Social Icons

Pages

Tuesday, June 27, 2006

ஆலப்புழாவில் காலடி வைத்தேன்

மே 27, மதியம் 1.00 (இந்திய நேரம்) திருவனந்தபுரம் Highland ஹோட்டலில் இருந்து மதியம் 1.00 மணிக்கு ஆலப்புழா நோக்கிக் காரில் பயணித்தேன். போகும் பாதை நன்கு சீரமைக்கப்பட்ட பெருந்தெருவாக இருந்தது. அடூர் (Adoor) என்ற கிராமத்தை நெருங்குகையில் போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் நம்மவர் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீத் சர்வாணியுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். பயணிக்கும் போது தென்படும் ஊர்ப்பலகைகள் பல கேரளக்கலைஞர்களை ஞாபகப் படுத்துகின்றன. கேரளக் கலைஞர்கள் பலர் தம் ஊரின் பெயரையும் இணைத்துச் சொல்வது நீங்கள் அறிந்ததே.

ஹரிபட் (Haripad) என்ற இடத்தில் இறங்கி, நானும் கார்ச்சாரதியுமாக சூடான நெஸ்கபே அருந்திவிட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்தோம். வழிநெடுகக் காணும் கிராமியக் காட்சிகள், தாம் தம் பழைமை நிலையை மாற்றமாட்டேன் என்று அடம் பிடிப்பது போல எனக்குப் பட்டது. ஆலப்புழாவைக் கார் அண்மித்தபோது மாலை 5.00 ஐக் கைக்கடிகாரம் காட்டியது.

ஆலப்புழா என்ற பெயர்க்காரணம் இதன் புவியியல் அமைப்பைக் கொண்டே ஏற்பட்டது. ஒருபக்கம் கடலையும், மற்றோர் பக்கம் பல்வேறு ஆற்றுக்கூட்டங்களைக்கொண்ட நிலப்பரப்பே ஆலப்புழா என்ற பெயர்க்காரணம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இது அலப்பி (Alleppy) என்றும் அழைக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் தேசாதிபதி கேர்ஸன் பிரபுவால் (Lord Curzon) என்பவரால் கிழக்கின் வெனிஸ் (Venice of the East) என்று சிறப்பிக்கப்பட்டது இந்தப் பிரதேசம். மலையாளத்தில் புழா என்றால் ஆறு என்று குறிக்கப்படும். ஆலப்புழா மாவட்டம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது, சேர்த்தலை (Cherthala), அம்பாலபுழா (Ambalappuzha), குத்தநாடு (Kuttanad),கார்த்திகபள்ளி (Karthikappally), செங்கனூர் (Chengannur), மாவிலேக்கரை (Mavelikkara), ஆகிய ஆறு தாலுகாக்களைக் (நிர்வாகப் பிரிவு) கொண்டு 1414 சதுர கீ.மீ பரப்பளவில் உள்ளது.இதன் மேற்குப் பகுதி லட்ஷ தீவுகளை அணைக்கின்றது. மணிமாலா, பம்பை, அச்சன்கோவில் ஆகிய பேராறுகள் இந்தமாவட்டத்தை யொட்டியுள்ளன. இதில் பம்பை ஆறு கேரளாவின் மூன்றாவது பெரிய ஆறு ஆகும்.

தென்னை உற்பத்திகள் (தேங்காய், கொச்சி, மட்டை, ஈர்க்கு), பாக்கு, நெற்செய்கை, கரும்பு போன்றவை முக்கிய விளைபொருட்களாகவும். தவிர இங்குள்ள மண் தன்மையும் அதிக வருவாய ஏற்படுத்தும் வல்லமையை வழங்கியுள்ளது. குறிப்பாக சீனக் களிமண், lime shell போன்றவை அதிக வருவாயைப் பெற்றுத் தரும் கனியவளங்களாகும்.

கடற்கழி (Backwater) பலவும், ஆழமற்ற களப்பு, நீர்நிலைகள்,பெரிய மலைகள் அற்ற ஆனால் அதிகப் படியான மேட்டு நிலப்பரப்பையும், குன்றுகளையும் கொண்டுள்ளது. வருடத்தில் மார்ச் தொடங்கி மே மாதம் வரை அதிகப்படியான வெப்பத்தையும், யூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றையும்,ஒக்டோபர் தொடங்கி நவம்பர் வரை வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றையும், டிசம்பர் தொடங்கி பெப்ரவரி மாத காலப் பகுதி வரட்சியானதாகவும் அமைந்த காலநிலையை இப்பிரதேசம் கொண்டது.

மக்கட் தொகை 2,105,349 பேர், கல்வியறிவு விகிதாசாரம்: 93.66 % (கேரளாவின் 3 வது நிலையில் இருக்கும் விகிதாச்சாரம்),(தகவல்: கேரளா சுற்றுலாத்துறை)

கிட்டத்தட்ட 4 மணி நேரம் பிடித்த இப்பயணத்தைச் சுருக்கவேண்டுமென்றால் நீங்கள் செய்யவேண்டியது கொச்சினில் இருந்து ஆலப்புழா நேக்கிவருவது. கொச்சினிலும் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. கொச்சினிலிருந்து ஆலப்புழாவிற்கு வெறும் ஒன்றரை மணிநேரம் மட்டுமே பிடிக்கும். திருவனந்தபுரத்திலிருந்து ஆலப்புழாவிற்குப் புகையிரத்திலும் வரலாம். புகையிரத சேவை மாலை 5 மணிக்கு மட்டுமே உண்டு. தவிர சொகுசு பஸ் சேவைகளும் உண்டு. எனக்கு வாடகைக் கார் செலவு ரூ 2200 ஆயிற்று (திரும்பும் செலவு உட்பட). அதிக பயணப் பொதியோடு செல்பவர்களுக்கு வாடகைக்காரே உகந்த வழி. திருவனந்தபுரத்திலிருந்து வாடகைக்கார் மூலம் வந்தால் திரும்பிப் போகும் வாடகைக் கட்டணமும் கொடுக்கவேண்டும். எது வசதியென்று நீங்களே முடிவெடுங்கள்.

ஆறு தாலுகாவைக் கொண்ட தலைநகராக ஆலப்புழா இருந்தாலும் இது ஒரு சிறு நகரமே. கேரளப் பாரம்பரிய அமைப்பில் கோயில்கள் இருக்கும் அதே வேளை நவீன காலக் கோயில்களும் உள்ளன. ஆலப்புழாவில் தங்கிய நாட்களில் அங்குள்ள உடுப்பி சிறீ கிருஷ்ணா ஆலயம், புவனேஸ்வரி அம்மன் ஆகிய கோயில்களுக்குப் போனேன். முகப்பில் தமிழும் மலையாளமும் இணைந்த அறிவிப்புக்கள் புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் உண்டு. ஆலபுழா நகரவீதிகளில் அதிகம் தென்படுவது வாழைக்குலை தொங்கும் கடைகள். ஓவ்வொரு வாழைக் குலைகளும், மம்முட்டியினதும், ஜெயராமினதும் உடல் வாகை நினைவுபடுத்துமளவுக்குப் பென்னான் பெரியவை.

முன்னதாகவே நான் இணையம் மூலம் தகவல் பெற்று முன் பதிவு செய்த கெளரி ரெசிடன்ஸ் ( Gowri Residence) என்ற தங்குமிடத்தில் கார் தரித்து நின்றது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது.

திருச்சு வரும்..........

14 comments:

கார்திக்வேலு said...

Beautiful pictures ....you went there in best time (monsoon !!!)of the year .

அற்புதமான ஊர் !!!

மலைநாடான் said...

பிரபா!

ஆலப்புழா, அச்சன் கோவில், பம்பை ஆறு, என்பன சபரிமலை யாத்திரையில் முக்கிய இடங்கள். கேரளப்பயனத்தில் என்னை அசரவைத்த விடயங்களில் வாழைப்பழப் பொரியல் தயாரிக்கும் முறையும் வேகமும். நீங்கள் அதைப் படம்பிடித்திருப்தால், நீங்களும் ரசித்திருக்கிறீர்கள் என்று என்று எண்ணுகின்றேன்.

கானா பிரபா said...

வணக்கம் கார்த்திக்வேலு

தங்கள் வருகைக்கு என் நன்றிகள்

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

ஓ.. படத்தைப் போட்டுவிட்டு வாழைப்பழ சிப்ஸ் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். வாடிக்கையாளர் கண்முன்னே உடன் தயாரிக்கும் வாழைப்பழ சிப்ஸ் இற்கான தனிக்கடைகளும் உள்ளன. அவற்றின் விலையும் கொள்ளை மலிவு.

ரவி said...

நமக்கும் மிக விருப்பமான சேச்சிகளை பற்றி ஒன்றும் சொல்லாமல், ஒரு புகைப்படம் கூட வெளியிடாமல் இருட்டடிப்பு செய்த கானா பிரபாவை வன்மையாக கண்டிக்கிறேன்...

Anonymous said...

பிரபா!
உலாத்துக்குக்கு, மழையையும் கூட்டிப்போய் இருக்குறீங்க போல இருக்கு! படமெல்லாம் பிரமாதம்.கேரளக் கோவில் பாணியில்;நேபாளப் பாணி இருப்பது போலுள்ளதே!. நம்ம நீர்வேலிக் கதலிக்குலைகளை விடப் பெரிசா??!!;மலைநாடன் சொன்னது போல் வாழைக்காய்ப் பொரியல் ;நேரே கொதி நெய்யில் போடும் வேகம்; கண்ணுக்கு விருந்தே!!!
யோகன் பாரிஸ்

சின்னக்குட்டி said...

அழகிய படங்களை காட்டி எங்களையும் ஆலப்புலா கூட்டி சென்றதுக்கு நன்றி...





//தொங்கும் கடைகள். ஓவ்வொரு வாழைக் குலைகளும், மம்முட்டியினதும், ஜெயராமினதும் உடல் வாகை நினைவுபடுத்துமளவுக்குப் பென்னான் பெரியவை//

இதை மூன்றாந்தர ஜோக்காகவும் மாத்திடுவாங்க கவனம்

கானா பிரபா said...

//செந்தழல் ரவி said...
நமக்கும் மிக விருப்பமான சேச்சிகளை பற்றி ஒன்றும் சொல்லாமல், ஒரு புகைப்படம் கூட வெளியிடாமல் இருட்டடிப்பு செய்த கானா பிரபாவை வன்மையாக கண்டிக்கிறேன்... //

சேச்சிகளைப் போய்ப் படமெடுத்தால் நான் உசிரோட வந்திருப்பேனா ராசா?
ரணகளமாக்கீடுவாங்கல்ல???

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

நீர்வேலி வாழைக்குலைகளுக்கு ஒப்பானவை தான் இவை. ஆனால் எந்த ரகத்தை எடுத்துக்கொண்டாலும் வழமையை விடப் பெருப்பமானவை.

கொட்டும் மழை காலத்தில் இந்த வாழைக் காய்ப் பொரியலை அப்படியே சுடச்சுடச் சாப்பிடுவதும் உவப்பளிக்கும் விஷயம்.

கானா பிரபா said...

சின்னக்குட்டியர்

நீங்கள் எங்க வாறியள் எண்டு தெரியும் எனக்கு:-)))
சும்மா கற்பனை பண்ணக்கூட விடமாட்டேங்கிறாங்களே...

Anonymous said...

கானப்பிரபா படங்கள் அருமை.
தொடர்ந்தும் உங்கள் பயண பதிவுகளை எதிர் பார்த்திருக்கிறொம்.

கானா பிரபா said...

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றிகள் குளக்காட்டான்

Anonymous said...

Have u been to kumarakome(Spelling?).Post some pictures of water scenes.

கானா பிரபா said...

வணக்கம் நண்பரே

குமாரகத்துக்குப் போகும் வாய்ப்புக் கிட்டவில்லை, அடுத்தமுறை பார்க்கலாம் என்றிருக்கிறேன்.