Social Icons

Pages

Sunday, February 08, 2009

ஹரிஹரா நகரின் சிவன் ஆலயங்கள்

மூன்றாம் நாட் காலை சுற்றுலா தொடங்கியது. இந்த நாள் நீண்ட தூரப்பயணமாகவும், அடுத்த நாள் சுற்றுலா வழிகாட்டி தனது மனைவியின் தங்கை திருமணத்துக்காக சொந்தக் கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் இன்றே அதிகப்படியான ஆலயங்களைப் பார்த்துவிடுவோம் என்று சொன்னார். எனவே வழக்கத்தை விட இன்னும் சீக்கிரமாகவே எழுந்து காலை ஆறரை மணிக்கெல்லாம் தயாராகி விட்டேன். ஏழுமணியளவில் வாடகைக்காரும், சுற்றுலா வழிகாட்டியும் வந்து சேர, எம் பயணம் ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட கம்போடிய - தாய்லாந்து எல்லை வரை செல்லப்போகும் பயணம் இதுவென்பதால் அந்த வழித்தடத்தை ஒட்டிய கோயில்களைக் கண்டு செல்லலாம் என்பதே எமது தீர்மானம்.

அங்கோரியர்களின் சகாப்தமான கைமர் பேரரசின் முதன்மையான தலைநகராகிய ஹரிஹராலயாவில் இருக்கும் ஞாபகச் சின்னங்கள், ஆலயங்களின் தொகுப்பை Roluos Group என்று வகைப்படுத்துகின்றார்கள். மிகவும் நவீனமயமாக அந்தக் காலகட்டத்தில் எழுப்பப்பட்ட இந்த நகர் சிவன், விஷ்ணு ஆகிய உயர் தெய்வங்களை ஞாபகப்படுத்தும் விதத்திலேயே ஹரிஹராலயா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்ரது. அங்கோர் வாட் காலத்துக்கு முன்னதான இக்காலப்பகுதியில் ஹரிஹராலயா என்ற நகரை உருவாக்கி எழுபது வருஷங்கள் ஆட்சி செய்தவன் இரண்டாம் ஜெயவர்மன். அடுத்த நான்கு நூற்றாண்டுகளின் போக்கை எடுத்துக் கொண்டால் இந்த ஹரிஹராலயாவில் எழுப்பப்பட்ட Bakong, Preah Ko, Lolei, Baray (நீர்த்தேக்கம்) ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன. இந்த ஹரிஹராலயா நகரில் ஆட்சி செய்த இறுதி மன்னன் முதலாம் யசோவர்மன், இவன் தான் அங்கோர் பகுதியில் எழுப்பப்பட்ட முதல் பெரும் ஆலயமான Phnom Bakheng ஐ நிறுவியவன். இந்த Roluos Group சியாம் ரீப் நகரில் இருந்து 13 கி.மீட்டர் தொலைவில் அதாவது 20 நிமிட நேரத் தூரத்தில் இருக்கின்றது. இந்த நகரில் இருக்கும் ஆலயங்களுக்கான நுழைவுக் கட்டணம் ஏற்கனவே அங்கோர் சுற்றுலாவுக்கான மூன்று நாள் பாஸ் இல் அடக்கப்பட்டிருக்கின்றது எனவே மேலதிக கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

Roluos Group இல் முதலில் நாங்கள் சென்றது Preah Ko என்ற ஆலயம்.

முதலாம் இந்திரவர்மன் எழுப்பிய Preah Ko ஆலயம்


கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் இந்திரவர்மனால் எழுப்பப்பட்ட இவ்வாலயம் ஓர் இந்துக் கோயிலாகும். இவ்வாலயத்தின் கட்டிட அமைப்பினையும் Preah Ko என்ற வகுப்புக்குள்ளேயே கட்டிட வல்லுனர்கள் வகைப்படுத்துகின்றார்கள்.

ஆறு கோபுர அடுக்குகளைக் கொண்ட, சிறந்ததொரு சிற்பவேலைப்பாடுகள் அமைந்த இவ்வாலயம் கைமரின் முதன்மையான தலைநகராகிய ஹரிஹராலயாவில் எழுப்பப்பட்ட ஆலயங்களில் முதன்மையானதொன்றாகும். Preah Ko என்பதன் அர்த்தம் Sacred Bull என்பதாகும். இந்த ஆலயத்தின் மத்திய கோபுரங்களின் முகப்பில் எருதுகளின் சிலைகள் இந்தப் பெயரினை உறுதி செய்கின்றன.


அழகிய செதுக்கோடு இருக்கும் கல் சன்னல்


மேலே படத்தில் லிங்கத்தின் அடிப்பாகம் மட்டும் எஞ்சிய நிலையில்

இவ்வாலயம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் அதாவது கி.பி 879 இல் முதலாம் இந்திரவர்மனால் சிவபக்தர்களான தனது குடும்ப உறுப்பினர்களை கெளரவிக்கும் பொருட்டு எழுப்பட்டது இவ்வாலயம். எருது என்பது சிவ சிந்தனையோடு நிதமும் சிவன் பால் தொடர்ந்திருக்கும் ஒரு உயிரினம். அதே போல இவ்வரசனின் குடும்ப உறுப்பினர்களும் சிவபெருமான் மீது கொண்ட தீராத பக்தியைக் குறிப்பால் உணர்த்துகின்றது என்று நான் நினைக்கின்றேன்.

ஆறு கோபுரங்களில் மையக் கோபுரம் கைமர் பேரரசை உருவாக்கிய இரண்டாம் ஜெயவர்மன் ஞாபகார்த்தமாகவும், இடது புறக் கோபுரம் இரண்டாம் ஜெயவர்மன் தந்தை பிரிதிவிந்திரேஸ்வரா ஞாபகார்த்தமாகவும், வலப்புறக்கோபுரம் அவனின் பாட்டனார் ருத்ரேஸ்வரா ஞாபகார்த்தமாகவும் பின்னால் உள்ள கோபுரங்கள் அவர் தம் மனைவியர் ஞாபகார்த்தமாகவும் எழுப்பப்பட்டிருக்கின்றன. மையப்பகுதியில் இருக்கும் கோபுரங்களில் சிவபெருமானின் இலட்சணைகளும், உருவங்களும், துவாரபாலகர் சிலையும் இருக்கின்றன.

மேலே படத்தில் துவாரபாலகர் சிலையொன்று

கம்போடியாவின் வடமேற்கு மாகாணமான Banteay Meanchey என்ற இடத்தில், அங்கோர் வாட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் இவ்வாலயச் சூழல் அமைந்த ஹரிஹ்ராலயா என்ற நகரம் இப்போது் Roluos என்றே அழைக்கப்படுகின்றது.

முதலாம் இந்திரவர்மன் எழுப்பிய Bakong ஆலயம்
Preah Ko ஆலயத்தைத் தரிசித்து விட்டு, அதே சூழலில் இருந்த Bakong ஆலயம் நோக்கிச் சென்றோம். இந்த ஆலயமும் சமகாலத்தில் முதலாம் இந்திரவர்மனால் எழுப்பப்பட்டது. அதாவது ஒரு சிவனாலயமாக கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி 881 இல்) எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவ்வாலயத்தின் கட்டிட அமைப்பை முன்னர் நாம் பார்த்த Preah Ko என்ற கட்டிட அமைப்பில் வகைப்படுத்தியிருக்கின்றனர் கட்டிட வல்லுனர்கள்.

மேலே படத்தில் ஆலய மேற்பகுதி

Bakong 15 மீட்டர் உயரத்தில் 650 X 850 மீட்டர் வெளிச்சுற்றிலும் அடங்குகின்றது. அடுத்த நானூறு ஆண்டுகளுக்கான கைமர் கட்டிடக் கலையின் செழுமையின் முன்னோடியாக, ஒரு மலைக் கோயிலாக எழுப்பப்பட்டிருக்கும் இவ்வாலயம் மிகத் தொன்மையான கட்டிடக்கலையின் கூறாக செங்கற்களுக்குப் பதிலாக கற்களை மட்டுமே உபயோகித்து எழுப்பப்பட்டிருக்கின்றது.

ஆலய மேற்பகுதியில் இருக்கும் யானைச் சிலைகள்மேலே படத்தில் அகழியைச் சுற்றிப்படுத்திருக்கும் நாகம்
மேலே படத்தில் ஆலயத்தினை ஒட்டிய நீர்த்தடாகம்

முதலாம் ஜெயவர்மனால் இவ்வாலயத்திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் மேலதிக கட்டுமானங்களும், வேலைப்பாடுகளும் பின்னாளில் வந்த அரசர்களாலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக மேல் உச்சியில் இருக்கும் கோபுரத்தினை கி.பி 12 ஆம் நூற்றாண்டிலேயே சேர்த்திருக்கின்றார்கள். வனப்புமிகு அகழியும், பசுமையான சூழ்நிலையும் இந்த ஆலயச் சூழலாக அமைந்திருப்பது சிறப்பு. ஆலய முகப்பில் இருக்கும் அகழியின் சுவராக நாகத்தின் கிடை உருவம் இருக்கின்றது.

மேலே படத்தில் வழிபாட்டுப் பொருட்களோடு மூலவர் கர்ப்பக்கிருகம்


மேலே படத்தில் நந்திச் சிலையொன்று
மேலே படத்தில் சிதைந்து போன நந்திச் சிலையின் சிதைவுகளைப் பொருத்தியிருக்கின்றார்கள்.

Bakong ஆலயம் 900 X 700 மீட்டர் பரப்பில் விளங்குகின்றது. ஐந்து அடுக்குகள் கொண்ட பிரமிட் வடிவமாக இருக்கும் கோபுரங்களில் இந்த ஐந்து அடுக்குகளும் முறையே நாகா, கருடன், சிங்கம், பீமன், கடவுள் (சிவன்) அகியோருக்கான அர்ப்பணமாகவே விளங்கி நிற்கின்றன. முதலாம் இந்திரவர்மன் இந்த நாட்டின் சமுதாய சமயப் பணிகளைச் செய்த முக்கிய மன்னர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றான். இவரின் புரோகிதர் சிவசோமாவின் (Sivasoma) வழிகாட்டலில் இவற்றைச் செய்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த முதலாம் இந்திரவர்மன் இறந்தபின் இஸ்வரலோகா/ஈஸ்வரலோகா (Iswaraloka) என்று பெயர்சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.இவ்வாலயத்தைத் தரிசித்து விட்டு எமது பயணம் கம்போடிய தாய்லாந்து எல்லையை நோக்கி நகர்ந்தது.

உசாத்துணை:
கம்போடிய சுற்றுலாக் குறிப்புகள்
விக்கிப்பீடியா
Ancient Angkor - Michael Freeman and Claude Jacques

12 comments:

கோபிநாத் said...

வழக்கம் போல படங்களும் உங்கள் வரிகளும் அருமை தல ;)

G.Ragavan said...

சுற்றுலா என்றாலே எனக்குப் பிடிக்கும்...அதிலும் பழம்பெருமை வாய்ந்த இடங்களும் கட்டக்கலைச் செல்வங்களும் கொண்ட இடங்களுக்குச் செல்வது இன்னும் பிடிக்கும். உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சி.

கோபுரங்களைக் காண்கையில் மேலெழுந்து செல்லும் தீப்பிழம்பினை நினைவு படுத்துகிறது. நெருப்பானது எந்தச் சூழலிலும் மேல் நோக்கிச் செல்லவே முனையும். அது போல இறையருள் நாடும் உள்ளங்களும் மேன்மை என்ற பண்பைப் பற்றி மேல் நோக்கிச் செல்லவே முனையும் என்பதைச் சொல்வதற்காக அத்தகைய அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கலாமோ!

சிதைந்த கோயில்களின் நிலை... வருத்தம் தருகிறது.

ஆயில்யன் said...

வழக்கம் போல படங்களும் உங்கள் வரிகளும் அருமை :)

தங்கராசா ஜீவராஜ் said...

உங்கள் வலைக்கு வரும் ஒவ்வொரு தடவையும் வாழ்வில் ஓருதடவையாவது இந்த இடங்களுக்கு பயணிக்கவேண்டுமென தோன்றுகின்றது பிரபா.


என்ன செய்வது முதலில் சுதந்திரமாக வீட்டுக்கு வெளியே சென்றுவரவேண்டும்.....

கானா பிரபா said...

//கோபிநாத் said...
வழக்கம் போல படங்களும் உங்கள் வரிகளும் அருமை தல ;)//

வருகைக்கு நன்றி தல

சோமி said...

வணக்கம் அண்ணா,
நல்ல பயனுள்ள தகவல்கலைச் சொல்லூகிறீர்கள் எங்களைப் போன்ற வரலாற்றில் சிறிது ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உங்களைப் போன்ற அனுபவம்(கவனிக்க: வயதான என்று சொல்ல வில்லை) பெற்றவர்களின் இத்தகைய பதிவுகள் நிறைய தரவுகளைத் தருகிறது. அங்கோர்வாட் பற்றிய ஒரு புத்தகத்த நாசர் ஒரு மாதம் முன்பு படிப்பதற்க்காக கொடுத்தார். அந்த புத்தகத்தில் கறுப்பு வெள்ளையில் இருந்த படங்களைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தேன். அதைப் படிக்கும் போதுதான் எத்தனை சிறப்பன கட்டடக் கலை இருந்தது என்று தெரிந்தது. நாசர் இரண்டு மூன்று தடவை போய் வந்ததாகச் சொல்லி வெறுப்பேற்றினார்...கட்டயம் போக வேண்டுமெண்டார். இப்போது நான் அவரிடம் பெருமையாகச் சொல்லாம் நான் போகவிட்டாலும் என் அண்ணன் போய் வந்து படமெல்லாம் போட்டிருக்கிறான் என்று

கானா பிரபா said...

// G.Ragavan said...
கோபுரங்களைக் காண்கையில் மேலெழுந்து செல்லும் தீப்பிழம்பினை நினைவு படுத்துகிறது. நெருப்பானது எந்தச் சூழலிலும் மேல் நோக்கிச் செல்லவே முனையும்.//

வணக்கம் ராகவன்

விரிவான பின்னூட்டப்பகிர்வுக்கு நன்றி, உங்கள் பார்வை சிறப்பானதாகவும் ஏற்றுக் கொள்ளவும் முடிகின்றது.

//ஆயில்யன் said...

வழக்கம் போல படங்களும் உங்கள் வரிகளும் அருமை :)//

மிக்க நன்றி ஆயில்யன்

சோமி said...

whn say thanks 4 ME.lol:)

கானா பிரபா said...

//தங்கராசா ஜீவராஜ் said...
உங்கள் வலைக்கு வரும் ஒவ்வொரு தடவையும் வாழ்வில் ஓருதடவையாவது இந்த இடங்களுக்கு பயணிக்கவேண்டுமென தோன்றுகின்றது பிரபா. //

வணக்கம் ஜீவா

உங்கள் எண்ணம் கூடவேண்டும் என்று வாழ்த்துகின்றேன். மேலதிக விபரங்கள் கூட பகிர்ந்து கொள்ளலாம்


//சோமி said...
வணக்கம் அண்ணா,
நல்ல பயனுள்ள தகவல்கலைச் சொல்லூகிறீர்கள் எங்களைப் போன்ற வரலாற்றில் சிறிது ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உங்களைப் போன்ற அனுபவம்(கவனிக்க: வயதான என்று சொல்ல வில்லை) //

வருகைக்கு நன்றி சோமி அண்ணா (அப்பாட்டா சொல்லீட்டேன்) உங்களைப் போன்ற அனுபவசாலிகளுக்கும் இவை ரசிக்கத்தக்கவையாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. நாசரையும் கேட்டதாகச் சொல்லுங்கோ ;)

கோசலன் said...

தகவல்களிலும் படங்களிலும் நேர்த்தி. தமிழில் இப்படியான நேர்த்தியான பயணக்குறிப்புக்களை எழுதுபவர்கள் மிகச் சிலரே. ஆனால் வரலாற்று தகவல்களில் ஏற்படும் ஒருவித சலிப்பை போக்க இன்னும் கொஞ்சம் ஜனரஞ்சகத்தை சேர்க்கலாம் என்பது எனது எண்ணம்.

அதுசரி முதலாவது படத்தில நிற்கிறது தான் முதலாம் இந்திரவர்மனோ அதாவது இறந்தபின் இஸ்வரலோகா/ஈஸ்வரலோகா (Iswaraloka) என்று பெயர்சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்ட அரசன்?

கானா பிரபா said...

வாங்கோ கோசலன்

என்னை ஈஸ்வரலோகத்துக்கு அனுப்பிற பிளானா ;-)

நிறைய ஆலயங்கள், தொடர்ச்சியான பயணங்கள் இவற்றின் மத்தியில் ஆலயச்சூழலுக்கு வெளியேயான களிப்பு நிகழ்வுக்கள் உலாத்தலில் குறைவு என்பதால் அவற்றைச் சேர்க்க முடியவில்லை. ஆனாலும் இடைக்கிடை வேறு தனிப்பட்ட பதிவுகள் மூலம் கம்போடிய நடனம், கலாச்சாரக் கிராமம் போன்றவை குறித்தும் தந்திருக்கின்றேன். இனியும் வரும்.

ஆமி said...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கோர் தொம் ஆலயம் குறித்த புத்தகத்தை தந்து படி என்றார். அது ஆங்கிலத்தில் இருந்ததினால் படங்களை மட்டுமே பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது. சூப்பர் ஸ்டார் நான்கு தடவைகள் போனதாக சொல்லி கடுப்பேத்துகிறார். நீயும் போ என்கிறார்.

இனி அவருக்கு சொல்லலாம். என் அண்ணன் போய் வந்திருக்கிறார் என.