Social Icons

Pages

Sunday, January 07, 2018

மதுரை நகர உலாத்தல் 🌴 தங்குமிடம் தந்த சுகம்








பெங்களூருக்குத் தொழில் நிமித்தம் பயணப்பட்ட போதெல்லாம் சென்னையையும் எட்டிப் பார்த்தது ஒரு காலம். பின்னர் ஒவ்வொரு தமிழகப் பயணத்திலும் ஏதாவது சிறப்பு நகரத்தைக் குறி வைத்து, ஒரு சில நாட்களாவது அங்கு தங்க வேண்டும் என்ற பயணத் திட்டத்தோடு என் உலாத்தலை அமைத்துக் கொள்வேன்.
எப்படி இளையராஜாவின் பாடல்களையெல்லாம் கேட்டு முடிக்க ஒரு ஆயுள் போதாது என்பது போலவே என் கணக்கில் வைத்திருக்கும் தமிழகப் பயணங்களும்.
Hong Kong போனாலும் மலேசியா போனாலும் அங்குள்ள தமிழரது வாழ்வியலைத் தேடுவதிலேயே என் நாட்டமிருக்கும்.
ஆதலால் வட இந்தியப் பயணங்களில் அவ்வளவு நாட்டம் எழுவதில்லை.
இம்முறை மதுரைக்குப் போக வேண்டும் என்றதுமே விமானப் பயணச் சீட்டை எடுக்கு முன்பே “தென்மதுரை வைகை நதி” இலிருந்து “மதுர மரிக்கொழுந்து வாசம்” வரை ஒரே மதுரைப் பாடல் பட்டியலாக மனது பாடத் தொடங்கி விட்டது.
தமிழகத்தில் பத்து நாள் அதில் ஐந்து நாள் மதுரையில் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தேன். ஆனால் தாய் நாட்டில் காலடி வைத்ததுமே இலக்கியா அம்மாவுக்கு வைரஸ் காய்ச்சல் கண்டதால் என் பயணத் திட்டங்கள் மதுரைக்குக் கிளம்புவதற்கு முன் தினம் வரை நிச்சயமில்லாதிருந்தது. நாட்களையும் சுருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
Australiaவின் குடியுரிமை பெற்றவர்களும் இந்தியாவுக்கான e-Visa வைப் பெற முடியும் என்பதால் இரண்டு நாளுக்குள் கிடைத்து விட்டது. ஆனால் இந்த முறைமையின் கீழ் Visa கிடைத்தால் தமிழகத்தில் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களினூடாகவே உட் புக முடியும். எனவே கொழும்பில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை இருந்தாலும், சென்னைக்குச் செல்வோம். பின்னர் அங்கிருந்து மதுரைக்குப் போகலாம் என நினைத்தேன். ஆனால் என் குறுகிய பயணத் திட்டத்தால் தரை வழிப் போக்குவரத்து சரிவராது. ஆகவே வைகை எக்ஸ்பிரசில் கால் வைக்கும் பேறு கிட்டவில்லை. கொழும்பு விமானம்
மாலை நேரம் சென்னையில் வந்திறங்கியது. இந்த இரவை ஏன் வீணாக்குவான் என்று மனதில் நினைத்து விட்டு அண்ணாவிடமிருந்து காமராஜரிடம் (பன்னாட்டு -உள் நாட்டு) போனேன் 😀
Spice Jet காரனிடம் மதுரைக்கான விமானச் சீட்டு இல்லையாம். Indigo வில் ஏறுவோமென்றால் சமீபத்தில் அதன் ஊழியர் பயணிக்குச் செமத்தியாக அடித்தது கண்டு முன் வைத்த காலைப் பின் வைத்தேன். Air India வில் இருக்கக் கூடும் அதை விடத் தரை வழியே சீக்கிரமாகப் போய் விடலாமே என்று அந்தப் பக்கம் போகாமல் கடைசி ஆயுதம் Jet Airways இடம் போனேன். அவனைக் கடைசியாக வைக்கக் காரணம் ஒரு விமானச் சீட்டு விலையில் இரண்டு கொழும்புப் பயணத்தை Spice Jet வழியாகப் போய் விடலாம். (இரவுக்) கொள்ளை விலை கொடுத்து Jet Airways இல் ஏறினேன்.
மதுரை என்றால் மதுரை மீனாட்சி அம்மன் தான் மீதி எல்லாம் பின்னர் தான் என்று முடிவெடுத்ததால் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பக்கமாக ஒரு தங்குமிடம் பார்த்து வைத்திருந்தேன். அதுதான் Hotel Sabarees Residency 300 Meter தொலைவில் மீனாட்சி அம்மன் கோபுரத் தலை வடிவாகத் தெரியுமளவுக்கு நெருங்கிய தூரம்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து Airport Taxi மூலம் சபரீஸ் இற்கு வந்து சேர்ந்தேன்.
அந்தத் தங்குமிட நடத்துநர் குங்குமப் பொட்டுடன் பக்திப் பழமாக வரவேற்றார். ஒரு ஆள் தங்குவதற்கான அறை. வெள்ளைக்காரரும் வந்து போகக் கூடிய இடம். சுத்தமும், சுகாதாரமுமாக அந்தத் தங்குமிடச் சூழல். அறையும் முதலுக்கு மோசமில்லாத தரம். குளியலறைக்குப் போகும் போதுதான் தெரிந்தது பற்பசை (toothpaste) வாங்க மறந்து விட்டேன் என்று.
தங்குமிடத்தில் இருந்து வெளியே வந்தேன். இரவு பத்து மணியிலும் அந்நியப்படாத அந்த இருட்டைப் பகலாக்கிக் கொண்டு கடைகள் திறந்திருந்தன. தூங்கா நகரத்துத் தெருக்களை நேரில் கண்டு உள்ளுக்குள் புளுகம் தலைவிரித்தாடியது.
மனித மாடுகள் என்று ஈழத்து எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் சொன்ன, மனிதரைச் சுமந்து போகும் கை வண்டிக்காரர் இந்த யுகத்திலும் இருப்பதை ஆச்சரியத்தோடு கண்டு கடந்தேன்.
மேல மாசி வீதிக்குள் நடந்து போனேன். மதுரை மீனாட்சி அம்மன் கோபுரத்தைப் பார்த்ததும் செருப்பக் கழற்றி விட்டுக் கை கூப்பத் தொடங்கி விட்டது.
வளையல் கடைகளுக்குள் பல்லின அங்காடி ஏதும் இருக்கிறதா என்று கண்கள் தேடின. ஒரு பத்து வயது மதிக்கத்தக்க பையனிடம்
“தம்பி! இங்க டூத் பேஸ்டு விக்கிற கடை எங்கே இருக்கு” என்று கேட்டேன்.
ஏற இறங்கப் பார்த்து விட்டுத் “தெரியல சார்” என்றான்.
சரி இன்னும் சுத்துவோம் என்று அந்த இருட்டுக்குள் அலைந்த கண்களில் அகப்பட்டது ஒரு மருந்துக் கடை.
எட்டிப் பார்த்தால் சோப் இலிருந்து பற்பசை ஈறாக எல்லாம் இருக்கிறது. அந்த மருந்தகத்தின் விற்பனையாளரே மருந்து வாங்க வருபவருக்கு திடீர் மருத்துவராக மாறி கை வைத்தியம், நாட்டு வைத்தியம் எல்லாம் சொல்வதை வேடிக்கை பார்த்து விட்டு நான் தேடிய சரக்கை வாங்கி விட்டு அறைக்குத் திரும்பினேன்.
புது இடம், நித்திரை வரவில்லை. இருந்தாலும் நாளை சீக்கிரமே எழுந்து ஊர் சுற்ற வேண்டுமென்று வலியப் படுக்கையில் விழுந்தேன்.
நுளம்பு ஒன்று என்னைச் சுற்றி வட்டமிட நானோ “நான் ஈ” பட வில்லன் சுதீப் ஆக மாறிச் சுழன்றடித்தேன். நுளம்பு பயந்து ஓடி விட்டது. அந்த அலைச்சலில் நானும் தூங்கி விட்டேன்.
மதுரை மீனாட்சி அம்மன் தரிசனத்துடன் அடுத்த உலாத்தல்.....

1 comment:

தனிமரம் said...

மதுரைக்க்கோயில்கள் வீதிகளில் கடைகளில் ஏதாவது அவசரத்துக்கு தேடினால் உடனே கிடைப்பது கடினம்.