Social Icons

Pages

Thursday, December 13, 2012

கோழிக்கோட்டில கல்யாணம்


 குருவாயூரில் நிறைந்த தரிசனம் கிடைத்த திருப்தியில் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தேன்.  காலை ஆறுமணிக்கெல்லாம் அங்கே சாப்பிட எதுவும் கிட்டவில்லை, தண்ணீரால் வயிற்றை நிரப்பிவிட்டு, வரவேற்புப்பகுதிக்கு வந்து ஹோட்டல் கணக்கைத் தீர்த்துவிட்டு அவர்கள் ஒழுங்கு செய்த வாடகைக் கார் மூலம் காலை ஆறரைக்கு கோழிக்கோடு நோக்கிப் பயணம் ஆரம்பித்தது.

கோழிக்கோடுவில் நண்பர் ஜிபேஷ் இன் கல்யாணம் காலை பத்து மணிக்கு. அவர் எங்கள் நிறுவனத்தின் இந்திய BPOவில் பணியாற்றியவர், ஐந்தாண்டு காலப் பழக்கம். உங்களுடைய கல்யாணத்துக்கு நான் அங்கு வருவேன் என்ற அவருக்கு நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவேண்டியே இந்தப் பயணம்.
வாடகைக்கார் ஓட்டுனர் மனோஜ் ஐப் பார்த்தால் நடிகர் ஜெயராமின் தம்பி மாதிரித் தோற்றம், குங்குமக் கீற்றை நெற்றியில் இட்டு, பட்டுச்சட்டையும், வேஷ்டியுமாக. அவரோடு பேச்சுக் கொடுத்தேன்.  குருவாயூர் கோயிலின் விசேஷத்தைப் பேசிக்கொண்டே வந்தார். அவரின் தந்தை தான் கோயிலில் நிதமும் நடக்கும் கிருஷ்ணாட்டத்தில் ஆடும் முக்கிய கலைஞராம்.  அந்தப் பயணம் பெருந்தெருவில் இருந்து சந்து பொந்தெல்லாம் தொட்டுப் பயணித்தது.  கேரளத்தின் மிகப்பிரபலமான பாரதப்புழா ஆறு நாக்கு வரண்டு தென்பட்டது.  அந்த அதிகாலை வேளையிலும் கிராமத்துப் பையன்கள்  கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். காலை எட்டுமணிக்கெல்லாம்  கோழிக்கோடு சென்று திருமணம் நடக்கும் மண்டபமும் போயாச்சு. காவலாளி தவிர யாருமில்லை.  அவர் என்னைக் கண்டதும் சிரித்து ஏதோ மலையாளத்தில் சொன்னார், நானும் அசட்டுச் சிரிப்போடு தலையை ஆட்டி வைத்தேன். உள்ளே போய் உட்காரச் சொல்வது மட்டும் புரிந்தது. கையில் இருக்கும் இரண்டு உடுப்புப் பொதிகளை இறக்கி வைத்துவிட்டு, கல்யாண மண்டபத்தில் அடுக்கப்பட்ட கதிரைகளில் ஒன்றில் ஆசுவாசப்படுத்திக் கொண்டே சூழவும் பார்த்தேன், மண்டபம் எல்லாம் அலங்கரித்து இருந்தது.  இன்னும் இரண்டு மணி நேரம் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் இருக்கவேண்டுமே என்று மனசு அங்கலாய்க்க, அந்த நேரம் நண்பர் ஜிபேஷ் என் செல்போனில் அழைத்தார். நான் கல்யாண மண்டபத்தில் இருக்கும் விஷயத்தைக் கேட்டுப் பதைபதைத்து, ஆளை அனுப்புகிறேன் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுங்கள் என்றார். கொஞ்ச நேரத்தில் அவரின் சகோதரரின் டூவீலர் வந்தது.

எங்கள் யாழ்ப்பாணத்துக் கல்யாணத்தில் காலையிலேயே சுற்றமும், உறவுகளும் வந்து மாப்பிள்ளை வீட்டில் குவிந்து விடுவார்கள். காலைச்சாப்பாடு, தேனீர் எல்லாம் அங்கேயே. அதே போன்றதொரு சூழல் ஜிபேஷ் இன் வீட்டில். அந்தவீட்டின் அமைப்பும், சூழலும் கூட எனக்கு யாழ்ப்பாணத்தில் இருப்பது போல ஒரு பிரமை. சிட்னியில் இருந்து வந்திருக்கிறேன் என்று உறவினர்கள் அறிந்ததும் ஏகத்துக்கும் மரியாதை.  உண்மையில் நம் ஈழத்தவருக்கும் கேரளத்தவருக்குமான பண்பாட்டுத் தொடர்புகள் குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொண்டால் பல சங்கதிகள் கிட்டும் போல.
மாப்பிள்ளைக்கான சடங்குகள் ஆரம்பித்தன. மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்தபின்னர் பெரியோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். மணமகனின் காரிலேயே அவருக்கு அருகில் அமர்ந்து கல்யாண மண்டபம் சென்றேன்.

அங்கே எமது நிறுவனத்தின் இந்திய BPO வில் பணிபுரிந்த நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள். கிட்டத்தட்ட பத்துப்பேர் இதுவரை ஒருவர் முகத்தையும் பார்த்திராது அது நாள் வரை தொலைபேசியில் மட்டுமே  இருந்த நாம், எல்லோரும் ஆசை தீரப் பேசிக்கொண்டோம், ஒருபக்கம் கல்யாணச் சடங்குகளையும் பார்த்துக் கொண்ட.   பெண் வீட்டுக்காரர் தமிழ் நாடு என்பதால் ஒருபக்கம் தமிழ் மணம் கமிழ்ந்தது. சாப்பாட்டு நேரம்கூடவே  கேரளத்துப் பாயாசம். கேரளாவில் தண்ணீருக்குப் பதில் வெந்நீரில் கலக்கிய ஜீரக நீரைக் கொடுப்பார்களாம். முதலில் அதைப் பரிமாறினார்கள். . வாழையிலை போடப்பட்டு கிட்டத்த பத்துவிதமான காய்கறிகளோடு, சோறும் பரிமாறப்பட்டது. அடக்கிவைத்திருந்த பசி சோற்றையும் கறிகளையும் அள்ளியணைத்து உள்ளிழுத்துக் கொண்டது.

கல்யாணக் காட்சியை முடித்துக் கொண்டு,  முதன் முதலாக நாடுகாண் பயணி வஸ்கொடகாமா  வந்திறங்கிய இடமான கோழிக்கோடுவின் கப்பாட் கடற்படுக்கையைக் காணவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மணி ஒன்றாகிவிட்டது. மாலை ஐந்துமணிக்கு கோயம்புத்தூருக்குச் செல்லும் பஸ் பிடிக்கவேண்டும் என்று அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டேன். உண்மையில் இயற்கை எழில் நிறைந்த கோழிக்கோடு சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாகத் தரிசிக்கவேண்டிய இடம்.  அடுத்த பயணத்தில் வஸ்கொடகாமா கால்வைத்த இடத்துக்குப் போவோம் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டேன். மீண்டு மாப்பிள்ளை விட்டுக்குப் பயணம்.

மாலை நேரம் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை வரவேற்றுப் பலகாரப் படையலும் தேனீர் விருந்தும். நம்மூர் புட்டு வாழை இலையில் இருந்து என்னைத் தெரியும் தானே என்று சொல்லுமாற்போல இருந்தது.  ஜிபேஷின் பள்ளிக்கால நண்பர் வசந்த் ஏதோ பலவருஷங்கள் பழகிய நண்பனைப் போல ஒட்டிக் கொண்டார். அவரே என்னை கோழிக்கோடு பஸ் நிலையம் வரை அழைத்து வந்து, இங்கு வந்து விட்டு வெறுங்கையோடு போகக்கூடாது என்று சொல்லி ஒரு கிலோ நேந்திரம் பழம் (வாழைப்பழம்) சிப்ஸ், இன்னொரு கிலோ அல்வா வாங்கிக் கையில் திணித்தார். இந்தக் கடையின் நேந்திரம் பழம் சிப்ஸ் வெகு பிரபலம் தெரியுமா என்று அவர் சொன்ன அந்தப் பெட்டிக்கடை எளிமையின் உருவம், ஆனால் கூட்டமோ தள்ளு முள்ளு அளவுக்கு.   அவர் அன்புக்கு நான் அடிமை.

பர்வீன்  ட்ராவல்ஸ் இல் ஏற்கனவே இணையம் மூலம் கோழிக்கோடு - கோயம்புத்தூர் பயணத்தைப் பதிவு செய்திருந்தேன்.  அந்த பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த சில நிமிடங்களில் பஸ் வந்தது. எனக்குப் பக்கத்தில் இருந்த இளைஞன் சென்னையில் இருந்து வந்திருந்தார். செல்போனில் காதலியோடு கடலை போட்டுக்கொண்டிருந்தார். இவர்களுக்கு இடையில் நான் ஏன் நந்தி மாதிரி என்று நினைத்து, காலியாக இருந்த முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டேன்.  வாகனச்சாரதி தனக்கு மட்டும் எண்பதுகளின் இளையராஜா பாடல்களைப் போட்டுக் கொண்டே, சரத்குமாரின் மாயி படத்தைப் போட்டு நம்மை இக்கட்டில் ஆழ்த்திவிட்டார். இருளைக்கிழித்துக் கொண்டு ஆம்னி பஸ் பயணித்தது கோவை நோக்கி.







17 comments:

ஆயில்யன் said...

சாப்பாடு விசயங்களை ஸ்கிப்பிவிட்டீரே என்ற ஏக்கத்தை தவிர மற்ற விசயங்களை அதுவும் குறிப்பாய் ஈழத்துக்கும் கேரளாவிற்குமான தொடர்புகளை ஆராய வேண்டி கூறிய கருத்துகள் வெகு அருமை! :)

Anonymous said...

I'v always felt that Jaffna is more connected to Kerala than Tamilnadu. Food, language, behavior and even the physical appearances are the same:)

Sudhar said...

http://en.wikipedia.org/wiki/Ezhava

You read this. Ezhava one of the major communities (BC) in Kerala.

One of the reason for their community name (not authentic truth), they are from Ezham so they called Ezhava.

As usual another good travelogue.


மாதேவி said...

கேரள கல்யாணமும் சாப்பாடும் இனித்தது.

வெங்கட் நாகராஜ் said...

கோழிக்கோடு - நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் பிரபா. அதிரடியாக சென்று பார்க்காமல், ஆற அமற இரண்டொரு நாட்கள் இருந்து பார்க்க வேண்டும்.....

சிறப்பான பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

அது கோழிக்கோட்டுலயா இல்ல கோழிக்கோடுலயா? கோழிக்கோடுவில் என்பது தமிழகத்து இதழ்கள் கொழும்பில் என்பதை கொழும்புவில் என்று எழுவதைப் போன்றது. கோழிக்கோட்டில்..! கோடுங்கறது மேடான நிலப்பகுதி. குன்றம் என்பார்கள் பாண்டிநாட்டில்.. சேரநாட்டில் அது கோடு. அதங்கோட்டு ஆசான் என்கிறது தொல்காப்பியம் :-) இப்படி பதிவுலகெங்கிலும் எம்மொழிச் சொற்களையே அந்நியதாக்கி எழுத்துக்குழப்பங்கள் நிரம்பிக் கிடக்கக் காண்கிறேன். அரிவுசீவித்தனமான தமிங்கலர் என்றால் போனாப்போகுதுனு விட்டிட்டுப் போயிடலாம், ஆனா ஈழத்தில் தமிழ் படித்த ஆளுக்கும் இதிற் குழப்பமா?

G.Ragavan said...

கேரள படங்கள் மிக அழகு. கோழிக்கோடு முன்னாடி போயிருக்கேன். கடற்கரையோரமெல்லாம் அழகு. அந்தக் கடற்கரையில் விற்கப்படும் காடியில் ஊற வைத்த நெல்லிக்காயும், காரட்டும், வெள்ளரிக்காயும்.. இன்ன பிறவும்.. ஆகா ஆகா ஆகா

தட்டுக்குப் புட்டழகு
புட்டுக்கு இனிப்பழகு
என்றுதான் பாடத்தோணுது :)

கானா பிரபா said...

Anonymous said...

அது கோழிக்கோட்டுலயா இல்ல கோழிக்கோடுலயா? //


கோழிக்கோடு தான் சரியான சொற்பிரயோகம் பெயர்க்காரணம் நீங்கள் குறிப்பிட்டது போல அல்ல, இங்கே மேலதிக விளக்கத்தைப் பெறலாம் http://en.wikipedia.org/wiki/Calicut

Anonymous said...

மிக அருமையாக இருந்தது.. கேரள சாப்பாடு பற்றி இன்னும் விஸ்தாரமாக எழுதி இருக்கலாம்..மிஸ்ஸிங் கல்யாண சாப்பாடு... :)) எனக்கும் அப்போ அப்போ தோணும் ஈழமும்,கேரளாவும் உணவு,தமிழ் பேசும் முறை போன்று பல விஷயத்தில் ஒற்றுமை இருப்பது போல்.. அடுத்த பதிவு கோயம்புத்தூரா... -நிலாபெண் @nilavinmagal.

anandrajah said...

சாப்பாட்டு விஷயத்துக்காக த்தான் காத்திருந்தது. இப்படி சத்ய'வ (கேரளா சாப்பாடு) பத்தி எழுதாம போட்டோவும் போடாமா சொதப்பிட்டீங்களே ..!!

செந் நெல் சாதம்தான் போட்டாங்களா.., சுவைமொட்டுக்களை பதறச்செயும் இஞ்சிபுளி சைடுல வைச்சிருப்பாகளே ...., அத பத்தியும் காணோம். அஞ்சுமணிக்கு பர்வீனை பிடிக்கும் அவசரம் பதிவிலும் தெரிந்தது.

சரி விடுங்க.. உம்ம பசி அகோரப்பசி போலும்.



"நம் ஈழத்தவருக்கும் கேரளத்தவருக்குமான பண்பாட்டுத் தொடர்புகள் குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொண்டால் பல சங்கதிகள் கிட்டும் போல".. பண்பாட்டுத் தொடர்பு மட்டுமா.. மொழியொற்றுமையையும் சொல்லியே ஆகணும்.



நாடுகாண் பயணி .... ஹிஹிஹி.. இது எப்படிங்க.. இப்படி..!!???

Pulavar Tharumi said...

சுவையான பதிவு!

K.Arivukkarasu said...

மாப்பிள்ளை கேரளா ! பெண் தமிழ்நாடு !! இப்படி இங்கே நிறைய நடக்கிறது ( vice versa வும் )!!! என் மனைவி வழி உறவினர்கள் கேரளாவிலிருந்து! நம் நண்பர் ஆனந்த்தராஜ் மனைவியும் கேரளாதானே ! உங்கள் பதிவு வழக்கம்போல் அருமை :-))

Vijayashankar said...

அருமையான பதிவு.

அந்த ஆய்வுக்கட்டுரை நீங்கள் எழுதுவீர்கள் என நம்புகிறேன். :-)

கடைசியில் போட்டுள்ள படம் கடவு ரிசார்ட்! கோழிக்கோடு ஏர்போர்ட் செல்லும் வழியில், பேக்வாடர்ஸ்! சில வருடங்கள் முன் குடும்பத்தோடு சென்று தங்கினோம்

Vijayashankar said...

//சாப்பாட்டு விஷயத்துக்காக த்தான் காத்திருந்தது. இப்படி சத்ய'வ (கேரளா சாப்பாடு) பத்தி எழுதாம போட்டோவும் போடாமா சொதப்பிட்டீங்களே ..!! //

What about that special Kerala marriage lunch?

Anonymous said...

கோழிக்கோடு தான் முதற்சொல். அது ஓடு, இல் போன்ற சொற்களுடன் புணர்கையில் தான் கோழிக்கோட்டு, கோழிக்கோட்டில் என்றாகும் என்பதையே மேலே எழுதியிருக்கிறேன். கோழிக்கோட்டில் கல்யாணம்..

கானா பிரபா said...

கோழிக்கோடு தான் முதற்சொல். அது ஓடு, இல் போன்ற சொற்களுடன் புணர்கையில் தான் கோழிக்கோட்டு,// இப்போது நீங்கள் சொல்லவந்தது புரிகிறது ;) இந்ததலைப்பை நான் இட்டது காஞ்சிபுரத்துல கல்யாணம் என்ற படத்தின் பாதிப்பில் ;) ஆனாலும் இது இப்படியான குழப்பம் ஏற்படுத்தும் என்பதால் மாற்றிவிடுகிறேன்.

கோபிநாத் said...

கல்யாணமும் பார்த்தாச்சி...