றோர் படத்தின் பாத்திர அமைப்புக்கு ஏற்ற பாங்கில் இருப்பதால் இயல்பாகப் பார்க்க முடிகிறது.
சமுத்திரக்கனி இன்னொரு பிரகாஷ் ராஜ் ஆகும் அபாயக் கட்டத்துக்குப் பயணிக்கிறார்.
அதே பார்த்துப் போன இவரின் முந்திய பாத்திர நடிப்புக்குக் கொடுத்த உடல் மொழி, நல்லவரா கெட்டவரா என்று குழப்பும் நடையுடை. ஆனால் இந்த மாதிரிப் படங்களைப் பரவலான ரசிகர் வட்டத்துக்கு இழுத்துச் செல்லும் நட்சத்திர அந்தஸ்துக்குப் பலமாக அமைவார் என்ற விதத்தில் ஏற்கலாம். 
இங்கே சமுத்திரக்கனியின் கையைப் பிடித்து நான் இழுத்ததற்கு முக்கிய காரணமே நடிகர் கிஷோர் தான். முக்கியமான அரசியல் புள்ளியின் auditor ஆக வரும் கிஷோரை மையப்படுத்தித்தான் இந்தப் படத்தின் இரண்டாம் பகுதி.

வில்லன் என்றால் ஏகத்துக்கும் மிகை நடிப்பு, அப்பாவி என்றால் தரையில் தவழாத குறையாக நடித்துத் தள்ளும் நடிகர்களில் கிஷோர் இந்தப் படத்தில் கொடுத்திருக்கும் நடிப்புத் தான் இந்தப் படத்தில் பங்களித்த அனைவரையும் தள்ளி விட்டு முன் நிற்கிறது. 
இவர் வரும் ஆரம்பக் காட்சியில் இருந்து இறுதி நொடி வரை நுணுக்கமாகப் பார்த்தால் ஒரு மகா நடிகன் தன்னுடைய நடிப்பை எவ்வளவு தூரம் தனித்து வித்தியாசப்படுத்திக் காட்டலாம் என்ற ரீதியில் அனுபவிக்கலாம். 
மற்றப்படி இந்தப் படத்தின் ஒவ்வொரு பாத்திரத் தேர்வும் கச்சிதம். 

படத்தொகுப்பாளர் கிஷோர் இந்தப் படத்துக்குப் பலம், அவரின் நிரந்தர இழப்பை ஆரம்பத்தில் நினைவுபடுத்திய விதத்தில் மனம் கனத்தது.

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணித் தயாரிப்பில் "காக்கா முட்டை" ஐத் தொடர்ந்து "விசாரணை" என்று இரண்டு நல்ல படைப்புகள். இதில் முன்னதுதான் உலகத் தரத்துக்கான சமரசம் இல்லாத இயல்பான படம் என்பது என் கருத்து. 

ஒரு வருடத்துக்கு முன்பே தயாரிக்கப்பட்டாலும் இந்த ஆண்டின் நடப்புத் தமிழக அரசியலோடும், கடந்த வருடங்களில் நிகழ்ந்த அரசியல் சதுரங்க விளையாட்டுகளை உன்னிப்பாகக் கவனித்தோரும் இந்தப் படத்தின் காட்சி அமைப்போடு ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது.

சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற எழுத்தாளர் மு.சந்திரகுமாரின் காட்சிப் பதிவுகளைப் படம் முடிவில் இணைத்தது சிறப்பு.
வெனிஸ் இல் நிகழ்ந்த சர்வதேசப் பட விழாவில் போட்டிப் பிரிவில் பங்கேற்ற முதல் படம் விசாரணை. Amnesty International Italia விருதைப் பெற்றுக் கொண்டது.

"விசாரணை" போன்ற நல்ல சினிமா இன்னும் வர இவற்றைத் திரையரங்கு சென்று பார்த்து, இறுதியில் இடம் பாராது எழுந்து நின்று கை தட்டிக் கொண்டாட வேண்டும்.