Social Icons

Pages

Tuesday, July 31, 2012

லண்டன் நல்ல லண்டன்

The Original Tour பஸ்கம்பனியின் சிவப்பு பஸ் வந்து விட்டது. மேல் தளத்தில் சென்று கொடுக்கப்பட்ட இயர்ஃபோனைக் காதில் செருகி, மறுபாதியை இருக்கையின் முன்னேயிருந்த துளையில் இட்டால் பஸ்ஸில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பேழை வழியாக நாம் பயணிக்கும் பாதைகளையும், வரலாற்றுச் சிறப்பு மிக்க அம்சங்களையும் கூறிக்கொண்டே வந்தது. மிகத்துல்லியமாக பஸ்ஸின் ஓட்டத்தோடு ஒலியும் சேர்ந்து ஈடுபாட்டோடு பயணத்தை அர்ப்பணிக்க, கண்கள் பாதையின் இருமருங்கும் அளைந்தன.

"உங்கள் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம் லண்டனில் தங்கியிருந்து பிரித்தானிய விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் உற்சாகப்படுத்துங்கள்"
"வெளிநாட்டுக்கு விமானச் சீட்டு கிட்டவில்லையா, ஒரு இடமும் போகாமல் இங்கேயே இருந்து ஒலிம்பிக்ஸ் ஐ கண்டு ரசியுங்கள்"
இப்படியெல்லாம் மிரட்டலான விளம்பரங்களை விட்டதே ஒரு விமான நிறுவனம் என்றால் நம்புவீர்களா? பிரிட்டிஷ் ஏர்வேஸ் தான் அது. பெரிய பெரிய விளம்பரப்பதாகைகளில் லண்டன் ஒலிம்பிக்ஸ் ஐ ஆதரித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானக்கம்பனி தன் நாட்டுப்பற்றைக் காட்டியது. கூடவே ஏற்கனவே இருக்கும் வழித்தடங்களில் ஒரு விசேட பாதை உருவாக்கப்பட்டு லண்டன் ஒலிம்பிக்ஸ் இற்காகப் பயணிக்கும் உத்தியோகபூர்வ வாகனங்களே பயணிக்கமுடியும், மீறி யாராவது டயர் வைத்தால் தண்டப்பணம் கட்டவேண்டும் என்றுவேறு ஏற்பாடுகள். நான் பணிபுரியும் British Telecom, எங்கெங்கும் தொங்கும் துணியில் பொறிக்கப்பட்ட அறிவிப்புக்கள் லண்டன் ஒலிம்பிக்ஸ் இன் உத்தியோகபூர்வ தொடர்புசாதனப் பங்காளி என்பதைக் காற்றில் அலைந்தாடிக் கட்டிக்கொண்டிருந்தன.


இங்கிலாந்து பல நூற்றாண்டு பழமையைப் பேணும் நாடுகளில் ஒன்று என்பதைக் கட்டியங்கூறும் விதமாக, பிரமாண்டமாக எழுப்பப்பட்ட கட்டடங்கள் அவற்றில் பொறிக்கப்பட்ட ஆண்டுகள் காட்டி நிற்கின்றன. லண்டன் நகரில் அமைந்திருக்கும் ஒவ்வொரு கட்டிடமுமே ஒரு திறந்தவெளி அருங்காட்சியகங்களாக. இவற்றோடு ஒப்பிடும் போது இங்கிலாந்தவர்களின் புகுந்த வீடு அவுஸ்திரேலியாவின் உச்சபட்ட கட்டிடங்களின் வயதே நூற்றுச் சொச்சம் தான், வயதில் கொள்ளுப்பேத்தி வகையறா. தாயகத்தில் 1980 களில் கட்டிய கட்டிடங்களே யுத்தத்தின் அகோர தாண்டவத்தால் உருத்தெரியாமலும், கழுத்துக்குக் கீழ் முண்டமாகவும் கண்ட கண்களுக்கு லண்டனின் பெரும்பாகத்தில் நடப்பட்டிருக்கும் இந்தக் கட்டிடத்தொகுதிகளை வாய் பிளக்கப்பார்த்துக் கொண்டே போனேன்.

Trafalgar Square ஐ காட்டிக் கொண்டு போனது பஸ், நெப்போலியனின் ஆட்சிக்காலத்தில் பிரெஞ்சு மற்றும் ஸ்பானியப் கடற்படைகளுக்கு எதிராக ஸ்பெயினின் Cape Trafalgar இல் இங்கிலாந்துக் கடற்படையயினர் சந்தித்த வெற்றியை நினைவு கூரும் முகமாக இந்த நாமாகரம் எழுப்பப்பட்டதாம். இன்று அரசியல் மற்றும் பொதுவான நோக்கில் நிகழும் சந்திப்புக்களுக்கான ஒரு மையமாக இது பயன்பட்டு வருகின்றது.




Tower Bridge, Westminster Abbey, Big Ben, Buckingham Palace, London eye, Tower of London என்று ஒவ்வொரு இடமாகவும், அல்லது அதையொட்டிய வீதிகளினூடாகவும் பயணித்தது பஸ். விரும்பிய இடத்தில் இறங்கி அங்கு சுற்றிப் பார்த்து விட்டு அடுத்த பஸ்ஸில் ஏறினால் அதே வழித்தடத்தில் இன்னும் பார்க்கவேண்டிய மிச்ச இடங்களிலும் நின்று செல்லும். ஒரே பயணச்சீட்டைக் காட்டிக் கொண்டே பயணிக்கலாம், முழு நாளும். முதலில் எல்லா இடத்தையும் ஒரு சுற்று வைத்து விட்டு பிறகு ஒவ்வொன்றாகப் பார்ப்போம் என்று நினைத்து பஸ்ஸிலேயே நான் ஒட்டிக் கொள்ள, கூட வந்தவர்களோ ஒவ்வொரு இடங்களில் ஏற, புதுசுகள் சேர்ந்து கொண்டன. எல்லோருமே பெரும்பாலும் ஐரோப்பியர்கள். பக்கத்து நாடுகளில் இருந்து வந்திருக்கிறார்கள்.

இலேசாக மழை தூறத் தொடங்கியது. லண்டனில் இந்தவேளை கடும் கோடை என்றாலும் வர்ணபகவான் இங்கிலாந்துச் சனம் போல டபுள் ஷிப்டில் வேலை பார்க்கிறார். பஸ்ளின் மேலடுக்கில் திறந்தபக்கமாக இருந்த நான் முன்னே வந்து கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தேன்.

Hyde Park ஐக் காட்டினார்கள். என்ன கைப்பாட்டோ என்று எங்கள் ஊரில் சொல்லுமளவுக்கு பிரசித்தம், அது இந்த Hyde Park ஓ தெரியவில்லை. ஏனென்றால் இங்கே Speakers' Corner என்ற பகுதி இருக்கு, யாரும் இங்கு நின்று எதுவும் துணிச்சலாகப் பேசலாமாம்.

விளக்கேந்திய பெருமாட்டி என்று புகழப்பட்ட ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் Nightingale Training School என்ற தாதியர் பயிற்சிப் பள்ளியை அமைத்த St. Thomas' Hospital ஐ நாம் இப்போது பார்க்கிறோம், காதுக்குள் ஒலி சொல்ல முன்னே அந்த வைத்தியசாலை.

மழை பலமாக அடிக்கத் தொடங்க, இனி பஸ் பிரயாணம் சரிப்பட்டுவராது எங்காவது இறங்குவோம் என்று காத்திருந்தால், லண்டனின் புகழ்பெற்ற மெழுகுச் சிலைகளின் கண்காட்சியகம் Madame Tussauds ஐ அண்மிக்கிறோம் என்ற அறிவிப்பு வர, மெல்ல இறங்கி Madame Tussauds திசையில் நடந்தேன். அங்கே போனால் ஒரு திருவிழாக் கூட்டம் உள்ளே நுழையக் காத்திருந்தது. சரி, நுழைவுச் சீட்டை எடுப்போம் என்று போனால் அங்கே இன்னும் இரண்டு மடங்கு கூட்டம். சரி நானும் கூட்டத்தில் ஐக்கியமாவோம் என்று நினைத்து வரிசையில் நின்றேன். நாற்பத்தைந்து நிமிடம் கடந்தும் பாதி வழி தானாம், இன்னும் பாதி வழி இருக்கு என்றார்கள். பாதி வழியிலேயே சில மெழுகுச் சிலைகளைக் கண்ட திருப்தியோடு, இது ஆவுறதில்லை என்று சொல்லிக் கொண்டே, உள்ளே இருந்து வெளியேறினேன். Madame Tussauds இற்கு வருவதென்றால் முன்கூட்டியே இணைய மூலம் நுழைவுச் சீட்டைப் பதிவு செய்வதுதான் உசிதம் போல.

பசி வயிற்றைக் கிள்ள ஒரு Pizza Hut Restaurant இல் அடைக்கலமானேன். வெளியேறும் போது ஏண்டா இங்கே வந்தாய் என்று மனச்சாட்சி கேட்கும் அளவுக்கு மோசமான உணவு அனுபவம். மீண்டும் சிவப்பு பஸ்ஸை நோக்கி ஓடினேன், இம்முறை நிதானமாக ஒவ்வொரு இடத்தையும் இறக்கிச் சென்று உலாத்திப் பார்க்கவேண்டும் என்ற திடசங்கற்பத்தோடு

Sunday, July 22, 2012

லண்டன் நகர் வலம்

லண்டனில் வந்திறங்கிய இரவு எட்டு மணிக்கே கண்ணைச் சொக்கியது காரணம் சிட்னியில் அந்த நேரம் நடுச்சாமம் தாண்டியிருந்தது. அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே எழுந்துவிட்டேன். காலை எழுந்தவுடன் படிப்பு என்பது போல, காலை எழுந்தவுடன் உலாத்தலும் எனக்குப் பொருந்தும். காலை ஏழு மணிக்கெல்லாம் குளித்து முடித்து ஊர் சுற்றக் கிளம்பிவிட்டேன். தனியாளாக ஊர் சுற்றுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. காரணம், விரும்பிய நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம், ஆசைதீரப் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்துத் தள்ளலாம். ஆனால் லண்டனுக்குப் போகும் வரை அங்கே எதையெல்லாம் பார்க்கவேண்டும் என்று எந்தவிதமான திட்டமும் இல்லாமல் தான் இந்தப் பயணம் அமைந்திருந்தது.

நான் இருந்த ஊர் North Cheam, அங்கிருந்து பஸ் மூலம் தான் Morden என்ற ரயில் நிலையத்தை எட்டவேண்டும். North Cheam இல் இருந்து காலையில் ஐந்து நிமிட இடைவேளையில் பஸ் போக்குவரத்து இருந்தது. ரயில், பஸ், மற்றும் படகுச் சேவை முக்கியமான போக்குவரத்து ஊடகங்களாக இருக்கின்றன.
ஒவ்வொரு வலையங்களாகப் (Zone) பிரித்து வலையம் 6 வரை எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன. வலையம் 1 (Zone 1) லண்டனின் பெருநகரப்பகுதியோடு சேர்ந்த பகுதியாகவும், வலையங்கள் கூடக் கூட அவை புறநகர்ப்பகுதிகளாகவும் அமைந்துள்ளன. Zone 6 என்பது அண்மைய வருஷங்களில் லண்டன் பெரும்பாகத்தோடு இணைக்கப்பட்ட பகுதிகளாகவும் விளங்குகின்றன. Oyster Card எனப்படும் பயணச்சீட்டை நீங்கள் விரும்பிய வலையத்துக்கு ஏற்ப வாங்க முடியும். சுற்றுலா செல்வோர் அனைத்து வலையங்களுக்குமானது வாங்கினால் விரும்பிய நேரம் விரும்பிய இடத்துக்குப் போய் வர இந்தப் பயணச் சீட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

லண்டன் நகர பஸ்


அங்கு பயன்பாட்டில் இருக்கும் பஸ்கள் எல்லாமே இரண்டு அடுக்குக் கொண்டவை. சின்னப்பிள்ளையின் ஆசையோடு மேல் அடுக்கில் போய் உட்கார்ந்து கொண்டேன். ஒவ்வொரு தரிப்பாக நிற்கும் போது Morden ரயில் நிலையம் வந்துவிட்டதா என்று எட்டிப்பார்த்தேன். ஒரு முப்பது நிமிட வாக்கில் ரயில் நிலையத்தை அடைந்து விட்டேன். வடபிராந்திய ரயில் சேவையின் கடைசி ரயில் நிலையம் இது. அங்கே ரயில் போக்குவரத்து நிலத்துக்குக் கீழான போக்குவரத்திலும் (underground) அதிக சேவையில் ஈடுபடுகின்றது.
காலையில் அதிக கூட்டம் இல்லை. படுத்துக் கொண்டே போகலாம் போல, லண்டனில் சனக்கூட்டம் அதிகம் என்றார்களே என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் என் நினைப்பில் மண். ஒவ்வொரு ரயில் நிலையமாக கும்பல் கும்பலாக ஏறினார்கள். இறுதியில் நான் இறங்கவேண்டிய Bank என்ற முக்கிய தரிப்பில் வரும்போது ரயில் கொள்ளாத அளவு கூட்டம். கிட்டத்தட்ட தி.நகர் ரங்கநாதன் சாலை மாதிரி.

இன்னும் பழமை பேணும் பொதுத் தொலைபேசி நிலையங்கள்
லண்டனில் ஓடும் Taxi பெரும்பாலும் Fiat தயாரிப்புக்கள்

லண்டனின் கேந்திர முக்கியத்துவம் பெற்ற பகுதியாக Bank என்ற இடம் விளங்குகின்றது. முக்கியமான வங்கிகளின் அலுவலகங்களும் அமைந்துள்ளன. ரயிலில் இருந்து இறங்கியாச்சு, கெளரவம் சிவாஜி கணக்கில் "நான் எங்கே போவேன் எப்படிப் போவேன்" என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். ஆபத்பாந்தவராய் அங்கே கடமையில் இருந்த போலீஸ்காரரை அணுகி பக்கத்தில் ஏதாவது சுற்றுலாப்பயணிகளுக்கான தகவல் நிலையம் உள்ளதா என்று கேட்டேன். அவர் காட்டிய வழியில் ஒரு பத்து நிமிட நடையில் St Paul's Cathedral ஐ அடைந்தேன், அதற்கு அருகாமையில் தான் சுற்றுலாப்பயணிகளுக்கான தகவல் நிலையம் உள்ளது.
வானைத் தொடும் St Paul's Cathedral ஐ ஆவென்று பார்த்தேன். என்னைப் போல ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் இன்னபிற சுற்றுலாப் பயணிகள். லண்டன் சுற்றுலாவின் முக்கியமானதொரு ஸ்தலமாக இந்த St Paul's Cathedral விளங்குகின்றது. கி.பி 1675 and 1710 காலப்பகுதியில் கட்டப்பட்ட இந்தத் தேவாலயம் பல முக்கியமான நிகழ்வுகளை நடத்திய பெருமைக்குரியதானது. விக்டோரியா மகாராணி 1897 ஆம் ஆண்டில் தனது வைரவிழா ஆண்டையும், இரண்டாவது எலிசபெத் மகாராணி 2006 ஆம் ஆம் ஆண்டில் தனது 80 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியதும் இங்கே தான், அத்தோடு முழு உலகே தொலைக்காட்சியில் கண்டு கழித்த சார்ல்ஸ், டயானா திருமணக் கொண்டாட்டம் நடந்ததும் இங்கே தான். உள்ளே சுற்றிப்பார்க்க நுழைவுக்கட்டணமாக 15 இங்கிலாந்து பவுண்ட் அறவிடப்படுகின்றது.

பிரபல கவிஞர், சட்டவல்லுனர் இந்த St Paul's Cathedral இன் பரிபாலகராக இருந்த John Donne (கி.பி 1572 - கி.பி 1631) இன் உருவச் சிலை இந்த ஆலய வளவில் அமைக்கப்பட்டுள்ளது.

வந்தவேலையை விட்டு தேவாலயத்தைச் சுற்றுகிறானே என்று மூளை சொல்லியது. அங்கிருந்து கிளம்பி பொடிநடை தூரத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் நிலையம் சென்றேன். அங்கே புன்னகையை முகத்தில் குத்திக் கொண்டே ஒரு ஆடவரும் இரு அம்மணிகளும். லண்டனைச் சுற்றிப் பார்க்கவேண்டும் விபரமான தகவல் தரமுடியுமா என்று கேட்டேன். கையில் இரண்டு தகவல் புத்தகங்களைத் திணித்து விட்டு, இங்கிருந்து இரண்டு சுற்றுலாப் பேரூந்துக்கள் பயணப்படுகின்றன. அவை ஒவ்வொரு முக்கியமான இடங்களையும் தொட்டுச் செல்லும். The Original Tour எனப்படும் பஸ் கம்பனி நாள் ஒன்றுக்கு 23 பவுண்ட்களை அறவிடுகின்றது, ஒரு நாள் முழுக்கப் பயன்படுத்தலாம், இன்னொன்று Big Bus Sightseeing Tour என்ற பஸ் கம்பனி இரண்டு நாள் பாஸ் முறையில் 29 பவுண்ட்களை அறவிடுகின்றது. ஆனால் அந்த இரண்டு நாட்களும் தொடர் நாட்களாக இருக்கவேண்டும் என்றார்.

நாளை நடப்பது யாருக்குத் தெரியும் என்று The Original Tour இல் பயணப்படுவதற்கான டிக்கெட்டை வாங்கிக் கொண்டு பஸ் தரிப்பை அடைந்தேன். ஐந்து நிமிடத்தில் பஸ் வந்தது. மேலே அரைப்பாகம் மூடிய பஸ், மேல் பாகம் சென்று அமர்ந்து கொண்டேன். ஒவ்வொரு இருக்கைக்கும் இயர்ஃபோன் ஒன்று கொடுக்கிறார்கள். அதைக் காதில் செருகிவிட்டால் பஸ் பயணப்படும் ஒவ்வொரு வழித்தடத்திலும் இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பற்றி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு மூலம் சொல்லப்படுகின்றது. உண்மையில் இது மிகவும் பயனுள்ளதொரு விஷயமாக இருக்கின்றது. ஒவ்வொரு இடத்திற்கும் பஸ் கடக்கும் போது அச்சொட்டாக அந்த இடம் குறித்த வரலாற்றுப் பின்னணியைக் கொடுப்பது மிகுந்த சுவாரஸ்யம் கொண்டதாக அமைந்தது.

அப்படி நான் கடந்த இடங்கள் அடுத்த உலாத்தல் பதிவில்

Thursday, July 19, 2012

லண்டன் உலாத்தல் ஆரம்பம்

புலம்பெயர்ந்த 17 வருஷ வாழ்வில் அவுஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள ஆசிய நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளுக்குச் சென்றிருந்தாலும் இந்த ஆண்டின் கடந்த மாதம் வரை ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லாத கடன் ஒன்று இருந்தது. அதுவும் ஓரளவுக்கு நிரப்பப்பட்டிருக்கின்றது இந்த மாதம் லண்டன் உலாத்தல் மூலம். ஆனால் இந்தப் பயணம் முன்னர் எனக்கு வாய்த்த பயணங்களை விட ஏகப்பட்ட தில்லாலங்கடி ஆட்டங்களோடு நிறைவேறியிருக்கின்றது. மூன்று வாரப் பயணம் அதில் ஒருவாரம் தாயகத்தில் மற்றைய இரண்டு வாரமும் இங்கிலாந்தும் அதனைச் சூழவுள்ள ஐரோப்பிய நாடுகள் சிலதையும் பார்க்கலாம் என்ற வகையிலேயே இந்தப் பயணம் ஆரம்பத்தில் அமையவிருந்தது. ஆனால் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் மூன்று வாரம் என்பது பத்து நாட்களாகக் குறைய அதில் நான்கு நாட்கள் சிட்னியில் இருந்து லண்டன் வரைக்குமான போக்குவரத்துக்குத் தியாகம் செய்ய வேண்டிய நிலை வந்து விட்டது. இதில் நிறையப் படிப்பினைகளும் கூட.

முதல் பாடம், விலை மலிவு கருதி முகம் தெரியாத விமானப்பயண முகவரை நாடக்கூடாது. வழக்கமாக நான் பயண ஏற்பாடுகளைச் செய்யும் முகவரை என் அவசரத்துக்குப் பிடிக்க முடியாத நிலையில் இன்னொரு தெரியாத ஒரு பயண முகவரிடம் சென்றேன். அவரோ "ஜூலை மாதம் விமானப்பயண டிக்கெட்டுக்களை எடுப்பது சிரமம்,காரணம் பள்ளி விடுமுறை, அவுஸ்திரேலியாவில் கடும் குளிர் பற்றிக் கொள்ளும் மாதம் மற்றும் லண்டனில் வரவிருக்கும் ஒலிம்பிக்ஸ், ஆனால் நான் சகாய விலையில் டிக்கெட்டைக் கொடுக்கிறேன் என்று என்று சொல்லித் தேன் தடவிய வார்த்தைகளால் பேசவும் நானும் அவரிடமே விமானப்பயண ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னேன். பின்னர் மூன்று கிழமைப் பயணத்தைப் பத்து நாளாக மாற்றும் நிலை வந்தபோது அதெல்லாம் செய்யச் செலவாகும் என்று முரண்டு பிடித்தார். நேராக விமான நிறுவனத்துக்கே தொடர்பு கொண்டால் அவர்களோ உங்களின் ஆரம்பம் பயணத்தை மேற்கொள்ளும் வரை எந்த மாற்றமும் பயண முகவரால் தான் செய்ய முடியும் என்று கைவிரித்து விட்டார்கள். மீண்டும் முகவரிடமே வந்து எவ்வளவு செலவானாலும் மாற்றம் செய்யுங்கள் என்று கேட்டேன். எல்லாமாக எழுநூறு டாலர்களை மேலதிகமாகக் கேட்டு ஆப்பு வைத்தார். வேறுவழியில்லாமல் மேலதிக பணத்தைக் கொடுத்து திகதிகளில் மாற்றம் செய்து கொண்டேன். இதனால் கிடைத்த இரண்டு நீதிகள்.
1. ஏற்கனவே அறிமுகமான நிறுவனம் இருக்க, பழக்கமில்லாத முகவர்களின் வலையில் விழக்கூடாது
2. கொஞ்சம் அதிகம் செலவானாலும் Fully Flexible எனப்படும் டிக்கெட்டை ஆரம்பத்திலேயே வாங்கிவைத்து விட்டால் ஆபத்துக்குப் பாதகம் இல்லாமல் திகதிகளை விரும்பியது போல மாற்றிக்கொள்ளலாம்.

சிட்னியில் இருந்து கொழும்பு வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கொழும்பில் இருந்து லண்டன் வரை ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்று பயண ஏற்பாடு. அந்த நாளும் வந்தது. சிட்னி ஏர்போர்ட்டில் கூட்டம் அதிகம் இல்லை. பள்ளி விடுமுறை முந்திய வாரம் என்பதால் மக்கள் கூட்டம் காலியாகியிருந்தது. எனது iPad இல் 12 முழு நீளப்படங்களையும் நூற்றுச் சொச்சம் பாடல்களைச் செருகியிருந்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறியிருந்ததும் முதலில் தேடியதே பயணிக்கும் விமானத்தில் என்னென்ன படங்களைப் போடுவார்கள் என்று விபரப்புத்தகத்தில் மேய்ந்தேன். வழக்கம் போலப் பெரிய ஆப்பு. ஏனோ தெரியவில்லை சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் தமிழ் பாடல் தெரிவுகளும் சரி தமிழ்ப்படங்களின் தெரிவும் சரி ஒரு மார்க்கமாகவே இருக்கும். தனுஷ் தம்பி நடித்த வேங்கை, கலைஞானி கமல்ஹாசன் பழிவாங்கிய மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு என்ற விவரணப்படம் இவற்றோடு பாடல்களில் விஜய் ஆண்டனி மற்றும் முகவரி மாறி இசையமைப்பாளர்களாகிய உப்புமா பாடல்களுமாக நிரவியிருந்தது. ஹிந்தியில் தபாங் படம் இருப்பதாகக் காட்டியிருந்தது. சரி அதையாவது பார்ப்போம் என்று படத்தை நெட்டித் தள்ளினேன். சத்தியாமாகப் புரியவில்லை இந்த திரபை தபாங் படத்தையா ஆகா ஓஹோவென்று தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். அடுத்ததாக இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் குறித்த ஒரு விபரணப் படம் ஒன்று இருப்பதாகத் தெரிந்து அதை முழுதுமாகப் பார்த்தேன். ஆகா இந்த இசைமேதை குறித்து வெகு சிறப்பாக எடுத்த அருமையான படைப்பு இது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன் முழுதும் பார்த்த பின்னர்.

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இரவு 11.55 இற்குச் சறுக்கி நின்று நிதானித்தது விமானம். ஏற்கனவே ஒன்லைனில் விசா எடுத்து வைத்திருந்தேன். அடுத்த நாள் மதியம் 1 மணிக்குத் தான் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிய பயணம். கொழும்பு சென்று திரும்ப நேரம் போதாது என்று கட்டுநாயக்காவை அண்மித்திருந்த Ramada Inn என்ற ஹோட்டலில் தங்கிச் செல்ல ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். அதன்படி விமான நிலைய டாக்ஸி மூலம் ஹோட்டலுக்கு வந்து ஒரு ஒரு வென்னீர் குளியல் எடுத்து விட்டு பயணக்களைப்பில் சரிந்தேன். அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். டிவியை முடுக்கினேன், சக்தி டிவியில் காலை நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்த ஆண்மகன் எப்படி இருக்கவேண்டும் என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது, பெண் மக்கள் தமக்கு சூர்யா மாதிரி வேணும், அறிவிப்பாளர் அண்ணா மாதிரி வேணும் என்று ஆளாளாளுக்குத் தங்கள் உள்ளக்கிடக்கையைக் கொட்டித் தீர்த்தார்கள். ஹோட்டலில் இருக்கும் உடற்பயிற்சிக்கூடம் எங்கே என்று விசாரித்தேன். நீச்சல் குளத்தைத் தாண்டி ஓரமாக இருக்கும் ஒரு அறையைக் காட்டினார்கள். அங்கு போனால் ட்ரெட் மில் இல் இருந்து அங்கிருக்கும் உபகரணங்கள் தூசி படர்ந்து சந்திரமுகி அரண்மனை கணக்காக இருந்தது. தும்மிக் கொண்டே அரைமணி நேரம் உடற்பயிற்சிக்கடனை முடித்து விட்டு குளியலோடு அங்கே காலை ஆகாரத்தையும் முடித்துக் கொண்டேன். விமான நிலையத்துக்குத் திரும்பும் வழியில் ரம்புட்டான் பழங்கள் குவியல் குவியலாக. என்னை ஏற்றிவந்த டாக்ஸிக்காரர் என்னை ஏதோ வேறு நாடுக்காரர் என்று நினைத்து "ரம்புட்டான் சேர் ரம்புட்டான்" என்று விளக்கம் கொடுத்தார்.

ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். வழக்கம் போல, திரையிடும் படங்களின் பட்டியலைப் பார்த்தால் அதில் மன்மதன் அம்பு த்ரில்லர் வகைக்குள். ஆகா ஆளாளுக்கு ரவுண்டு கட்டி அடிக்குறாங்களே என்று வடிவேலு குரலில் சொல்லிப் பார்த்தேன். சரக்கரைத்துச் செய்த மீன் குழம்போடு சோறு மட்டும் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன் பேர் சொல்ல வைத்தது. விமானத்தில் தந்த போர்வையை விரித்து முகர்ந்தேன். அரைகுறை ஈரத்தில் காய்ந்திருக்கும் போது ஒரு கெட்ட வாசனை வருமே அந்த வாசனை வந்து நாசியைக் கூறுபோட்டது. போர்வையைச் சுருட்டி வைத்து விட்டு உடம்பைச் சுருட்டிக் கொண்டு படுத்தேன்.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததாக அறிவிப்பு. விமான நிலையத்தின் குடிவரவுப் பிரிவில் நிற்கும் போது சென்னை விமான நிலையத்தில் நிற்பது போல ஒரு பிரமை, சுற்றம் சூழலில் ஒரே தமிழ் வாடை. போதாக்குறைக்கு ஒரு வெள்ளைக்காரக் குடிவரவு அதிகாரி "இங்கே தமிழில் இருந்து மொழிபெயர்ப்புச் செய்யக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா?" என்று குரல் கொடுக்க, ஒரு மடிசார் மாமி "ஐ கேன்" என்று கையை உயர்த்திக் கொண்டு முன்னே சென்றார்.

உலாத்தல் தொடரும்.....