Social Icons

Pages

Friday, July 25, 2008

கம்போடிய நடனம் கண்டேன்...!


அங்கோர் வாட் ஆலயம் சென்று மதிய உணவின் பின் சென்ற ஆலயங்கள் குறித்து தொடர்ந்து தராமல் அன்று மாலை நான் கண்டுகளித்த கம்போடிய கலாச்சார நடனங்கள் குறித்த பதிவாகத் தருகின்றேன். காரணம் இந்த நாட்டில் கோயில்கள் தவிர இவ்வாறான கலாச்சார அம்சங்களைப் பார்க்கும் வாய்ப்பும் அதிகம் உண்டு என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய கடமையில் இருக்கின்றேன்.

மார்ச் 15, 2008 அன்று மாலை ஐந்தைத் தொடவும், பெரும்பாலான கோயில்களைப் பார்த்த களைப்பும், கடும் வெயில் கொடுத்த அயர்ச்சியும் ஒரு சேர, ஹோட்டலுக்கு போனதும் குளித்து விட்டு கட்டிலில் சாயவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் ஏற்கனவே அன்று காலையில் நட்புப் பாராட்டிய ஹோட்டல் வரவேற்பாளினி ஆர்வமாக
"நீங்கள் இன்றிரவு கம்போடிய கலாச்சார நடனம் பார்க்கப் போகிறீர்களா?"
என்று கேட்கவும், களைப்பெல்லாம் கலைந்து போய் ஆமாம் போட்டேன்.
"சரி, ஆறு மணிக்கு ருக் ருக்குக்கு (tuk-tuk) (மனித ரிக்க்ஷா) ஏற்பாடு செய்கிறேன், குளித்து விட்டுத் தயாராக இருங்கள் என்றாள்.

நானும் மீண்டும் குளித்து முடித்து, ஒப்பனை செய்து வரவேற்பறைக்கு வரவும், ருக் ருக் தயாராக இருந்தது. "ஒரு அமெரிக்க டொலர் கொடுங்கள் போதும்" என்று சொல்லி வரவேற்பாளினி ருக் ருக்கை (tuk-tuk) கைகாட்டவும், வாகனத்தில் அமர்ந்தேன். கம்போடியாவின் நாணய அலகு படு பாதாளத்தில் போவதால் எல்லாமே அமெரிக்க டொலர் ஆக்கிவிட்டார்கள். ஒரு நியாயக் கணக்குப் படி பத்து, பதினைந்து நிமிட எல்லைக்குள் ஒரு டொலரால் சவாரி செய்யலாம்.

Koulen 11 Restaurant என்னும் பெரியதொரு உணவுச்சாலைக்கு வந்து நின்றது ருக் ருக். உள்ளே போகிறேன். ஏற்கனவே எனது ஹோட்டல் வரவேற்பாளினி எனக்கான ரிக்கட்டை Buffet உணவுடன் 12 அமெரிக்க டொலரில் பதிவு பண்ணி எனக்குக் கொடுத்திருந்தாள். மென்பானமோ, கடும் பானமோ எடுத்தால் அவற்றுக்குத் தனிக்கட்டணம். இவ்வாறான உணவுச்சாலைகளில் முன் கூட்டியே எமது இருக்கையைப் பதிவு பண்ணியிருக்க வேண்டும். இந்த உணவகம் மட்டுமன்றி கம்போடியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய உணவகங்களும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் வாரத்தின் சில நாட்கள் இரவு Buffet உணவு வகையறாக்கள் நிரப்பி இப்படியான கம்போடியக் கலாச்சார நடனக் காட்சிகளை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதே நடனக் காட்சி நுழைவுச் சீட்டு முன்னூறு டொலர் வரை போகும்.

இரவு உணவுகள் பரப்பி வைக்கப்பட்ட பகுதியில் எனக்கான உணவை எடுத்துக் கொண்டு என் இருக்கையில் அமர்கின்றேன். நிண்ட நெடிய பரப்புக்கு இப்படி மேசை, கதிரைகள் போட்டு முன்னே பெரும் அரங்கத்தில் கம்போடிய நடனக் காட்சி அரங்கேற இருக்கின்றது. கிட்டத்தட்ட ஐநூறு பேர் சமகாலத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு இந்த உணவகத்தில் இருக்கின்றது.
எனக்கு ஒரு ஓரப்பக்க ஆசனம் கிடைத்தது. மிகவும் முன்னே கிடைத்தால் புகைப்படம் எடுக்கவும் சிறப்பாக இருக்குமே என்று நான் முணுமுணுத்துக் கொள்ளவும்,
"மன்னிக்கவும், உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நானும் கணவரும் முதல் இருக்கையில் பதிவு வைத்திருக்கிறோம், அதில் நீங்கள் போய் உட்கார்ந்தால், நானும் கணவரும் இங்கே இருக்கலாம்" என் மெளன முணுமுணுப்பைக் கலைத்தவாறு ஒரு நடுத்தர வயது வட இந்திய மங்கை. ( நான் முணுமுணுத்தது எப்படிக் கேட்டது இவருக்கு ;-)
"பிரச்சனையில்லை நீ இங்கே வா" அவளின் கணவன் முன் ஆசனத்தில் இருந்தவாறே தொலைவில் என்னோடு பேசிய மங்கையை அழைத்தான்.

கூட்டம் மெதுமெதுவாகச் சேர்ந்து கோயம்பேடு ஆக இரைச்சல் வரவும், அதைக் கலைக்க மைக்கில் இருந்து "இதோ நீங்கள் கண்டு களிக்கவிருக்கும் கலாச்சார நடனம் ஆரம்பமாகிறது" என்று ஆங்கிலத்தில் அறிவிப்பு வந்தது, அப்போது நேரம் இரவு 7.30. திரைச் சீலை விலக, கம்போடிய இளம் கன்னி அப்சராவாக மேடையிலே தோன்றி வெள்ளை மலர் தூவி வரவேற்பு நடனம் கொடுக்கின்றாள். மெல்ல மெல்ல ஒவ்வொரு கன்னிகையரும் மலர்க் குவளைகளோடு மேடையில் தோன்றி அந்த நடனத்ததோடு இணைகின்றார்கள். தாய்லாந்தும், இந்தியாவும் சேர்ந்து செய்த கலவையாக அந்த அழகுப் பதுமைகள் இருக்கின்றார்கள். அடுத்து உழவுப் பாட்டு, கம்போடியா ஓர் விவசாய நாடாக இருக்கும் காரணத்தால் அங்கே தமிழகத்தில் இருக்கும் நாற்று நடவுப் பாடலில் இருந்து, அரிவி வெட்டும் பாடல்கள் வரை உண்டு என்பதற்குச் சான்றாக அந்த முழு உழவுப்பாடலும், நடனமும் கம்போடியக் கன்னியரும் காளையரும் சேர்ந்து கலக்க ஆடப்படுகின்றது. திரைச்சீலை மறைப்பில் இருந்து கொண்டே கம்போடிய பாரம்பரிய வாத்தியங்களைச் சிலர் வாசிக்கப் அந்த நடனங்களுக்கான பிற்பாட்டுப் பாடும் கூட்டமும் மேடையில் இருக்கின்றது. கம்போடிய மொழிப்பாடலும் இசையும் தான் இதை வேறுபடுத்துகின்றதே ஒழிய, அந்த நாட்டியம் அசல் இந்தியக் கிராமிய நடனத்தை ஒத்திருந்தது.

அந்த நடனத்தில் உழவன் ஒருவனுக்கும் உழத்தி ஒருத்திக்கும் வரும் காதலும் அமைகின்றது. வெட்கம், நாணம், குறும்பு, சீண்டல்,ஊடல், கூடல் எல்லாமே அந்த நடனக்காட்சியில் தீனி போடப்படுகின்றது.மிகவும் நளினமாக, எந்தவித செயற்கையும் விழுந்துவிடாது அந்தக் காட்சியை அமைத்திருந்தது சிறப்பாக இருந்தது.

அடுத்து வருகின்றது மீனுக்கும் அனுமானுக்கும் வரும் போட்டி நடனம். இது கம்போடியர்கள் பின்பற்றும் இராமாயணக் கதையாக அமைந்திருக்கின்றது. அதாவது இராமரின் பாலத்துக்கு வானரங்கள் உதவுகின்றன அல்லவா. அப்போது அதைத் தடுத்துப் பாலத்தை அடிக்கடி உடைக்க வருகின்றது ஒரு பெண் மீனினம். உடனே அந்த மீனின் மனதை மாற்ற அனுமார் முயல்கின்றார். எல்லா வழியும் செய்து பார்த்தும் எல்லாமே பயனற்றுப் போகவும், இறுதியாக அந்த மீனையே தன் காதல் வலையில் வீழ்த்தி அனுமார் மணம் முடித்து, இராமர் பாலம் கட்டும் திட்டத்தை நிறைவேற்றுக்கின்றார். அதையே பாடலும், காட்சியுமாக அழகாகக் காட்டுகிறார்கள், மீன் வடிவம் கொண்ட ஜோடனையில் பெண்ணும், அனுமார் முகவுருவில் வரும் ஆணும். ஆரம்பத்தில் அணையைத் தடுக்கும் மீனின் சேஷ்டைகளையும், பின்னர் அனுமான் வந்து மீனை மயக்குவதையும் அழகாக ஆடிக்காட்டினார்கள். பின்னணியில் இருப்போர் கம்போடிய மொழியில் விளக்கப்பாடலை இசையுடன் பாடினார்கள்.

பின்னர் என் சுற்றுலா வழிகாட்டியிடம் இதைப் பற்றி விபரம் கேட்டபோது, அந்த மீன் இராவணனின் மகள் என்றும், இராவணனுக்கு எதிராகப் போரிடப்போகின்ற இவர்களின் பாலத்தைத் தகர்க்கவேண்டும் என்ற முனைப்போடு அது செயற்பட்டதாகவும், பின்னர் அனுமானின் காதலில் விழுந்து அம்மீன் இந்த முயற்சியில் இருந்து விலகுவதாகவும் ஒரு விந்தையான கதை கம்போடிய வழக்கில் இருப்பதாகவும் சொன்னார்.
அடுத்து வருகின்றது இன்னொரு பாரம்பரிய நடனம். தேங்காய்ச் சிரட்டைகளை (கொட்டாங்குச்சி) ஆளுக்கு இரண்டாக வைத்துக் கொண்டு ஒலி எழுப்பிவாறே பாடி ஆடும் நடனம் அது.

நிறைவாக அப்சரா நடனம் நடக்கின்றது. தோழியர்கள் புடைசூழ அப்சரா வருகின்றாள். தோழியர்கள் எல்லோருமே அழகுப் பதுமைகளாக, அப்சராக்களாகத் தான் இருக்கின்றார்கள். இப்படியான கலாச்சார நடனம் ஆடுவது எல்லோராலும் சாத்தியமில்லையாம். இதற்கான அரச அமைப்பு ஒன்று இருக்கின்றதாம். அங்கே பதிவு பண்ணி முறையான பயிற்சியை அங்கேயே பெற்றுக் கொள்ள வேண்டும். அப்சரா என்னும் தேவதைப் பெண்ணுக்கு உருவ அமைப்பிலும், நடன இலாவகத்திலும் உரிய லட்சணங்கள் இருந்தால் தான் அந்த உயர் பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்களாம்.

இந்த நடனங்களை ஆர்வத்தோடு பார்த்தவாறே, விழுந்தடித்துப் படம் பிடிக்கும் கூத்தை எனக்கு அருகாமையில் இருந்த ஒரு வயதான அமெரிக்கத் தம்பதி வேடிகையோடும், நட்போடும் பார்த்து, என்னை அன்பாக விசாரித்தார்கள். தாங்கள் அமெரிககவின் கொலராடோ பகுதியில் இருந்து வந்திருப்பதாகவும், தங்களின் இனிய பயண அனுபவங்களையும் சொல்லி மகிழ்ந்தார்கள் Barry & Caroline தம்பதியினர். "உன்னைச் சந்தித்தது மிகப் பெரிய சந்தோசம், மிகவும் பணிவான பையனாக இருக்கிறாயே" என்று என் கையை இறுகப் பிடித்துச் சொல்லி விட்டு " உன் எதிர்காலம் நன்றாக அமையட்டும், தொடரும் பயணம் சுகமாக இருக்கட்டும்" என்று வாழ்த்தித் தன் கணவரோடு விடைபெற்றார் கரோலின். எனக்கு என் அம்மம்மாவின் ஞாபகம் வந்து கண்கள் பனித்தது.

இரவு ஒன்பது மணிவாக்கில் அந்தக் கலாச்சார நடன விருது கலைந்தது. நடனமாதுக்களோடு சேர்ந்து புகைப்படம் எடுக்க வெள்ளையர் கூட்டம் மேடையை நோக்கி விரைகின்றது. நமது நாட்டின் பாரம்பரிய நடனங்களையும் இவ்வாறானதொரு வகையில் வெளிநாட்டவருக்கும், நம் அடுத்த சந்ததிக்குக்கும் காட்டினால் நம் நாட்டுப்புறக்கலைகள் அழியாமல் தொடருமே என்ற ஆதங்கத்தோடு என் தங்குமிடம் நோக்கி இன்னொரு ருக் ருக்கில் பயணித்தேன்.

Sunday, July 20, 2008

Angkor Wat இல் எஞ்சிய சில...!

கடந்த சில பகுதிகளில் அங்கோர் வாட் ஆலயம் குறித்த விரிவான பதிவுகளும், படங்களும் இடம்பிடித்திருந்தன. அங்கு எடுத்திருந்த படங்களில் சில ஏற்கனவே வந்த பதிவுகளில் இடம்பிடிக்காத காரணத்தால் அவற்றையும் இங்கே கொடுத்து அங்கோர் வாட் ஆலயம் குறித்த பகுதியை நிறைவு செய்து அடுத்த பகுதிக்குப் போகலாம் என்றிருக்கின்றேன்.

அங்கோர் வாட் ஆலயத்தின் சுவர்களில் இதிகாசக் கதைகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவை சிற்பங்களாக நீண்ட நெடிய சுவர்களில் வடிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இராமாயணக் கதை, குருஷேத்திரப் போர் (மகாபாரதக் கதை) போன்றவற்றின் காட்சி வடிவங்கள். அதிலும் குறிப்பாக எத்தனை பேர் இந்தப் போரில் இருந்தார்களோ அவ்வளவு போர் அணிகள், படைக்கலன்கள் போன்றவற்றை நீண்ட தூரச் சிற்பவேலைப்பாடாக அமைத்திருக்கின்றார்கள்.


இன்னொரு முக்கியமான சிற்பவேலைப்பாடாக அமைவது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த வரலாறு. இது சியாம் ரீப் நகரத்தின் பல பாகங்களிலும் முக்கியமான சிற்ப வேலைப்பாடாக இருக்கின்றது, அங்கோர் நகரம் எனப்படும் சியாம் ரீப் நகரத்தின் நுளைவு வாயிலின் இருமருங்கிலும் நீண்ட தூரத்திற்கு பெரும் சிலை உருவங்கள் வாசுகி என்னும் மலைப்பாம்பைப் பிடித்தவகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆலயம் மட்டுமன்றி பெரும்பாலான ஆலயங்களில் இருக்கும் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டோ, களவாடப்பட்டோ, சிதைக்கப்பட்டோ இருக்கும் அவலம் தான் எங்கும் காணமுடிகின்றது. இரு மதங்களுக்கிடையிலான போர் என்பதை விட நான் முன்னர் குறிப்பிட்டது போன்று போல் பொட் என்னும் சர்வாதிகாரியால் தோற்றுவிக்கப்பட்ட மத விரோத அமைப்பான பொல்பொட்டின் (Pol Pot) க்மருச் அமைப்பின் கம்யூனிசக் கொள்கையால் இவ்வாறான ஆலயங்களின் தூண்களிலும், சுவர்களிலும், சிற்பங்களிலும், சிலைகளிலும் துப்பாக்கிச் சன்னங்களின் காயங்கள் தெறித்திருக்கின்றன. சிற்பங்களின் முகங்களை வாளால் அரிந்திருக்கின்றார்கள். குறிப்பாக அப்சரா என்னும் தேவதைகளின் விதவிதமான அரிய சிற்ப வேலைப்பாடுகள் உருக்குலைந்து நிற்கின்றன.

பொல் பொட்டின் படையணிகளால் விளைந்த துப்பாக்கிச் சன்னத் தெறிப்பு

வியட்னாம் படைகளோடு பொல்பொட்டின் படைகள் போரிட்டபோது, ஒருகட்டத்தில் தாக்குப்பிடிக்கமுடியாமல் இவ்வாறான காடுகளுக்குள் மறைவாக இருந்த ஆலயங்களுக்குள் தான் தஞ்சம் புகுந்திருந்து தான் போரிட்டும், தங்களைப் பாதுகாத்தும் வாழ்ந்திருக்கின்றார்கள்.

இப்படியான ஆலயங்களுக்கு வந்த இன்னொரு ஆபத்து, இந்த நாட்டைத் தமது காலணியாக வைத்திருந்த பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து வந்தது. கம்போடியாவில் இருந்த இவ்வகையான ஆலயங்கள் புதர்களுக்குள் தொலைந்து போய் இருப்பதைக் கண்ட பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக Henri Mouhot என்ற பிரெஞ்சு ஆய்வாளரின் கண்டுபிடிப்புக்களின் பிரகாரம் அவை அகழப்பட்டதோடு மட்டும் நின்றுவிடாது, இந்த ஆலயங்களின் முக்கிய கேந்திரங்களில் இந்து மதச் சடங்கின் அடிப்படையில் புதைக்கப்பட்ட தங்க, வைர ஆபரணப் புதையல்களைச் சூறையாடினார்கள். புத்த விக்கிரங்களின் தலையைக் கொய்து அவற்றைத் தம் நாட்டுக்குக் கொண்டு போனார்கள். இன்றும் வெளிநாடுகளில் அலங்காரப் பொருளாக விற்கப்படும் கழுத்துக்கு மேல் உள்ள புத்தர் சிலைகள் இவ்வாறான களவாடல் மூலமே விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டவை.

உலகப் புகழ்பெற்ற இந்த அங்கோர் வாட் ஆலயத்தின் புராதனமும், பிரமாண்டமும் கம்போடிய நாட்டின் இருண்ட காலத்தில் நடந்த உள் நாட்டுப் போர்களால் வெளியுலகுக்கு அதிகம் தெரியாமல் போயிற்று. அதன் சிறப்பனை உணர்ந்து இப்போது ஆண்டுக்குப் பல்லாயிரம் வெளிநாட்டுப் பயணிகள் வந்து குவிகின்றனர். யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புக்கள் பாதுகாப்புக் குடை பிடிக்க, தன்னார்வலர்கள் பலர் இந்த ஆலயத்தைப் பேணும் நோக்கோடு பணியாற்றி வருகின்றார்கள். அங்கோர் வாட் ஆலயத்தைக் கண்ட திருப்தியில் மெல்ல வெயிற்களைப்பும், பசிக்களைப்பும் சேர அங்கிருந்து நகர்கின்றேன். நண்பகலைக் கடக்கின்றது சூரியன்.

Thursday, July 10, 2008

கம்போடியாவில் நிலவிய தெய்வ வழிபாடு

அங்கோர் வாட் தொடர் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடராமல் இழுபட்டுக் கொண்டிருக்கின்றது. வாரம் ஒரு பதிவாவது எழுதி இந்தத் தொடரை நிறைவாக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மீண்டும் தொடர்கின்றது.

கம்போடியாவில் எவ்வகையானதொரு மத வழிபாடு பின்பற்றப்பட்டது என்பதற்குச் சாட்சியமாக நிலைத்திருக்கின்றது அங்கோர் வாட் கோயில். இரண்டாம் சூரியவர்மன் கம்போடியாவின் மிகமுக்கியமானதொரு அரசனாகக் கொள்ளப்படுகின்றான். காரணம் அவன் ஆட்சியில் மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இவற்றைப் பற்றி முன்னரும் கம்போடிய மன்னர்கள் பற்றிய அறிமுகத்தில் கொடுத்திருந்தேன்.

இரண்டாம் சூர்யவர்மன் ஓர் விஷ்ணு பக்தனாக இருந்திருக்கின்றான். எனவே இந்த அங்கோர் என்ற மாபெரும் ஆலயமும் ஒரு விஷ்ணு கோயிலாகவே அவனால் அமைக்கப்பட்டிருக்கின்றது. கூடவே மகாபாரதப் போர், இராமாயண யுத்தம் போன்ற இதிகாசபுராணக் கதைகளையும், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த வரலாற்றையும் ஆலயத்தின் மிக நீண்ட சுற்றுமதில்கள் தோறும் அமைத்து முழுமையானதொரு விஷ்ணு வழிபாட்டின் கூறாகவே இவ்வாலயம் திகழ்ந்திருக்கின்றது. இவனது இந்தப் பெரும் திருப்பணி காரணமாகவே இவன் இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான். எனவே கி.பி 1113 - 1150 ஆண்டு வரை ஆட்சியாளனாகத் திகந்த சூர்யவர்மன் தீவிரமிக்க விஷ்ணு பக்தனாகத் திகழ்ந்தான் என்பது ஐயமுறத் தெரிகின்றது.

மேலே இருக்கும் படம் அங்கோர் வாட் ஆலயத்தின் உட்புறம் இருக்கும் தீர்த்தமாகும். அதை எனது சுற்றுலா வழிகாட்டி இந்தியாவில் இருக்கும் "கெஞ்சி" தீர்த்தத்துக்கு நிகரானது என்றார். எனக்குப் புரியவில்லை. மீண்டும் மீண்டும் கெஞ்சி, கெஞ்சி என்று அவர் சொன்னபோது அது காசி புனித தீர்த்தமாக இருக்கலாம் என்று நான் முடிவு செய்து கொண்டேன். அதற்குக் காரணமும் இருக்கின்றது. திறந்த, கூரையற்ற இந்தத் தீர்த்தம் மழை நீரைத்தேக்கி வைத்திருக்கவல்லது. அவ்வாறு தேங்கும் இந்த நீர் புனித நீராகக் கருதப்பட்டு, இறந்தோருக்கான பிதிர்க்கடனைச் செலுத்தும் தீர்த்தமாடமாகவும் கொள்ளப்பட்டிருக்கின்றது எனது சுற்றுலா வழிகாட்டி சொன்ன மேலதிக செய்தியே காரணமாகும்.

மேலே இருக்கும் படத்தில் உடைந்த சிலைகளின் சிதைவுகளைக் கற்குவியல் விக்கிரகங்களாக அமைத்து வைத்த கைங்கர்யத்தைச் செய்தவர்கள் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் என் வழிகாட்டி. அங்கோர் வாட் ஆலயத்துக்கு வரும் இந்த ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்த்த நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் இப்படி வேடிக்கையாகச் செய்த வேலையே அது.


மேலே இருக்கும் படம் அங்கோர் வாட் ஆலயத்துக்கு அருகில் இருக்கும், தற்போது வழிபாட்டில் உள்ள புத்த ஆலயமும், பர்ணசாலையும் ஆகும். அழிவில் அகப்பட்டிருக்கும் அங்கோர் வாட் ஆலயத்தின் உள்ளும் இந்த நாட்டு மக்கள் மற்றும் வருகை தரும் தாய்லாந்து நாட்டவர் உள்ளே உள்ள புத்த விக்கிரகங்களுக்குத் தம் வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அங்கோர் (Angkor) என்பதற்கு நகரம் என்றும் வாட் (Wat) என்பதற்கு ஆலயம் என்றும் சொல்லப்படுகின்றது. என்னுடன் வந்திருந்த சுற்றுலா வழிகாட்டியின் கருத்துப்படி வாட் (Wat)என்பது பிற்காலத்தில் இந்த ஆலயம் ஒரு பெளத்த ஆலயமாக மாற்றிய பின்னர் ஒட்டிக் கொண்ட சொல் என்றும் சொல்கின்றார்கள்.இன்று கம்போடிய தேசிக் கொடியின் மத்தியில் நடுநாயகமாக விளங்கும் அளவுக்கு இந்த அங்கோர் வாட் ஆலயம் புகழ்பூத்திருக்கின்றது. இந்த ஆலயம் விஷ்ணு பகவானை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தாலும் சிவனுக்கும் தகுந்த முக்கியத்துவம் கொடுத்திருப்பதை சிவனின் புராண வெளிப்பாடுகளாக இருக்கும் சிற்பவேலைப்பாடுகள் சான்று பகிர்கின்றன. சிவலிங்கத்தினை வித விதமான அளவுகளில் நிர்மாணித்திருக்கின்றார்கள். இந்த அங்கோர் வாட் ஆலயம் தவிர விஷ்ணு ஆலயங்களுக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தைச் சிவனாலயங்களுக்கும் வழங்கிச் சிறப்பித்திருக்கின்றார்கள். இன்றும் சிவா என்று அடையாளமிட்டு சிவனைத் துதிக்கின்றார்கள் இம்மக்கள்.சக்தி, இந்திரன், சூரியன் போன்ற கடவுளர்களை சிறு தெய்வ வழிபாடாகவும் வழிபட்டு வந்திருக்கின்றனர்.


வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும் போது ஆட்சியாளர்கள் தம்மை வழி நடத்திய மதக்குருமாரின் வழிகாட்டலிலும், பல்வேறு விதமான அனுபவங்கள் மூலமும் மதமாற்றத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் காணலாம். அது தான் கம்போடியாவிலும் நடந்திருக்கின்றது. பிற்காலத்தில் பெரும் புகழோடு இருந்த ஏழாம் ஜெயவர்மன் ஒருமுறை சியாம் நோக்கிய படையெடுப்பில் காணாமல் போகின்றான். அவனது மனைவி ஜெயதேவியின் சகோதரி இந்திரதேவி பெளத்தமதத்தைப் பின்பற்றியதோடு, பிரச்சாரகியாகவும் திகழ்ந்தவள். மன்னன் ஜெயவர்மனை நீண்ட நாட் காணாத துயரில் இருந்த இந்திரதேவியை பெளத்த மதத்துக்கு மாறும் படியும், அதன் மூலம் தொலைந்த மன்னனையும், அமைதியையும் மீளப் பெறலாம் என்றும் இந்திரதேவி தன் சகோதரியும் மகாராணியுமான ஜெயதேவிக்குச் சொல்லவும் அவள் பெளத்த மதத்திற்கு மாறுகின்றாள். ஆனால் மீண்டும் ஜெயவர்மன் நாடு திரும்புவதற்கிடையில் மகாராணி ஜெயதேவி இறக்கின்றாள். அவளின் சகோதரி இந்திரதேவியை இரண்டாம் தாரமாக மணமுடித்த ஜெயவர்மனும் பெளத்தமதத்தைத் தழுவுகின்றான். ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் 121 தங்குமிடங்கள் (Rest houses)102 வைத்தியசாலைகள் ஆகியவையும் கட்டப்பட்டனவாம். இவன் காலத்தில் மகாஜன பெளத்தம் என்ற பிரிவே பின்பற்றப்பட்டது. இவன் இறந்த பின் மஹாபரம செளகத (Mahaparama saugata) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.

இப்படியான மன்னர்களின் மதமாற்றம், மன்னன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்ற பாங்கில் அந்த நாட்டு மக்களின் பெளத்த மதமாற்றத்துக்கும் துணை புரிந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் இந்து மத விழுமியங்களைக் கைக்கொண்டு பெரும்பான்மையாக வாழ்ந்த சமூகம் இன்று 95 விழுக்காடு கொண்ட பெளத்த மதத்தைப் பின்பற்றும் சமூகமாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் மகாஜன பெளத்தம் என்ற பிரிவே இந்தக் கம்போடிய நாட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது. (மகாஜன மெளத்தம் இப்போதும் சீனா, பூட்டான், வியட்னாம், ஜப்பான், கொரியா, தாய்வான் போன்ற நாடுகளில் பெருமளவு பின்பற்றப்படுகின்றது)ஆனால் இன்றுள்ள கம்போடியாவில் தேரவாத பெளத்தம் என்ற பிரிவே பின்பற்றப்படுகின்றது. இந்தத் தேரவாத பெளத்தமே இலங்கை, பர்மா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. கம்போடியாவிற்கு அருகருகே மகாஜன பெளத்தம் நிலவும் வியட்னாமும், தேரவாத பெளத்தம் நிலவும் தாய்லாந்தும் இருந்தாலும், இந்தக் கம்போடியர்கள் தேரவாதத்தை தழுவிக் கொண்டதில் இருந்து சியாம் என்ற தாய்லாந்தின் ஆதிக்கம் மத ரீதியாகவும் கம்போடியாவை ஆட்கொண்டிருப்பதாக உய்த்து உணரலாம்.

என்னதான் பெளத்த மதத்தை இடையில் தழுவிக் கொண்டாலும், இன்றும் காய்ச்சல், பேதி என்று சின்ன சின்ன நோய்களில் இருந்து பெரும் வியாதிகள் வரை வந்து விட்டால் "சிவனே கதி" என்று அடைக்கலமாகி விடுவார்கள் இம்மக்கள். இன்றைய நவீன யுகத்திலும் ஒரு காலத்தில் விட்டொழித்த சமயச் சடங்குகளையும், தீவிரமான நேர்த்திக் கடன்களையும் இவர்கள் தொடர்வதைச் சொல்லி வைக்க வேண்டும். அதை ஒரு வேடிக்கைக் கதையாகச் சொன்னார் என் வழிகாட்டி. அதாவது இந்தக் கம்போடிய மக்கள் ஆங்கில மருந்து வகைகளை நம்பாமல், கொடிய நோய்கள் வந்தால் கூட நேர்த்திக் கடன் செய்கிறார்களே என்று இந்த நாட்டு அரசாங்கம் தொலைக்காட்சியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்கின்றதாம். அதில் தீராத நோயினால் நேர்த்திக் கடன் செய்ய வரும் பக்தன் முன் கடவுள் தோன்றி, ஆங்கில மருந்துக் குளிகைகளைக் கொடுப்பதாகக் காட்டுகின்றார்களாம். முக்கியமான அரச வைபவங்கள், திருமணச் சடங்குகள், மரணச் சடங்குகள் எல்லாமே இந்து மதம் சார்ந்த பண்பாட்டிலேயே நிகழ்கின்றன. சித்திரை மத்தியில் வரும் சித்திரைப் புத்தாண்டையும் தம் புத்தாண்டாகவே இன்னமும் கைக் கொள்கின்றார்கள்.

விஷ்ணு ஆலயமாக இருந்த இந்த அங்கோர் வாட் இப்போது இந்து மத விக்கிரகங்கள் ஓரம் கட்டப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டு, புதிதாக முளைத்த புத்தர் சிலைகளோடு இருக்கின்றது,
இந்த ஊர் மக்களின் மன(மத)மாற்றம் போலவே.....