Social Icons

Pages

Thursday, July 19, 2012

லண்டன் உலாத்தல் ஆரம்பம்

புலம்பெயர்ந்த 17 வருஷ வாழ்வில் அவுஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள ஆசிய நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளுக்குச் சென்றிருந்தாலும் இந்த ஆண்டின் கடந்த மாதம் வரை ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லாத கடன் ஒன்று இருந்தது. அதுவும் ஓரளவுக்கு நிரப்பப்பட்டிருக்கின்றது இந்த மாதம் லண்டன் உலாத்தல் மூலம். ஆனால் இந்தப் பயணம் முன்னர் எனக்கு வாய்த்த பயணங்களை விட ஏகப்பட்ட தில்லாலங்கடி ஆட்டங்களோடு நிறைவேறியிருக்கின்றது. மூன்று வாரப் பயணம் அதில் ஒருவாரம் தாயகத்தில் மற்றைய இரண்டு வாரமும் இங்கிலாந்தும் அதனைச் சூழவுள்ள ஐரோப்பிய நாடுகள் சிலதையும் பார்க்கலாம் என்ற வகையிலேயே இந்தப் பயணம் ஆரம்பத்தில் அமையவிருந்தது. ஆனால் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் மூன்று வாரம் என்பது பத்து நாட்களாகக் குறைய அதில் நான்கு நாட்கள் சிட்னியில் இருந்து லண்டன் வரைக்குமான போக்குவரத்துக்குத் தியாகம் செய்ய வேண்டிய நிலை வந்து விட்டது. இதில் நிறையப் படிப்பினைகளும் கூட.

முதல் பாடம், விலை மலிவு கருதி முகம் தெரியாத விமானப்பயண முகவரை நாடக்கூடாது. வழக்கமாக நான் பயண ஏற்பாடுகளைச் செய்யும் முகவரை என் அவசரத்துக்குப் பிடிக்க முடியாத நிலையில் இன்னொரு தெரியாத ஒரு பயண முகவரிடம் சென்றேன். அவரோ "ஜூலை மாதம் விமானப்பயண டிக்கெட்டுக்களை எடுப்பது சிரமம்,காரணம் பள்ளி விடுமுறை, அவுஸ்திரேலியாவில் கடும் குளிர் பற்றிக் கொள்ளும் மாதம் மற்றும் லண்டனில் வரவிருக்கும் ஒலிம்பிக்ஸ், ஆனால் நான் சகாய விலையில் டிக்கெட்டைக் கொடுக்கிறேன் என்று என்று சொல்லித் தேன் தடவிய வார்த்தைகளால் பேசவும் நானும் அவரிடமே விமானப்பயண ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னேன். பின்னர் மூன்று கிழமைப் பயணத்தைப் பத்து நாளாக மாற்றும் நிலை வந்தபோது அதெல்லாம் செய்யச் செலவாகும் என்று முரண்டு பிடித்தார். நேராக விமான நிறுவனத்துக்கே தொடர்பு கொண்டால் அவர்களோ உங்களின் ஆரம்பம் பயணத்தை மேற்கொள்ளும் வரை எந்த மாற்றமும் பயண முகவரால் தான் செய்ய முடியும் என்று கைவிரித்து விட்டார்கள். மீண்டும் முகவரிடமே வந்து எவ்வளவு செலவானாலும் மாற்றம் செய்யுங்கள் என்று கேட்டேன். எல்லாமாக எழுநூறு டாலர்களை மேலதிகமாகக் கேட்டு ஆப்பு வைத்தார். வேறுவழியில்லாமல் மேலதிக பணத்தைக் கொடுத்து திகதிகளில் மாற்றம் செய்து கொண்டேன். இதனால் கிடைத்த இரண்டு நீதிகள்.
1. ஏற்கனவே அறிமுகமான நிறுவனம் இருக்க, பழக்கமில்லாத முகவர்களின் வலையில் விழக்கூடாது
2. கொஞ்சம் அதிகம் செலவானாலும் Fully Flexible எனப்படும் டிக்கெட்டை ஆரம்பத்திலேயே வாங்கிவைத்து விட்டால் ஆபத்துக்குப் பாதகம் இல்லாமல் திகதிகளை விரும்பியது போல மாற்றிக்கொள்ளலாம்.

சிட்னியில் இருந்து கொழும்பு வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கொழும்பில் இருந்து லண்டன் வரை ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்று பயண ஏற்பாடு. அந்த நாளும் வந்தது. சிட்னி ஏர்போர்ட்டில் கூட்டம் அதிகம் இல்லை. பள்ளி விடுமுறை முந்திய வாரம் என்பதால் மக்கள் கூட்டம் காலியாகியிருந்தது. எனது iPad இல் 12 முழு நீளப்படங்களையும் நூற்றுச் சொச்சம் பாடல்களைச் செருகியிருந்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறியிருந்ததும் முதலில் தேடியதே பயணிக்கும் விமானத்தில் என்னென்ன படங்களைப் போடுவார்கள் என்று விபரப்புத்தகத்தில் மேய்ந்தேன். வழக்கம் போலப் பெரிய ஆப்பு. ஏனோ தெரியவில்லை சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் தமிழ் பாடல் தெரிவுகளும் சரி தமிழ்ப்படங்களின் தெரிவும் சரி ஒரு மார்க்கமாகவே இருக்கும். தனுஷ் தம்பி நடித்த வேங்கை, கலைஞானி கமல்ஹாசன் பழிவாங்கிய மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு என்ற விவரணப்படம் இவற்றோடு பாடல்களில் விஜய் ஆண்டனி மற்றும் முகவரி மாறி இசையமைப்பாளர்களாகிய உப்புமா பாடல்களுமாக நிரவியிருந்தது. ஹிந்தியில் தபாங் படம் இருப்பதாகக் காட்டியிருந்தது. சரி அதையாவது பார்ப்போம் என்று படத்தை நெட்டித் தள்ளினேன். சத்தியாமாகப் புரியவில்லை இந்த திரபை தபாங் படத்தையா ஆகா ஓஹோவென்று தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். அடுத்ததாக இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் குறித்த ஒரு விபரணப் படம் ஒன்று இருப்பதாகத் தெரிந்து அதை முழுதுமாகப் பார்த்தேன். ஆகா இந்த இசைமேதை குறித்து வெகு சிறப்பாக எடுத்த அருமையான படைப்பு இது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன் முழுதும் பார்த்த பின்னர்.

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இரவு 11.55 இற்குச் சறுக்கி நின்று நிதானித்தது விமானம். ஏற்கனவே ஒன்லைனில் விசா எடுத்து வைத்திருந்தேன். அடுத்த நாள் மதியம் 1 மணிக்குத் தான் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிய பயணம். கொழும்பு சென்று திரும்ப நேரம் போதாது என்று கட்டுநாயக்காவை அண்மித்திருந்த Ramada Inn என்ற ஹோட்டலில் தங்கிச் செல்ல ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். அதன்படி விமான நிலைய டாக்ஸி மூலம் ஹோட்டலுக்கு வந்து ஒரு ஒரு வென்னீர் குளியல் எடுத்து விட்டு பயணக்களைப்பில் சரிந்தேன். அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். டிவியை முடுக்கினேன், சக்தி டிவியில் காலை நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்த ஆண்மகன் எப்படி இருக்கவேண்டும் என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது, பெண் மக்கள் தமக்கு சூர்யா மாதிரி வேணும், அறிவிப்பாளர் அண்ணா மாதிரி வேணும் என்று ஆளாளாளுக்குத் தங்கள் உள்ளக்கிடக்கையைக் கொட்டித் தீர்த்தார்கள். ஹோட்டலில் இருக்கும் உடற்பயிற்சிக்கூடம் எங்கே என்று விசாரித்தேன். நீச்சல் குளத்தைத் தாண்டி ஓரமாக இருக்கும் ஒரு அறையைக் காட்டினார்கள். அங்கு போனால் ட்ரெட் மில் இல் இருந்து அங்கிருக்கும் உபகரணங்கள் தூசி படர்ந்து சந்திரமுகி அரண்மனை கணக்காக இருந்தது. தும்மிக் கொண்டே அரைமணி நேரம் உடற்பயிற்சிக்கடனை முடித்து விட்டு குளியலோடு அங்கே காலை ஆகாரத்தையும் முடித்துக் கொண்டேன். விமான நிலையத்துக்குத் திரும்பும் வழியில் ரம்புட்டான் பழங்கள் குவியல் குவியலாக. என்னை ஏற்றிவந்த டாக்ஸிக்காரர் என்னை ஏதோ வேறு நாடுக்காரர் என்று நினைத்து "ரம்புட்டான் சேர் ரம்புட்டான்" என்று விளக்கம் கொடுத்தார்.

ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். வழக்கம் போல, திரையிடும் படங்களின் பட்டியலைப் பார்த்தால் அதில் மன்மதன் அம்பு த்ரில்லர் வகைக்குள். ஆகா ஆளாளுக்கு ரவுண்டு கட்டி அடிக்குறாங்களே என்று வடிவேலு குரலில் சொல்லிப் பார்த்தேன். சரக்கரைத்துச் செய்த மீன் குழம்போடு சோறு மட்டும் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன் பேர் சொல்ல வைத்தது. விமானத்தில் தந்த போர்வையை விரித்து முகர்ந்தேன். அரைகுறை ஈரத்தில் காய்ந்திருக்கும் போது ஒரு கெட்ட வாசனை வருமே அந்த வாசனை வந்து நாசியைக் கூறுபோட்டது. போர்வையைச் சுருட்டி வைத்து விட்டு உடம்பைச் சுருட்டிக் கொண்டு படுத்தேன்.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததாக அறிவிப்பு. விமான நிலையத்தின் குடிவரவுப் பிரிவில் நிற்கும் போது சென்னை விமான நிலையத்தில் நிற்பது போல ஒரு பிரமை, சுற்றம் சூழலில் ஒரே தமிழ் வாடை. போதாக்குறைக்கு ஒரு வெள்ளைக்காரக் குடிவரவு அதிகாரி "இங்கே தமிழில் இருந்து மொழிபெயர்ப்புச் செய்யக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா?" என்று குரல் கொடுக்க, ஒரு மடிசார் மாமி "ஐ கேன்" என்று கையை உயர்த்திக் கொண்டு முன்னே சென்றார்.

உலாத்தல் தொடரும்.....

22 comments:

senthil said...

தும் ததா !

சூப்பரு

Pulavar Tharumi said...

மீண்டும் உங்களின் உலாத்தல் பதிவை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி. பொதுவாக, மூன்று மாதங்களுக்கு முன்பே வாங்கினால் விமான கட்டணங்கள் குறைவாக இருக்கும் :)

Pulavar Tharumi said...

மீண்டும் உங்களின் உலாத்தல் பதிவை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி. பொதுவாக, மூன்று மாதங்களுக்கு முன்பே வாங்கினால் விமான கட்டணங்கள் குறைவாக இருக்கும் :)

துளசி கோபால் said...

மலிவு விலை பயணச்சீட்டுன்னு ஜெட் ஸ்டார் அடிக்கும் லூட்டிக்குக் குறைவில்லாமல் இப்ப ஏர் நியூஸிலாந்தும் கெட்டுக் குட்டிச்சுவராப் போய்க்கிட்டு இருக்கு.

இந்தக் கணக்கில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தரக்கேடில்லை என்ற வகையில் மட்டுமே.

டிக்கெட்டை வேற நாளுக்கு மாத்தணுமுன்னா தொலைஞ்சோம்:(

திரில்லோடு ஆரம்பமாயிருக்கும் உங்கள் பயணத்தைப் பின் தொடர்கிறேன்.

கோபிநாத் said...

கடவுளே நல்லப்படியாக திடிரென்னு பிரேக்டவுன் எல்லாம் ஆகமால் இந்த உலாத்தல் போகனுப்பா ;))

\\ அறிவிப்பாளர் அண்ணா மாதிரி வேணும் என்று \\

இதில் ஏதாச்சும் ஸ்பெசல் உள்குத்து இருக்கோ தல ;-))

டக்குன்னு லண்டன் வந்துட்டிங்க தல ;_)

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி செந்தில் ;)

தருமி

டிக்கெட் 3 மாதங்களுக்கு முன்பே புக் பண்ணியாச்சு ஆனால் கடைசி நேர சொதப்பல்ஸ் ;)


துளசிம்மா

மலிவு விலைன்னாலே இனி யோசிக்கணும் போல ;)

தல கோபி

உங்க பிரார்த்தனை ஈடேறட்டும் :)

K.Arivukkarasu said...

# லண்டன் முதல் பயணமா - ஆச்சரியம்! #ஒரு தடவைதான் படித்தேன் ..... இன்னும் பல முறை பாக்கி இருக்கு # << மூன்று வாரம் என்பது பத்து நாட்களாகக் குறைய >> இதைப் படித்தவுடனேயே எனக்கே பக்குன்னு ஆச்சு ... அடடா! # ரம்புட்டான் பழம் - ஆர்வக்கோளாரில் அதிகம் சாப்பிட்டு ஒரே சளி - என்று ரேணு சமீபத்தில் ட்வீட்டியது ஞாபகம் வந்தது # ஆரம்பம் அருமை # ஆவலுடன் தொடர்கிறேன் # அறுநூற்று சொச்ச படங்களில் இங்கே பகிர்ந்தவை போக மீதியை ஒரு கோப்பாக தரவும் ...

maithriim said...

இலங்கை பயணம் பற்றி எழுதிவிட்டீர்களா? நான் தான் படிக்கவில்லையா? தேம்ஸ் நதி புகைப்படம் அருமை, உங்கள் பதிவைப் போலே :-)

amas32

ILA (a) இளா said...

//போர்வையைச் சுருட்டி வைத்து விட்டு உடம்பைச் சுருட்டிக் கொண்டு படுத்தேன்.//
கலக்கல்..

அங்கே போயுமா ட்ரெட் மில்? காலாற நடந்து ஊரைச் சுத்திப் பார்க்கலாமே? ஒரேகல்லுல ரெண்டு மாங்காய்கள் இல்லையா?

Nat Sriram said...

ட்ரான்சிட் ஹோட்டலிலும் உடற்பயிற்சியா..முதல் படத்தில் உள்ள உங்கள் கட்டுடல் மேனியின் ரகசியம் புரிகிறது ;)

தனிமரம் said...

மலிவு விலை எப்போதும் ஒரு இம்சைதான் போல அண்ணா!ம்ம் ப்யணக்களைப்பு தாண்டி இன்னும் உலாத்தல் வரும் என்ற நம்பிக்கையில்! தொடர்கின்றேன்!

தனிமரம் said...

பிரபா அண்ணா ரேடியோஸ்பதி வலையினுல் உள்நுழையமுடியவில்லை நீண்டநாட்களாக ஒரே வலிப்பு வந்தவன்போல மீண்டும் மீண்டும் சுற்றுகின்றது கொஞ்சம் சரி செய்வீர்களா! நட்புடன் தனிமரம்!

வந்தியத்தேவன் said...

பெரியப்பு ஸ்ரீலங்கன் ஏயார்லைன்சில் தவிச்ச வாய்க்கு தண்ணி தரமாட்டாள்களே. 3 தடவை லண்டனுக்கு அதில் பயணப்பட்ட அனுபவம் ஆனாலும் அடுத்தமுறையும் அவங்களிடம் தான் போகவேண்டும் காரணம் மலிவு. முந்தி என்றால் எங்கடை மல்லையாவின் கிங்பிஷர் கொழும்புக்கும் போய்வந்தது இப்போ அதுவும் இல்லை.

தேம்ஸ் நதி அங்கிருப்பவர்களைப் போல தூரத்தில் இருந்து பார்க்க அழகாகத் தான் இருக்கும்.

Anonymous said...

இப்படியான பதிவுகள் அனுபவங்களுக்கு அப்பால் படிப்பவர்க்கு உபயோகமான தகவல்களை போற போக்கில்.தரக்குடியவை. அந்தவகையில் இதை ஒரு அநுபவம்மாக மட்டுமல்லாமல் படிப்பினை என்ற கோணத்திலும் நான் பார்க்கிறேன். ரிக்கற் பெறும் முகவரின் உண்மைத்தன்மை மிக மிக முக்கியம் என்பதை எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் முழுமையாக உணர்ந்தவன் நான்.
சமீபத்தில் கூட நான் இலங்கை சென்றிருந்த போது எனது கவனக்குறைவால்.,. திரும்பிவரும் ( departure time) பார்க்கத் தெரியாமல் பார்த்து விமானத்தை ் தவறவிட்டு விட்டேன். யாழ்ப்பாணத்தில் இருந்து சிட்னிக்கு தொடர்பு கொண்டு எனது முகவருடன் கதைத்த போது அவர் சிரமம் பாராது மாற்று விமானம் ஒழுங்கு படுத்திவிட்டு சொன்னார் 100 $ தண்டம் கட்ட வேண்டி வரும் எனவே தயாராகப் போகும் படி.
அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தண்டப்பணம் கட்டும் படி கேட்டார்கள் நான் கிறடிற் காட்டை நீட்டினேன்,அவ்வளவு தான் தொடங்கியது தலையிடி, கட்டுநாயக்காவில் கிறடிற்காட்டின் system down அதனால் பணம்கட்டமுடியாது என்று சினேகமே இல்லாத ஒரு முகத்தால் ஈசியாகச் சொல்லிப் போட்டு அருகில் இருந்த சக வேலையாளுடன் அரட்டை அடிக்கத் தொடங்கிவிட்டான் அந்தத்தீவெட்டி.் நானோ இருந்த எல்லா இலங்கை பணத்தையும் கட்டுநாயக்கவுக்கு வர முன்னரேயே செலவழ்த்துவிட்டேன், காரணம் இங்கு கொண்டு வருவதால் எந்தப் பெறுமதியும் அதற்கில்லை. கவுன்டரில் இருந்த தீவெட்டி யிடம் நிலையல் சொன்னேன் அதற்கு அது நண்பர்களிடம் கேட்கும் படிஅட்வைஸ் பண்ணியது,,,,(எல்லாம் நேரம் ), அதிஷ்டவஸமாக கைத்தொலைபேசி இருந்ததால் என்னை விமான நிலையத்துக்கு வழியனுப்ப வ்ந்துவிட்டு திரும்பிசென்று கொண்டிருந்த எனது நண்பனின்.தம்பிக்கு போன் பண்ணி நிலமையை விளக்கினேன் உடனேயே அவர்கள் திரும்பி வந்து அந்த விடிகாலையில் அவர்கள நால்வரிடமும் இருந்த எல்லாப் பணத்தையும் வளிச்சுத்துடைத்துத்தந்தார்கள், அதை உளிருந்து எட்டி வாங்குவதர்க்கு கூட கெடுபுடி இறுதியில் அங்கிருந்தவருடன் முரண்பட்டபடிதான் அந்த றுப்பீசை எட்டி மிகுந்த uncomfertable ளுடன் வாங்கினேன். உலகின் பல நாடுகளுக்கு, பல விமான நிலையங்களுக்கு போயிருக்கிறேன்் எந்த தலயிடியும் ஏற்பட்டதில்லை , ஆனால் பிறந்து வளர்ந்த நாட்டில், அதுவும் அங்கிருக்கும் ஒரே ஒரு ்சர்வதேச விமான நிலையத்தில் இப்படியான அடிப்படை வசதிகூட இல்லையென நினைக்கும் போது வேதனயும் அவமானமும் தான் மின்சுகிறத.
நீதி:
1) மக்காள் எவராவது இலங்கை சென்று, திரும்பவேண்டிய விமானத்தை கோட்டை விட்டால் உடனேயே அங்குள்ள அந்த எயார் லைன்ஸுடன் தொடர்பு கொண்டு தண்டப்பணத்தை செலுத்தி விட்டு கட்டுநாயக்கா செல்லுங்கள்.
2) தேவையான அளவுக்குஇலங்கை ருப்பீஸ் கொண்டு வாருங்கள் ஆனால் அதை பொக்கற்றுக்குள் மட்டும் வைக்காதீர்கள் ஏனென்றால் அதிலுள்ள ஊத்தையும் மணமும் உங்கள் பொக்கற்றை நாறடித்துவிடும் (இங்கூ வந்ததும் எறிய வேண்டியது தான், பின்னை அதைக் கொண்டு இனிப்புக்.கூட வாங்கும் பெறுமதியில்லை)



3) விமான நிலையத்துக்குள் நுழையும் போது சூடு சுறணையில்லாமல் வாங்கோ.



4) வழியனுப்ப வருபவர்களை விமானம் புறப்படுமட்டும் அங்கேயே நிற்க்கச் சொல்லுங்கள்.

5) உள்ளே மொபைல் போன் மிக அத்தியாவசியம்.
அன்று மட்டும் நான் தனியாக விமான நிலையம் போயிருந்தால் அம்போதான் !!!!!!!!!!!

kalai said...

சகோ,
இப்படியான பதிவுகள் அனுபவங்களுக்கு அப்பால் படிப்பவர்க்கு உபயோகமான தகவல்களை போற போக்கில்.தரக்குடியவை. அந்தவகையில் இதை ஒரு அநுபவம்மாக மட்டுமல்லாமல் படிப்பினை என்ற கோணத்திலும் நான் பார்க்கிறேன். ரிக்கற் பெறும் முகவரின் உண்மைத்தன்மை மிக மிக முக்கியம் என்பதை எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் முழுமையாக உணர்ந்தவன் நான்.
சமீபத்தில் கூட நான் இலங்கை சென்றிருந்த போது எனது கவனக்குறைவால்.,. திரும்பிவரும் ( departure time) பார்க்கத் தெரியாமல் பார்த்து விமானத்தை ் தவறவிட்டு விட்டேன். யாழ்ப்பாணத்தில் இருந்து சிட்னிக்கு தொடர்பு கொண்டு எனது முகவருடன் கதைத்த போது அவர் சிரமம் பாராது மாற்று விமானம் ஒழுங்கு படுத்திவிட்டு சொன்னார் 100 $ தண்டம் கட்ட வேண்டி வரும் எனவே தயாராகப் போகும் படி.
அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தண்டப்பணம் கட்டும் படி கேட்டார்கள் நான் கிறடிற் காட்டை நீட்டினேன்,அவ்வளவு தான் தொடங்கியது தலையிடி, கட்டுநாயக்காவில் கிறடிற்காட்டின் system down அதனால் பணம்கட்டமுடியாது என்று சினேகமே இல்லாத ஒரு முகத்தால் ஈசியாகச் சொல்லிப் போட்டு அருகில் இருந்த சக வேலையாளுடன் அரட்டை அடிக்கத் தொடங்கிவிட்டான் அந்தத்தீவெட்டி.் நானோ இருந்த எல்லா இலங்கை பணத்தையும் கட்டுநாயக்கவுக்கு வர முன்னரேயே செலவழ்த்துவிட்டேன், காரணம் இங்கு கொண்டு வருவதால் எந்தப் பெறுமதியும் அதற்கில்லை. கவுன்டரில் இருந்த தீவெட்டி யிடம் நிலையல் சொன்னேன் அதற்கு அது நண்பர்களிடம் கேட்கும் படிஅட்வைஸ் பண்ணியது,,,,(எல்லாம் நேரம் ), அதிஷ்டவஸமாக கைத்தொலைபேசி இருந்ததால் என்னை விமான நிலையத்துக்கு வழியனுப்ப வ்ந்துவிட்டு திரும்பிசென்று கொண்டிருந்த எனது நண்பனின்.தம்பிக்கு போன் பண்ணி நிலமையை விளக்கினேன் உடனேயே அவர்கள் திரும்பி வந்து அந்த விடிகாலையில் அவர்கள நால்வரிடமும் இருந்த எல்லாப் பணத்தையும் வளிச்சுத்துடைத்துத்தந்தார்கள், அதை உளிருந்து எட்டி வாங்குவதர்க்கு கூட கெடுபுடி இறுதியில் அங்கிருந்தவருடன் முரண்பட்டபடிதான் அந்த றுப்பீசை எட்டி மிகுந்த uncomfertable ளுடன் வாங்கினேன். உலகின் பல நாடுகளுக்கு, பல விமான நிலையங்களுக்கு போயிருக்கிறேன்் எந்த தலயிடியும் ஏற்பட்டதில்லை , ஆனால் பிறந்து வளர்ந்த நாட்டில், அதுவும் அங்கிருக்கும் ஒரே ஒரு ்சர்வதேச விமான நிலையத்தில் இப்படியான அடிப்படை வசதிகூட இல்லையென நினைக்கும் போது
வேதனயும் அவமானமும் தான் மின்சுகிறத.

நீதி:
1) மக்காள் எவராவது இலங்கை சென்று, திரும்பவேண்டிய விமானத்தை கோட்டை விட்டால் உடனேயே அங்குள்ள அந்த எயார் லைன்ஸுடன் தொடர்பு கொண்டு தண்டப்பணத்தை செலுத்தி விட்டு கட்டுநாயக்கா செல்லுங்கள்
.
2) தேவையான அளவுக்குஇலங்கை ருப்பீஸ் கொண்டு வாருங்கள் ஆனால் அதை பொக்கற்றுக்குள் மட்டும் வைக்காதீர்கள் ஏனென்றால் அதிலுள்ள ஊத்தையும் மணமும் உங்கள் பொக்கற்றை நாறடித்துவிடும் (இங்கூ வந்ததும் எறிய வேண்டியது தான், பின்னை அதைக் கொண்டு இனிப்புக்.கூட வாங்கும் பெறுமதியில்லை)

3) விமான நிலையத்துக்குள் நுழையும் போது சூடு சுறணையில்லாமல் வாங்கோ.

4) வழியனுப்ப வருபவர்களை விமானம் புறப்படுமட்டும் அங்கேயே நிற்க்கச் சொல்லுங்கோ

5) உள்ளே மொபைல் போன் மிக அத்தியாவசியம்.

அன்று மட்டும் நான் தனியாக விமான நிலையம் போயிருந்தால் அம்போதான் !!!!!!!!!!!

chinnapiyan said...

அருமை . படிக்க சுவாரஷ்யமாக இருந்தது . மேலும் எழுதுங்கள். நன்றி. வாழ்த்துகள்.

ஃபஹீமாஜஹான் said...

அடடா, இரவோடிரவாக இலங்கை வந்து போயிருக்கிறீங்கள்.



"ரேடியோஸ்பதி வலையினுல் உள்நுழையமுடியவில்லை நீண்டநாட்களாக ஒரே வலிப்பு வந்தவன்போல மீண்டும் மீண்டும் சுற்றுகின்றது கொஞ்சம் சரி செய்வீர்களா! நட்புடன் தனிமரம்!"

பிரபா,எனக்கும் அப்படித்தான் இருந்தது. நான் எனது கணினியில் ஏதோ பிரச்சினை என நினைத்தேன்.

anandrajah said...

அடடா.. ஆரம்பமே தடாலடியா இருக்கே..!! அதும் பயண நாள் குறைப்பு.., கட்டிக்கொறிக்கல அந்த ஏஜென்ட்ட..! ரம்புட்டான் பழங்கள் குவியல் படத்தை சேர்த்திருக்கலாமே ..!! எதையுமே ப்ளான் பண்ணி செய்தாலும் சில சமயங்களில் இப்புடி மற்றவர்களினால் சொதப்பிவிடவும் செய்கிறதே ..! அடுத்த வரைவுகளில் நிறைய கண்ணுக்கினிய நிழற்ப்படங்களையும் இணைப்பீர்கள் என காத்திருக்கிறோம்..!

கானா பிரபா said...

அறிவுக்கரசு சார்

கண்டிப்பாகக் கொடுக்கிறேன் நன்றி ;)

amas said...

இலங்கை பயணம் பற்றி எழுதிவிட்டீர்களா? நான் தான் படிக்கவில்லையா? தேம்ஸ் நதி புகைப்படம் அருமை, உங்கள் பதிவைப் போலே :-)//

இலங்கையில் நின்றது பாதி நாள் தான் ;)


இளா மாம்ஸ்

அங்கே சுற்ற இடமில்லை, விமான நிலையப்பகுதி ;)


ரசனைக்காரன்

எனி காமடி கீமடி :)))

கானா பிரபா said...

தனிமரம் said...

பிரபா அண்ணா ரேடியோஸ்பதி வலையினுல் உள்நுழையமுடியவில்லை நீண்டநாட்களாக ஒரே வலிப்பு வந்தவன்போல மீண்டும் மீண்டும் சுற்றுகின்றது கொஞ்சம் சரி செய்வீர்களா! நட்புடன் தனிமரம்!//

இப்போது பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் சகோதரா

கானா பிரபா said...

வந்தி

நல்ல அனுபவம் போல


கலை

உங்கள் நிரம்பிய அனுபவம் எமக்குப் பாடம் ;)

சின்னப்பையன்

தொடர்வேன்

சகோதரி ஃபகீமா ஜகான்

இப்போது பாருங்கள்


ஆனந்த்ராஜ்

வாகனத்தில் போனதால் படம்பிடிக்க அவகாசம் கிட்டவில்லை

சயந்தன் said...

இலங்கை விமான நிலையப்படங்கள் ஏன் போடவில்லை :) :)