Social Icons

Pages

Wednesday, August 27, 2008

ஏழாம் ஜெயவர்மனின் Ta Prohm ஆலயம்

Banteay Kdei ஆலயத்தைப் பார்த்து முடித்து நாங்கள் அடுத்துப் பயணப்பட்டது Ta Prohm என்ற ஆலயத்தைப் பார்க்க. இதுவும் கூட ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது. இவ்வாலயம் போன்று கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கும் கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வாலயமும் பெளத்தமதத்துக்காக தனித்துவமாக அமைக்கப்பட்டதாகும். ஏழாம் ஜெயவர்மனின் Preah Khan மற்றும் Ta Prohm ஆலயங்களின் பாணியிலேயே இதுவும் அமைக்கப்பட்டதாகும். கம்போடிய நாட்டில் மண் மேட்டிலும், அடர்காடுகளிலும் புதைந்து போன ஆலயங்களில் இவ்வாலயம் மோசமான பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றது என்பதை இப்போது எஞ்சியிருக்கும் கட்டிடச் சிதைவுகள் சாட்சியங்களாக கண்முன் காட்டி நிற்கின்றன.

இதுவும் கூட பெளத்த சன்னியாசிகளின் துறவு நிலை வாழ்வுக்கான கட்டிடமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த Ta Prohm ஆலயத்தின் கட்டிட அமைப்பைப் பொறுத்தவரை Bayon என்ற வடிவமைப்பைத் தழுவியதாகச் சொல்லப்படுகின்றது. இப்படியான வகைப்படுத்தல்களை எப்படி இந்தப் புவியியல் அறிஞர்கள் வகுக்கின்றார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். உதாரணத்துக்கு Bayon என்பது கூட ஏழாம் ஜெயவர்மனின் ஆலயமே. கட்டிடிட வடிவமைப்பில் ஒத்த பாணியைக் கைக்கொண்டிருக்கும் ஆலயங்களை இப்படி உதாரண வகைப்படுத்தலாக ஆக்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு ஆலயங்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், சில ஆலயங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆலயங்களை முன்மாதிரியாகக் கொண்டு கூட அமைக்கப்பட்டிருப்பதும் உண்டு.

மற்றய ஆலயங்களைப் போலல்லாது வாகனங்களைப் பெருந்தெரு முகப்பில் நிறுத்தி விட்டு ஒரு புதர் வழியே அமைக்கப்பட்டிருக்கும் பாதை வழியே கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். தூரத்தே சோலைகள் இருபுறஞ் சூழ நடு நாயகமாக Ta Prohm ஆலயம் காட்சி தருகின்றது. கம்போடிய நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக கைவிடப்பட்டு,மரஞ் செடி கொடிகளால் சூழப்பட்ட சூன்யப் பிரதேசமாகிவிட்ட ஆலயம் இப்போது ஒரு பகுதி மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்காக திருத்தம் செய்யப்பட்டு காட்சி தருகின்றது.

இந்த ஆலயத்தில் தான் Angelina Jolie நடித்த Tomb Raider படம் எடுக்கப்பட்டது. கம்போடியாவில் நான் சந்தித்துப் பேசிய நாலுபேரில் மூவர் என்ற கணக்கில் ஹாலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி புராணம் பாடுகின்றார்கள். Tomb Raider படம் நடிக்க வந்து இந்த நாட்டின் மேல் பாசம் கொண்டு ஏஞ்சலினா பல மனித நேயப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றார். கம்போடிய அரசர் Norodom Sihamoni ஆகஸ்ட் 12, 2005 இவருக்கு கம்போடிய நாட்டு நிரந்த குடியுரிமை (citizenship) உரிமை வழங்கிக் கெளரவித்திருகின்றார் (ஆதாரம்: விக்கிபீடியா). ஏஞ்சலினா ஜோலி கம்போடியாவின் கெளரவப் பிரஜை கூடவாம். இந்த நாட்டின் Rath Vibol என்ற பிள்ளை ஒன்றை இவர் தத்தெடுத்தும் வளர்க்கின்றார் என்று வாயெல்லாம் பூரிப்பாகச் சொல்கின்றர்கள் கம்போடியர்கள்.

வலிமையான முறுக்கேறிய மரங்கள், மனிதர்கள் தான் விட்டுவிட்டார்கள், நாமிருக்க கவலையேன் என்பது போல சிதைந்து விழப்போன கட்டிடத்தை தாங்கி இறுகத் தம் கிளைகளால் பற்றி முறுக்கியிருப்பது இந்த ஆலயத்தில் மட்டுமே நான் கண்ட அதிசயம்.தம் கரங்களின் நீண்ட விரல்களால் விழப்போகும் கட்டிடத் தொகுதியைப் பற்றிப் பிடிப்பது போன்ற தோரணையில் இவை இருக்கின்றன.பருத்தி இன மரங்களே இந்த ஆலயச்சூழலில் வியாபித்திருக்கின்றன. உலகின் கண்களுக்கு கம்போடியாவைக் காட்டும் புகைப்படத்தொகுதிகளில் இந்த முறுக்கேறிய மரங்கள் ஆலயத்தினை விழாது பாதுகாக்கும் காட்சிகள் தவறாது இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

தேசத்தின் சொத்துக்களைச் சூறையாடிய அன்னியர் புத்தரின் கழுத்தளவு வரை வெட்டிக் கொண்டு போனதின் அடையாளமாக மேற்காணும் சிலை.

பாதம் மட்டும் எஞ்சிய புத்தர்




உட்பக்கச் சுவர்களிலே காணும் அப்ஸரா தேவதைகளில் சிற்பங்கள்

பாரிய ஆலயத்தின் உட்பக்கச் சுவர்கள் விழுந்து விடாமல் பாரமெடுக்கும் வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், பலகைகள் பொருத்திய வழித்தடங்களையே பின்பற்றி நடக்க வேண்டும். சீரற்ற பாதையிலும், அழிபாடான கட்டிடத்தொகுதிகளிலும் குனிந்தும், நிமிர்ந்தும், வளைந்தும், நெளிந்தும் போவதே ஒரு சவாலான விடயம்.






உடல் சோர்ந்தாலும் இந்த வழித்தடங்கள் தோறும் வியாபித்திருக்கும் கட்டிட சிற்ப வேலைப்பாடுகளைக் காண்பதற்கு எத்துணை கஷ்டங்களையும் மனம் தாங்கும் வலுவோடு காலம் என்னும் அரக்கன் வெட்டித் தள்ளிய கற்தூண்களில் பாய்ந்து ஏறி, பார்த்து ரசித்துப் புகைப்படமாக்கிக் கொள்ளும் ஆவல் அடங்காது.

கம்போடியாவின் இந்து ஆலயங்களில் காணும் இந்துத் துறவிகளுக்கு ஒப்பாக இங்கே பெளத்த துறவிகளின் சிலைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

அங்கோர் வாட்டினை பார்க்கவென வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஆலயத்தையும் தவற விடமாட்டார்கள் என்பதால் முந்திய கோயிலை விட இங்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கின்றது. மதிய நேரம் உண்ட களைப்பில், முகத்தில் துண்டைப் போட்டுவிட்டு தூணொன்றில் சரிந்து படுக்கும் பயணிகளும் ஆங்காங்கே தென்படுகின்றார்கள்.
ஏழாம் ஜெயவர்மனால் நிர்மாணிக்கப்பட்ட முதற்தொகுதி ஆலயங்களில் இதுவும் ஒன்றெனக் கொள்ளப்படுகின்றது. அதற்குச் சாட்சியமாக மிகுந்த சிரத்தையோடு இவ்வாலயத்தை அவன் கட்டிமுடித்திருப்பது, சிற்ப வேலைப்பாடுகளிலும் ஆலய அமைப்பிலும் கண்டு கொள்ள முடிகின்றது. ஏழாம் ஜெயவர்மன் தனது தாய்க்காக அர்பணித்த ஆலயமாக இந்த Ta Prohm ஆலயம் கொள்ளப்படுகின்றது. முன்னர் நான் சொன்னது போல, ஏழாம் ஜெயவர்மனின் ஆலயங்களை நிர்மாணித்து ஓவ்வொன்றையும் குடும்ப உறுப்பினர்களுக்காக அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது. இன்னும் சில பதிவுகளில் இவன் தன் தந்தைக்காக அர்ப்பணித்த Preah Khan பற்றிச் சொல்வேன்.

Ta Prohm ஆலயம் ஆரம்பத்தில் பெளத்த துறவிகளுக்கான மடாலயமாக அமைக்கப்பட்டாலும், இதன் செல்வாக்கு அதிகரித்து, பின்னர் இந்த ஆலய ஆளுகையின் கீழ் 3000 கிராமங்களும் (ஆமாம் மூவாயிரமே தான்), ஆயிரக்கணக்கான தொண்டர்களும், தங்க நகை விற்பனை நிலையங்களுமாக தன் நிர்வாகத்தை அகலவிரித்தது. கம்போடியா சொல்வோர் தவறாமல் பார்க்கவேண்டிய அரும்பெரும் ஆலயம் இது என்பதை நான் தயங்காது சொல்வேன்.



ஆலயத்தைத் தரிசித்து விட்டு இன்னொரு பாதையால் வெளியேறி வரும் போது வெளிப்புறத்தே ஓரமாய் இருந்து கம்போடிய நாட்டு இசைக் கருவிகளை மீட்டியவாறே அந்த நாட்டுப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றது ஒரு குழு. நெருங்கிப் போய்ப் பார்த்தால் மனம் கனக்கின்றது. அவர்கள் கொடுங்கோலன் பொல் பொட் கம்போடியாவில் ஆண்ட காலத்தின் போது வியட்னாமிற்கு எதிரான யுத்தத்தில் புதைக்கப்பட்ட மிதிவெடிகளில் (Land mines) சிக்கித் தம் கண்களை, கால்களை, மற்றைய அவயவங்களை இழந்தோர் உருவாக்கிய Landmine Victim Community என்ற அமைப்பில் இவர்கள் இணைந்து இப்படி இசைத்தும் பாடியும் தம் எஞ்சிய வாழ்வைக் கொண்டுபோகப் போகின்றார்கள். சுகதேகியாகப் பிறந்தும், கொடியதோர் போர் என்ற அரக்கனின் கரங்களில் சிக்கித் தம் வாழ்வைத் தொலைத்தவர்களைக் கண்டதும் மனதில் பாரம் தொற்றிக் கொண்டது. கண்கள் கலங்க அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

13 comments:

கோபிநாத் said...

தல வழக்கம் போல பதிவும் படங்களும் சூப்பரு..;))

\\நாமிருக்க கவலையேன் என்பது போல சிதைந்து விழப்போன கட்டிடத்தை தாங்கி இறுகத் தம் கிளைகளால் பற்றி முறுக்கியிருப்பது இந்த ஆலயத்தில் மட்டுமே நான் கண்ட அதிசயம்\\

கலக்கல் படம்...சரியாக சொன்னிங்க ;))

கானா பிரபா said...

thanks thala

Anonymous said...

இவ்வளவு நேரம் செலவழித்து, இவ்வளவு நல்ல தகவலை தரும் உங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோயிலைக்காப்பாற்றும் மர வேர்கள் அருமை..
. \\சுகதேகியாகப் பிறந்தும், கொடியதோர் போர் என்ற அரக்கனின் கரங்களில் சிக்கித் தம் வாழ்வைத் தொலைத்தவர்களைக் கண்டதும் மனதில் பாரம் தொற்றிக் கொண்டது.//
:(

கானா பிரபா said...

//Anonymous said...
இவ்வளவு நேரம் செலவழித்து, இவ்வளவு நல்ல தகவலை தரும் உங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்.//

மிக்க நன்றி நண்பரே, உண்மையில் இப்பதிவுகளை எழுதுகையில் மீண்டும் என் பயணத்தை இரைமீட்கவும் ஒரு வாய்ப்பாகி விடுகின்றது.

ஆயில்யன் said...

நிறைய பயணங்கள்
நிறைய தகவல்கள்
எளிதில் நிறைய பேருக்கு போய் சேரும் வகையில் மனதினை கவரும் புகைப்படங்கள்!

வாழ்த்துக்கிறேன்!

செல்லமுடியாத இடங்களுக்கு அழைத்து சென்ற உங்களுக்கு
நன்றி கூறி வாழ்த்துக்கிறேன்!

ஆயில்யன் said...

//இந்த ஆலயத்தில் தான் Angelina Jolie நடித்த Tomb Raider படம் எடுக்கப்பட்டது. கம்போடியாவில் நான் சந்தித்துப் பேசிய நாலுபேரில் மூவர் என்ற கணக்கில் ஹாலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி புராணம் பாடுகின்றார்கள். ///


பின்னே சும்மாவா?!!!!!!

ஹாலிவுட் பிகருல்ல :)

ஆயில்யன் said...

எச்சுஸ்மீ!

நீங்க இந்த முக்கா பேண்டு போட்டுக்கிட்டு இந்த கோயில்களுக்கு போனப்பா யாரும் உங்களை ஒண்ணுமே கேட்கலையா?????

(மனசுக்குள்ள ரொம்ப முண்டிக்கிட்டிருந்த கேள்வி! ))

கானா பிரபா said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
கோயிலைக்காப்பாற்றும் மர வேர்கள் அருமை..//

வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி
உண்மையில் இதைப் பார்க்கும் போது விந்தையாக இருந்தது.

கானா பிரபா said...

//எச்சுஸ்மீ!

நீங்க இந்த முக்கா பேண்டு போட்டுக்கிட்டு இந்த கோயில்களுக்கு போனப்பா யாரும் உங்களை ஒண்ணுமே கேட்கலையா?????//

என்னடா இது சின்னப்பாண்டி மரியாதையா இரண்டு பின்னூட்டம் வச்சிருக்கிறாரேன்னு நினைக்கையில் இதுவா ;))
யாரும் ஒண்ணும் கேட்கமாட்டாங்கப்பா. கேரளாவுக்கு போன போது தான் வேட்டி சுத்தி உள்ளை அனுப்பினாங்க.

Anonymous said...

அருமையான பதிவு.
போக ஆசை உண்டு.

சுபானு said...

// சுகதேகியாகப் பிறந்தும், கொடியதோர் போர் என்ற அரக்கனின் கரங்களில் சிக்கித் தம் வாழ்வைத் தொலைத்தவர்களைக் கண்டதும் மனதில் பாரம் தொற்றிக் கொண்டது //

அரசன் கொடுங்கோலனானால் மக்களின் நிலையினைச் சொல்லவா வேண்டும்..

படங்களைப் பார்த்தால் நேரில் சென்று பார்க்கவேண்டும் போலத் தோணுகின்றது. பார்ப்போம் ...

J S Gnanasekar said...

ட ப்ரோமில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:

https://goo.gl/photos/vnnnrr6Pgdo2VTj77

- ஞானசேகர்