Social Icons

Pages

Sunday, June 01, 2008

Angkor Wat நோக்கிய பயணம்

மார்ச் 15,2008 சனிக்கிழமை காலை 7.30 மணி

ஏற்கனவே இணையம் மூலம் தங்குமிடம், மற்றும் அவர்களுடைய ஒழுங்கிலேயே சுற்றுலா வழிகாட்டி என்று ஏற்பாடு செய்திருந்தேன். நான் தங்கியிருந்த Angkoriana ஹோட்டலில் அதிகாலையே தூக்கம் கலைத்தேன். காரணம் நேர வித்தியாசம். குளித்து முடித்துக் கீழ் தளத்திற்கு வந்தபோது காலை ஆறரை தாண்டியிருந்தது. ஹோட்டலின் காலை உணவு பரிமாறும் இடம் சென்று ஆகாரத்தை எடுத்துக்கொண்டேன். தாயகத்தில் இருந்த காலத்தில் சாப்பிட்ட அதே சுவையை நினைவுபடுத்துமாற் போல இந்த ஊர்ப்பாணும் (bread) இருந்தது.

மணி ஏழரையைத் தாண்டவும் எனக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டி டேவிட் வந்தார். குள்ளமான தோற்றம், அசல் கம்போடியன் அவர். டேவிட்டின் இயற்பெயர் Sib Chong, உண்மையான பெயரை சொல்வதில் வேற்று நாட்டவருக்கு சிக்கல் இருக்கும் என்று இன்னொரு பெயரைச் சூடிக் கொண்டார். சுற்றுலா வழிகாட்டிக்கான பழுப்பு மஞ்சள் சீருடையுடனேயே வந்து கையசைத்தார். அடுத்தது போக்குவரத்துக்கான சாதனம். அதுவும் வந்து சேர்ந்தது. குறுகிய தூரப்பிரயாணங்களுக்கு கம்போடியாவில் அதிகம் உபயோகிப்பது tuk-tuk என்ற சாதனம். அது வேறொன்றுமில்லை சைக்கிளோடு பின் இருக்கைகள் பொருத்திய சாதனம். தமிழர் தாயகப் பகுதியில் சிறீலங்கா அரசின் எரிபொருள் தடை காலத்தில் அதாவது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வாகனப் போக்குவரத்துக்கு அதிகம் பயன்பட்டது அது. அதுவே இங்கே ருக் ருக் என்ற பெயரோடு அழைக்கப்படும் பொதுப்போக்குவரத்து சாதனம். இங்கே இந்தியாவில் இருக்குமாற் போல ஆட்டோக்களை மருந்துக்கும் காணோம். ருக் ருக் என்ற இந்த சாதனத்தில் போக்குவத்து செய்வது மலிவும் கூட. ஒரு நாள் பகலுக்கான வாடகையாக இந்த வண்டிக்காரருக்கு 15 அமெரிக்க டொலரே செலுத்த வேண்டும். ருக் ருக்கின் பின்னிருக்கையில் நானும் சுற்றுலா வழிகாட்டியும் அமர அங்கோர் வாட்/வற் (Angkor Wat) நோக்கி மெல்ல நகர்ந்தது.

ருக் ருக் ஒரு இடத்தில் வந்து நின்றது. மெல்ல இறங்கி வெளியில் நடந்தால் APSARA Authority என்ற பெயர்ப்பலகையோடு ஒரு கட்டிடம் தென்பட்டது. அங்கே கூட்டம் கூட்டமாக சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அங்கோர் பகுதியில் உள்ள அங்கோர் வாட் என்னும் ஆலயம் தவிர சிறிதும் பெரிதுமாகப் பல ஆலயங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்பதற்கு மூன்று நாள் நுழைவுச் சீட்டு (Pass)40 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும். ஒரு நாளுக்கான நுழைவுச் சீட்டு கூட உண்டு. அப்சரா என்பது இந்நாட்டு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா அமைப்பாகும். அங்கோர் பகுதியில் உள்ள ஆலயங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, சேவைகள் என்பவற்றை இந்த அமைப்பே கவனித்துக் கொள்கின்றது. அப்சரா என்பது இந்த நாட்டு மக்களால் போற்றப்படும் ஒரு பெண் தேவதை ஆகும். அப்சரா பற்றி இன்னும் சொல்லவேண்டி இருக்கிறது.

அங்கோர் பகுதியைத் தவிர சியாம் ரீப் நகரின் பிற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு இந்த நுழைவுச் சீட்டு பயன்படாது. சிலவற்றைப் பார்ப்பதற்கு மேலதிக கட்டணம் கூட உண்டு. சுற்றுலாப் பயணிகள் பலர் அங்கோர் வாட் ஆலயத்தைப் பார்த்தோமா, போனோமா என்றே இருக்கின்றார்கள். ஆனால் முழுமையான பல்லவ மன்னர்களின் வரலாற்றுச் சுவடுகளைப் பார்க்கவேண்டுமென்றால் இது மட்டும் போதாது. எனவே தான் நானும் என் சுற்றுலாவில் மேலதிகமாக இன்னும் பல ஆலயங்களைப் பார்க்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டேன். எனவே தான் கம்போடியா - தாய்லாந்து எல்லை வரை என் பயணம் அமைந்திருந்தது. அவை பற்றி ஒவ்வொன்றாகப் பின்னர் சொல்கின்றேன்.

நுளைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு மீண்டும் ருக் ருக்கில் அமர்கின்றேன். இரண்டு பக்கமும் மரப்புதர் அடங்கிய காட்டுப் பிராந்தியத்தின் நடுவே பயணம் போகின்றது. எங்களைப் போலவே இன்னும் பலர் ருக் ருக்கில் பயணத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீண்ட நாள் உள்நாட்டுப் போர் ஓய்ந்து இப்போது தான் கம்போடியா தன்னை வளப்படுத்திக் கொண்டிருப்பதால் நிறைய வெளிநாட்டு உதவி நிறுவனப் பணியாளர்களைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆண், பெண் வெள்ளையர்கள் ஆளுக்கொரு சைக்கிளை வலித்துக் கொண்டு போவது புதுமையாக இருக்கின்றது.

ருக் ருக் அங்கோர் வாட் முன்னால் உள்ள இடத்தில் ஓரம் கட்டியது. வண்டிக்காரர் அங்கேயே தங்கியிருக்க நானும், டேவிட்டும் இறங்கி மெல்ல நடந்தோம். பங்குனி வெயில் தீயாய் சுட்டெரித்தது. முன்னே இருந்த அகழியின் சுற்று மதிலில் தாவி ஏறி நடக்க ஆரம்பித்தோம். அந்தக் காலை வேளையிலேயே பல சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்திருந்தனர்.
"இன்று சனிக்கிழமை அல்லவா, சனி, ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதால் தாய்லாந்து நாட்டுக்காரர்கள் தரைவழிப் போக்குவரத்து மூலம் பெரும் திரளாக வந்து அங்கோர் வாட் ஆலயத்தைப் பார்த்துப் போவார்கள், அது தான் இன்று சனக்கூட்டம்" என்றார் டேவிட்.

"இன்னொரு விஷயம், இந்த சியாம் ரீப் (Siem Reap) நகரத்தை இதே பெயரில் அழைக்காமல், அங்கோர் சிட்டி (Angkor City) என்று தான் தாய்லாந்து நாட்டுக்காரர் அழைப்பார்கள். காரணம் இது அவர்களின் மானப்பிரச்சனை. முன்னர் காலத்தில் சியாம் நாட்டவர் (தாய்லாந்துக்காரர்) இந்தக் கம்போடியாவை தம் ஆளுகையில் வைத்திருந்தனர். அதன் பின்னர் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதையே சியாம் ரீப் என்ற பெயர் குறித்து நிற்கின்றது. (அதாவது சியாம் - தாய்லாந்துக்காரர், ரீப் - தோற்கடிக்கப்படல் என்ற அர்த்தம்).

என் கண்முன்னே அகண்ட பெரும் கோட்டையாக அங்கோர் வாட்டின் நுளைவு வாயில். ஆர்வ மிகுதியால் வேகமெடுத்துப் போய் அந்த வாயில் சுற்றின் கற்சுவர்களையும் தூண்களையும் பார்க்கின்றேன். ஒவ்வொரு சிற்பங்களும் பிரமிப்பைத் தந்த வேளை கவலையையும் ஏற்படுத்தி விட்டன. காரணம். அப்சாரா என்னும் பேரழகுத் தேவதைகளின் முகங்கள் வாளால் அரிந்தும், துப்பாக்கிச் சன்னங்களால் துளைத்தெடுத்தும் சிதைக்கப்பட்டிருக்கின்றன. மற்றைய நாக விக்கிரகங்கள், இறைச் சின்னங்களுக்கும் இதே நிலை தான். எனது வழிகாட்டி டேவிட் கவலையோடு நடந்ததைச் சொல்ல ஆரம்பிக்கின்றார்.

13 comments:

ஆயில்யன் said...

/முழுமையான பல்லவ மன்னர்களின் வரலாற்றுச் சுவடுகளைப் பார்க்கவேண்டுமென்றால் இது மட்டும் போதாது. எனவே தான் நானும் என் சுற்றுலாவில் மேலதிகமாக இன்னும் பல ஆலயங்களைப் பார்க்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டேன்.///

எங்களுக்கும் நல்ல பயனுள்ளதாக இருக்கும் உங்களின் உறுதி :)

ஆயில்யன் said...

நீண்ட பிரகாரம் உடைய மண்டபத்தினை காணுகையில் ஏதோ எங்கள் ஊர் கோவில்களின் அமைப்பினை பற்றிய நினைப்பையே அதிகம் ஏற்படுத்தியது!

தஞ்சாவூரான் said...

அட, சட்டுன்னு முடிச்சிட்டீங்களே? :)

டுக்-டுக் தாய்லாந்திலும் அதிகமாப் பயன்படுத்தப் படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

வடுவூர் குமார் said...

தாய்லாந்து போகத்தூண்டுகிறீர்கள்.
படங்களுக்கு நன்றி.

HK Arun said...

உலாத்தல் விவரிப்பு சிறப்பாக இருக்கின்றது. தொடருங்கள் வாசிக்கக் காத்திருகின்றோம்.

நன்றி

கானா பிரபா said...

ஆயில்யன்

தமிழகப் பாரம்பரியத்தில் அமைந்த முற்பட்ட, பிந்திய காலத்து ஆலயங்கள் பலவடிவில் இருக்கின்றன. அவை பறியும் சொல்வேன். வருகைக்கு மிக்க நன்றி

//தஞ்சாவூரான்
அட, சட்டுன்னு முடிச்சிட்டீங்களே? :)//

வாங்க தஞ்சாவூரான்

ஒரு மாசத்துக்கு மேல் இடைவெளி வந்து விட்டது. எனவே தான் அவசரமாக ஆரம்பிச்சு அவசரமாவே முடிச்சிட்டேன். அடுத்த பகுதி இன்னும் விரிவாக வரும்.

வடுவூர் குமார்

இது கம்போடிய தொடர், தாய்லாந்து பக்கத்து நாடு. அவசரமா படிச்சிருக்கீங்க போல.

அருண்

வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி

G.Ragavan said...

ஆகா அருமையான பயணக்கட்டுரை. என்னமோ எங்களைக் கையப் பிடிச்சுக் கூட்டீட்டுப் போற மாதிரி இருக்கு.

அந்த அப்சராவுக்கு என்னாச்சு? அதைச் சொல்லுங்க. ஆவலா காத்திருக்கேன்.

ஆ.கோகுலன் said...

அருமையான விபரிப்பு..!

நுளைவு..?? - நுழைவு!!

கப்பி பய said...

//அந்த அப்சராவுக்கு என்னாச்சு? அதைச் சொல்லுங்க. ஆவலா காத்திருக்கேன்.//

ரிப்பீட்ட்டு :)

கோபிநாத் said...

ஆகா..நல்லா போட்டிங்க பிரேக்கை...;))

சீக்கிரம் போடுங்க கதை கேட்க ஆவலுடன் இருக்கிறேன் ;)

சின்ன அம்மிணி said...

\\அப்சாரா என்னும் பேரழகுத் தேவதைகளின் முகங்கள் வாளால் அரிந்தும், துப்பாக்கிச் சன்னங்களால் துளைத்தெடுத்தும் சிதைக்கப்பட்டிருக்கின்றன.\\
நல்ல வேளை முழுமையா கோயிலையே இடிக்காம விட்டாங்களே

கானா பிரபா said...

//G.Ragavan said...

அந்த அப்சராவுக்கு என்னாச்சு? அதைச் சொல்லுங்க. ஆவலா காத்திருக்கேன்.//

வாங்க ராகவன்

அடுத்த பதிவிலேயே சொல்லிடுறேன், வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி

//ஆ.கோகுலன் said...
அருமையான விபரிப்பு..!

நுளைவு..?? - நுழைவு!!//

நுழைவு தான் சரி ;-) திருத்துகிறேன் நன்றி

கப்பிபய

உங்க ரிப்பீட்டுக்கு இப்போ அப்பீட்டு ;-)

//கோபிநாத் said...
ஆகா..நல்லா போட்டிங்க பிரேக்கை...;))//

நோ டென்ஷன் தல, அடுத்த பதிவில் சஸ்பென்ஸ் இருக்காது ;-)

// சின்ன அம்மிணி said...
நல்ல வேளை முழுமையா கோயிலையே இடிக்காம விட்டாங்களே//

வாங்க சின்ன அம்மணி

நீங்க வேற, கோயிலின் கதியும் அதோ கதி தான், சொல்றேன்.

பரிசல்காரன் said...

கடைசி புகைப்படம் மிக அருமை!