Social Icons

Pages

Monday, June 05, 2006

கேரளத்தலைநகர் இன்னொரு சுற்று!

மே 27, காலை 9.30 மணி (இந்திய நேரம்)

திருவனந்தபுர வலத்தில், அடுத்து சிறப்பாகப் புகழப்பெறும் கோயில்களில் ஒன்றான ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தை வெளியே நின்று பார்த்துத் தரிசனை செய்கின்றேன்.
அந்த இடத்தை விட்டு நகர்ந்து, இன்னும் சில சந்து போல (குச்சொழுங்கையிலும் கொஞ்சம் பெரிது), உள்ள பாதைகளுக்குள்ளால் பயணப்படுகின்றது நம் கார். காலையில் இருந்தே வானம் அடிக்கடி சிணுங்கிச் சிணுங்கி ஒண்ணுக்குப் போனது, பெரிய, பெரிய துளிகளாய் மழைத் துப்பல்கள் கார்க்கண்ணாடியில் விழுந்து தெறித்து ஒலியையும் எழுப்புகின்றது. மழைச்சாரல் எழுப்பும் ஒலி, ஒரு தகரக்கொட்டகையில் மணலை வாரியிறைப்பதுபோல இருக்கிறது.
அடுத்ததாக நான் சென்ற சுற்றுலாப் பகுதி, வேலி சுற்றுலாக் கிராமம் (Veli Tourist village). வேலி என்ற கடல் நீரேரியும் , அராபியன் கடலும் சூழ அமைந்திருக்கும் இந்த சுற்றுலாத்தலம் திருவனந்தபுரம் நகரத்திலிருந்து 8 கீ.மீ தூரத்தில் உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையாளர் நேரம்.உள்ளே மலர்ப்பூங்காவும், சிறுவருக்கான களியாட்ட உபகரணங்களும், கொண்டு ஒரு நீர்ப் படுக்கையின் ஓரத்தில் அமைந்திருக்கின்றது. அதோடு அந்த நீர்நிலையில் குறுகிய தூரப்படகுச் சவாரி செய்யவும் வசதிகள் உண்டு. யாழ்ப்பாணத்தில் பார்த்த பெரிய பூவைப் பூக்கும், செவ்வரத்தம் மரங்கள், இன்னும் சில மரங்கள், தென்பட்டன.

மூன்று முடிச்சு படத்தில் வரும் " வசந்தகால நதிகளிலே", மற்றும் வெள்ளை ரோஜாவில் வரும் " சோலைப்பூவில் மாலைத்தென்றல்" போன்ற பாடற்காட்சிகளை அந்தப் படகுச்சவாரிச் சூழ்நிலை ஞாபகப்படுத்தியது.
அழகிய தாமரைக்குளத்திற்குள் பிளாஸ்டிக் போத்தல்.


திருவனந்தபுரத்துக்கு வந்ததும் அடுத்ததாக என் வழக்கமான வேலையையும் தொடங்கிவிட்டேன். அது வேறொன்றுமில்லை , நான் தேடிக்கொண்டிருக்கும் சில மலையாளப் CD படங்களை வாங்கும் வேலை தான், கார்ச்சாரதியை மலையாளப் படங்கள் அதிகம் விற்கும் பகுதிக்குக் கொண்டுபோகுமாறு பணித்தேன். அவரும் பீமபள்ளி என்ற இடத்துக்குக் கொண்டுபோனார். இதுவும் அவ்வூரில் மிகவும் புகழ்பெற்ற ஒரு தர்கா ஆகும்.
பீமபள்ளியில் பிரபலமான பள்ளிவாசல் இருக்கின்றது. அந்தப் பள்ளிவாசலை அண்டிய கடைத்தெருக்கள் வெறும் திரைப்படப் பாடல், படங்களின் CD கடைகளை இருபுறமும் கொண்டதாக இருக்கின்றது. சென்னையின் பர்மா பஜார் போல இந்தப் பகுதி திரைப்பட CD களுக்கு வெகு பிரசித்தமானது. ஆனால் என்ன ? நான் தேடிக்கொண்டிருக்கும் மம்முட்டியின்"மதிலுகள்", அடூர் கோபாலகிருஷ்ணின் "நிழல் கூத்து", போன்ற நல்ல படங்களைப் பற்றி ஒவ்வொரு கடையிலும் விசாரித்தபோது என்னை ஒரு டைனோசர் போன்ற ஜந்து போலப் பார்த்துவிட்டு அதெல்லாம் இல்லை என்றார்கள்.

இந்தக் கடைகளும் சரவெடிகளுடன் விஜய் "சிவகாசி"க்காகவும், மொட்டைத்தலை சூர்யா "கஜினி"க்காகவும் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மலையாள தேசத்தில் தமிழ்ப்பட CDக்கள் விரவிக்கிடக்கின்றன. கண்ணில் பட்ட மோகன் லாலின் " தன்மத்ரா"வையும், மம்முட்டியின் "ஒரு வடக்கன் வீரக்கதா"வையும் (எம்.டி.வாசுதேவன் நாயரின் திரைக்கதை, 1989 சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருது பெற்றது) வாங்கிவிட்டு நகர்கின்றேன்.ஒரு CD இன் விலை ரூ 20 மட்டுமே. தயாரிப்பாளர் சார்பில் என் வயிறெரிந்தது. வரும் வழியெங்கும் கார்ச்சாரதி, பாடகர் யேசுதாஸின் புகழைப் பாடிகொண்டேவந்தார். கேரளத்துக்காரர்கள் ஜேசுதாஸிற்குக் கோயில் கட்டாததுதான் பாக்கி. இந்த மது பாலகிருஷ்ணன் காலத்திலும், ஒவ்வொரு மலையாளப் படத்திலும் ஜேசுதாஸ் பாடல் ஒன்றாவாது வரவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். முன்பு தமிழ்ப்படவிநியோகஸ்தர்கள் ஒரு சிலுக்கு டான்ஸ் போட்டால்தான் பெட்டியை வாங்குவேன் என்று தயாரிப்பாளரை மிரட்டுவதுபோல இது ஒரு வர்த்தக சமாச்சாரமாக இருக்கிறது.

Honda, Toyota, Nissan என்று நவீனகார்கள் வந்து மாருதிக்கார்களின் தனிக்காட்டுராஜாத்தனம் ஒதுக்கப்பட்ட இந்தியாவாக வந்துவிட்டாலும், திருவனந்தபுரத்தில் இன்னும் வெள்ளைவெளேர் அம்பாஸிடர் கார்கள் தான் அதிகம் தென்படுகின்றன.

தெருக்களில் தென்படும் அறிவிப்புப் பலகைகள் மலையாளம், தமிழ் தாங்கியவாறும் இருக்கின்றன. ஆனால் அங்கு குறிப்பிடப்பட்ட சில தமிழ்ப்பெயர்கள் ஈழத்தமிழர் மட்டுமே அதிகம் புழக்கத்தில் வைத்திருக்கும் சொற்களாக இருக்கின்றன. உதாரணமாக Toilet ஐ கழிப்பறை என்றே தமிழ் நாட்டில் அதிகம் எழுத்துத்தமிழில் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் கேரளாவில் நான் அவதானித்த இந்தக் கழிப்பறைகளின் பெயர்கள் தமிழில் "கக்கூஸ்" என்றே எழுதப்பட்டிருக்கின்றன.

"கக்கூஸ்" என்ற சொல் டச்சுக்காரர்களால் ஈழத்தமிழில் புகுத்தப்பட்டு ஒரு திசைச்சொல்லாக் த் தமிழ் இலக்கணத்தில் புகுந்துள்ளது. இதே சொல் கேரளத்திலும் பயன்படுவது, டச்சுக்காரரின் மொழி ஈழத்தமிழிலும் மலையாளத்திலும் சமகாலத்தில் கலந்திருப்பது தெரிகின்றது. கிராம்பு, அலுமாரி, சாவி, பாதிரி போன்ற போர்த்துக்கீசச்சொற்களே தமிழ் நாடு மொழிவழக்கில் விரவியுள்ளன. டச்சு மொழியின் ஆதிக்கம் தமிழ்நாட்டுத் தமிழைப் பொறுத்தவரை அரிதே என்று கொள்ளவேண்டியிருக்கிறது.
ஈழத்தமிழ் (குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழ்) மற்றும் மலையாளத் தமிழ் குறித்த ஒப்பீடை இன்னொருபதிவில் தருக்கின்றேன். இதற்காக சில இலக்கண நூல்களையும் வாங்கிருக்கிறேன். நிறைய வாசிக்கவேண்டும்.

நகரப்புறத் தெருக்களிலும் கூட பழுப்புவெள்ளை, அல்லது காவி நிறவேட்டிகளை அணிந்த இளைஞர்களையே அதிகம் காணமுடிகின்றது. இவர்கள், யாராவதுஜீன்ஸ் போட்ட பையன்களைக் கண்டால், "என்னய்யா! சுத்த நாகரீகம் தெரியாதபயலாக இருப்பாய் போலிருக்கே என்று கேட்டாலும் கேட்பார்கள். இந்த வேட்டி கட்டிய சேட்டன்கள் தம் வேட்டியை இடுப்பில் தரித்து, நடக்கும் போது வேட்டி நுனியைக் கையால் வரிந்துகொண்டு வீதியில் போகும் அழகோ அழகு.


தொடங்கும்......

16 comments:

குழைக்கட்டான் said...

//உதாரணமாக Toilet ஐ கழிப்பறை என்றே தமிழ் நாட்டில் அதிகம் எழுத்துத்தமிழில் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் கேரளாவில் நான் அவதானித்த இந்தக் கழிப்பறைகளின் பெயர்கள் தமிழில் "கக்கூஸ்" என்றே எழுதப்பட்டிருக்கின்றன.
"கக்கூஸ்" என்ற சொல் டச்சுக்காரர்களால் ஈழத்தமிழில் புகுத்தப்பட்டு ஒரு திசைச்சொல்லாகக் கருத்தப்படுகின்றது. இதே சொல் கேரளத்திலும் பயன்படுவது, டச்சுக்காரரின் மொழி ஈழத்தமிழிலும் மலையாளத்திலும் சமகாலத்தில் கலந்திருப்பது தெரிகின்றது. கிராம்பு, அலுமாரி, சாவி, பாதிரி போன்ற போர்த்துக்கீசச்சொற்களே தமிழ் நாடு மொழிவழக்கில் விரவியுள்ளன. டச்சு மொழியின் ஆதிக்கம் தமிழ்நாட்டுத் தமிழைப் பொறுத்தவரை அரிதே என்று கொள்ளவேண்டியிருக்கிறது.
ஈழத்தமிழ் (குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழ்) மற்றும் மலையாளத் தமிழ் குறித்த ஒப்பீடை இன்னொருபதிவில் தருக்கின்றேன். இதற்காக சில இலக்கண நூல்களையும் வாங்கிருக்கிறேன். நிறைய வாசிக்கவேண்டும் //

கேரளாவுக்கும் யாழ்ப்பாணத்துகும்/ ஈழத்தமிழுக்கும் இருக்கும் தொடர்பு,
உணவு பழக்க வழக்கம், புட்டு , இடையப்பம், அதிகள்வு தேங்காய் செர்த்து சமைக்கப்படும் சமையல்...
வீடமைப்பு,
வேலிகள்

போன்ற அம்சங்களை பலரும் கூற கேட்டிருக்கிறேன் . உங்கள் பதிவுகளும் இடைக்கிடை அவற்றை தொட்டு செல்கிறன.

அவற்றை பற்றி விரிவாக அறிய ஆவல்.

குழைக்கட்டான் said...

//இடையப்பம், அதிகள்வு //

இடியப்பம், அதிகளவு...

திருத்தம் :)

கானா பிரபா said...

வணக்கம் குழைக்காட்டான்

உங்களின் மெயிலைக் கண்டு நாளைக்குப் போடவிருந்த பதிவை அவசரமாக எழுதிப்போட்டுவிட்டேன், உடனேயே வாசித்துப் பதில் போட்டமைக்கு என் நன்றிகள்.

இந்தப்பயணத்தில் நான் திரட்டிய, வரப்போகும் அம்சங்கள் உங்கள் ஆவலை ஓரளவு பூர்த்திசெய்யும் என்று நினைக்கின்றேன்.

மலைநாடான் said...

பிரபா!

மோகன்லாலின் 'ஜெயின் கெயினு அப்துல்லா' கிடைத்ததா? நானும் பல வருடங்களாகத் தேடித்திரிகிறேன் கிடைத்தபாடில்லை.

கேரளாவிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் மட்டுமல்ல, சிங்களப்பகுதிகளிலுள்ள சில விடயங்களிலும் ஒற்றுமை உண்டு. இதற்கு முக்கியமான காரணம் உண்டு. பிரபா நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் பொருத்தமான இடத்தில் அதைச் சொல்கின்றேன்.பாராட்டுக்கள்.

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

நீங்கள் குறிப்பிடும்
மோகன்லாலின் படம்
His highness அப்துல்லா என்று நினைக்கின்றேன், 'ஜெயின் கெயினு அப்துல்லா' என்ற பெயரில் அவர் நடித்ததாக நான் அறியவில்லை. இந்த His highness அப்துல்லா படத்தில் சமீப காலத்துக்கு முன் இறந்த ரவீந்திரன் இசையில் "ப்ரமதவனம் வேண்டும்" என்று அருமையான ஒரு பாடலைப் பாடியிருப்பார். இன்றைக்கும் நான் முதலாம் தரத்தில் வைத்துப் போற்றும் மலையாளப்பாடல் அது.

இந்தப்படம் இங்கு எல்லா இடங்களிலும் கிடைக்கின்றது.

G.Ragavan said...

புகைப்படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.

கக்கூஸ் என்ற சொல்லை நாங்களும் பயன்படுத்துவோம். ஆனால் எழுத்தில் எழுதுகையில் கழிப்பறை என்போம். நல்லவேளை களிப்பறையாகவில்லை. :-))

உண்மைதான். மலையாளத்து ஆண்கள் வேட்டியைக் கட்டும் கட்டு அழகுதான். நானும் நாளும் கெழமைன்னா கெட்டுறேன். ஆனா அவ்வளவு பொருத்தமா இருக்க மாட்டேங்குது.

கானா பிரபா said...

//கக்கூஸ் என்ற சொல்லை நாங்களும் பயன்படுத்துவோம். ஆனால் எழுத்தில் எழுதுகையில் கழிப்பறை என்போம். நல்லவேளை களிப்பறையாகவில்லை. :-))//

ஆமாம், ஆனால் எழுத்துப்புழக்கத்தில் கழிப்பறை என்று உபயோகிக்கப்படுகிறது.
திருட்டுத் தம் அடிப்பவர்களுக்கு களிப்பறை தானே:-))))

நாங்கள் என்னதான் வேட்டி கட்டினாலும் ஒட்டைக்குச்சிக்கு சேலை சுத்தினது மாதிரி, ஆனால் சேட்டன்களின் கம்பீரமான உடல்வாகுக்கு இந்த வேட்டி கனகச்சிதமாகப் பொருந்துகின்றது.

kulakaddan said...

//உங்களின் மெயிலைக் கண்டு நாளைக்குப் போடவிருந்த பதிவை அவசரமாக எழுதிப்போட்டுவிட்டேன், உடனேயே வாசித்துப் பதில் போட்டமைக்கு என் நன்றிகள்.//
nanRi..:))

(துபாய்) ராஜா said...

பிரபா!கேரளப்பயணத்தை அங்குலம் அங்குலமாக அனுபவித்துள்ளீர்கள் என்பது எழுத்திலே தெரிகிறது.
வாழ்த்துக்கள்.

பிரபா!எனது சபைக்கும் வருகை தாருங்கள்.
http://rajasabai.blogspot.com/

அன்புடன்,
(துபாய்)ராஜா.

சின்னக்குட்டி said...

வணக்கம் பிரபா.... ஆனந்த விகடனனில் மணியன் எழுதிய பயணகட்டுரைகளினை விஞ்சும் வண்ணம் பயணதொடரை தந்து கொண்டு இருக்கிறியள்.... வாழ்த்துக்கள்

ஒரு முறை பிராமணிய துக்ளக் சோ... தனது வக்கிரத்தை இப்பிடி வாந்தி எடுத்திருந்தார்...

கேரளத்தில் ஈழவர் என்ற இன வகை பிரிவனர் வாழ்ந்து வருகின்றனர்....அதை மேற்கோள் காட்டி தமிழ் நாட்டு தமிழ் மக்களுக்கும் ஈழத்து தமிழ் மக்களுக்கு தொடர்பு இல்லை என்று.....

வசந்தன்(Vasanthan) said...

உமக்கு வார்ப்புரு மாத்துறது அலுக்காது போல.

அதுசரி, உந்தப்படத்தில இருக்கிறது செவ்வரத்தம்பூ தானே?
இல்லாட்டி 'இந்தியச் சரக்கோ"?

johan -paris said...

பிரபா!
நீங்க போன நேரம் மழையா,,,? ;கேரளா எப்போதும் இப்பிடியா,,,; கருமேகப் பின்னணியில் தர்க்கா!; அந்த வாத்து நீரலையில் மரநிழல்ப் படங்கள் மிக நன்றாக உள்ளன. கேரளா!! பார்க்க வேண்டும் போல் உள்ளது. கதகளிச் சேதியுமுண்டோ!!!
யோகன் -பாரிஸ்

கானா பிரபா said...

வணக்கம் (துபாய்) ராஜா

தங்கள் ராஜசபை கண்டேன், மகிழ்கின்றேன். பார்வையாளராக இருந்து பங்காளியாக மாறியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்:-)

கானா பிரபா said...

வணக்கம் சின்னக்குட்டி

தங்கள் ஊக்கம் தரும் கருத்துக்கு என் நன்றிகள். நிறையப்பேர் படிக்கிறார்கள், ஆனால் நான் சொல்லும் சேதிகள் சம்பந்தமான தங்கள் பார்வையையும் தந்தால் சிறப்பாக இருக்கும் என நினைகிறேன்.

சோவை விட்டுவிடுங்கள், எங்களைப் பொறுத்தவரை அவர் திரையிலும், நிஜவாழ்விலும் ஒரு நகைச்சுவை நடிகர்.

கானா பிரபா said...

வசந்தன்,

உது செவ்வரத்தம் பூ தான், அவுஸ்திரேலியாவில் என் கண்ணில் அகப்படாததால் கமராவில் சுருட்டிக்கொண்டேன்.

நான் வார்ப்புரு மாத்துறது இருக்கட்டும், இப்ப பாருமன், படங்கள் அந்தமாதிரித் தெரியுது. (அல்லது இன்னும் வெள்ளெழுத்துப் பிரச்சனையோ:-) )

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

நான் போன நேரம் மழைக்காலம் சீக்கிரமாகவே வந்துவிட்டது. வருடாந்தம் யூன் முதல் செப்டெம்பர் வரை மொன்சூன் பருவகாலம் ஆரம்பமாகி மழையும் பெய்ய ஆரம்பித்துவிடும்.

கதகளி பார்க்கும் வாய்ப்புக்கிடைக்கவில்லை, ஆனால் செண்டை மேளக்கச்சேரி படங்களுடன் வர இருக்கிறது.

ஒவ்வொருவரும் சாவதற்கு முன்னால் கேரளா போய்ப் பார்த்துவரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.