Social Icons

Pages

Sunday, December 28, 2008

இரண்டாம் சூர்யவர்மன் எழுப்பிய Banteay Samré ஆலயம்

Banteay Srey ஆலயத்தைத் தரிசித்து விட்டு நாம் காரில் பயணித்துக் கொண்டே அடுத்த ஆலயத்தைப் பார்க்கப் போனோம். வழியில் என் காமிராக் கண்களில் சிறைப்பிடிக்கப்பட்டது கம்போடியக் கல்யாணம் ஒன்று. இன்றும் நம்மூரில் காணும் கல்யாணங்களில் குலை தள்ளிய முழு வாழை மரங்களை முகப்பில் நட்டுப் பந்தர் போட்டு ஊரையே கூட்டி நடத்தும் வழக்கம் இருக்கின்றது. என்னதான் காலம் தன் கோலத்தை மாற்றி இந்து கலாசாரத்தில் இருந்து கம்போடிய மண்ணைப் பிரித்து வைக்க எண்ணினாலும் அங்குள்ள மதச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஏன் பழக்கவழக்கங்களுமே இந்தியப் பண்பாட்டுப் பின்னணியில் இருந்து விலக முடியாமல் இருக்கின்றன என்பதற்கு என் பயண வழியில் தென்ப்பட்ட ஒரு கம்போடியக் கல்யாணமும் உதாரணமாக இருந்தது.

உயிருள்ள வாழையை வெட்டி செயற்கையான தங்கக் குலைகளை அந்த வாழைக் கழுத்தில் செருகி முகப்பில் நிறுத்திப் பந்தல் போட்டு அயலார் புடைசூழக் கம்போடியக் கல்யாணம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. என் சுற்றுலா வழிகாட்டியிடம் நான் பேச்சுக் கொடுக்கவும், வீடு குடிபுகுதல், இறந்தவர்களுக்கான ஈமைச் சடங்குகள், நோய்வாய்ப்பட்டோரைக் குணமாக்கும் நேர்த்திக்கடன், திருமணச் சடங்குகள் எல்லாமே இந்துமதப் பிரகாரம் இன்றும் கைக்கொள்வதாகச் சொன்னார். என்னதான் பெரும்பான்மை சமூகம் பெளத்தமதத்துக்குத் தாவினாலும் இன்றும் இந்த திரிசங்கு நிலை தொடர்வதாகவும், கம்போடிய மக்கள் இப்படிக் கண்மூடித்தனமாக ஆங்கில மருந்துவகைகளில் நம்பிக்கை இன்றி நேர்த்திக்கடன் மூலமே நோய்களுக்கான பரிகாரம் தேடுவதைக் கண்டு கவலை அடைந்த கம்போடிய அரசு கவலை அடைந்து புதுமாதிரியான தொலைக்காட்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாம். அந்தப் பிரச்சாரப் படத்தில் தேவதூதன் மருந்துப்புட்டியுடன் வந்து மக்களைப் பார்த்து "இதுதான் நான் உங்களுக்குப் பரிந்துரை செய்யும் நோய்ப் பரிகாரம்" என்னுமளவுக்கு தீவிர மத நம்பிக்கைகள் இருப்பதாகச் சொல்லிச் சிரித்தார்.


நம் கார் Banteay Samré ஆலயத்தைக் கண்டதும் தன் ஓட்டத்தை நிறுத்தி நின்று நிதானித்தது. Banteay Samré ஆலயம் இரண்டாம் சூர்யவர்மனால் கி.பி 12 ஆம் நூற்றாண்டின் மத்தில் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இரண்டாம் சூர்யவர்மன் கைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான். இவ்வாலயத்தின் கட்டிடப்பணி இரண்டாம் யசோவர்மனாலேயே நிறைவுற்றது. Samré என்பது இந்தோசீனாவின் பூர்வீகக் குடிகளின் பெயராகும். முழுமையாக விஷ்ணு ஆலயமாகவே எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டிடமுறையை Angkor Wat என்னும் வகைக்குள் ஆராய்ச்சியாளர்கள் வகைபடுத்தியிருக்கின்றார்கள். நீண்டதொரு சமநிலைப்படுத்தப்பட்ட கட்டிட அமைப்போடு Angkor Wat ஆலயத்தின் கட்டிடங்களை நினைவுபடுத்தும் கட்டிட அமைப்போடும், கலை அமைப்போடும் உருவாக்கப்பட்டிருப்பதை ஒப்பு நோக்க முடிகின்றது.

Anastylosis ("to erect (a stela or building)") is an archaeological term referring to a reconstruction technique where a ruined monument is restored after careful study and measurements using original architectural elements where possible - wikipedia)என்ற கட்டிடநுட்பத்தின் பிரகாரம் பெரும் சீர்திருத்தங்களுக்கு இவ்வாலயம் உட்பட்டிருக்கின்றது. அங்கோர் வாட் ஆலயம் எழுப்பப்பட்ட அதேகாலகட்டத்திலேயே இவ்வாலயமும் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. கட்டிடத்தின் தூண்கள் மற்றும் balustrades(small posts which support the upper rail of a railing)ஆகியவை அங்கோர்வாட்டின் தூண்களோடு பொருதி நோக்கும் அதேவேளை தாய்லாந்து நாட்டின் Phimai என்ற கைமர் ஆலயத்தோடும் ஒப்பு நோக்கப்படுகின்றது. பெரும்பாலான சித்திரவேலைப்பாடுகள் அதே தரத்தோடு இருக்கின்றன.

உசாத்துணை: கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புக்கள்

Monday, December 15, 2008

Banteay Srei என்னுமோர் அழகிய சிவனாலயம்

கம்போடியா உலாத்தல்களில் எண்ணற்ற அதியசங்களை கண்டு கொண்டே போவது உள்ளுக்குள் உவகையையும் பிரமிப்பையும் உண்டு பண்ணிக் கொண்டே இருந்தது. புத்தகங்களில் வரும் செய்திகளையும் ஒரு சில படங்களையுமே கண்டு வந்த எனக்கு அந்தப் பிரமாண்டங்களைக் கண்ணெதிரே காணும் போது நான் எங்கே கனவுலகிலா நிற்கின்றேன் என்று என்னையே அடிக்கடி உள்ளுரக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படியானதோர் அதிசயம் தான் Banteay Srei என்ற சிவனாலயத்தைக் கண்டபோதும் வந்தது.
முன்னர் நான் கம்போடிய வரலாற்றுப் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ராஜேந்திரவர்மன் என்ற மன்னனால் எழுப்பப்பட்ட சிவாலயமே Banteay Srei ஆகும். யசோதபுர/அங்கோர் (Yashodapura/Angkor) என்ற இடத்தை இந்த மன்னன் தன் ஆட்சியில் தலைநகராக அமைத்து கி.பி 944 - 968 ஆண்டு வரை தன் ஆட்சியை நடாத்தியவன். இந்த ராஜேந்திரவர்மன் என்ற மன்னன் மகேந்திரவர்மன், மகேந்திர தேவியின் மகனாகக் கொள்ளப்படுகின்றான். ராஜேந்திர வர்மனின் தளபதியாக இருந்த கவிந்திரவிமதன (Kavindravimathana) பெளத்த அமைச்சராகவும் கொள்ளப்பட்டிருக்கின்றான். இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

Banteay Srei என்றால் "Citadel of Women" என்று அர்த்தப்படும் இந்த ஆலயம் கி.பி பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. கைமர் பேரரசு எழுச்சியோடும் செழிப்போடும் இருந்த காலப்பகுதியில் எழுப்பப்பட்ட இந்த ஆலயத் திருப்பணி இராஜேந்திரவர்மனின் பிரதம ஆலோசகராக இருந்த வேதியரால் முன்னெடுக்கப்பட்டுப் பின்னர் ஐந்தாம் ஜெயவர்மன் காலத்தில் நிறைவுற்றதாகச் சொல்லப்படுகின்றது. கட்டிட அமைப்பைப் பொறுத்தவரை இந்த ஆலயத்தின் பெயரான Banteay Srei என்ற பெயர் கொண்டே கட்டியவியல் நிபுணர்களால் வகைப்படுத்தப்பட்டிருகின்றது. இந்தக் கோயிலின் ஒவ்வொரு சிற்பவடிவமும், கட்டிட அமைப்பும் முழுமையானதொரு சிவாலயம் இது என்ற தீர்க்கமான முடிவை எடுக்க வழிகோலுகின்றன.

Banteay Srei ஆலயத்தின் சுவர் செதுக்கு வேலைப்பாடுகள் கைமர் பேரரசின் முதல் தர சித்திர வேலைப்பாடுகளைக் காட்டி நிற்கின்றன. நுட்பமான சுவர் செதுக்கு வேலைப்பாடுகள் ஒருபுறம் இருக்க, கட்டிட உபயோகத்துக்கான கற்கள் கூட மற்றைய ஆலயங்களில் இருந்து வேறுபட்டு pink sandstone எனுமோர் வகையான சலவைக்கற்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆலயத்தின் கட்டிட உபயோகத்துக்குப் பயன்பட்ட சலவைக்கல் கொடுக்கும் சிறப்பைக் காண காலை 10.30 மணிக்கு முன்னரோ அல்லது மதியம் 2 மணிக்குப் பின்னரோ செல்வதோ உகந்தது என வழிகாட்டப்படுகின்றன.


வரலாற்றில் தொன்மை மிகு ஆலயமான Banteay Srei எவ்வளவு தான் கலையழகோடும், நேர்த்தியான சிற்பவேலைப்பாடுகளோடும் இருந்தாலும் வரலாற்றின் துயர் தோய்ந்த பக்கங்களில் உருக்குலைந்து, உருத்தெரியாமல் மறைந்திருந்து, இந்த நாட்டினைத் தமது காலணித்துவ நாடாக வைத்திருந்த பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் வல்லுனர்களால் 1914 ஆம் ஆண்டே கண்டு பிடிக்கப்பட்டு உலகுக்கு மீண்டும் தரிசனம் கொடுத்தது. இந்தவேளை இன்னொன்றையும் சொல்லி வைக்க வேண்டும். இங்கே நான் பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் வல்லுனர்கள் தான் இந்த ஆலயத்தைக் கண்டு பிடித்து அளித்த பிதாமகர்கள் என்று ஏகத்துக்கும் புகழ முடியாது. அவர்கள் சும்மா ஒன்றும் செய்துவிடவில்லை. இவ்வாறான பல ஆலயங்களைத் தம் ஆட்சியாளர்களின் கட்டளைப் பிரகாரம் தேடிப்பிடித்து அந்தந்த ஆலயங்களில் இருந்த செல்வங்களையும், தெய்வத் திருவுருவச் சிலைகளையும் களவாடி பிரான்ஸுக்கு கொண்டு போகவே இந்தக் காரியங்களைச் செய்தார்கள். இது போன்ற எத்தனையோ ஆலயங்களில் சிலைகளின் தலை முதலான அங்கங்கள் கொய்யப்பட்டுக் காணாமற் போனதன் சூத்திரதாரிகள் இந்த பிரென்சுக்காரர்கள் தான். இந்து முறைப்படி ஆலயக்கருவறையில் தங்கம் முதலான செல்வங்களைப் புதைத்து அதன் மேல் தெய்வ விக்கிரகங்களை வைத்ததை அறிந்து அவற்றிலும் கன்னம் வைத்து வெறும் குழியாக மட்டும் விட்டுச் சென்றிருக்கின்றார்கள் இந்த மேற்குலகத்தார்.

நரசிம்ம அவதாரம் இரண்யகசிபுவை சங்காரம் செய்யும் காட்சி, அர்ஜினனுக்கும் சிவனுக்குமான போர், சிங்கத்தில் ஏறி நிற்கும் துர்க்கை அம்மனின் எழில் வடிவம், கைலாசமலையை பெயர்த்தெடுக்க முயலும் இராவணன், மன்மதன் சிவன் மேல் ஏவும் காமக் கணைக் காட்சி, தேவதையின் உருவச் சிலை, வாலிக்கும் சுக்ரீவனுக்குமான சண்டை, நாகா இனத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து பின்னர் அர்ஜினனும், வாசுதேவ கிருஷ்ணனும் தீவைக்கும் காந்தார வனம், கம்சனைக் கொல்லும் கிருஷ்ணன், குருசீட மரபைக் காட்டும் முனிவர்களின் கூட்டு என்று இந்த ஆலயத்தின் ஓவ்வொரு சுவர் இடுக்குகளைக் கூட விட்டு வைக்காமல் சிற்பச் செதுக்குவேலைகளில் இதிகாச புராணக் கதைகள் பேசப்படுகின்றன.





சியாம் ரீப் நகரத்தில் இருந்து Banteay Srei 38 கி.மி தொலைவில் இருக்கின்றது. வழமையான சுற்றுலாப் பிராந்தியத்தில் இருந்து சற்றே தள்ளியிருக்கும் இவ்வாலயத்துக்கான போக்குவரத்துக்கும் செலவு மேலதிகமாக இருந்தாலும் எமது இந்து மதத்திற்கு அதுவும் குறிப்பாக சைவசமயத்துக்கு அன்றைய காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட மதிப்பும் மரியாதையும் எவ்வளவுக்கெவ்வளவு உயர்ந்து அது காலத்தைக் கடந்தும் எஞ்சியிருக்கின்றது என்பதைக் கண்ணாரக் கண்டு வர ஓர் அரிய வாய்ப்பாக இருக்கின்றது.

உசாவ உதவியது: கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் கையேடு

Sunday, November 30, 2008

Kbai Spean ஆயிரம் லிங்கங்கள் கொண்டதோர் மலை

Pre Rup ஆலயத்தைத் தரிசித்து விட்டு எம் பயணம் அடுத்து Phnom Kulen என்ற இடத்தில் உள்ள Kbeai Spean ஐ பார்க்கக் கிளம்புகின்றது. கி.பி 11 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுப்பப்பட்ட ஆன்மீக ஸ்தலமே இதுவாகும். இந்தப் பகுதிக்கு வருவோர் அதிகாலையிலேயே கிளம்பி வருவது நல்லது. காரணம் இந்தப் பகுதியின் போக்குவரத்து மதியம் மூன்று மணியுடன் மூடப்பட்டு விடும். எனவே நாமும் ஏற்கனவே திட்டமிட்டவாறு எம் பயணம் அமைந்ததால் காலையிலேயே வந்து விட்டோம். இந்தப் பகுதிக்கு வருவோர் அடுத்த பதிவில் நான் தரப்போகும் Banteay Srey என்ற இடத்தையும் சேர்த்து அரை நாள் சுற்றுலாவாக அமைத்துக் கொள்ளலாம்.

சியாம் ரீப் நகர்ப்பகுதியில் இருந்து வெளியேயான நீண்டதொரு பயணத்தின் பின் தான் இந்த இடத்துக்கு வந்து சேர்கின்றோம். 48 கி.மீ பயணம் அது. இந்த இடத்துக்கு வந்தது காரை விட்டு வெளியே வந்ததுமே விதவிதமான சால்வைகளை வாங்குமாறு நச்சரிக்கும் சிறுவர் கூட்டம் வந்து மொய்க்கின்றது. கூடவே தண்ணீர் போத்தல்களையும், குவித்து வைத்த பனம் நுங்குகளையும் வைத்துக் கொண்டு கூவி அழைக்கின்றார்கள். அவர்களையும் கடந்து வாகனச் சாரதியை நிறுத்தி விட்டு நானும், வழிகாட்டியுமாக மலையில் ஏறத் தொடங்குகின்றோம். மிகவும் சிக்கலான நடை அது. எந்தவிதமான நவீன வசதிகளும் இல்லாது ஆங்காங்கே அண்மையில் தான் அமைக்கப்பட்ட மரச்சட்டங்களைப் பிடித்துக் கொண்டு ஏற வேண்டும். சில இடங்களில் அதுவும் இல்லை.
மிகவும் செங்குத்தாகப் பயணிக்கும் அந்தப் பயணம் அடர்ந்த காட்டின் நடுவே அமைகின்றது. எப்போது, யார் வருவார்கள் என்று எனக்குள் மெல்லமாக ஒரு பயமும் இருந்தது. ஆனால் எனது வழிகாட்டியோ சிரித்துக் கொண்டே பேச்சுக் கொடுத்தவாறு முன்னே பாய்ந்து பாய்ந்து நடக்கின்றார். நானோ கீழே விழுந்தும் எழும்பியும், ஆங்காங்கே ஆபத்பாந்தவராக இருந்த தொங்கிய விழுதுகளைப் பிடித்தவாறே போய்க் கொண்டிருக்கின்றேன். ஒரு சில இடங்களில் அந்தப் பாதை வழியே கொட்டிக் கிடக்கும் இலைச் சருகுகளை அள்ளிப் போட்டுத் துப்பரவு செய்யும் பணியாளர்கள் இருக்கின்றார்கள். ஒரு கட்டத்தில் அவர்களும் இல்லாத கொடும் அமைதியான பயணத்தில் நானும், வழிகாட்டியும் மட்டுமே இருப்பது போல இருக்கின்றது.


காட்டுப் பகுதியின் ஒரு தோற்றம்

"இந்தக் காடு முன்னர் பொல்பொட்டின் தீவிரவாதப் படைகள் ஒளிந்திருந்த பிரதேசங்களில் ஒன்று, நீண்ட யுத்தத்தின் பின்னர் பொல் பொட்டின் படைகள் சரணாகதி அடைந்த போது தான் இந்தப் பிரதேசத்தின் பெருமை பலருக்கும் தெரிய வந்தது, எனவே இந்தப் பண்டைய ஸ்தலத்தினைக் காட்டிக் கொடுத்த புண்ணியம் அவர்களுக்கும் உண்டு" என்றார் வழிகாட்டி. நான் அவ்வப்போது அவரிடம் பொல் பொட்டின் ஆட்சிக்காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு. அது போல் அப்போதும் ஒரு கேள்வியைக் கேட்டேன். "பொல் பொட்டின் அந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு இன்றும் ஆதரவு தெரிவிப்போர் உண்டா? என்று கேட்டேன். "ஏன் இல்லை என்னோடு இருக்கும் சுற்றுலா வழிகாட்டிகளில் பலர் முன்னர் பொல்பொட்டின் அமைப்பில் இருந்தவர்கள், அவர்கள் இன்னும் அவனின் ஆட்சியை ஆதரித்துத் தான் பேசுவார்கள். பொல்பொட்டினால் தான் கம்போடியாவின் தனித்துவம் பேணப்பட்டது என்ற ரீதியில் அவர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்றார்.

குகைகளில் ஒன்று

குகை ஒன்றை வழிபாட்டு நிலையம் ஆக்கி விட்டார்கள்.

கையோடு கொண்டு போன தண்ணீர்ப்போத்தல்கள் இரண்டையும் மிகவும் பத்திரப்படுத்திப் பருகிவாறே போய்க்கொண்டிருக்கின்றோம். வழியெங்கும் குகைகள் தென்படுகின்றன. அவற்றில் பல முன்னர் பொல்பொட்டின் படைகளின் வாசஸ்தலமாக இருந்திருக்கின்றனவாம்.


கிட்டத்தட்ட 45 நிமிட மலை ஏற்றத்தின் பின்னர் மலை முகட்டில் வந்து சேர்கின்றோம். மெல்ல நடந்து பாறை இடுக்குகளை விலத்தி விட்டுப் பார்த்தால் " ஆகா ! என்ன அதிசயம், மலையில் மேற்பரப்பெங்கும் திட்டுத் திட்டாக சிவலிங்க விக்கிரகங்கள் இருக்கின்றன. அவற்றை அப்பால் ஓடும் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் நீரோடை தொடர்ந்து கழுவித் துடைத்துக் கொண்டே அபிஷேகம் பண்ணுகின்றது. இங்கே உற்பத்தியாகும் சியாம் ரீப் நதிதான் பெருந்தொலைவில் இருக்கும் நகர்ப்புறத்துக்கு வந்து சேர்கின்றது.

மிகவும் ஆச்சரியமான கணங்களில் ஒன்று அது. ஆங்காங்கே சின்ன சின்னதாய் இருக்கும் சிவலிங்க உருவங்கள் மட்டுமன்றி விஷ்ணுவும், அவர் காலைப் பிடித்துக் கொண்டிருக்கும் மகாலஷ்மியும் பொருந்திய உருவமும் இருக்கின்றது. நான்கு தலைகள் கொண்ட பிரம்மா உருவம் மலையின் மேற்பரப்பில் கிடையாக

திட்டுத் திட்டாய் சிவலிங்கங்கள்
சிவலிங்கத்தின் லிங்க பாகம் மட்டும் கிடையாக


இவையெல்லாம் கடந்து போனால் நீண்டதொரு லிங்க உருவம் முழு அளவினதாக இருக்கின்றது. 45 நிமிடப் பயணம் உண்மையில் பயன் உள்ளது தான் என்று அப்போது நினைத்துக் கொண்டேன். ஆங்காங்கே தற்காலிகத் தூளிகள் அமைத்து தூங்கிக் கொண்டிருக்கும் வெள்ளையர்கள். எல்லாவற்றையும் பார்த்த பரம திருப்தியோடு மீண்டும் கீழ் இறங்கி வருகின்றோம்.



மலையடிவாரத்திலே நவீன வசதி செய்யப்பட்ட கழிப்பிடமும், குளியலறையும் இருக்கின்றது. அருகே நீண்டதொரு கொட்டகை அமைத்து சாப்பாட்டுக் கடையும் இருக்கின்றது. என்னோடு வந்த வழிகாட்டி சாப்பாட்டை ஓடர் செய்கிறார். உடனே சால்வை வியாபாரம் செய்யும் சிறுவர்கள் வந்து மொய்க்கின்றார்கள். நன்றாக ஆங்கிலம் பேசவும் செய்கின்றார்கள். "நீங்கள் பள்ளிக்கு எல்லாம் செல்வதில்லையா?" என்று கேட்கின்றேன். "நாங்கள்ளாம் மாலைப் பள்ளிக்குத் தான் போவோம்" என்கிறது ஒரு சிறுமி. இன்னொரு சிறுமி மிகவும் துறுதுறுப்பானவள். "நீங்கள் இந்த சால்வைகளை வாங்குகிறீர்களா, ஒரு டாலர் தான், மிகவும் மலிவு, தரமும் சிறப்பு" என்று தன் தொழிலை ஆரம்பிக்கின்றாள். நானோ "எனக்கு இவை உபயோகப்படாதே" என்று சொல்லவும் விடாக்கண்டனாக அவள் ஒற்றைக் காலில் நின்று அடம்பிடிக்கின்றாள். "சரி,அப்படியென்றால் ஒன்று செய்வோம், எனக்கு இந்த சால்வைகள் வேண்டாம், ஆளுக்கு ஒரு டாலர் தருகின்றேன், உங்களைப் போட்டோ எடுக்கட்டுமா" என்று சொல்லவும், அவளும் மகிழ்ச்சியாகத் தலையாட்டி விட்டு போஸ் கொடுக்கத் தயாராக நிற்கிறாள் (படத்தில் இடமிருந்து மூன்றாவது ஆள் தான் அந்தக் குறும்புச் சிறுமி). படம் எடுத்தாயிற்று, காசைக் கொடுக்கின்றேன். "எங்களுக்கு இன்னொரும் ஒரு டாலர் வீதம் கொடுத்து விட்டு, இன்னொரு முறை படம் எடுக்கலாமே" என்று அவள் மீண்டும் ஆரம்பிக்கிறாள். "அதற்கு நானோ, அடுத்த முறை வரும்போது பார்க்கலாம்" என்கிறேன். அவளோ கம்போடிய மொழியில் ஏதோ முணுமுணுக்க, நான் வழிகாட்டியைக் கேட்கின்றேன் என்ன சொல்கிறாள் இவள் என்று. அதற்கு அவர் "நீங்கள் மீண்டும் வருவீர்கள் என்று எனக்கெப்படித் தெரியும்" என்கிறாள். கோக் பானத்தின் நுரை வெளித்தள்ளச் சிரிக்கின்றேன்.