Sunday, August 12, 2007
கர்நாடகா உலாத்தல் ஆரம்பம்
இந்தியப் பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் தேடி வாசித்து இந்தியா குறித்த வரலாற்று, அரசியல், சமூக விடயங்களை அறிந்த எனக்குப் பாரத தேசத்தை நேரில் காணும் வாய்ப்பு 2001 ஆம் ஆண்டில் தான் முதலில் வாய்த்தது. இவ்வளவு நாளும் கற்பனைக்கு மட்டுமே எட்டியிருந்த இந்தக் கனவு தேசம் எப்படியிருக்கும் என்பதைக் கண்ணால் கண்டு எனது வாசிப்பனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு அப்போது ஓரளவு கிடைத்தது.
நான் வேலை செய்த Oracle நிறுவனத்தின் திட்ட அமுலாக்கல் பிரிவின் (Project implementation) சார்பிலேயே எனது இந்த இந்தியப் பயணம் அமைந்தது.2001 ஆம் ஆண்டில் ஏதோ ஒரு கட்டிடடங்களில் பங்கு போட்டுக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக Indian Development Centre (IDC Oracle)மற்றும் Oracle Consulting ஆகிய பிரிவுகள் சில நூறு பணியாளர்களுடன் மட்டுமே அப்போது இயங்கிக் கொண்டிருந்தது.
மீண்டும் கடந்த 2006 ஆம் ஆண்டு வாய்த்த பெங்களூர்ப் பயணம் கூட மீண்டும் அலுவலக நிமித்தமே அமைந்திருந்தது.பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் வாசலில் அமெரிக்காவிலிருந்தோ அவுஸ்திரேலியாவிலிருந்தோ வரப்போகும் யாரோ ஒரு வெள்ளைத்தோல் மென்பொருள்காரனை வரவேற்க ஐந்து நட்சத்திர ஹோட்டல்காரர்களின் பெயர்ப் பதாதைகள் வரிசைகட்டி நிற்கின்றன.
Oracle India கடந்த ஆறு ஆண்டுகளில் அசுரத்தனமான வேகத்தோடு முன்னேறியிருந்தது என்பதற்கு இந்த நிறுவனம் தொழில் கொள்ளவைத்திருக்கும் பல்லாயிரம் பணியாளர் என்ணிக்கையே உதாரணம் கற்பித்தது. Garden City என்று செல்லமாக அழைக்கப்படும் பெங்களூரு Concrete City ஆக மாறிப்போயிருக்கின்றது. ஒரு சின்ன சந்து கிடைத்தால் போதும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் சந்தில் சிந்து பாடிக் கட்டிடம் எழுப்பிவிடும் அளவிற்கு இந்த நகரம் முன்னேறிக்கொண்டிருக்கின்றது. அயலக மாநிலங்களிலிருந்து இளைஞர்களும், இளைஞிகளும் தாம் கற்ற 65 ஆவது கலையான மென்பொருள் அறிவோடு முற்றுகை நடாத்திக் குடியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.ராஜ்குமாரின் படங்களையே போட்டுப் போட்டு அலுத்த திரையரங்குகள் திரையைக் கிழித்து ரியல் எஸ்டேட் பதாதைகளுடன் புதியதொரு மென்பொருள் நிறுவனத்தைக் கம்பளம் போட்டு வரவேற்கின்றன. காங்கிரஸ் - ஜனதள் கூட்டணியில் ஆட்சியோட்டிக் கொண்டிருந்த தரம்சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்து அரியாசனம் ஏறிய குமாரசாமிக் கவுடாவின் பதாதைகள் புதிதாக முளைத்திருக்கின்றன.
வீதியெங்கும் வாரியிறைக்கப்பட்ட டாக்ஸிகளும், கொம்பனி கார்களும், ஆண்டாண்டு காலமும் வாழ்ந்து கொண்டிருக்கும் மத்தியதர பெங்களூர்க்காரனின் வாகனத்தை முந்திக் கொண்டு பாய்கின்றன. புதிய புதிய மேம்பாலங்கள் பனர்கட்டா ரோட்டை மேவிப் பாய்கின்றன. சில வழித்தடங்கள் மூடப்பட்டு வேற்றுப்பாதையால் நாளாந்தப் பயணங்கள் மாற்றி விடப்படுகின்றன. புழுதி விலக்கத் தம் முகத்தைக் கைத்துணியால் மறைத்த இளைஞர் பட்டாளமொன்றின் டூவீலர் அணிவகுப்பு ஏதோவொரு மென்பொருள் நிறுவனம் நோக்கிப் போகின்றது. புழுதி அப்பிய கண்களோடு விடிகாலைச் சூரியக் கதிர்கள் வியாபிக்கின்றன. பெங்களூரின் சாபக் கேடாக இருக்கும் கெட்டுப் போன வீதிகளோடு சண்டை போட்டுக் கொண்டு கார்ச்சக்கரங்கள் நகர்கின்றன.
என் கம்பனியால் ஒழுங்கு செய்யப்பட்ட ஹோட்டலின் டாக்ஸி Leela Palace உள் நுளைகின்றது. லீலா பாலஸ் பெங்களூரின் விமான நிலையத்திற்கு ஒப்பீட்டளவில் மற்றைய தங்குமிடங்களை விட குறுகிய தூரத்தில் இருக்கின்றது. அரச பிரதிநிகள், உயர்மட்டத் தலைவர்கள் அதிகம் வந்து போகும் பெரிய ஹோட்டல்களில் ஒன்று. தன் பெயருக்கு ஏற்ற விதத்தில் பெரியதொரு அரண்மனையாக எழுந்து நிற்கின்றது இது. மும்பை, பெங்களூர், கோவா, மற்றும் கோவளம் ஆகிய இடங்களிலே இந்த ஹோட்டலின் அமைவிடங்கள் உள்ளன.
பூங்கா நகரமான பெங்களூர் காங்கிறீற் நகரமாக மாறிக் கொண்டிருக்கையில், லீலா பாலஸ் ஹோட்டலின் உள்ளேன் ஒரு மினி அந்தப்புரமே இருந்தது. நீர்ச்சுனைகளும், செயற்கையாக அமைத்த இயற்கை மலர்ச்சோலைகளுமாக உள்ளே ஒரு ரம்யமான சூழ்நிலை விளங்கியது. நான் தங்கியிருந்த காலத்தில் சீக்கிரமே காலையில் எழுந்து நடை போட இந்தச் சூழ்நிலை ஒரு இதமான வாய்ப்பையளித்தது.
எம் நிறுவனப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய நல்ல தரமான தங்குமிடங்களில் இருக்கவேண்டும் என்ற நோக்கில், இப்படியான ஹோட்டல்களோடு முற்கூட்டிய ஒப்பந்த அடிப்படையிலும் தங்கல் பதிவுகளைப் பேணிவருகின்றது. பெரும்பாலும் பெரிய கம்பனிகள் இப்படியான திட்டத்தையே பின்பற்றுகின்றன.
இந்த லீலா பாலஸ் ஹோட்டல் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் இருக்கின்றது. காரை விட்டு ஹோட்டல் உள்ளே நுளைகின்றேன். சிறு கூட்டம் ஒன்று லீலாவில் ஏற்கனவே நடந்து முடிந்த ஏதோவொரு சந்திப்பு நிகழ்வினை முடித்துக் கொண்டு வெளியேறுகின்றது. அதில் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டே நகரும் கறுப்பு உருவம் ஈர்க்கின்றது. "அட! முன்னாள் கிறிக்கெற் வீரர் கபில்தேவ் போகின்றாரே " என்று ஒரு கணம் நின்று அவரைப் பார்த்துவிட்டு ஹோட்டலின் உள்ளே நுளைகின்றேன். இனியதொரு வயலின் இசையை வாத்தியக்காரர்கள் வரவேற்பறையில் தவழவிடக் காதில் தேனாகப் பாய்கின்றது இந்த இசை வரவேற்பு.
தொடரும் ......!
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
முன்னுரை அருமை.
வாங்க பொட் டீ கடையாரே ;-)
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு.
படங்களுக்கு நன்றி கானா பிரபா..
வெளியில் இருந்து பார்த்தபோதே பிரம்மாண்டமாக தெரிந்தது அந்த ஹோட்டல்...உள்ளே அட்டகாசமாக இருக்கிறதே!!
படங்கள் நன்றாயிருக்கிறது
பிரபா!
என்ன? கர்நாடகா நம் நுவரேலியா போல பசுமையா இருக்கு?
இந்த விடுதியில் நித்திரை வருமா??
ரொம்ப பிரமாண்டம் நமக்கு அலர்ச்சி!
பழக்கமின்மை!
ஆகா! இது எப்பத்தைய உலாத்தல் பிரபா? லீலா பேலசிலிருந்து ஐந்தாறு நிமிடங்கள் நடந்தால் என்னுடைய வீடு. லீலா பேலஸ் தேவே கவுடா அவர்களுக்குப் பினாமிச் சொந்தம் என்று சொல்வார்கள். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. தொடரப் போகும் பயணத்தின் நிகழ்வுகளுக்காகக் காத்திருக்கிறேன்.
எங்களூரில் உங்கள் பொழுது இனிதே செலவழிய வாழ்த்துக்கள் :)
\\ இனியதொரு வயலின் இசையை வாத்தியக்காரர்கள் வரவேற்பறையில் தவழவிடக் காதில் தேனாகப் பாய்கின்றது இந்த இசை வரவேற்பு. \\\
தல
பதிவு முழுவதும் ஒரு மெல்லிய இசை பரவியிருக்கிறது. படங்கள் அனைத்தும் அருமை..
\\\தொடரும் ......!\\
ம்...நாங்க ரெடி நீங்க ரெடியா ? ;-))
//முத்துலெட்சுமி said...
படங்களுக்கு நன்றி கானா பிரபா..
வெளியில் இருந்து பார்த்தபோதே பிரம்மாண்டமாக தெரிந்தது அந்த ஹோட்டல்...உள்ளே அட்டகாசமாக இருக்கிறதே!! //
வணக்கம் முத்துலெட்சுமி
பிரமாண்டம் இந்த ஹேட்டலின் வாடகையிலும் தான் ;-) ஆனால் கம்பெனி பணம் என்பதால் நமக்கு கவலையில்லை. ஒரு அரச வாசஸ்தலம் போல இருந்தது.
//மாயா said...
படங்கள் நன்றாயிருக்கிறது //
வருகைக்கு நன்றிகள் மாயா
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
என்ன? கர்நாடகா நம் நுவரேலியா போல பசுமையா இருக்கு?
இந்த விடுதியில் நித்திரை வருமா??
ரொம்ப பிரமாண்டம் நமக்கு அலர்ச்சி!
பழக்கமின்மை!
//
சீதோஷ்ண நிலையிலும் இட அமைவிலும் கர்நாடகா நம் நுவரெலியாவை ஒத்ததே அண்ணா. தொடரும் பதிவுகளில் விரிவாகச் சொல்கின்றேன்.
தலைநகர் பெங்களூரின் நிலை தான் கவலைக் கிடம். நாளாந்தம் இயற்கை முகம் தொலைகின்றது.
தூக்கம் வராத பொழுதுகளில் கேபிள் சானல்களே கதி நமக்கு ;-)
இந்த உலாத்தல் பழைய உலாத்தலா - இல்லை புதிய உலாத்தலா ?
2006 என்பதால் பழையதாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது :)))
அப்போ நாங்கள் வந்து உங்களை மொக்கை போட்டதை மீண்டும் போடுவீங்களா :)))
பிரபா.. கேரளாவிலிருந்து கர்நாடகம் வர இவ்வளவு காலம் எடுத்ததா.. வீரப்பன் காட்டுக்குளாலையோ அல்லது கிழக்கு மலை தொடரில் ஏறி வந்திருந்தலோ கூட எப்பவே வந்திருக்கலாம்:-)
// Voice on Wings said...
எங்களூரில் உங்கள் பொழுது இனிதே செலவழிய வாழ்த்துக்கள் :) //
வணக்கம் நண்பரே
ஏற்கனவே வந்து போன பொழுதைத் தான் பதிவாக்கப் போகின்றேன், மிக்க நன்றி
//கோபிநாத் said...
ம்...நாங்க ரெடி நீங்க ரெடியா ?
;-))//
வாங்க தல
நானும் எப்பவோ ரெடி ;-))
பஹல தன்யவாடா
//செந்தழல் ரவி said...
இந்த உலாத்தல் பழைய உலாத்தலா - இல்லை புதிய உலாத்தலா ?//
தல
இது நாம் சந்தித்த உலாத்தலே தான், காலம் கடந்து தொடர்கின்றது
மீள் பதிவைப் போட்டால் போச்சு ;-)
//சின்னக்குட்டி said...
வீரப்பன் காட்டுக்குளாலையோ அல்லது கிழக்கு மலை தொடரில் ஏறி வந்திருந்தலோ கூட எப்பவே வந்திருக்கலாம்:-) //
சின்னக்குட்டியர்
அப்பிடியே ஆந்திராவுக்கும், வட நாட்டுக்கும் போனதால சுணங்கிப் போச்சு. வாட்டாள் நாகராஜ் மாதிரி வெருட்டாதேங்கோ சொல்லிப்போட்டன் ;-)
நானும் இந்த நகரத்திற்கு பல வருடங்களுக்கு முன் மாண பருவத்த்தில் போன ஞாபகம். இந்தியாவிலிலேயே மிகவும் தூய்மையான நகரத்திற்கு சென்ற அனுபவத்தை பகர்ந்திருக்கிறீர்கள். அருமையான படங்கள்.
India's silicon Vally.
காரூரான்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
மிக அருமை நன்றாயிருக்கிறது மேலும் வரட்டும்
வருகைக்கு நன்றி பகீரதன், மேலும் தொடருவேன்
Post a Comment