Social Icons

Pages

Thursday, June 08, 2006

கோவளக் கடலோரக் கவிதைகள்

மே 27, காலை 11.00 மணி (இந்திய நேரம்)

என் பயண அட்டவணையில் இருந்த அடுத்த சுற்றுலா கோவளம் கடற்கரை நோக்கியதாக அமைந்தது.

கோவளம் என்றால் "தென்னை மரங்கள் அடர்ந்த சிறிய சோலை" என்று பொருள்படும். அதற்கேற்றாற் போல, வழமையான கடற்கரைகளிலிருந்து மாறுபட்டு விளங்குகின்றது இந்தக்கோவளம். திருவனந்த புரத்திலிருந்து 16 கீ.மீ தொலைவில் உள்ள இந்தக் கடற்கரைக்கிராமம் 1930 களில் இருந்தே சுற்றுலாப்பயணிகளின் பார்வையில் ஈர்க்கப்பட்டு இன்று உலகில் பேசப்படும் சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக விளங்குகின்றது. (ஆதாரம்: கேரளா சுற்றுலாத்துறை)

அழகான , சுத்தமான கடற்கரையாகவும், கடல் அலையின் வேகமும் குறைவானதாகவும், நல்ல மன அமைதியைத்தருவதாகவும் இது விளங்குகின்றது. அதோடு கடற்கரையை அண்டி நல்ல உணவகங்கள், உயர்தரத் தங்குமிடங்கள், கலைப்பொருட்கள் வாங்குவதற்கான களஞ்சியமாகவும் இருக்கின்றது. உடன் பிடிக்கப்பட்ட கடல் உணவுகளும் கிடைக்கின்றன. இது ஒரு இளைப்பாறுதலுக்கான கடற்கரையாக மட்டுமன்றி, மீனவரின் வாழ்வியலை அருகே இருந்து பார்க்கும் வாய்ப்புக்கும் வசதி செய்கின்றது. நீங்கள் கேரளா போய்க் கோவளம் பார்க்காவிட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும், அவ்வளவு அபிமானத்தை ஏற்படுத்திவிட்டது இது.

நான் போன நேரம் மழைக்காலம் சீக்கிரமாகவே வந்துவிட்டது. வருடாந்தம் யூன் முதல் செப்டெம்பர் வரை மொன்சூன் பருவகாலம் ஆரம்பமாகி மழையும் பெய்ய ஆரம்பித்துவிடும்.
தண்ணிர்ப்பிரச்சனையில் அவதிப்படும் ஹோட்டல் குளியறை போற் காலையில் மெதுவாகப் பொழிந்த வானம், நான் கோவளம் கடற்கரையை அண்மித்ததும், காற்றுப் பெருங்குரலெடுக்கப் பலமாகப் பொழியத்தொடங்கியது. செயற்கைத்தனமற்ற சூழலில் தென்னை மரங்கள் புடைசூழ இருக்கும் இந்த கடற்கரையைக் கண்டபோது , அடைமழை எனக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.

காரை விட்டு இறங்கிக் கடற்கரை மணலில் தடம் பதிக்கின்றேன். கால்கள் ஈரமணலுக்குள் புதையப் புதைய என் கடற்கரை தாகம் சற்றும் குறையாமல் அலைபடும் கரைவரை விறுவிறுவென நடக்கின்றேன் நான்.பெரும் மழையில் ஓடியோடித் தம் கடற்கலன்களை கிடுகால் வேய்ந்த மறைப்பு விரிப்பாற் பாதுகாக்குகிறார்கள் மீனவ நண்பர்கள். ஜீன்ஸ் கால்களை மேல் உயர்த்திவிட்டுக் கடல்நீர் முழங்காலுக்கும் சற்றுக் குறைவான வேகத்தில் தொடும் அளவில் இன்னும் இறங்கி நடக்கின்றேன். வெள்ளக்குருமணற் சதுப்பில் என் கால்கள் இன்னும் வேகமாகப் புதைந்து இறுகி நிற்கவும், அதை விறுக்கென்று விடுவித்து இன்னும் நகர்கின்றேன். கடல் அலைகள் அடிக்கடி என் கால்களில் முத்தமிட்டு ஹலோ சொல்கின்றன.


கடல்நீர் சூழ்ந்த பாறைப்பரப்பில் ஏறிக் கரையைப் பார்ர்க்கின்றேன். கரையெங்கும் கடற்கரை விருந்தாளிகளுக்கான உயர்தரக் கடல் உணவு விருந்தகங்கள். இதுவே வெயில் நாளாக இருந்தால் கடற்கரையில் அரை நாள் டோரா போட்டுவிடுவேன். இந்தப் பெருமழைச்சாரல் என் உடம்பிற்கும் கெடுதலை உண்டாக்கிவிடுமே, இன்னும் கேரளாவில் பல சுற்றுலாவைக் களிக்கவேண்டுமே என்ற எச்சரிக்கை உணர்வில் வேண்டாவெறுப்போடு கோவளத்தை விட்டு நகர்கின்றேன் நான்.

கோவளம் கடற்கரையில் ஜீன்ஸ் போட்ட ஒற்றைக்கால் கொக்கு ஒன்று (அட.... அது நான்:-))
கேரளப்பண்பாட்டில் அமைந்த, கிடுகால் வேய்ந்த கடற்கரை உணவகம் ஒன்று.
படகை மறைக்கின்றது கிடுகுப்போர்வை
கயிற்றைக் காக்கும் கொட்டில்கள்
கடற்கரை நுளைவு

கரையொதுங்கும் காதலர்கள்.

வானத்தைப் பாருங்கள், கம்பிபோல் வளையங்கள்(கிடுகுக்) குடைக்குள் மழை



(பெரிதாகப் பார்க்கப் படங்களை அழுத்தவும்)

வரும்........

19 comments:

ப்ரியன் said...

நல்ல அருமையான படங்கள்

கானா பிரபா said...

நன்றிகள் ப்ரியன்

மலைநாடான் said...

இரண்டு மூன்று தடவைகள் கேரளா போயிருந்தும், கோவளம் போகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அடுத்த தடவை போகும்போது, கட்டாயம் போய் வருகின்றேன்.
பிரபா சாமியின்ர கோபத்துக் ஆளாகக் கூடாதில்லையா.

ஜீன்ஸ் போட்ட ஒற்றைக்கால் கொக்கு எந்த மீனுக்காக காத்து நிக்குதாம்?:-)))

கானா பிரபா said...

//மலைநாடான் said...
இரண்டு மூன்று தடவைகள் கேரளா போயிருந்தும், கோவளம் போகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அடுத்த தடவை போகும்போது, கட்டாயம் போய் வருகின்றேன்.
பிரபா சாமியின்ர கோபத்துக் ஆளாகக் கூடாதில்லையா.//

சரி சரி இந்தமுறை இந்தா பிடியுங்கள் மன்னிப்பு:-))

//ஜீன்ஸ் போட்ட ஒற்றைக்கால் கொக்கு எந்த மீனுக்காக காத்து நிக்குதாம்?:-)))//

இது சைவக்கொக்கு

சின்னக்குட்டி said...

நல்லாயிருக்கு கோவள கடற்க்கரை பீச்...... எம்சியாரும் சரோஜதேவியும் அன்பே வா படத்திலை ஆடிப்பாடின இடமெல்லோ.....

கானா பிரபா said...

சின்னக்குட்டி said...
//நல்லாயிருக்கு கோவள கடற்க்கரை பீச்...... எம்சியாரும் சரோஜதேவியும் அன்பே வா படத்திலை ஆடிப்பாடின இடமெல்லோ..... //

அட... அவையும் போய்ப் பாட்டு எடுத்திட்டினமோ?

Anonymous said...

பிரபா!
படங்கள் அழகாக உள்ளன.
அப்பிடியா!! இந்தக் சைவக்கொக்குக்கு"ஆதியில் சைவம் ஆடு கோழி ஆகாது;மீன் கருவாடாகும்" தெரியுமோ!
ஈழத்திலும்;காரைநகரில் கோவளம் எனும் கடற்கரைக்கிராமம் உண்டு. அதை அண்டியே "கயூர்ணா- பீச்" கேள்பிப்பட்டிருப்பீர்கள்.
முல்லைத்தீவுவில் நாகர்கோவில் முதல் நாயாறுவரை;திருகோணமலையில் திருக்கோவில்;வெருகல்;மட்டக்களப்பில் பாசிக்குடா;சிலாபம்;நீர்கொழும்பு;மாத்தறை;காலி;அம்பாந்தோட்டை
முதலான இடங்களும்; கேரளக்கடற்கரைக் கீடானவை.
"அமைதி இருந்தால்"
இனியொரு தரம்; இந்தியா சென்றால் கட்டாயம்; கேரளா செல்லும் எண்ணம் உண்டு.
யோகன் பாரிஸ்

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

மேலதிக தகவல்களுக்கு என் நன்றிகள். கயூர்னா பீச்சிற்குச் சென்ற அனுபவம் உண்டு. கரையில் சவுக்குத்தோப்பும், ஈச்சமரமும் இருக்கின்றன. வடமராட்சியில் கற்கோவளம் என்ற ஊரும் உண்டல்லவா.

இளங்கோ-டிசே said...

பிரபா, கொடுத்துவைத்த ஆளய்யா நீங்கள்!
.....
தாய்வழிச்சமூகம் பற்றிய ஒரு விவாதத்தில், கேரளாவில் தாய்வழிச்சமூகம் அண்மைவரை இருந்ததாகவும், கேரளக்கோவளக்குட்டிகளிடம் கேட்டுத் தெளிவுறும்படியும் நண்பர்கள் சிலர்
கூறியிருந்தனர். உங்கே நடந்து திரியும் கேரளக்குட்டிகளிடம் விடையறிந்து எனக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்....செருப்படி விழுந்தால் அந்நினைவை கடற்கரை மணலில் புதைத்துவிட்டு நகரவும் என்பதையும் சேர்த்து வாசிக்குக :-).

கானா பிரபா said...

டி சே

கோவளத்தை விட்டு வெளியேறி இரு வாரம் கடந்துவிட்டது, நான் இப்போது பெங்களூரில்.
நண்பர் கொழுவி மாதிரி என்னை வம்பில மாட்டிவிட ஒரு கூட்டமே அலையுதுபோல:-)))

சின்னக்குட்டி said...

//தாய்வழிச்சமூகம் பற்றிய ஒரு விவாதத்தில், கேரளாவில் தாய்வழிச்சமூகம் அண்மைவரை இருந்ததாகவும்,//

தாய் வழி சொத்துடைமை சட்டவாக்கு யாழ் தேச வழமை சட்டம் போல கேரளாவிலும் இருந்தது.

கைப்புள்ள said...

படங்கள் அருமையாக உள்ளன பிரபா. கோவளக் கடற்கரையை நேரில் பார்த்த நிறைவைப் பெற்றேன். நன்றி.

Anonymous said...

//ஜீன்ஸ் போட்ட ஒற்றைக்கால் கொக்கு எந்த மீனுக்காக காத்து நிக்குதாம்?:-)))

இது சைவக்கொக்கு//

:-):-)

நல்ல படங்கள். ஊர் நினைவு வந்திட்டுது.

கானா பிரபா said...

மேலதிக விடயங்களைப் பகிர்ந்த சின்னக்குட்டிக்கு என் நன்றிகள்.

கானா பிரபா said...

வணக்கம் கைப்புள்ள :-)

தங்கள் வருகைக்கு என் நன்றிகள்:-)))

கானா பிரபா said...

வணக்கம் சிறீ அண்ணா

தங்கள் வருகைக்கு என் நன்றிகள்:-)))

சிந்து said...

மிகவும் அழகாக படங்களை எடுத்து வந்து உங்கள் வலைப்பூங்கவில் இணைத்து இருக்கின்றீகள். அதொட்கொரு சாபாஷ். கோவள கடற்கையில் நானும் விளையாடிய நிணைவுகளை ஒருமுறை மீட்டி பார்த்தேன் நீங்கள் எழுதி இருப்பதை படித்தவுடன். நன்றி பிரபா. தொடரட்டும் உங்கள் சுற்றுலா.

கானா பிரபா said...

ஓகோ நீங்களும் கோவளம் போயிருக்கிறீர்களா சிந்து?

நன்றிகள் உங்கள் வருகைக்கு:-)

Sakthy said...

வணக்கம் கானா பிரபா
இன்று தான் உங்கள் தளம் அறிமுகம் எனக்கு.படைப்புக்கள் நன்று..வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் பணி தொடர..
நானும் உங்களோடு இணையலாமா...