Social Icons

Pages

Wednesday, May 31, 2006

சிட்னியிலிருந்து திருவனந்தபுரம் வரை

மே 26, காலை 8.00 மணி (சிட்னி/அவுஸ்திரேலியா நேரம்)

சிட்னி விமான நிலையம் போவதற்காக Taxi ஒன்றைப் பிடித்தேன். வழக்கம்போற் சாரதியுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே பயணித்தேன். வாகனச்சாரதி ஒரு ஈராக் நாட்டவர். அமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். முன்பெல்லாம் ஈராக்கில் பெற்றோலியம் கொள்ளை மலிவாம், 20 சதத்துக்கு அதிகப்படியான லீட்டரை நுகர்வோர் கொள்முதல் செய்யலாமாம். ஈராக்கைப் பொறுத்தவரை இப்படிப் பெற்றோலியப் பொருட்கள் மலிவாகக் கிடைப்பதால் தனியார் சில்லரை வியாபாரங்களில் ஈடுபடாததால் வழக்கம் போல் அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களே விற்பனையில் ஈடுபடுகின்றனவாம். ஈராக் மீதான வெளிநாட்டுப் படைகளின் முற்றுகையின் பின்னர் பெற்றோலியப்பொருட்களின் விலை அங்கும் கிடுகிடுவென உயர்ந்துவிட்டதாம்.

இருவரின் சம்பாஷணையின் போது அவர் சொன்ன இரண்டு விடயங்கள் கவனத்தை ஈர்த்தன.இந்த வெளிநாட்டுப் படைகள் எம் நாட்டுக்கு வந்து ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டும் என்று சொல்லுகின்றன. ஆனால் ஜனநாயகம் என்பது நாட்டுக்கு நாடு, கலாச்சாரம், மொழி போன்ற அம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறது. இவர்கள் அமுல்படுத்தும் ஜனநாயகம் மேற்கு நாட்டவரின் பண்பாட்டோடு சம்பந்தப்பட்டது. உன்னுடைய நாட்டைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்றுவிட்டு தன் கலாச்சாரத்தையும் திணித்து, எங்கள் நாட்டின் வளங்களையும் சுரண்டுகின்றார்கள். இவர்களுக்கும் சதாம் ஹுசைன் இற்கும் என்ன வித்தியாசம்?

ஈராக்கில் வாழும் குர்திஷ் (Kurdish) இன மக்கள் இந்தோ இரானியன் மொழிக்கலப்பைக் கொண்ட குர்திஷ் மொழியைப் பேசுகின்றார்கள். இவர்கள் ஈரான், சிரியா, துருக்கி போன்ற நாடுகளிலும் விரவி வாழ்கின்றார்கள். இந்தோ ஈரானியன் மொழிக்கலப்பால் இவர்களால் ஓரளவுக்கு ஹிந்தி மொழியைப் புரியமுடிகின்றதாம். அதனால் ஹிந்திப்படங்களின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்களாம். அங்கும் ஹிந்தித் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றனவாம். ரிஷிகபூர், சசிகபூர், அமிதாப் என்று நடிகர்களின் பெயரை அள்ளிவிட்டதோடு, குர்திஷ் மொழியின் வழக்கில் உள்ள சில ஹிந்திச்சொற்களையும் அள்ளிவிட்டார் அந்தச்சாரதி.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஸில் check in பண்ணும் போது Raffles class இல் இருப்பதாகக் கண்டு கொண்டேன்.விமானத்தில் ஏறமுன்னரும் இருக்கையில் அமரும் போதும் Dan Brown இன் Da Vinci Code, Digital Fortress நாவல்களால் மறைத்த தலைகள் தென்பட்டன. சிவகாசி படம் ஏப்ரல் மாதத்தில் இருந்து மாற்றாமல் இருந்தது, கண்ட நாள் முதல் படமும் இருந்தது. வானொலியில் சிங்கப்பூர் ஒலி 96.8 புகழ் மீனாட்சி சபாபதி தொகுப்பில் பாடல்கள். பரமசிவன் படத்திற்காக " ஆச தோச அப்பளம் வடே" ஒலித்துக்கொண்டிருந்தது.

மே 28, மாலை 5.45 (சிங்கப்பூர் நேரம்)

சிங்கப்பூர் விமானநிலையத்தில் விமானம் தரைதட்டியது. அடுத்துத் திருவனந்தபுரம் செல்லும் விமானம் ஏற இன்னும் 2 மணி நேரம் இருக்கிறது. இருக்கின்ற நேரத்தில் விமானநிலையத்தின் மேல் அடுக்கில் உள்ள இலவச Internet browsing centre இல் தமிழ்மணத்தை மேய்ந்தேன். டீசே தமிழன் "மழைக்காலம்" பதிவில் நனைந்துகொண்டிருக்கின்றார், வசந்தன் "டீ சே கடவுளானால்" என்று சீண்டிக்கொண்டிருக்கின்றார், சின்னக்குட்டி ' இச்சாதாரிப்பாம்புடன்" இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார், மதி தமிழியல் மாநாட்டுப் படம் காட்டுகின்றார். இன்னும் சில வலைப் பதிவுகளைப் பார்க்கின்றேன்.

திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்கான நுளைவிடத்துக்குள் நுழைந்துபோய் பயணிகளோடு பயணிகளாகக் கலந்து இருக்கையில் அமர்ந்தவாறே நேட்டம் விடுகின்றேன். நடிகை அசின் வருகிறாரா என்று கண்கள் தேடின
( வந்தால் டீ சேயிற்குச் சொல்லவேணும்).

திருவனந்தபுரம் செல்லும் விமானம் சற்றுத்தாமதமாக வரும் என்ற அறிவிப்பு வருகின்றது. இந்தியா செல்லும் எல்லா விமானங்களையுமே சம்பிரதாயபூர்வமாகத் தாமதித்து அனுப்புகின்றார்களோ என்று எனக்குள் அலுத்துக்கொண்டேன். செங்கை ஆழியானின் "ஆச்சி பயணம் போகிறாள்" நாவலை விரித்துப் படிக்கின்றேன்.

சிங்கப்பூர் நேரம் இரவு 8.30 இற்கு Silk Air விமானம் கிளம்பியது. Silk Air விமானம், Singapore Airlines இன் ஒரு பகுதிச்சேவையாகச் செயற்படுகின்றது.நேற்று கூட்டாளி தாஸ் உடன் கதைக்கும் போது " "உன்ர சொத்து நிலவரம் என்ன மாதிரி?" என்று கேட்டான். ஏனப்பா என்று நான் கேட்டபோது "இல்லை Silk Air பிளேன்கள் முந்தி அடிக்கடி விபத்துப்படுமாம்" என்று சொல்லிக் குறும்பாகச்சிரித்தவன். பாழாய்ப் போன அந்த ஞாபகம் வந்து அடி வயிற்றைக் கலக்கியது.

விமான இருக்கைகளிலும் சரி, மையத்திலும் சரி, வசதி இல்லாமல் அநியாயத்திற்கும் கஞ்சத்தனம் காட்டியிருக்கிறார்கள். மட்டுப்படுத்தப்பட்ட Portable DVD Player களை 10 டொலருக்கு வாடகைக்கு விடுகிறார்கள்.பக்கத்தில் இருந்த பாலன் என்ற கேரளத்துக்காரர் ஐ வாடகைக்கு வாங்கி ஒரு 5 நிமிடம் கூடப்பார்க்கவில்லை, "கண் எரிச்சல், பார்க்கமுடியவில்லை" என்றுவிட்டு அதை உபயோகிக்குமாறு வற்புறுத்துகின்றார். திருவனந்தபுரம் விமானம் என்பதால் ஏதாவதொரு நல்ல மலையாளப்படம் இருக்கும் என்று நினைத்து அதைச் சோதனையிட்டால் ஹொலிவூட் மசாலாக்களும், கஜினி தமிழ்ப்படமும் மட்டும் இருந்தன."சுட்டும் விழிச்சுடரே" பாடலை 964 தடவையாக மீண்டும் பார்த்துவிட்டு (963 தடவை சிட்னியில் பார்த்தது:-)) மீண்டும் அவரிடமேயே கொடுத்துவிட்டு "ஆச்சி பயணம் போகிறாள்" இல் மூழ்குகின்றேன்.கோழிவறுவலும் அரிசிச்சாதமும் இரவுபோசனமாகக் கிடைத்தது.

மே 29, இரவு 9.50 (இந்திய நேரம்)

திருவனந்தபுரத்தைப் பட்டு மாமி (Silk air) முத்தமிடுகிறாள்.சுங்கப்பிரிவுச் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு விமான நிலைத்திற்குள்ளேயே இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட Airport Taxi ஐ எடுக்கின்றேன். (புதிதாகப் பயணிக்கின்றவர்களுக்கு ஒரு தகவல், நீங்கள் சுயமாக விமான நிலையத்திலிருந்து வாகனப் போக்குவரத்தை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் Airport Taxi எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை ஒழுங்கு செய்யுங்கள், அவர்கள் உங்கள் பயணத்திற்கான சரியான கட்டணத்தையும் முன்னதாகவே அவர்கள் கூறிவிடுவார்கள்)

திருவனந்தபுரம் பெரிதாக விரிவாக்கப்படாத சிறிய விமான நிலையமே.வாகனத்தில் அமர்ந்து சன்னலின் வெளியே கண்களை அலையவிடுகின்றேன்.நான் இதுவரை கண்ட விமான நிலையப் புறச்சூழல்கள் பிரமாண்டமானதாகவும் கொங்கிறீற் ஹோட்டல்களையும், பரந்துவிரிந்த சாலைகளையும் கொண்டிருந்தன.ஆனால் இந்தச் சூழல் புதுமையாக இருக்கிறது.

நான் எளிமையானவன் என்று சொல்வது போலக் காட்சிகள் விரிய விமான நிலையத்திலிருந்து குறுகிய சந்துக்குள்ளால் பயணப்படுகிறது எங்கள் கார்.இந்த அமைப்பு எனக்கு யாழ்ப்பாணம் பாசையூர் வீதியை ஞாபகப்படுத்துகின்றது.

செரி, ஞான் பின்னக் காணம்......

Tuesday, May 30, 2006

உலாத்தல் - ஒரு முன்னோட்டம்

"எந்தநேரமும் உலாத்தல் தான் உவனுக்கு " இது என்ர அம்மா என்னைப்பற்றி.

ஒரு இடத்தில பொறுமையாக இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. என்னைப்பொறுத்தவரை படிப்போ, வேலையோ, வாசிப்போ, இசையோ, அல்லது நான் படைக்கும் வானொலி நிகழ்ச்சிகளோ, அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும்.அதுபோலவே அடிக்கடி புதுசு புதுசாக இடங்களைப் பார்ப்பதும், பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது அந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை என் நாட்குறிப்பில் எழுதுவது கூட எனக்கு ஆனந்தம் தரும் விடயங்கள்.கடந்த மூன்று நாட்களுக்கு முன் நான் சென்ற கேரள விஜயம், ஒரு முழுமையான பயணதொடரை ஆக்குவதற்கான முனைப்பை எனக்குள் தூண்டியிருக்கின்றது.

யதார்த்தபூர்வமான மலையாள சினிமாப் படைப்புக்களை நான் தொடர்ந்து பார்த்துவரும் போது எம் யாழ்ப்பாணத்து வாழ்வியல் தடத்தை நினைவுபடுத்தியது தான் என் இந்தக் கேரளப் பயணத்தின் தூண்டுகோல்.நான் சென்ற நாடுகளிலும், இடங்களிலும் வித்தியாசப்பட்டு என் பிறந்தகத்துக்குச் சென்ற திருப்தியோடு இந்தப் பயண நினைவுகளை அசைபோட்ட இருக்கிறேன்.கேரளப் பயணத் தொடர் முடிந்ததும் இன்னும் தொடரும் பல உலாத்தல்கள்.கண்டதும், கேட்டதும், படித்ததுமாக நான் உள்வாங்கிய விடயங்களோடு தொடந்து உலாத்த இருக்கின்றேன்.

நேசம் கலந்த நட்புடன்
கானா.பிரபா

Sunday, May 28, 2006

வணக்கம் நண்பர்களே!

வணக்கம் நண்பர்களே!

நான் இப்போது கேரளாவின் ஆலப்புழா என்ற இயற்கை கொஞ்சும் பிரதேசத்தில் இருந்து இதைப் பதிகின்றேன்.
முழுமையான சுற்றுலாப் பயணத்தொடரோடு வரும் வாரம் உங்களைச்சந்திக்கின்றேன்.

அன்புடன்
கானா பிரபா