Social Icons

Pages

Tuesday, September 02, 2008

ஐந்தாம் ஜெயவர்மன் எழுப்பிய சிவனாலயம் Ta Keo

கடந்த பதிவுகளில் பெளத்த ஆலயங்களின் தரிசனங்கள் கிட்டிய உங்களுக்கு இந்த முறை நான் தருவது ஒரு இந்து ஆலய உலாத்தல். ஏழாம் ஜெயவர்மனின் Ta Prohm ஆலயத்தினைச் சுற்றிப் பார்த்து விட்டு அடுத்து நானும் சுற்றுலா வழிகாட்டி டேவிட்டுமாக, எங்களோடு வந்த ருக் ருக் காரரோடு Ta Keo என்ற ஆலயம் நோக்கி எம் உலாத்தலை ஆரம்பித்தோம்.

Ta Keo என்னும் ஆலயம் கி.பி 10ம் ஆம் நூற்றாண்டின் இறுதிக்கும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்த ஆலயத்தை எழுப்பியவன் ஐந்தாம் ஜெயவர்மன். இது ஒரு முழுமையான சிவனாலயமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆலயத்தின் கட்ட்ட அமைப்பை Khleang என்ற வகைக்குள் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகின்றார்கள். ஐந்தாம் ஜெயவர்மன் இந்த கம்போடிய அரசினை ஆட்சி செய்த காலப்பகுதி கி.பி 968 ஆம் ஆண்டிலிருந்து கி.பி 1001 ஆம் ஆண்டென்று சொல்லப்படுகின்றது. கம்போடியாவின் ஆரம்ப கால வரலாற்றில் இந்து மன்னர்களின் ஆதிக்கமும் சைவ சமயத்தில் எழுச்சியும் இருந்ததை இந்த ஐந்தாம் ஜெயவர்மன் போன்ற ஆரம்ப காலத்து மன்னர்கள் எழுப்பிய பிரமாண்டமான ஆலயங்கள் கண் முன் சாட்சியங்களாக இருந்தாலும், ஐந்தாம் ஜெயவர்மன் உட்பட்ட ஆரம்பகாலத்து இந்து இராச்சியம் குறித்த விரிவான வரலாற்றுப் பதிவுகள் இந்த நாட்டில் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. நான் சென்ற அங்கோர் வாட் நூலகத்திலும் இதே நிலைதான். எஞ்சியிருக்கும் சிவாலயங்களும், சிவ சின்னங்களுமே தற்போதைய ஆய்வாளர்களுக்கு உய்த்தறிந்து ஆய்வைத் தொடர உதவியாக இருக்கின்றன. இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இருக்கும் நம் வரலாற்றாசிரியர்களாவது இப்பணியைத் தொடர்ந்து கம்போடியாவில் நிலவிய இந்து மதப் பாரம்பரியம் குறித்த முழுமையான ஆய்வைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தரவேண்டும்.

கோயில் வாசலில் இளநீர் வாங்கும் என் வழிகாட்டி டேவிட்

Ta Keo என்ற ஆலயமும் பெரும்பாலும் சிவனாலயங்கள் கொடுக்கும் பிரமாண்டத்தையே பிரதிபலிக்கின்றது. ஒரு பெரும் சிற்ப வேலைப்பாடு கொண்ட மலை போன்ற அமைப்பில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது மேரு மலையில் உறையும் இறைவனைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றது. இந்த ஆலயம் "the mountain with golden peaks" என்றே அந்தக் காலகட்டத்தில் புகழப்பட்டதாம். கட்டிட அமைப்பைப் பொறுத்தவரை முழுமையான சலவைக் கல்லினாலேயே எழுப்பபட்டிருக்கின்றது. ஒவ்வொரு சலவைக் கல் பொருத்துக்களும் பென்னாம் பெரியவை. இவற்றை எப்படித் தூர இடங்களில் இருந்து கொண்டு வந்து ஆலயமாகப் பொருத்தினார்களோ என்று வியப்பை எழுப்பி விடையைத் தேட வைக்கின்றது.

ஐந்தாம் ஜெயவர்மன் தன் தந்தை 2 ஆம் ராஜேந்திர வர்மனைத் தோற்கடித்து ஆட்சிப் பீடம் ஏறிய போது அவன் தலைநகரின் அணி கலனாக எழுப்பப்பட்ட இவ்வாலயத்தில் ஐந்து பெரும் கோபுரங்கள் அணி செய்கின்றன, இவை மேரு மலையைப் பிரதிபலிக்கும் பாணியிலேயே அமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். வாசலில் சைவக்கோயிலுக்கே தனித்துவமான நந்தியின் பீடம் இருக்கின்றது.


ஆலயத்தின் உள்ளேயும் சிவாகமப் பிரகாரம் உள்ள கட்டிட அமைப்போடு விளங்குகின்றது. ஒரு பெரும் கோயிலுக்குள் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற அவா மேலிட, அந்த மலைக்கோயிலின் மேல் ஏறி பவனி வருவது உடற்சலிப்பை ஏற்படுத்தினாலும், மனத்தைச் சலிக்க வைக்கவில்லை. நீண்ட படிகளைக் கொண்ட வாயில் இருந்தாலும் அவரை செங்குத்தாகச் செல்லும் பாணியில் இருப்பதால், அவற்றில் ஏறி மேலே உச்சியை அடையவே, உள்ளே இருக்கும் குடல் வாய் வழியே வருவது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றது.


இந்த ஆலயத்திருப்பணி ஐந்தாம் ஜெயவர்மனால் ஆரம்பிக்கப்பட்டாலும் இதன் பிரமாண்டம் ஆலயக் கட்டுமானத்தின் கால அளவை அதிகப்படுத்தியது. எனவே ஐந்தாம் ஜெயவர்மன், ஜெயவீரவர்மன், முதலாம் சூரியவர்மன் ஆகிய மூன்று அரசர்களின் காலத்தில் தான் முழுமையான ஆலயக் கட்டுமானம் நிறைவை எய்த முடிந்தது. முதலில் ஐந்தாம் ஜெயவர்மன் இந்த ஆலயத்தை எழுப்பும் போது அவனது தலைநகரத்துக்கு வெளியே இருந்த முன்னைய அரசர்களின் ஆலயங்களின் அமைப்பையே முன் மாதிரியாக எடுத்துக் கொண்டானாம். Ta Keo ஆலயத்தின் கட்டிடப்பணி முழுமையாக நிறைவினை எய்தினாலும் இப்பிரமாண்டமான ஆலய அமைப்பின் சிற்பச் செதுக்கு வேலைப்பாடுகள் இடைநடுவிலேயே நின்று விட்டன என்பது பெருங்குறை.

முன்னே வந்த இந்து ஆலயத்தினுள் பின்னே வந்த பெளத்த மதம் மறைக்க..

உண்மையில் வரலாற்றின் ஆரம்பப் பக்கங்களில் இந்துக் கோயில்களைத் தேடி நாடுவோருக்கு Ta Keo என்ற இந்தச் சிவனாலயம் விலக்க முடியாத ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகும். நமது சைவ ஆலயத்தைப் பார்த்த பெருந்திருப்தியில் அவ்விடத்தில் இருந்து மனசு விலகாமல் விலகினேன், இன்னொரு பிரமாண்டம் பொருந்திய வரலாற்றின் எச்சத்தினை பார்க்க..........


பதிவின் உசாத்துணை:
* கம்போடிய சுற்றுலாக் கையேடு
* வழிகாட்டி டேவிட்
* Ancient Angkor By Michael Freeman & Claude Jacques

16 comments:

Anonymous said...

பாதுகாக்கப்பட வேண்டிய கட்டிடம்..கலை..இப்படி பாழடைந்து கிடக்கின்றதே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிவாலயத்தை சுற்றிக்காட்டியதுக்கு நன்றி கானா..

படங்களும் அழகா இருக்கிறது..

HK Arun said...

இவ்வாலயங்கள் தொடர்பில் காம்போடிய மக்களின் கருத்து என்ன?

இவர்களில் எவரும் இன்று இந்துக்களாக இருக்கின்றனரா?

HK Arun said...

//இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இருக்கும் நம் வரலாற்றாசிரியர்களாவது இப்பணியைத் தொடர்ந்து கம்போடியாவில் நிலவிய இந்து மதப் பாரம்பரியம் குறித்த முழுமையான ஆய்வைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தரவேண்டும்.//

எமது எதிர்ப்பார்ப்பும் அதுவே

முரளிகண்ணன் said...

படங்களும் தொகுப்பும் அருமை

கானா பிரபா said...

// Thooya said...
பாதுகாக்கப்பட வேண்டிய கட்டிடம்..கலை..இப்படி பாழடைந்து கிடக்கின்றதே..//

வாங்கோ தூயா

இப்ப தான் ஆலயங்களை பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்ச்சி இவர்களுக்கு வந்திருக்கு,அதுவும் சுற்றுலாப் பயணிகளின் மூலம் வரும் வருமானத்தால்.


வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி

சந்தனமுல்லை said...

படங்கள் அருமை..பதிவும்தான்..எப்பவும் போல!!

ஆயில்யன் said...

இன்னுமொரு நாட்டில் இன்றும் பழம் பெருமைகளை தன்னகத்தே கொண்டு பாழடைந்த நிலையில் இருப்பதை காண்கையில் மனம் வருந்துகிறது!

நம் வரலாற்று ஆசிரியர்கள் கட்டாயம் இது தொடர்பான விரிவானதொரு ஆய்வுப்பணியில் வரலாற்று தொடர்புகளை பற்றி ஆராய்ந்து வெளியிடவேண்டும்!

Anonymous said...

அந்த பாம்பு வாயில் போட்டோ எங்கே

கானா பிரபா said...

// HK Arun said...
இவ்வாலயங்கள் தொடர்பில் காம்போடிய மக்களின் கருத்து என்ன?

இவர்களில் எவரும் இன்று இந்துக்களாக இருக்கின்றனரா?//

வணக்கம் அருண்

இந்த ஆலயங்கள் ஒருகாலத்தில் இந்துமதம் தழைத்தோங்கியபோது எழுப்பட்டவை. தற்போது பெரும்பான்மை பெளத்தம். சடங்குகள் மட்டுமே இந்து முறையில் இருக்கின்றன. மிகச்சிறுபான்மையினரே இந்துக்கள்.


வருகைக்கு நன்றி முரளிகண்ணன்

கானா பிரபா said...

//சந்தனமுல்லை said...
படங்கள் அருமை..பதிவும்தான்..எப்பவும் போல!!//

வருகைக்கு நன்றி சந்தனமுல்லை

// ஆயில்யன் said...
இன்னுமொரு நாட்டில் இன்றும் பழம் பெருமைகளை தன்னகத்தே கொண்டு பாழடைந்த நிலையில் இருப்பதை காண்கையில் மனம் வருந்துகிறது!//

உண்மைதான், அழிந்தும் இந்த நாட்டுக்கு இப்போது அன்னியச் செலாவணியை அள்ளிக் கொடுப்பவையும் இவை தான்.

//சின்ன அம்மிணி said...
அந்த பாம்பு வாயில் போட்டோ எங்கே//

வாங்க சின்ன அம்மணி

அந்தப் படம் இன்னொரு கோயிலில் தான் எடுத்தேன். அந்தக் கோயில் பதிவு வரும் போது தருகின்றேன்.

கோபிநாத் said...

அருமை தல ;)

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி தல

ஹேமா said...

அழகான கோயிலாக இருந்திருக்கும்.கட்டிட அமைப்பும் சிற்ப வேலைப்பாடுகளும் இவ்வளவு அழிந்த பின்னும் கூட பார்க்கையில் மனமகிழ்வைத் தருகிறது.ஒரு மனிதனால் உருவாக்கப்படும் வரலாறு இன்னொரு மனிதனால் அழிக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு இப்போ இன்னொரு மனிதனால் தேடப்படுகிறது.இதுதான் உலகம்.
நன்றி பிரபா.

கானா பிரபா said...

வணக்கம் ஹேமா

வாசித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

J S Gnanasekar said...

ட கியோவில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:

https://goo.gl/photos/TtBV7zVmMgXXeWVq5

- ஞானசேகர்