Social Icons

Pages

Wednesday, December 19, 2012

சென்றும் செல்லாத கோயம்புத்தூர் பயணம்

கோழிக்கோடுவில் இருந்து கோவை நோக்கிய பஸ் பயணத்தில், எனக்கு அடுத்த பக்கத்தில் இலங்கையில் இருந்து வந்திருந்த கன்னியாஸ்திரிகள் யாழ்ப்பாணத்தமிழில் அளவளாவிக்கொண்டிருந்தனர்.  டிவியில் சரத்குமார் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். நானோ யன்னலோர இருக்கையில், அந்த இருளிலும் ஏதாவது வெளிச்சத்தில் தென்படும் இடங்களைத் தேடித் தேடிப் பார்த்துக் கொண்டே வந்தேன். பாலக்காடு வந்தது. நான் அடுத்த பயணத்தில் வரத் தீர்மானித்திருக்கும் ஊர் இது. நிறையப்படங்களில் பார்த்ததை நேரே காணும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு உணவகத்தில் இரவு ஆகாரம் கழிப்பதற்காக பஸ் நிறுத்தப்பட்டது. நான் சுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இருபது நிமிட வாக்கில் மீண்டும் பயணம். மெல்ல மெல்ல கோவை மண்ணை பஸ் தொடுவதை உணர்த்துமாற்போலத் தமிழில் பெயர்ப்பலகைகள், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து முழுமையான தமிழ்ச் சூழலை உணர்த்தும் வண்ணம் இரவு விளக்கொளியில் சுற்றும் முற்றும் தமிழ்ப் பெயர்கள், எங்கும் தமிழ்ப் பெயர் தாங்கிய கடைகள். ஆகா இதைப் பார்க்கும் போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. கோயம்புத்தூர் என்றாலே கோவை சரளாவையும், ஜி.டி.நாயுடுவையும், அவ்வூர் வட்டார மொழி வழக்கை மட்டுமே அதுவரை அறிந்து வைத்திருந்தேன். கோவைக்கு வந்து தனது முதற் தரிப்பில் ஆட்களை இறக்கியது பஸ், நானும் இறங்கிக் கொண்டேன்.

 நான் இந்தியப்பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக ட்விட்டரில் பகிர்ந்தபோது, மிகுந்த அக்கறையோடு பயண ஏற்பாடுகளை அவ்வப்போது விசாரித்து, தானே எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாகச் சொல்லி நெகிழ வைத்தவர் நண்பர் சதீஷ் (@saysatheesh). இத்தனைக்கும் இரண்டு வருடம் முகம் காணாத நட்பு, ஒத்த இரசனை மட்டுமே நம்மை நெருங்க வைத்தது. மாலையில் கோழிக்கோடுவில் இருந்து பஸ்ஸில் கோவைக்கு வரும்போது இருட்டி விடும் எனவே நானே உங்களை பஸ் நிறுத்துமிடத்துக்கு வந்து ஹோட்டலுக்கு அழைத்துப் போகிறேன் என்றார். எனக்கோ ஏன் இவரைக் கஷ்டப்படுத்துவான், அடுத்த நாள் வேலை நாளாகக் கூட இருக்குமே என்று அவரிடம் சொன்னாலும் கேட்கவில்லை. "அது ஒண்ணும் பிரச்சனை இல்லை, பஸ் வர்ர நேரம் எத்தனை மணிக்குன்னு கேட்டுச் சொல்லிடுங்க நானே என் காரில் வந்து காத்திருக்கிறேன்" என்று சொன்னார்.
எனக்காக நண்பர் சதீஷும் மனைவியும் காத்திருந்தார்கள். முதல் முறை நேரே சந்திக்கிறோம், எனக்கென்னவோ பள்ளிக்கால நண்பரை நீண்ட நாட்களுக்குப் பின் கண்ட உணர்வு. நான் கோவையில் இருந்த இரண்டு இரவு, ஒரு பகல் பொழுதை நண்பர் சதீஷ் இருக்கிறார் என்ற பாதுகாப்புணர்வை ஏற்படுத்திவிட்ட அவரை எப்படி மறப்பேன்.

கோவை வாழ்க்கையைப் பற்றிப் பேசிக்கொண்டே நண்பர் சதீஷ் காரில் என்னை பார்க் ப்ளாஸா ஹோட்டலுக்கு அழைத்துப் போனார்.  தொடர்ச்சியான 14 மணி நேரத்துக்கும் மேலான மின்வெட்டால் கோயம்புத்தூர் போன்ற தொழிற்பேட்டை நகரம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதை அந்தக் கார்ப்பயணத்தில் சதீஷின் உரையாடலில் உணர்ந்து கொண்டேன்.

அடுத்த நாள் திருப்பூர் பயணத்துக்கும் தம் காரிலேயே வந்து அழைத்துப் போவதாகச் சொல்லிவிட்டு விடைகொடுத்தார். 

கோயம்புத்தூருக்குப் பயணம் செல்வதாகத் தீர்மானித்து இணையத்தில் தேடியபோது வழிகாட்டிய ஹோட்டல் பார்க் ப்ளாஸா. அந்த ஹோட்டலுக்கு அழைத்த போது "வணக்கம்" என்று வரவேற்பாளினி சொன்ன அந்த ஒற்றைச் சொல்லால் மறுபேச்சில்லாமல் தங்கும் அறையைப் பதிவு செய்துவிட்டேன். ஆனால் பின்னர்தான் தெரிந்தது கோவை நகரிலிருந்து வெகு தூரம், தள்ளி விமான நிலையத்துக்கு அருகாமையில் அந்த ஹோட்டல் இருப்பதை. இதனால் கோயம்புத்தூர் போயும், அந்த ஊரைப் பார்க்கமுடியாமலேயே போய் விட்டது. அடுத்த நாள் திருப்பூர் பயணமே முழு நாளையும் கவர்ந்து விட்டது. காசியண்ணன் கூட வேடிக்கையாக "இவர் எங்கே கோயம்புத்தூருக்கு வந்தார்" என்று கலாய்த்தார். பார்க் ப்ளாஸா உயர் தர நட்சத்திர விடுதி என்பதால்  பங்கமில்லாத சேவையை வழங்கியது மனத்துக்குத் திருப்தியாக இருந்தது.


அடுத்த நாள் கோயம்புத்தூர் வாழ் நண்பர்களைச் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தபோது பலரும் தீபாவளிக்கு முதல் நாளான அன்று பண்டிகைக்காலக் கொள்வனவிலும், சிலருக்கு வேலை நாள் என்பதாலும் அன்று மாலையே நான் தங்கியிருந்த பார்க் ப்ளாஸாவில் சந்திப்போம் என்று முடிவானது.

பகல் முழுதும் என்னோடு திருப்பூருக்கு வந்த களைப்பு, வீட்டுக்காரம்மாவின் புகார் எதுவும் இல்லாமல்  முதல் ஆளாக நண்பர் சதீஷ் வந்தார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் காசியண்ணன் (@akaasi) தீபாவளிப் பலகாரத்துடன் வந்தார். தமிழ்மணம் இணைந்த 2005 காலத்தில் இருந்தே காசியண்ணனோடு இணையம் மூலம் ஏதோ ஒருவகையில் தொடர்போடு இருக்கும் மகிழ்ச்சியில் இருப்பவன் நேரை கண்டதும் இன்னும் இரட்டிப்பான சந்தோசம். ஹோட்டல் வாசல்புறம் நிற்காதே உள்ளுக்கு ஓடு என்று நுளம்புகள் (கொசுக்கள்) துரத்தின. உட்புறமிருந்த உணவகத்தில் போய் உட்கார்ந்தோம். நண்பர் தேங்கா என்று செல்லமாக அழைக்கப்படும் தீபக் @DKCBE வந்தார். ட்விட்டரில் குறும்புத்தனமாக இருக்கும் ஆளுக்கும் உருவத்துக்கும் சம்பந்தமே இல்லாத பரம சாது அவர். கோவைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்துக்கான காரணகர்த்தா அறிவுக்கரசு சார் @arivukkarasu வேலை முடித்து அரக்கப்பரக்க ஓடிவந்து தாமதத்துக்கு வருந்துவதாகச் சொன்னார். என்னளவில் அவர் எனக்கு உறவினர் போன்று அடிக்கடி பரிவோடு ட்விட்டரில் விசாரிப்பவர், எதிர்பார்த்த அதே அறிவுக்கரசு சாரை நேரே பார்த்தேன். அந்த நாள் முழுதும் என்னோடு நேரத்தைச் செலவிடவில்லையே என்ற கவலை சந்திப்பு முடியும்வரை அவருக்கு இருந்தது. எனக்காக The Best of Neil Diamond என்ற இசைவட்டைக் கொண்டு வந்து பரிசளித்தார்.  கோவைச் சந்திப்பு பற்றி அறிந்து நண்பர் பிழைதிருத்தி @PizhaiThiruthi  அங்கு வந்தபோதுதான் அவர் இங்கே இருப்பதே தெரியும். ட்விட்டரில் அவர் கொடுக்கும் அதே பாணியிலான கலகலப்பும், கோபமும் கொண்ட கலவை அவர். ட்விட்டரில் புதிதாக இணைந்து கொண்ட நண்பர் அர்விந்த் பிரபு @arrvindprabhu டைம்லைனில் வந்து  நானும் வரலாமா என்று அப்பாவித்தனமாகக் கேட்டார். என்ன கேள்வி, உடனே வாருங்கள் என்று போட்டதும் அவரும் இன்னொரு இடத்துக்குப் போக இருந்தும் நடுவில் இந்தச் சந்திப்பைக் கண்டுவிட்டுப் போகலாம் என்று வந்து சேர்ந்து கொண்டார்.  நண்பர் பரத் இற்குப் போக்குவரத்துச் சிக்கல் இருப்பதால் வரமுடியவில்லை என்று வருத்தப்பட்டார். மினிமீன்ஸ் கூட தீபாவளிக்கு முதல் நாள் என்பதால் வருவதில் சிக்கல் என்று தகவல் அனுப்பினார். இடமிருந்து வலம்:பிழை திருத்தி, அர்விந்த் மனோ, தீபக், நான், காசி அண்ணன், அறிவுக்கரசு சார் (படத்தில் எனக்குப் பக்கத்தில் சிரித்த முகத்தோடு சுதர்சன் கோபால்)
நான் எதிர்பாக்காமல் ஆனால் நீண்ட நாட்களாகச் சந்திக்கவேண்டும் என்று நினைத்திருந்த நண்பர் சுதர்சன் கோபால் வந்தது எனக்கு இன்ப அதிர்ச்சி.  இவர் லண்டனில் இருக்கிறார் என்று நினைத்திருந்தேன் ஆனால் ஊருக்கு வந்துவிட்டதாகச் சொன்னார். திரையிசைப்பாடல்களில் இருந்து இலக்கியம் வரை ஒத்த அலைவரிசையில் இயங்குபவர், நண்பர் ஜீ.ராவின் ஜெராக்ஸ் என்பேன். கையோடு கொண்டு வந்திருந்த Splendours of Royal Mysore என்ற அரிய நூலைக் கொண்டு வந்து கொடுத்தார். எல்லோரும் நிறையப் பேசியதால் அதிகம் சாப்பிடவில்லை, ஆனால் மனசு நிறைந்தது. உண்மையில் அந்தப் பரபரப்பான தீபாவளிக்கு முதல் நாள்இவர்கள் எல்லோரும் வந்திருந்து என்னைச் சந்தித்ததோடு, தங்களுக்குள் ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்த முடிந்ததால் எனக்கு ஒரு நிறைவான சந்திப்பாக இருந்தது.


அடுத்த தடவையாவது கோயம்புத்தூருக்கு வாங்க, மருதமலையில் பதிவர் சந்திப்பைப் போட்டுடுவோம் என்ற காசியண்ணன் வாக்கை அடுத்த ஆண்டு முடிவதற்குள் நிறைவேற்ற வேண்டும்.

முதற்படம் நன்றி:  Connect Coimbatore

18 comments:

Covai Ravee said...

சார் நீங்க வருவதை எனக்கு மின்னஞ்சல் செய்யவில்லையே?

கானா பிரபா said...

வணக்கம் சார், நான் சந்திப்பு குறித்து ட்விட்டரில் பொது அழைப்பாக விடுத்திருந்தேன் மன்னிக்கவும் கண்டிப்பாக அடுத்த தடவை உங்களைத்தான் முதலில் சந்திக்க ஆவல்

சங்கவி said...

சார் இனி வலைப்பதிவிலும் நீங்க வருவதை சொல்லுங்க...

உங்கள் அடுத்த வருகைக்காக காத்திருக்கிறோம் கோவை குழுமம்...

Vijayashankar said...

Nice post!

சுவையான கொங்கு தமிழ் பற்றி எழுதலே?

:-)

கானா பிரபா said...

சங்கவி said...

சார் இனி வலைப்பதிவிலும் நீங்க வருவதை சொல்லுங்க...//

கண்டிப்பாக நண்பா

கானா பிரபா said...

Vijayashankar said...


சுவையான கொங்கு தமிழ் பற்றி எழுதலே?//

சந்திச்சவங்க யாரும் பேசுவாங்கன்னு பார்த்தா யாருமே அதைப் பேசல :)

மாதேவி said...

இனிய சந்திப்பு.

ஆயில்யன் said...

யேம்ப்பா இந்த நடுவாப்புல நிக்கிற டவுசர் போட்ட தம்பி யாரு? :)

chinnapiyan said...

அருமை. அறிவுக்கரசு சார் உங்களுடனே இருப்பதை பார்த்தபோதும் உங்கள் கட்டுரையையும் படித்தபோதும்,நானே உங்களுடன் மகிழ்ந்து உலாவினது போல உணர்ந்தேன். நன்றி. அடுத்ததடவை நிச்சயம் திருச்சி வருகை என்று நான் சொல்லவும் வேண்டுமோ !!

Anonymous said...

கோவை நல்ல ஊர். அந்த ஊர்க்காரங்க ஒங்கள எங்கயும் கூட்டிட்டுப் போகல போல. போக வேண்டிய எடங்களும் நெறைய இருக்கே.

சந்திப்பு நடந்திருக்கிறதப் பாத்தா.. ஒங்கள அன்னபூர்ணாவுக்குக் கூட கூட்டிட்டுப் போகலை போல ;)

காசி அண்ணனை நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எப்போதோ? நீங்கள் சொன்னது போல தமிழ்மணந்த தமிழ்மணக் காலத்துப் பழக்கமல்லவா.

சுதர்சன் கோபால் வந்திருந்தது மகிழ்ச்சி. உங்களைப் போல அவரு லண்டண்ல இருக்காருன்னு நெனச்சிட்டிருந்தேன். அப்புறமா கோவைல ஒளிஞ்சிக்கிட்டிருக்காருன்னு தெரிஞ்சது.

மற்ற நண்பர்களின் படங்களையும் பாத்ததில் மகிழ்ச்சி.

வெங்கட் நாகராஜ் said...

இனிய சந்திப்பு....

K.Arivukkarasu said...

பிரபா, எங்களைப்பற்றி பதிவில் எழுதி பெருமைப்படுத்தியதற்கு நன்றி! 3 மணிநேர சந்திப்பு 3 நிமிடமாகப் பறந்தது. உங்களை சரியாக கவனித்து அனுப்பவில்லையோ என்கிற நெருடல் தொடர்கிறது. அடுத்த முறை கோவை வரும்போது சிலநாட்கள் தங்குமாறு வரவும். பின்னூட்டம் எழுதியுள்ள சின்னப்பையன் சாருக்கும் நன்றி.

கோபிநாத் said...

:-))

@RRSLM said...

//கண்டிப்பாக அடுத்த தடவை உங்களைத்தான் முதலில் சந்திக்க ஆவல் //

ஆஹா.....இததான் என்கிட்டையும் சொன்னிங்க!

சி.பி.செந்தில்குமார் said...

>> K.Arivukkarasu said...

பிரபா, எங்களைப்பற்றி பதிவில் எழுதி பெருமைப்படுத்தியதற்கு நன்றி! 3 மணிநேர சந்திப்பு 3 நிமிடமாகப் பறந்தது. உங்களை சரியாக ”கவனித்து ”அனுப்பவில்லையோ என்கிற நெருடல் தொடர்கிறது


ஹா ஹா இதுல ஏதும் உள்குத்து இருக்கா?

சி.பி.செந்தில்குமார் said...

>>ஆயில்யன் said...

யேம்ப்பா இந்த நடுவாப்புல நிக்கிற டவுசர் போட்ட தம்பி யாரு? :)


யூத்தாமாம் ;-)

ஆனந்த் ராஜ்.P said...

கீச்சர்கள்..... கீச்சர்கள்... கீச்சர்கள்... இந்தப்பதிவு மட்டும் ட்விட் அப் ஸ்பெஷல் ஆகி விட்டது... !! நண்பர்களை அறியக்கொடுத்தமைக்கு நன்றி

Anonymous said...

சூப்பர்.. நல்ல பதிவு.. உங்கள் வாயிலாக கோவைவாழ் கீச்சர்கள் பலரை தெரிந்து கொண்டோம்...அடுத்த பதிவு திருப்பூரா??? வெயிட்டிங்... :)) -நிலாபெண் @nilavinmagal