Social Icons

Pages

Friday, June 02, 2006

திருவனந்தபுரம் ஒரு ஓரப்பார்வை


மே 27, காலை 9 மணி (இந்திய நேரம்)


நான் கேரளாவிற்குப் பயணம் செய்ய முன்னர் செய்த ஆயத்தங்களில் ஒன்று, கேரள சுற்றுலாத்துறை சம்பந்தமான தகவற் தளங்களுக்குச் சென்று எனது பயண நேர அட்டவணைக்கேற்றாற் போலத் தகுந்த இடங்களைத் தேர்வு செய்து, அவற்றில் மிக முக்கியமானவற்றைக் குறித்து வைத்ததோடு , அவற்றைப் பற்றிய உபகுறிப்புக்களையும் படித்துத் தெரிந்துகொண்டேன். இப்படியான முன் ஆயத்தங்கள் செய்யும் போது திட்டமிட்டு நம் சுற்றுலா நேரத்தைச் செலவழிக்கமுடியும் என்பதோடு, ஒரு மேற்கு நாட்டவருக்கு உவப்பளிக்கக்கூடிய எல்லாச் சுற்றுலா அம்சங்களும் கீழைத்தேயவரான நமக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது, அப்படியான சந்தர்ப்பத்தில் நம் பொருத்தமான தேர்வும் கைகொடுக்கும். இந்தத் திட்டமிடல் என் குறுகிய கேரளப் பயணத்திற்கு நிரம்பவே கைகொடுத்தது.

முன்னர் திருவங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராகவும், பின்னர் தற்போது கேரளா மாநிலத்தின் தலைநகராகவும் விளங்கும் திருவனந்தபுரம் பற்றிய சிறு இடவியற்குறிப்பை முதலில் பார்ப்போம்.
(ஆதாரம்: கேரளா சுற்றுலாத்துறை)
பரப்பளவு : 2,192 சதுர கீ.மீ
மக்கட்தொகை: 29,46,650 பேர்
பருவநிலை (சராசரி): 36.2 பாகை செல்சியஸ் (அதிகபட்சம்)
19.9 பாகை செல்சியஸ் ( குறைந்த பட்சம்)
மழைவீழ்ச்சி (சராசரி): 107 செ.மீ (மே மாதம் - நவம்பர் வரை)
சுற்றுலாவிற்கு உகந்த காலம் : செப்டெம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரை

மணிக்கு 100 ரூபா என்ற பேரத்தில் TATA Indica (A/C) காரில் தான் என் பயணம் நடந்தது. சாரதிக்கு நான் செல்லவேண்டிய முக்கியமான இடத்தைப் பற்றிய விளக்கத்தை முதலில் சொல்லிவைத்தேன். பின்னர் அவரிடம் எந்த இடத்துக்கு முதலில் போவது என்பதை வழித்தடத்தை வைத்துத் தீர்மானிக்கும் படி சொன்னேன். இதனால் ஒரு இடத்திலிருந்து மீண்டும் பழைய இடத்துக்கு வரவேண்டிய அவசியம்
இருக்காதல்லவா?

காரின் முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டு திருவனந்தபுரத்துக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே வருகின்றேன். வழிநெடுக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் -CPI (M) நடந்துமுடிந்த தேர்தல் மற்றும் வாழ்த்து விளம்பரங்கள் ஒட்டப்பட்ட சுவர்கள் தான் கண்ணில்படுகின்றன. எனோ தெரியவில்லை, மாபெரும் தேசியக்கட்சிகளான காங்கிரஸ், மற்றும் பாரதீய ஜனதாவின் தேர்தல் களோபரங்கள் மருந்துக்கும் கண்ணில் தென்படவில்லை. கேரளாவில் கம்யூனிஸ்டுக்கள் எவ்வளவு ஆழமாக வேர்விட்டிருக்கிறர்கள் என்பதை அவர்களின் பெரும்பான்மையான பிரச்சார ஆக்கிரமிப்பைப் பார்ப்பதன் மூலம் உண்டர்ந்துகொள்கின்றேன். இன்னும் கொடி, மற்றும் பதாதைகள் எங்கும் அவர்களின் பிரச்சாரம் தான் கண்ணை நிறைக்கின்றது.

தற்போது இடதுசாரி கம்யூனிஸ்டுக்களின் அரசாங்கம், வீ.எஸ்.அச்சுதானந்தனை முதல்வராகக் கொண்டு செயற்படுகின்றது.

இந்தியாவின் மற்றைய மாநிலத்தலைநகர்கள் போல் அல்லாது எளிமையின் சிகரமாகக் கேரளத்தலைநகர் காட்சியளிக்கின்றது. பாரிய கட்டிடங்கள் ஒரு சிலவற்றைக் கொண்டு, மிகுதி நிலப்பரப்பைத் தென்னை, கமுகு போன்ற மரங்கள் வியாபித்த சோலையாகக் காட்சியளிக்கின்றது இந்நகர். பெரும்பாலும் பழைய கட்டிடங்கள் மஞ்சள் சாயம் தோய்ந்து காணப்படுகின்றன. வீதிப்போக்குவரத்திலும் ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்ட வாகனங்களைக் கொண்டிருக்கின்றன.

பில் கேட்ஸ் (Microsoft), லாரி எலிஸன் (Oracle) போன்ற அமெரிக்க வியாபாரிகள் பெங்களூர், தமிழ்நாடு, ஆந்திரா என்று தம் பல்தேசியப் பலசரக்குக்கடைகளை நிறுவிக் கடைவிரித்திருக்க, "இந்த வெளையாட்டுக்கெல்லாம் நான் வரலேப்பா" என்று கேரளம் ஒதுங்கியிருப்பது போற் தெரிகின்றது.

அரசியற்கட்சிகளின் சுவரொட்டிக்குத் தாமும் சளைத்தவை இல்லை என்பது போல் மாலிவூட் எனப்படும் மலையாள சினிமாவின் சுவரொட்டிகளும் மதில்களின் நிறத்தை மறைத்து எங்கும் வியாபித்திருக்கின்றன. "மம்முகோயாவின் (மம்முட்டி) பல்ராம் VS தாராதாஸ்", திலீப்பின் "பச்சக்குதிர", சுரேஸ்கோபியின் சிந்தாமாணி கொல கேஸ்", மோகன்லாலின் புதுவரவு " வடக்கும்நாதன்" (இதை பெங்களூர் PVR Cinema இல் நேற்றுப் பார்த்தேன்), மற்றும் 50 நாளுக்கு மேல் ஒடிக்கொண்டிருக்கும் "ரஸ தந்திரம்" என்று வண்ண வண்ணச் சுவரொட்டிகளாய். இதில் பல்ராம் VS தாராதாஸ் I.V சசி இயக்கத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக இருவேறு திரைப்படங்களின் கதாபாத்திரத்தை இணைத்து உருவாகப்பட்டதாம்.மோகன் லால், மீரா ஜஸ்மினின்
"ரஸ தந்திரம்" என்ற அருமையான படத்தை ஆலப்புழாவில் பார்த்திருந்தேன். ஆலப்புழாப் பயணப்பதிவில் முழுமையான விமர்சனக்குறிப்பைத் தருகின்றேன்.

ஆனாலும் கோடம்பாக்கத்துக்காரர்கள் கேரளாவையும் விடவில்லைப் போலிருக்கிறது. நீச்சலுடையில் சோனியா அகர்வால் "திருட்டுப் பயலே" இற்காகப் போச் கொடுத்துக்கொண்டிருந்தார். தனுஷும் தன் பங்கிற்கு துப்பாக்கியோடு "புதுப்பேட்டை" சுவரொட்டிகளில், ஆனால் இவை மலையாள எழுத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.
இப்போது புரிகிறது , ஏன் சமீகாலமாகவே மலையாள சினிமாக்காரர்கள் தமிழர்களைத் தம் படங்களில் சீண்டுகின்றார்கள் என்று.

இன்னும் பல திருவனந்தபுரத்துக்காட்சிகள் வழியெங்கும் விரிகின்றன.

ஞான் போவுன்னு, திருச்சு வரும்.....

16 comments:

டிசே தமிழன் said...

பிரபா, இந்தியாவில் தமிழ்நாட்டைத்தவிர்த்து நான் போகப் பிரியப்படும் இடங்கள் என்றால் கேரளாவும், பாண்டிச்சேரியும்தான். என் நண்பன் ஒருவனின் கேர்ள்பிரண்ட் கேரளாவைச்சேர்ந்தவர் என்பதால் அவரிடம் அவ்வப்போது சில விடயங்களைக் கேட்டு வாயூறிக்கொள்வதுண்டு.
தொடர்ந்து உங்கள் பயணம் குறித்து எழுதுங்கள் வாசிக்க ஆர்வமாய் இருக்கின்றேன்/றோம்.
.....
/இப்போது புரிகிறது , ஏன் சமீகாலமாகவே மலையாள சினிமாக்காரர்கள் தமிழர்களைத் தம் படங்களில் சீண்டுகின்றார்கள் என்று./
மலையாளப்படங்கள் பார்ப்பது குறைவு என்றாலும் - பார்த்த படங்களை வைத்துச் சொல்வதானால்-எப்போதோ இருந்தே அனேகமான படங்களில் வில்லன்களாய்/ கெட்டவர்களாய் உருவகிப்படுபவர்கள் அனேகர் தமிழர்களாயும்/தமிழ் பேசுபவர்களாயும்தான் சித்தரிக்கப்படுகின்றார்கள். இதற்கான பின்னணியை/உளவியல் காரணிகளை தெரிந்த நண்பர்கள் விளக்கக்கூடும்.

U.P.Tharsan said...

ஓம் ஓம் திருச்சு வாரும்.. மிச்சத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Kanags said...

நல்ல பயணக் குறிப்பு. கேரளாவைப் பற்றி நான் தெரிந்து வைத்துள்ளது அதன் சினிமாக்கள் மட்டுமே. பல விடயங்களையும் இங்கு அலசுகிறீர்கள். தொடர்ந்து தாருங்கள்.

கானா பிரபா said...

வணக்கம் டி சே

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் என் நன்றிகள். என் கேரளா அனுபவங்களை இன்னும் விரிவாகப் பின்னர் நான் தரும் போது ஈழத்தவருக்கு அதன்பால் ஏன் இவ்வளவு ஈர்ப்பு வருகின்றது என்பது தெரியும்.

கேரளாவிலும் சரி, பெங்களூரிலும் சரி நம் தமிழர்கள் நல்ல துறைகளில் மிளிர்ந்துகொண்டிருப்பதன் காழ்ப்புணர்ச்சி காரணமான வெறுப்பே இப்படியான இனத்துவேஷத்திற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

கானா பிரபா said...

வணக்கம் தர்ஷன்

உங்கள் வருகைக்கும்,ஆவலுக்கும் என் நன்றிகள்.

கானா பிரபா said...

நன்றிகள் சிறீ அண்ணா

சின்னக்குட்டி said...

யாழ்ப்பாணத்து உணவுகள் சீரக அரைச்ச குழம்பு, புட்டு வகையறாக்கள் கேரளத்தில் தாரளம்.. திருவாங்கூர் சமஸ்தானத்துக்குள்ளை தான் தமிழ் நாட்டின் நாகர்கோவிலுமிருந்தது என்று நினைக்கிறன்

செல்வராஜ் (R.Selvaraj) said...

கானாபிரபா, உங்கள் பயணக்குறிப்புக்களும் படங்களும் நன்றாக இருக்கின்றன. சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறீர்கள். கேரளத்திற்கு ஓரிரு முறை சென்றிருந்தாலும் மீண்டும் செல்ல வேண்டும் என்ற எண்ணமுண்டு. உங்களின் பதிவிடுகைகள் அதனாலும் ஈர்ப்பனவாய் இருக்கின்றன.

கானா பிரபா said...

வணக்கம் சின்னக்குட்டி

யாழ்ப்பாணத்தை ஒத்த நான் பார்த்த சில விடயங்களைப் பற்றிப் பின்னர் தரவிருக்கிறேன்.

கானா பிரபா said...

வணக்கம் செல்வராஜ்

தங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தரும் கருத்துக்கள், இத்தொடரை நான் தொடர உந்துசக்தியாக இருக்கின்றது. மிகவும் நன்றிகள்.

செந்தழல் ரவி said...

சாப்பாடு எப்படி இருக்கு...புட்டு சாப்பிட்டு வெள்ளம் குடிச்சீயளா ?

கானா பிரபா said...

கேரளா சாப்பாடு பிரமாதம் போங்கள், ஒரு பின்னு பின்னீட்டேன் ரவி :-)

(துபாய்) ராஜா said...

பிரபாவிற்கும் எம்மவரைப்போல்
அரசியலும்,சினிமாவும் மிகப்பிடிக்கும்
போல் தெரிகிறது.

அன்புடன்,
(துபாய்)ராஜா.

kulakaddan said...

என்னப்பா மிச்சத்தை காணம்...
மிச்சம் வரும் எண்டு நேற்று முழுக்க தேடி களைச்சு போனன

கானா பிரபா said...

வணக்கம் (துபாய்)ராஜா

நீங்கள் சொல்வது சரி.
என் "சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும்" பதிவிலும் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன் :-)

கானா பிரபா said...

வணக்கம் வணக்கம் குழக்காட்டான்

நல்ல படங்களோடு அடுத்த பதிவைப் போடப் பொருத்தமாக உந்தக் கோதாரி Template ஐ தேடிக் களைச்சுப் போனன். கொஞ்சம் பொறுங்கோ, நாளைக்குள்ள ஒரு பதிவு தாறன்.