Social Icons

Pages

Monday, February 09, 2009

கம்போடியாவில் இந்திய உணவைத் தேடிய அபலை ;)

எல்லாம் சரியாகத்தான் நடந்தது, நடுவில் ஏதோ ஒன்று வந்து எல்லாவற்றையும் குழப்பி விட்டது என்பது போலத் தான் சாப்பாட்டு விஷயத்தில் எனக்கும் நடந்தது. நான் தங்கியிருந்த அங்கோரியானா ஹோட்டலில் பெரும்பாலும் எல்லா ஹோட்டல்கள் போல காலை உணவையும் சேர்த்தே கட்டணம் அறைவிட்டிருந்தார்கள் என்பதால் முதல் நாட் காலை ஆறு சீக்கிரமாகவே உணவாராய்ச்சி செய்ய ஹோட்டலின் உணவு பரிமாறும் இடம் போனேன்.

அங்கோரியானா ஹோட்டலின் உணவு பரிமாறும் இடம்

எங்கள் ஊரில் வரும் நாட்டுக் கோழி முட்டைகளின் சுவையே தனி, அதே வகை முட்டைகளை பல வருஷங்கள் கழித்து அங்கே கண்டதும் காதல் மேலிட்டது. பக்கத்தில் பாண் (பிரெட்) துண்டங்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் தட்டில் போட்டு, முட்டைகளை அங்கே நின்ற சமையற்காரரிடம் உடன் பொரிக்க வைத்து சாப்பிடுவது இதமாகத் தான் இருந்தது. கம்போடியப் பாணும் மெதுமெதுப்பாகவும் பதமாகவும் இருந்தது. அங்கே பரிமாறிய காலை உணவில் பாண் துண்டங்கள், முட்டை தவிர்த்து, சீரியலும், பழவகைகளும், தேனீரும் மட்டுமே இருந்தன. எனவே அதிகம் ஆசையும் வைக்க முடியாமல் கிடைத்ததை வைத்து வயிற்றை நிரப்பிக் கொண்டேன்.

அந்த நாள் காலை முழுவதும் அங்கோர் வாட் எல்லாம் ஏறி இறங்கிக் களைப்பாகி எங்காவது வயிற்றை நிரப்பலாம் என்று நானும், சுற்றுலா வழிகாட்டியும், ருக் ருக் வண்டிக்காரரும் ஒதுங்கியது ஒரு பாரம்பரிய கம்போடிய உணவகத்தில். உணவுப்பட்டியலில் புரியாத உணவை ஓடர் செய்து ரிஸ்க் எடுக்காமல் பச்சை மிளகாய் கலந்த கோழிக்கறியையும், வெள்ளை அரிசிச் சோற்றையும் ஓடர் செய்தேன். என்னோடு வந்த வழிகாட்டியும் ஏதோ ஒன்றை தன் மொழியில் கடைச்சிப்பந்திக்குச் சொல்லி வைத்தார். உணவும் வந்தது. பார்க்க அம்சமாகத்தான் இருந்தது கோழிக்கறி. எனது வழிகாட்டியின் உணவுத்தட்டைப் பார்த்தேன் வாழைப்பூவியில் பச்சடி செய்தது போல ஏதோ ஒரு கறியும், அரிசிச்சாதமும் அவர் தட்டில். பேசாமலேயே இருந்திருக்கலாம், என் ஆர்வக்கோளாறு அது என்னவென்று கேட்டுத் தொலைத்து விட்டேன். அவரும் மிகவும் இயல்பாக "இது! கரப்பான் பூச்சியில் செய்த துவையல்" என்று விட்டு அதைக் குழைத்தவாறே சுவைக்க ஆரம்பித்தார். எனக்கு சப்த நாடியும் ஒருகணம் அடங்கிப் போனது போல பிரமை. ஆடு, கோழி , மீன்வகையறாக்கள் என்று பறப்பது, நடப்பது, பாய்வது என்று ஒன்றும் விடாமல் சாப்பிடும் என்னையே உலுக்கிப் போட்டது நான் கண்ட காட்சி. என் உடம்பெல்லாம் ஓராயிரம் கரப்பான் பூச்சிகள் நெளிவது போல ஒரு பிரமை. இராணுவ முகாமில் அகப்பட்ட கைதியைப் போல சோற்றையும், கோழிக்கறியையும் அவுக் அவுக் என்று சாப்பிட்டேன் இல்லையில்லை விழுங்கினேன். அப்போதே மனதில் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டேன். இனிமேல் பாரம்பரிய கம்போடிய உணவகத்தின் வாசற்படியே மிதிப்பதில்லை என்று.

கம்போடியர்களைப் பொறுத்தவரை கரப்பான் பூச்சி தவிர, தவளை, நத்தை போன்றவற்றின் அருமை பெருமையையும் தெரிந்து தம் பாரம்பரிய உணவாக மாற்றிக்கொண்டவர்கள். இதுக்கு மேல் என்ன சொல்ல ;)

எனவே கம்போடியாவிற்கு வருபவர்கள் முன் கூட்டிய பாதுகாப்பு வேலைகளோடு களம் இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சைவ உணவு மட்டும் உண்போர் மேற்கத்தேய அல்லது இந்திய உணவகங்களில் தயார் செய்தவற்றை வாங்கிப் பத்திரப்படுத்தி அந்தந்த நாள் உண்டு களிக்கலாம்.

மேலே படத்தில் மஹாராஜா உணவகம்

மதியம் திருப்தியில்லாத சாப்பாடு சாப்பிட்ட கொடுமை மாலையில் வயிற்றில் கொடும்பசி என்னும் துன்பத்தைக் கொடுத்தது. சுற்றுலாக் கையேட்டினை விரித்து ஏதாவது இந்திய உணவகங்கள் அண்மித்ததாக இருக்கின்றதா என்று தேடினால் வந்தது மகாராஜா என்னும் இந்திய உணவகம். ருக் ருக் வண்டியொன்தைப் பிடித்து அந்த உணவகம் சென்றேன். உணவுப் பட்டியலில் வட இந்திய உணவுக்குவியலில் போனாப் போகுது என்று ஒரு சில தென்னிந்திய உணவும் இருந்தன. மகாராஜா ஸ்பெஷல் புரியாணி என்ற சொல்லில் என் கண் பதிந்து வாய் வழியே ஓடர் செய்தது. ஹோட்டல் உரிமையாளர் பாகிஸ்தானியாம் ஐந்து வருஷத்துக்கு மேலாக இதை நடத்துகிறாராம். அரை மணிக்கு மேல் சமையல் அறையில் ஏதோ போராட்டம் நடந்து ஒரு வழியாக வந்த போது என் பசியும் பறந்து விட்டது. இரண்டு கரண்டியை மட்டும் வாயில் வைத்து விட்டு மீதியை பார்சல் செய்து ஹோட்டலில் வந்து சாப்பிட ஆரம்பித்தால் புரியாணியில் இருப்பது அரிசியா? உப்பா? என்று சாலமன் பாப்பையாவை அழைத்துப் பட்டிமன்றம் வைக்கச் சொல்லலாம் போலிருந்தது. முன்னர் பசியோடு சாப்பிட்டதால் சுவை தெரியவில்லை.

மேலே படத்தில் தாஜ் இந்தியா உணவகம்

அடுத்த நாள் மாலைக்கு மஹாராஜா வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு நான் போன இடம் தாஜ் இந்தியா என்ற உணவகம். அங்கே போய் இருக்கையில் இருந்தும் பதினைந்து நிமிடத்துக்கு மேல் மயான அமைதி. வெளியே இருந்து ஒரு இந்தியர் போல தோற்றமளித்தவர் ஆங்கிலமும் கம்போடிய மொழியும் கலந்து சமையலறையில் இருப்பவரைக் கூவி அழைத்தார். அவர் தான் உரிமையாளர், பங்களாதேஷ் நாட்டவராம். (என்ன கொடும சார் இந்திய உணவகங்களில் ஒன்று பாகிஸ்தானி மற்றது பங்களாதேஷியா?)
உள்ளேயிருந்து அலறியடித்துக் கொண்டே ஓடிவந்தாள் ஒரு கம்போடிய மங்கை. அரிசிச் சாதமும், சிக்கன் டிக்காவும் ஓடர் செய்தேன். ஓடர் செய்து சாப்பிட்டு முடியும் வரைக்கும் தன் கடையில் வேலை செய்யும் அந்த கம்போடிய மாதை திட்டித் தீர்த்துக் கொண்டேயிருந்தான் அந்த பங்களாதேஷி. எனக்கு ஆச்சரியமாக இருந்தது, இந்நேரம் பொல்பொட்டில் ஆட்சியென்றால் இவனைக் கூறு போட்டு சிக்கன் டிக்காவாக அவள் மாற்றியிருப்பாள். இங்கும் என் சாப்பாடும் திருப்திப்படவில்லை, சூழ்நிலையும் சரிப்படவில்லை.
மேலே படத்தில் காமசூத்ரா உணவகம்

சற்றுத் தள்ளி காமசூத்ரா என்னும் இந்திய உணவகம் தென்பட்டது. அது இந்திய உணவகம் என்பதை விட மேற்கத்தேய நடனங்களும், மதுவும் கலக்கும் இடம். எனவே காமசூத்ராவுக்கும் "கா". காமசூத்ரா உணவகத்தை நடத்துவது மூன்றாம் தலைமுறை இந்தியராம் யாரோ சொன்னார்கள்.



மேலே படத்தில் அங்கோரியானா ஹோட்டலுக்குப் பக்கத்தில் இருந்த Coffee Shop

அடுத்த நாட் காலையும் பயணம், ஊர் சுற்றும் இடங்களில் எல்லாம் வெளிநாட்டு உணவகங்கள் மருந்துக்கும் இல்லை. எனவே என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே நான் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கமாக இருந்த நடைபாதையில் நடக்கத் தொடங்கினேன். அடுத்த கட்டிடத்திலேயே Coffee Shop ஒன்று பல்லிளித்து வரவேற்றது.
உள்ளே போனால் அரை மணி நேரத்துக்கு ஒரு அமெரிக்க டொலர் என்று இன்ரநெட் வசதியுடன் மேற்கத்தேய காபி ஷாப் அது. உள்ளே இருந்த அலங்காரங்களும் பக்காவாக இருந்தன. அங்குள்ள சிப்பந்தி ஒரு பதினெட்டு வயசு மதிக்கத்தக்க பையன், பாவாடை போன்ற ஒரு வஸ்தை ஆடையாகப் போட்டிருந்தான்,தலையை கீழே சாய்த்து வரவேற்றான்.
அரைமணி நேரம் இணையத்தில் தமிழ் மணம் பக்கம் வலம் வந்து கொண்டே மதியத்துக்குத் தேவையாக சாண்ட் விச் பொட்டலங்களை ஓடர் செய்தேன். அந்தப் பையன் என் பக்கத்தில் வந்து பேச்சுக் கொடுத்தான். எனக்கு விஷயம் மெல்லப் புரிந்தது. இந்த மாதிரி அனுபவம் எனக்கு முன்னர் சீனப்பயணத்தின் போதும் ஏற்பட்டது. அதாவது இப்படியான நாடுகளில் இருக்கும் இளம் பிள்ளைகள் வெளிநாட்டவரைக் கண்டதும் தாமாகவே பேச்சுக் கொடுத்து சம்பாஷணையை வளர்ப்பதன் மூலம் ஆங்கில மொழியறிவை விருத்தியாக்க விரும்புகின்றனர். நானும் அவனுக்கு என் சொந்த ஊரில் இருந்து ஆதியோடந்தமாக சம்பாஷித்தேன். அவன் கூட கம்போடிய கிராமம் ஒன்றிலிருந்து வறுமையின் கொடுமையால் நகரத்துக்கு வந்தவனாம். இரவுப்பள்ளியும், வேலையுமாகத் தன் இளமையைக் கழிக்கின்றான் இவன். நான் கம்போடியாவில் தங்கிருந்த அடுத்த சில நாட்களுக்கு அவன் தான் எனக்கு நல்ல பேச்சுத் துணையாக இருந்தான்.

28 comments:

சந்தனமுல்லை said...

சாப்பாட்டுக்கு ரொம்பதான் கஷ்டப்பட்டு இருக்கீங்க கானாஸ்!

//முட்டைகளை அங்கே நின்ற சமையற்காரரிடம் உடன் பொரிக்க வைத்து சாப்பிடுவது இதமாகத் தான் இருந்தது.//

இதுதான் உருப்படியா இருந்ததா!!

//இயல்பாக "இது! கரப்பான் பூச்சியில் செய்த துவையல்" என்று விட்டு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//(என்ன கொடும சார் இந்திய உணவகங்களில் ஒன்று பாகிஸ்தானி மற்றது பங்களாதேஷியா?)//

அதானே!!


//இளம் பிள்ளைகள் வெளிநாட்டவரைக் கண்டதும் தாமாகவே பேச்சுக் கொடுத்து சம்பாஷணையை வளர்ப்பதன் மூலம் ஆங்கில மொழியறிவை விருத்தியாக்க விரும்புகின்றனர்.//

:-) நல்ல ஆர்வம்...

ஜோ/Joe said...

நல்ல கூத்து!

நான் simreap சென்றிருந்த போது தாஜ் உணவகத்தில் தான் சாப்பிட்டேன்.

ramachandranusha(உஷா) said...

எங்களப் போன்று முட்டை கூட சாப்பிடாத அப்பிராணிகள் என்ன செய்வது :-(

கானா பிரபா said...

உஷாக்கா

முட்டை சாப்பிடாவிட்டால், சாலட் தேடி ஓட வேண்டியது தான். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு பிரெட்டும் ஜாமும்.

கோபிநாத் said...

ஆகா...ஒருதன் சிக்கிட்டானா!! ;))

கலக்கல் பகுதி தல ;))))

Anonymous said...

:)

கானா பிரபா said...

வாங்க சந்தனமுல்லை

கம்போடியாவில் எனக்குப் பிடிக்காதது இந்த் சாப்பாட்டு விஷயம் தான் என்ன பண்றது கரப்பானுக்கெல்லாம் இடம் கொடுக்க முடியுமா ;)

கானா பிரபா said...

//ஜோ / Joe said...
நல்ல கூத்து!

நான் simreap சென்றிருந்த போது தாஜ் உணவகத்தில் தான் சாப்பிட்டேன்.//

வாங்க ஜோ

தாஜ் உணவகத்துக்கு நீங்களும் போனீங்களா, அந்த உரிமையாளர் பகுதி நேரமாக ஆடை இறக்குமதி பண்ணி உணவகம் வரும் கஸ்டமர்களிடமே இரண்டு மாங்காய் அடிக்கிறார்.

எம்.எம்.அப்துல்லா said...

கானா அண்ணே இதே நிலமை எனக்கு தைவானில் ஏற்பட்டது :((

தமிழன்-கறுப்பி... said...

சில நாடுகளில் இந்த கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது, இந்த சாப்பாட்டு விசயத்துல கனக்க நூதனம் பாக்குற எனக்கு உப்படியான இடங்கள் சரிவராது போல...

தமிழன்-கறுப்பி... said...

\\
ஆடு, கோழி , மீன்வகையறாக்கள் என்று பறப்பது, நடப்பது, பாய்வது என்று ஒன்றும் விடாமல் சாப்பிடும் என்னையே உலுக்கிப் போட்டது
\\
அப்ப எல்லாம் வெளுத்துக்கட்டுற ஆள் போல...:)

ஹேமா said...

//முட்டைகளை அங்கே நின்ற சமையற்காரரிடம் உடன் பொரிக்க வைத்து சாப்பிடுவது இதமாகத் தான் இருந்தது. கம்போடியப் பாணும் மெதுமெதுப்பாகவும் பதமாகவும் இருந்தது.//

ஆ.....யாழ் வாசம் பாண்.

ஹேமா said...

"இது! கரப்பான் பூச்சியில் செய்த துவையல்" என்று விட்டு அதைக் குழைத்தவாறே சுவைக்க ஆரம்பித்தார்."

பிரபா றால் சாப்பிடுறோம்.கரப்பான் பூச்சிதானே.கடிக்காது.பசி வந்தா பத்தும்....கரப்பான் பூச்சியும் பறந்து போகும்.

ஹேமா said...

பிரபா,ஊர்ல நம்ம சனங்கள் சாப்பாட்டுக்கு எவ்வளவு கஸ்டப்படுவினம் எண்டு இப்படியான தருணங்களிலாவது புரிந்துகொள்வொம்.

puduvaisiva said...

நண்பா பிரபா
என் மனதின் வெளிபாடு - உன் விழிகள் எண்பேன்
ஏதோ ஓர் ஈர்ப்பு பழைய கட்டிட கலை சிற்ப வேலைபாடு அந்த இடங்களில் நிலவும் சுழல் இது சாதரண சுற்றுலா என்ற கணக்கில் சேர்க்க முடியாது
ஏதோ விட்ட குறை தோட்ட குறை நாம் வாழ்ந்த இடத்தை இப் பிறவியில் பழைய நினைவுகளில் யாரோ நமக்காக காத்திருப்பது போன்ற உணர்வை தறுகிறது.
புதுவை சிவா.

எஸ்.ராமகிருஷ்ணன் தளத்தில் இருந்து சில வாக்கியங்கள்.
http://www.sramakrishnan.com/
1.
"இன்று வரை ஏதேதோ இடங்களில் சுற்றியலைந்து நான் கண்டு கொண்ட ஒரே உண்மை. உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. எல்லா ஜன்னலுக்கு பின்னும் ஒரு சிறுவனோ சிறுமியோ உலகை வியப்பு கலையாமல் பார்த்து கொண்டேயிருக்கிறார்கள் என்பது தான்
--
http://www.sramakrishnan.com/kadalalavu_1.asp
------------------------------------------
2.
"மகாபாரதம் மீது கொண்ட அதீத விருப்பத்தின் காரணமாக நான்கு ஆண்டுகள் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள அஸ்தினாபுரம், துவாரகை. குருஷேத்திரம் உள்ளிட்ட பலமுக்கிய நகரங்கள், இடங்கள் ஒவ்வொன்றாக தேடித்திரிந்து பார்த்திருக்கிறேன்."
http://www.sramakrishnan.com/yennai_patri.asp

"

கானா பிரபா said...

//கோபிநாத் said...
ஆகா...ஒருதன் சிக்கிட்டானா!! ;))

கலக்கல் பகுதி தல ;))))//


வாங்க தல‌
//Thooya said...
:)//

தூய்ஸ் என்ன சிரிப்பு ;)


//எம்.எம்.அப்துல்லா said...
கானா அண்ணே இதே நிலமை எனக்கு தைவானில் ஏற்பட்டது :((//

வாங்க அப்துல்லா
அப்படின்னா என் நிலமையை கற்பனை செய்யவேண்டிய அவசியமே உங்களுக்கு இருந்திருக்காது இல்லையா

G.Ragavan said...

இங்க ஐரோப்பாவுலயும் பெரும்பாலும் இந்திய உணவகம்னு போட்டிருந்தா பாகிஸ்தானியோ பங்களாதேஷியோதான் நடத்துவாங்க. ஆம்ஸ்டர்டாம்ல ஒரு நல்ல இந்திய உணவகம் இருக்கு. அதுக்குப் பேரு காமசூத்ரா. அது எங்க இருக்கு தெரியுமா? சிவப்பு விளக்குப் பகுதிக்குப் பக்கத்துல. டெல்லிக்காரங்க நடத்துறாங்க. ஆனா சாப்பாடு பிரமாதமா இருக்கும்.

என்னது! கரப்புத் துவையலா? விட்டா பாம்புப் பச்சடி...தவளைப் பாயாசம்னு அடுக்குவீங்க போல. கச்சே தாகேன்னு ஒரு விளங்காத இந்திப் படம் வந்துச்சு. அதுல அஜய் தேவ்கன் காட்டுக்குள்ள சூப்பு வெச்சிக் குடுப்பாரு. குடிச்சிட்டு அவரோட நண்பரு.. என்னடா சூப்புன்னு கேப்பாரு. மேண்டக்கா சூப்னு சொல்வரு. வெண்டக்கா சூப்பான்னு என்னோட நண்பன் கிட்ட கேட்டேன். இல்லையாம். மேண்டக்-னா தவளையாம். மேண்டக் கா சூப்புன்னா தவளையின் சூப்பு. யப்பா சாமி ஆள விடுங்கப்பு!

ஒரு ரகசியம் குறிச்சிக்கோங்க. இங்க ஒரு எத்தியோப்பியன் உணவகம் இருக்குது. அங்க முதலைக்கறியும் மான்கறியும் வரிக்குதிரைக் கறியும் கெடைக்குது. மொத ரெண்டு எப்பிடியிருக்கும்னு சுவைச்சிப் பாத்தாச்சு.

ஜோ/Joe said...

கானா பிரபா,
முதன் முதல் தலைநகர் புனாம் பென் சென்ற புதிதில் 'ராயல் இந்தியா' என்ற உணவகம் கண்ணில் பட ,உள்ளே நுழைந்தால் நடத்துபவர் பாகிஸ்தானி .அவர் என்னிடம் வந்து "நீங்கள் இந்தியரா?" என கேட்க ,அப்போதிருந்த மனநிலையில் நம்மை பழிவாங்கிவிடப்போகிறாரோ என பயந்து 'நான் ஸ்ரீலங்கன்' -ன்னு சொல்லிவிட்டேன்.. ஹி.ஹி.

இந்திய உணவங்களில் வேலை செய்யும் கம்போடிய மங்கையர்களுக்கு (இந்திய பாரம்பரியத்தோடு பரிமாறுகிறோம் பேர்வழி-ன்னு) சுடிதார் மாட்டி விட்டிருப்பதை கவனித்தீர்களா?

நீங்கள் குறிப்பிட்ட மஹாராஜா முதலாளி பாகிஸ்தானியை நான் புனாம் பென் -ல் சந்தித்திருக்கிறேன் .புனாம் பென்னில் இருந்த இலங்கைத் தமிழரின் உணவகத்துக்கு வருவார்.

கானா பிரபா said...

வணக்கம் ஜோ

ஆஹா சிறீலங்கன் என்று சொல்லித் தப்பினீங்களா ;)

என் பயணத்தில் புனாம் பென்னையும் முன்னர் சேர்த்திருந்தேன், ஆனால் அங்கே பொல்பொட்டின் கில்லிங் பீல்டை தவிர வேறு பெரிதாக ஒன்றுமில்லை என்று சொன்னதால் சியாம் ரிப்பிலேயே டோரா போட்டு விட்டேன்.

கம்போடிய மாதுவை இந்திய உணவகத்தில் வைத்து வேலை வாங்குவதை விட இந்தியரையே பணியில் சேர்த்தால் சிறப்பா இருக்கும் இல்லையா.

ஜோ/Joe said...

//என் பயணத்தில் புனாம் பென்னையும் முன்னர் சேர்த்திருந்தேன், ஆனால் அங்கே பொல்பொட்டின் கில்லிங் பீல்டை தவிர வேறு பெரிதாக ஒன்றுமில்லை //

உண்மை தான் .கில்லிங் பீல்ட்-க்கு நான் சென்றிருக்கிறேன் ,மற்றபடி அரண்மனை தவிர அங்கே பெரிதாக ஒன்றுமில்லை .ஆனால் மூலைக்கு மூலை இந்திய உணவகங்களுக்கு குறைவில்லை.

//கம்போடிய மாதுவை இந்திய உணவகத்தில் வைத்து வேலை வாங்குவதை விட இந்தியரையே பணியில் சேர்த்தால் சிறப்பா இருக்கும் இல்லையா.
//

நமக்கு சிறப்பாக இருக்கும் .முதலாளிக்கு கட்டுப்படியாக வேண்டுமே . கம்போடிய மாதுவுக்கு ஒரு நாள் 1 டாலர் =4000 ரியால் கொடுத்தால் போதும் .இந்திய மாது கண்டிப்பாக வரமாட்டார்.

கானா பிரபா said...

// தமிழன்-கறுப்பி... said...
சில நாடுகளில் இந்த கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது, இந்த சாப்பாட்டு விசயத்துல கனக்க நூதனம் பாக்குற எனக்கு உப்படியான இடங்கள் சரிவராது போல...//


வாங்கோ தமிழன்

ஒண்டுக்கு ஆசைப்பட்டா இன்னொண்டை இழந்து தான் தீரோணும் ;)

கானா பிரபா said...

// ஹேமா said...

பிரபா றால் சாப்பிடுறோம்.கரப்பான் பூச்சிதானே.கடிக்காது.பசி வந்தா பத்தும்....கரப்பான் பூச்சியும் பறந்து போகும்.//

வாங்கோ ஹேமா

நீங்கள் சொல்றதைப் பார்த்தா கரப்பான் பூச்சிக் கறி சாப்பிட உங்களுக்கு விருப்பம் போல ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ அபலை நீங்க தானா...?
கரப்பான்பூச்சி துவையல் ..ம்.கேக்கவே பயம்மா இருக்கு.. அது உங்களுக்கு வாழைப்பூ வாட்டாம் தெரிந்ததா.. :)

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

rapp said...

இதே மாதிரி ஒரு உணவை என் தோழி ஒருத்தங்க ஒரு நாள் சமைச்சு கொண்டுவந்தாங்க. நான் அய்யய்யோ வேணாம், அப்டிங்கறதோட நிறுத்திருக்கணும். என் வாய் சும்மா இருக்குமா, கூட சேர்த்து, 'சே இதயெல்லாம் எப்டி சாப்டரீங்கன்னு' ஒரு பிட்டை போட்டேன். அதுக்கு அவங்க எதுவும் சொல்லலை, ஆனா பக்கத்திலிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு தோழி, புடி புடின்னு பிடிச்சு ஒரு வழி பண்ணிட்டாங்க:):):) செமையா வாங்கிக் கட்டிக்கிட்டேன். அவங்களுக்கு இந்தியர்கள் மேல இருந்த கடுப்பு மொத்தத்தையும் என் மேல கொட்டி தீத்துக்கிட்டாங்க:):):)

கானா பிரபா said...

//புதுவை சிவா :-) said...
நண்பா பிரபா
என் மனதின் வெளிபாடு - உன் விழிகள் எண்பேன்//

வணக்கம் சிவா

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், ராமகிருஷ்ணன் பதிவுத் தொடுப்புகளுக்கும். எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் தேசாந்திரி போன்ற தொடர்கள் தான் என்னைப் பயணத்தின் மீது இன்னும் காதல் பிறக்க வைத்தது.

//.Ragavan said...
இங்க ஐரோப்பாவுலயும் பெரும்பாலும் இந்திய உணவகம்னு போட்டிருந்தா பாகிஸ்தானியோ பங்களாதேஷியோதான் நடத்துவாங்க.//


வணக்கம் ராக‌வ‌ன்

உங்க‌ பின்னூட்ட‌மே சுவையான‌ ப‌திவு போல‌ இருக்கு ;) ர‌சித்தேன். நீங்க‌ சொன்ன‌ இட‌த்துக்கெல்லாம் வ‌ர‌ணும் பார்ப்போம்.

கானா பிரபா said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஓ அபலை நீங்க தானா...?
கரப்பான்பூச்சி துவையல் ..ம்.கேக்கவே பயம்மா இருக்கு.//

உங்களுக்கு கேட்கவே பயமா இருந்துச்சு, பார்த்த எனக்கு எப்படி இருந்திருக்கும் :(

//rapp said...
ஆனா பக்கத்திலிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு தோழி, புடி புடின்னு பிடிச்சு ஒரு வழி பண்ணிட்டாங்க:):):) //

ஆஹா உங்க அனுபவம் வித்தியாசமா இருக்கே ;)

*இயற்கை ராஜி* said...

//இது! கரப்பான் பூச்சியில் செய்த துவையல்" என்று விட்டு அதைக் குழைத்தவாறே சுவைக்க ஆரம்பித்தார்//

:-))))))