மே 27, மதியம் 12.00 மணி (இந்திய நேரம்)திருவனந்தபுரத்திலிருந்து ஆலப்புழா, கொச்சின் நோக்கிய உலாத்தலைத் தொடர்வதற்கு முன் திருவந்தபுரத்தில் எஞ்சிய, பார்த்த சில விடயங்களைத் தருகின்றேன்.
பொதுவாகவே எந்த ஒரு இடத்திற்கும் சென்றால் நான் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று விரும்பும் அம்சங்களில் ஒன்று இந்த நூதனசாலைகள் (Museum). கலையும், மொழியும் ஒரு இனத்தின் இரண்டு கண்கள் என்பார்கள். மொழியின் சான்றாக நூலகமும், கலை மற்றும் பண்பாட்டின் சான்றாக நூதனசாலையும் ஒருகே அமைந்திருக்கின்றது. எனவேதான் ஒரு பிரதேசத்தின் வரலாற்று விழுமியங்களைக் கண்டு தரிசிக்க, நம் பயண ஏற்பாட்டில் நூதனசாலைக்கும் கட்டாயம் நாம் நேரம் ஒதுக்கவேண்டும்.
அந்தவகையில் திருவனந்தபுரத்தில் அடுத்து நான் முற்றுகையிட்டது கேரள நூதனசாலை. வழக்கமாக நான் முன் சென்ற இடங்களின் நூதனசாலைகள் வெள்ளையனிடம் அடி வாங்கிய சுதேசி போல நொந்து நூலானது போல் இருந்திருக்கின்றன. ஆனால் திருவனந்தபுர நகரமத்தியிலேயே விசாலமான காணிக்குள் இந்த நூதனசாலை இருக்கின்றது. பண்டைய சித்திரக்கூடம், நூதனசாலை பணிக்கர் காட்சிச்சாலை, சிறீ சித்ரா மாடம் என்று இந்த நிலப்பரப்பில் பங்கு போட்டவாறே இருக்கும் இடத்தில், ரூ 5 கட்டணத்திலேயே முன்சொன்ன அனத்துக்குமான பொதுவான நுளைவுச்சீட்டு இருக்கின்றது. அதோடு ஒரு இயற்கைப்பூங்காவும் இருக்கின்றது. செவ்வாய் முதல் ஞாயிறு வரை, காலை 10 மணி முதல் மாலை 4.45 வரை திறந்திருக்கும்.
இந்த நிலப்பரப்பில் நடுநாயகமாக இருக்கும், 1880 இல் கட்டப்பட்ட Napier Museum அழகு கொஞ்சும் கட்டிட அமைப்போடு இருக்கின்றது. சிறீ சித்ரா கலைக்கூடத்தில் தஞ்சாவூர், முகலாய, ராஜபுத்திரர்களின் சிறந்த சித்திர வேலைப்பாடுகள் மற்றும் ரவி வர்மா போன்றோரின் ஓவியச் செல்வங்களும் இருக்கின்றன. தவிர தாவிரவியற்பூங்காவும் விஞ்ஞானத் தொழில்நுட்பக்காட்சிச் சாலையும் மாணவர்களை இலக்கு வைத்து அமைந்துள்ளன. இங்கு பாம்பு, பல்லி இத்தியாதிகளின் கண்காட்சியைப் பார்க்கலாம். பணியாளர்கள் மிகுந்த பண்புடன் நடந்து கொள்கின்றார்கள். சில காட்சியறைகளுக்குள் நுளைய வேண்டுமென்றால் பாதணியுடன் செல்லமுடியாது. வாசலில் செருப்பைக் கழற்றிப் பாதுகாப்பிடத்தில் வைத்துப் போகுமாறு கட்டளையிடுகிறாள் ஒரு அனியத்தி (தங்கச்சிங்கோ). எனக்கு முன்னே வந்த குடும்பத்தின் தலைவர் "நாங்க தமிழ்நாட்டுக்காரங்கம்மா! புரியும்படி சொல்லு" என்று சொல்லவும், அதுவரை மலையாளத்தில் விளித்த அவள் மலையாளத்தில் சிரித்தவாறே தமிழில் கட்டளையிடுகின்றாள், மீராஜாஸ்மின் தமிழ் பேசியதுபோலிருக்கிறது.
இவ்வளவு பரந்த நிலப்பரப்பில் அழகான ஒரு அமைவிடமாக இந்த நூதனசாலை இருந்தும் என்ன பயன்? தமிழ்நாடு, ஆந்திரா போன்ற இடங்களில் இருக்கும் நூதனசாலைகள் ஏற்படுத்திய பிரமிப்பை இது ஏற்படுத்தவில்லை. ஒப்பீட்டளவில் மிகச்சொற்பமான கலைப்பொருட்களே இருக்கின்றன. கேரளா முழுவதுமே ஒரு அரியகலைச்சொத்து என்று நினைத்தோ என்னவோ, சேகரித்துக் காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்கள் அவ்வளவாக இல்லை. வெறும் ஜூஜூபி. சேட்டன்கள் இதற்கு ஏதாவது செய்யணும்.
கேரள சட்டமன்றத்தைப் பார்க்கின்றேன். அழகே உருவானதாக எந்தவித உச்ச பாதுகாப்புக் கெடுபிடிகளும் அற்று ஒரு சாதாரண கம்யூனிஸ்ட் தொண்டரைப் போல எளிமையாக நிற்கின்றது. கேரளா தலைமைச்செயலகத்தை எம் கார் கடக்கும் போது அங்கும் அதே நிலை.அதனாலோ என்னவோ மக்கள் கூட்டமும் அதிகப்படியாக அங்கு நிறைந்திருக்கின்றது.
ஒருவாறாகத் திருவனந்தபுர வலம் நிறைவுற்ற நிலையில் நான் தங்கிருந்த Highland ஹோட்டலுக்குப் போய் உணவருந்திவிட்டு என் அடுத்த பயணத்தை ஆரம்பிக்கலாம் என்றெண்ணுகின்றேன். இது ஒரு சைவ உணவகத்தோடு கூடிய நல்ல உயர்தர ஹோட்டல். இந்த ஹோட்டலுக்கு நேர் எதிரே இவர்களே அசைவ உணவகத்துடன் கூடிய தங்குமிடத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் சைவ உணவகத்துடன் கூடிய தங்குமிடம் இப்போதுதான் புதிதாகக் கட்டப்பட்ட தரமானதாக இருக்கின்றது. என் அறை வாடகை நாளொன்றுக்கு ரூ 1050 வரிகள் தனி (24 மணி நேர வசதி உண்டு). இணையம் மூலமாக இந்த ஹோட்டல் பற்றிய விபரம் பெற்று முன்னதாகவே எனக்கான அறையைப் பதிந்து வைத்திருந்தேன். ஏசி வசதியும்,சமாளிக்கக் கூடிய தரத்தில் குளியலறையும் இருக்கின்றன.
வாசலில் வீற்றிருக்கும் அந்த ஹோட்டல் முகாமையாளர்
"சாரே! ஆகாரம் கழிச்சோ" என்று அன்புடன் கேட்கின்றார். இந்த இடத்தில் எனது கேரள விஜயத்தில் எப்படியான மொழியாடலை நான் மேற்கொண்டேன் என்று சொல்லிவிடுகின்றேன்.
நான் கேரளத்துக்கான பயணத்தின் போது எடுத்த விசித்திரமான முடிவுகளில் ஒன்று இது. நான் சம்பாஷிக்கும் மலையாளிகளை அவர்கள் போக்கிலேயே மலையாளத்தில் பேசவிட்டு, என்னால் அதைப் புரிந்துகொள்ளமுடிகிறதா என்று பார்ப்பது. முதல் நாள் ஹோட்டலுக்கு நான் வந்தபோதே அதன் முகாமையாளரிடம் நான் இலங்கைத் தமிழன் என்றும் எமது தமிழுக்கும் மலையாளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் சொல்லிவைத்தேன். அதையே நான் கேரளாவில் பயணித்த இடங்களில் சந்தித்த கார்ச்சாரதிமார், படகு வீட்டுக்காரர்கள், ஹோட்டல்கார்களுக்கும் சொன்னேன். அவர்கள் முழுமையாக மலையாளத்தில் சம்சாரிக்கும் போது, எனக்குத் தெரிந்த மலையாள பாஷையுடன் ஆங்கிலத்தையும் கலந்துகட்டி மலையாங்கிலத்தில் உரையாடுவேன். நீங்கள் நம்புகிறீர்களோ என்னவோ, இந்தக் கேரளவிஜயத்தில் மொழி ஊடாடல் எனக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவேயில்லை. இதற்காக நான் கடந்த 10 வருடங்களாகப் பார்த்து வரும் பாசில், சத்தியன் அந்திக்காடு, சிபி.மலயில் ஆகிய இயக்குனர் படங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன்.
கொஞ்சம் யாழ்ப்பாணத்துத் தமிழைக் குழைவாகப் பேசினால் மலையாளத்தாரிடம் சமாளிக்கலாம் போலிருக்கிறது.மலையாள எழுத்துவடிவையும் ஊன்றிக் கவனித்தால் சில சொற்பதங்கள் தமிழின் வரிவடிவைக்கொண்டிருக்கின்றன. தமிழில் முறித்து எழுதும் எழுத்துக்கள் மலையாளத்தில் வளைத்தும் நெளித்தும் எழுதப்பட்டிருக்கின்றன.
எனது ஹோட்டல் போய் உடை மாற்றிவிட்டு முன்னே அமைந்துள்ள அசைவ உணவகம் சென்று கடலுணவுக் கலப்பு அரிசிச் சோறுடன், கேரளாவிற்கே தனித்துவமான கறிமீன் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கின்றேன். நல்ல மலிவான விலையில் சுவையான சாப்பாடு.
Hotel highland இடமிருந்து விடைபெற்று காரில் அமர்கின்றேன். கண்டே இராத காதலியைக் காணும் ஆவலில் பறக்கிறது என் மனம் ஆலப்புழாவை நோக்கி.
வீண்டும் காணாம்........
Sunday, June 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
வல்லிய சாப்பாடு போலிருக்கு...:)....எளிமையாக படங்களுடன் அருமையான பதிவு...நல்லா ஊர்சுத்தி காட்டுறீக..
மிகவும் அருமை. திருவனந்தபுரத்தின் அழகான மழைக்கால வீதிகள் மனம் மகிழச் செய்கின்றன.
ஈழத்தமிழ் என்றில்லை...பொதுவாகவே இலக்கணத் தமிழில் நல்ல அறிமுகம் இருந்தால் மலையாளத்தை நாமும் சம்சாரிக்கலாம். தமிழோடு மிகத் தொடர்புள்ள மொழி மலையாளம். இளங்கோவடிகளும் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளையும் அந்த ஊர்க்காரர்கள்தானே.
கறிமீன் உண்டீர்களா? நன்றாக இருக்கும். செந்நெல்லரிச் சோறும் மீன்குழம்பும் மயமயக்கும். தொட்டுக்கொள்ள மீன் பொரிச்சது இருந்தால் மிகச் சிறப்பு.
மிக நன்றாக உள்ளது உங்களின் பயணக்குறிப்புகள்.
தொடர்ந்து ஆலப்புழாவை காணும் ஆவலை ஏர்படுத்தியுள்ளீர்கள்.
தொடருங்கள் -
காத்திருக்கிறேன் உங்களுடன்
காணாத காதலியை காணும்
ஆவலுடன் - ஆலபுழாவிற்காக.
அன்புடன்
இறை நேசன்
பிரபா!
நல்லாத்தான் "உலாத்தி" இருக்குறீங்க!!!; மழைக்காலப் படங்கள் அழகாக உள்ளன. போனவர்கள் அனைவருமே! மலையாள மொழிப் பிரச்சனையில்லை எனக் கூறினார்கள்.
யோகன் பாரிஸ்
//சாதாரண கம்யூனிஸ்ட் தொண்டரைப் போல எளிமையாக நிற்கின்றது. //
அழகிய படங்களுடன் சுவையாக சொல்லி கொண்டிருக்கிறீர்கள்....தொடருங்கள்...
வணக்கம் ரவி
கேரளச் சாப்பாட்டை ஒரு பின்னு பின்னீட்டேங்க:-))
// G.Ragavan said...
ஈழத்தமிழ் என்றில்லை...பொதுவாகவே இலக்கணத் தமிழில் நல்ல அறிமுகம் இருந்தால் மலையாளத்தை நாமும் சம்சாரிக்கலாம். தமிழோடு மிகத் தொடர்புள்ள மொழி மலையாளம். //
உண்மைதான் ராகவன், இதை நேரில் உணர்ந்தபோது அகமகிழ்ந்தேன்.
கறி மீனும், பொரிச்சமீனும், சிட்னி வந்தபின்னும் என் பிரியமான சாப்பாடுகள். விடுவேனா அவற்றை:-)
ஆனாலும் கேரள மண்ணில் சாப்பிட்டது மாதிரி வராது. ஆலப்புழாவில் வைத்து இன்னும் சொல்கின்றேன்.
அன்பின் இறைநேசன்
தங்கள் வருகைக்கும், ஆர்வத்திற்கும் என் நன்றிகள்.
//போனவர்கள் அனைவருமே! மலையாள மொழிப் பிரச்சனையில்லை எனக் கூறினார்கள்.
யோகன் பாரிஸ் //
உண்மைதான் யோகன் அண்ணா, உலாத்தலின் உச்சபட்ச திருப்தியை ஏற்படுத்திய பயணம் இது.
வணக்கம் சின்னக்குட்டியர்,
தங்களுக்கு அரசியலில் நல்ல ஈடுபாடு என்பதால் பொருத்தமான மேற்கோள் காட்டியிருக்கிறியள். தங்கள் ஊக்குவிப்பிற்கும் என் உளம் கனிந்த நன்றிகள்.
//அதுவரை மலையாளத்தில் விளித்த அவள் மலையாளத்தில் சிரித்தவாறே தமிழில் கட்டளையிடுகின்றாள்//
மலையாளச் சிரிப்போ? நல்லாத்தான் உலாத்தியிருக்கிறியள்:-)
//Kanags said...
மலையாளச் சிரிப்போ? நல்லாத்தான் உலாத்தியிருக்கிறியள்:-) //
:-)))
கோரளாவில் ஊர்சுத்தல் நன்றாக இருக்கிறது. உங்கள் பயணப் பதிவுகளைப் பார்த்ததன் பின்னர் போய் பார்க்கவேண்டும் என்னும் ஓர் ஆவல் ஏற்படுகிறது. :)
வணக்கம் இளையவன்
தங்கள் வருகைக்கு என் நன்றிகள், நீங்களும் அங்கு போய் உலாத்தினால் சொக்கிவிடுவீர்கள்.
Post a Comment