Social Icons

Pages

Tuesday, January 20, 2009

ஏழாம் ஜெயவர்மனின் தந்தைக்கோர் ஆலயம் Preah Khan

"sacred sword" என்று அர்த்தம் கொள்ளப்படும் Preah Khan என்ற ஆலயம் ஏழாம் ஜெயவர்மனால் கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுப்பட்டதாகும். "sacred sword" என்பது Nagara Jayasri (holy city of victory) என்ற மூலத்தில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகின்றது.இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பு Bayon என்ற ஆலயத்தினை ஒத்ததால் Bayon வகைக்குள் அடக்குகின்றார்கள் தொல்பொருள் வல்லுனர்கள். இந்த Bayon ஆலயத்தினை முன்னர் என் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேனே.

முன்னர் நான் கம்போடிய அரசர்கள் பட்டியலில் குறிப்பிட்டது போல இந்த ஏழாம் ஜெயவர்மன் தனது மனைவி ஜெயதேவி இறந்தபின் அவளின் சகோதரி இந்திரதேவியை மணம் முடித்தான். இரண்டாவது மனைவியான இந்திரதேவி பெரும் புத்த பிரச்சாரகி. எனவே ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் முன்பை விட பெளத்த மதத்தின் ஆதிக்கம் பெரும் எழுச்சி கொண்டு விளங்கியது. அதன் தாக்கம் இன்று வரை தொடர்கின்றது. இவன் காலத்தில் மஹாஜன பெளத்தம் என்ற பிரிவே பின்பற்றப்பட்டது. எனவே ஏழாம் ஜெயவர்மன் இப்படியான பெளத்த ஆலயங்களின் திருப்பணிகளில் ஈடுபட்டது வியப்பேதும் இல்லைத்தானே?


Preah Khan ஆலயம் மிகவும் பிரமாண்டமான மடாலய அமைப்பில் நீண்டதொரு கட்டிட அமைப்பைக் கொண்டது. முழுமையான சித்திரச் செதுக்குவேலைகள் நிரம்பிய கட்டிடங்களும், பாதைகளுமாக கொள்ளை அழகினைப் பொத்தி வைத்திருக்கும் ஆலயம் இது. ஆயிரத்துக்கு மேற்பட்ட பெளத்த துறவிகளுக்கான பாடசாலையும், மடாலயத்தையும் ஒருங்கே கொண்டு இது அமைக்கப்பட்டிருக்கின்றது. Angkor Thom பகுதியில் தனது அரண்மனையை அமைக்கும் காட்டத்தில் மன்னன் ஏழாம் ஜெயவர்மனின் வாசஸ்தலமாகவும் சிறிது காலம் இந்த Preah Khan இருந்ததாம்.

முன்னர் நான் சொன்ன Ta Prohm ஆலயத்தினை ஏழாம் ஜெயவர்மன் தன்னுடைய தாய்க்கு அர்ப்பணித்தது போன்று இந்த Preah Khan ஆலயத்தை இவன் தந்தைக்காக அர்ப்பணித்திருக்கின்றான். பின்னாளின் வந்த இந்து மத ஆதிக்கத்தினால் இங்கே இருக்கும் புத்தர் சிலைகள் பதம்பார்க்கப்பட்டிருக்கின்றன. கட்டிடத்தின் மத்திய பகுதியில் அமைத்திருக்கும் புத்தர் சிலைகளும் நாசகார செயல்களால் உருக்குலைந்திருக்கின்றன.

உருளையான தூண்களைக் கொண்ட கட்டிடமொன்று இந்த ஆலயத்தின் மேற்குப் புறத்தில் இருக்கின்றது. இந்தக் கட்டிடம் எதற்காக எழுப்பப்பட்டது என்பது இன்று வரை புரியாத புதிர். இந்தக் கட்டிடம் கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டின் இரண்டாவது காலகட்டத்தில் எழுப்ப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

தூண்களில் காணப்படும் சிங்க உருவங்கள், போதிசத்துவர், பெரிய அளவிலான கருடன், ஆடும் அப்ஸராக்கள், தேவதைகள், விஷ்ணுவின் சாய்ந்த நிலைச் சிற்பம், கட்டிட மேற்புறத்தில் வளைந்திருக்குமாற்போல நிற்கும் கருடன் என்று விதவிதமான சிற்ப வேலைப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு அழிந்தும் அழியாது, ஒரு கிழட்டுச் சிங்கம் போன்று கம்பீரமாக நிற்கின்றது இந்த Preah Khan.


உசாத்துணை:
கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புகள்
Ancient Angkor by Michael Freeman & Claude Jacques

10 comments:

ஆயில்யன் said...

தலையின்றி நிற்கும் பூதகணங்களை போன்றே பாரம்பரிய உறவுகளினை இழந்து நிற்கும் சரித்திரத்தின் கதைகளாகவே ஒவ்வொரு புகைப்படமும் செய்திகளை சொல்கின்றன!

பயணத்தினை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி...!

புதுவை சிவா :-) said...

HI பிரபா

Nice old temple photo I never seen before
thanks for your post

and you find any Tamil notes /kall vettu/ on the temple walls??

the below site are same old ones

http://www.poetryinstone.in/lang/ta

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன்

கோபிநாத் said...

படங்களும் பயணங்களின் அனுபமும்+சரித்திர குறிப்புகளும் கலக்கல் தல ;)

சந்தனமுல்லை said...

அடேங்கப்பா! பார்க்கப் பார்க்க வியப்பா இருக்கு கானாஸ்! படத்தில பார்க்கும்போதே இப்படியிருந்தா நேரில் பார்க்கும்போது..ரொம்ப ஆச்சரியமா, வியப்பா பெருமையா இருக்கும் இல்லை!!
நல்லா ஆவணப்ப்டுத்தறீங்க!!

நன்றி கானாஸ்!

சந்தனமுல்லை said...

//தலையின்றி நிற்கும் பூதகணங்களை போன்றே பாரம்பரிய உறவுகளினை இழந்து நிற்கும் சரித்திரத்தின் கதைகளாகவே ஒவ்வொரு புகைப்படமும் செய்திகளை சொல்கின்றன!//

வாவ்! ஆயில்ஸ் அண்ணா..செம!!

கானா பிரபா said...

//புதுவை சிவா :-) said...
HI பிரபா

Nice old temple photo I never seen before
thanks for your post//

அருமையான தொடுப்புக்கு நன்றி சிவா, இங்கே நான் கண்ட குறிப்புக்கள் எல்லாமே சமஸ்கிருத மொழியில் தான் இருந்தன. தமிழில் ஒன்றையும் நான் காணவில்லை

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல கோபி

மிக்க நன்றி சந்தனமுல்லை

ஹேமா said...

தந்தைக்காக ஒரு கோயிலா!அதிசயம்தான்.தாய்க்காக எதையும் செய்வதைத்தான் கூடுதலாகக் காண்கிறோம்.

நீங்கள் புகைப்படக் கலையிலும் தேர்ச்சி பெற்றவர் என்பது தெரிகிறது பிரபா.

இரண்டாவது மூன்றாவது படங்களின் கலையழகு அப்பப்பா.கூரையைக் கூட அழகு படுத்தியிருக்கிறார்கள்.
அவலங்களின் அடையாளம் தலையில்லா முண்டமான சிலைகள்.அருமை பிரபா.நன்றி,

கானா பிரபா said...

வாங்கோ ஹேமா

கம்போடியாவில் இருக்கும் ஒவ்வொரு கோயில்களின் பின்னால் இப்படியான சுவையான சங்கதிகள் இருக்கின்றன.
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.