"நம்ம தமிழங்கள இப்பிடிக் கஷ்டப்படுத்துறவங்க நல்லாவே இருக்கமாட்டாங்க, பாருங்க" இப்படிச் சொன்னவர் Chungking Mansions பகுதியில் இருக்கும் ஹோட்டல் சரவணாவில் உணவு பரிமாறும் அந்த தஞ்சாவூர்க்கார முதியவர். Hong Kong இற்குப் பயணப்படும் போது அங்குள்ள இந்தியர்களது வாழ்வியலின் ஒரு பரிமாணமாக, அவர்களது வியாபார ஸ்தலங்களைச் சென்று பார்வையிட வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு உதவியாக இருந்தவர் நண்பர் மாயவரத்தான். Chungking Mansions பகுதிக்குச் செல்லுங்கள் அந்த இடத்தில் நிறைய உணவுக் கூடங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனையாகும் கடைகளை இந்தியர்களே நடத்துகின்றார்கள் என்று என் பயணத்துக்கு முன்னதாகவே சொல்லி வைத்திருந்தார்.
Tsim Sha Tsui என்ற ரயில் நிலையத்தில் இறங்கி Nathan Road என்ற வழிப் பக்கமாக நடந்தால் சில நொடிகளில் எதிர்ப்படுகின்றது Chungking Mansions.
அந்தக் கட்டிடத் தொகுதி 17 அடுக்குகளைக் கொண்டது. அந்தக் கட்டிடத்தில் சீன, இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடியிருப்புக்கள் மேலே இருக்க, கீழே இருக்கும் இரண்டு அடுக்குகளை நிறைக்கின்றன இந்திய உணவங்கள், மற்றும் தொழில் நுட்ப, இலத்திரனியல் உபகரணங்கள் விற்கும் கடைகள். சீனர்களது வியாபார ஸ்தலங்கள் இருந்தாலும் அங்கே பெரும்பான்மையாக நிறைந்திருப்பது இந்தியர்களது கடைகளே.
வட இந்திய உணவகங்களோடு ஒன்றிரண்டு தென்னிந்திய உணவகங்கள் இருந்தாலும், "ஹோட்டல் சரவணா" என்ற தமிழ்ப்பெயரைத் தாங்கிய ஹோட்டல் தென்படவே. அந்த உணவகம் நோக்கிச் சென்றேன். ஒரு முதியவர் வாங்க தம்பி என்று சொல்லியவாறே இருக்கையைக் காட்டுகிறார். உணவுப்பட்டியலில் இருந்து "வெஜிடேரியன் தாலி மீல் வாங்கிக்குங்க, நல்ல சப்பாத்தி சுட்டுக் கொடுப்பாங்க" என்று அவரே பரிந்துரைக்க நானும் அதையே சொல்லி விட்டு அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
"நான் தஞ்சாவூர்க்காரன் தம்பி, நீங்க எந்தப்பக்கம்?" என்று அவர் கேட்க
"நான் சிலோன் ஐயா"
"ஓ சரி சரி, ராஜபக்க்ஷ ஏதாச்சும் பண்றானா"
"இன்னும் ஒண்ணும் பண்ணல ஐயா" இப்படி நான் சொல்லவும் அதற்கு அந்த முதியவர் சொன்ன பதிலைத் தான் முதல் பந்தியில் சொல்லியிருக்கிறேன். அவர் அப்படிச் சொன்னதும் உண்மையில் நெகிழ்ந்து போனேன். எங்கோ இரண்டு மூலைகளில் இருந்து வந்து இன்னொரு அந்நிய தேசத்தில் இரண்டு தமிழர்களாக நாம் இருவரும் நம் மனப்பாங்கை அந்த நிமிடங்கள் பகிர்ந்த கணங்கள் மறக்கமுடியாதவை.
ஹோட்டல் சரவணாவில் சாப்பிட்டுவிட்டுக் கடைகளைச் சுற்றிப் பார்க்கின்றேன்.
ஒரு தமிழரின் நாணய மாற்று நிறுவனம், கண்ணாடிக்குப் பின்னால் " தமிழ் வாழ்க" ;-)
இந்திய மளிகைச் சாமான்கள் விற்கும் கடை, இந்தியத் திரைப்படங்களின் டிவிடிக்கள், இசைத்தட்டுக்கள் விற்கும் கடைகள், சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் மொபைல் போன்களில் இருந்து ஐபாட் வரை நிறைந்திருக்கும் கடைகள் எல்லாப் பக்கங்களிலும் இருக்கின்றன.
000000000000000000000000000000000000000000000000000000000
ஹொங்கொங்கில் சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாகச் செல்லவேண்டிய இன்னொரு இடம் The Peak என்ற இடம். இந்த நாட்டின் உயர்ந்த இடமிது. Hong Kong Central ரயில்வே நிலையத்தில் இருந்து ஒரு பத்து நிமிஷ நடையில் இந்த உச்சிக்குச் செல்லும் ட்ராம் வண்டிச் சேவையைப் பிடிக்கலாம். இரவு 12 மணி வரை தொடர்ந்து இந்த ட்ராம் வண்டிகள் கீழிருந்து மேலும், மேலிருந்து கீழுமாக ஓடித் திரிகின்றன. ஒரு நாள் மாலை ஏழுமணி வாக்கில் நானும் இந்தப் புதிய அனுபவத்தைப் பெற அங்கு சென்று ட்ராம் டிக்கட்டையும் வாங்கிக் கொண்டு பயணிக்கின்றேன்.
செங்குத்தான பாதையில் பல்லிபோல உரசிக்கொண்டே பயணிக்கும் இந்த ட்ராம் வண்டிகள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து விடாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய வண்டிகளையும் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். அந்தப் பயணத்தின் போது ஹொங்கொங்கின் அழகை ஒவ்வொரு பாகமாகப் பிரித்துக் காட்டிக்கொண்டே பயணிக்கிறது வண்டி. மெல்ல மெல்ல இருள் கவிய, அந்தக் கறுப்பு நிலப்படுக்கை எங்கும் ஒளிரும் வைரங்களை வைத்து இழைத்து போலத் தெரிகின்றது.
உச்சிக்குச் சென்றால் உணவகங்களுடன், இந்த நாட்டுக் கலைச் செல்வங்கள் ஓவியங்களாகவும் கைவினைப்பொருட்களாகவும் விற்பனையாகின்றன. இப்படியான இடங்களில் வழக்கத்தை விடப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே நியாயமான விலையில் கிட்டுகின்றன.
இந்த இடத்துக்குப் பயணித்து உச்சியில் நின்று கீழே இருக்கும் நிலப்பகுதியைக் கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாதைகளில் நின்று இந்த நாட்டின் முழு அழகையும் ஒரே பார்வையில் பார்க்கக் கூடியாக இருக்கின்றது. ட்ராம் வண்டிப்பயணத்தின் டிக்கட்டோடு The Sky Terrace இற்குச் செல்லும் டிக்கட்டையும் வாங்கி வைத்தால் அங்கிருந்து இன்னும் ஒரு அழகான தரிசனத்தைக் காணலாம்.
Madame Tussauds Hong Kong இங்கே அமைந்திருப்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம். மெழுகு சிலைகளில் உயிர்பெற்றிருக்கும் ப்ரூஸ்லீயும், ஜாக்கி சானும் முகப்பில் நிற்கின்றார்கள்.
ஒவ்வொரு பகுதியாக நின்று நிதானித்துச் சுற்றிப்பார்த்து முடிக்க 11 மணியை அண்மிக்கிறது. ஹோட்டல் திரும்பலாம் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு ட்ராமைப் பிடிக்கின்றேன்.
Hong Kong உலாத்தலில் விடுபட்ட இடங்களை இன்னொரு பயணத்தில் கவனித்துக் கொள்ளலாம் என்று மனதைத் தேற்றியவாறு உலாத்தலை நிறைவு செய்கின்றேன்.
Monday, December 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
சூப்பர் எங்க ஊருக்காரங்க நிறைய பேர் அங்கிட்டு இருக்காங்க பாஸ் யாராச்சும் கண்ணுல பட்டாங்களா? :)
வாங்க பாஸ்
உங்கூர்க்காரங்க யாரும் கண்ணில் படல ;)
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீ..அது சரி உங்கள ஒரு படத்துலயும் காணலியே.. என்ன தல காமராவில ஏதும் பிரச்சனயா?
டாஸ்மார்க் கடைய பற்றி எழுதலியே.. நியாயமா? நீங்க ”குடி”மக்களை அவமதிக்கிறீர்கள்...
எப்படி அய்யா இதுக்கொல்லாம் நேரம் கிடைக்கிறது? கில்லாடி தான் நீங்க.
உங்கள் பதிவை இரசித்தேன், வழமை போல.
இதுவரை ஹொங்காங் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. உங்கள் பயணக்கட்டுரை அடுத்த விடுமுறைக்கு ஹொங்காங் செல்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.
நன்றாக எழுதுகிறீர்கள். மிக்க நன்றி.
கலக்குறிங்க தல ;)
Blogger விசரன் said...
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீ..அது சரி உங்கள ஒரு படத்துலயும் காணலியே.. என்ன தல காமராவில ஏதும் பிரச்சனயா? //
அண்ணை
இதுக்கு முந்திய பதிவில் இருக்கிறேனே ;)
நேரம் கிடைப்பதும் கிடைக்காததும் நம் கையிலே ;)
R said...
இதுவரை ஹொங்காங் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. உங்கள் பயணக்கட்டுரை அடுத்த விடுமுறைக்கு ஹொங்காங் செல்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.//
ஹொங்கொங் இற்கு நீங்கள் ஒரு வாரம் பயணித்தாலே போதும் முழுமையாக அந்த நாட்டை அனுபவிக்கலாம், மிக்க நன்றி உங்கள் வருகைக்கு
தல கோபி
வருகைக்கு நன்றி ;)
வண்ணப்டங்களுடன் அதே வழமையான கலக்கல் பதிவு பிரபா. நானும் ஹொங்காங் செல்ல யோசித்ததில்லை அனால் இப்போது செல்ல யோசிக்கிறேன். அழகான இடம் போல் தெரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி உங்களுக்கு.
விக்ரோறியா மலைச் சிகரம் (Peak) பயணத்தன்று வருகிறேன் என்று கூறியும், குறிப்பிட்ட நேரத்திற்கு வரமுடியாமல் போனது கவலைத்தான்.
ஹொங்கொங்கில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளன. அநேகமான இடங்களை பகல் நேரங்களிலேயே பார்க்க முடியும். அடுத்தமுறை வாருங்கள் பார்க்கலாம்.
"சரவணா உணவகம்" இருப்பதும், தமிழில் பெயர் பலகை இருப்பதும் உங்களின் பதிவின் பின்னரே தெரிந்துக்கொண்டேன். அத்துடன் நேற்று சென்றும் பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. இங்கே தமிழர் கடைகள் உள்ளன. தமிழில் பெயர் பலகையை இப்பொழுது தான் பார்க்கிறேன்.
சுங் கிங் மென்சனில் பாக்கிஸ்தானியர்களின் ஆதிக்கமே அதிகம். பாக்கிஸ்தானியர்களுக்கும் வடயிந்தியர்களுக்கும் இடையில் திகழும் ஒற்றுமையை அங்கே பார்க்கலாம். அவ்வாறான ஒற்றுமை தென்னிந்தியர்களுடன் இல்லை என்றே கூறவேண்டும். தென்னிந்தியத் தமிழர்களும் தமது உணவகங்களிற்கு "Lahore Past Food", "Bismillah Fast Food" என்றே வைத்துள்ளனர்.
இந்தியாவில் பாபர் மசூதி கலவரத்தின் போது, வடயிந்திய இஸ்லாமியரும், பாக்கிஸ்தானியரும் இணைந்து இந்துக்களின் கடைகளை தீ மூட்டியமையும் கூட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக அறிய முடிகிறது.
சுங் கிங் மென்சன் தொடர்பில் நிறையவே விடயங்கள் கூறலாம். முன்னர் இரண்டாம் மாடிக்கு மேலுள்ளவை எல்லாம் வீட்டு குடியிருப்புத் தொகுதிகளாக இருந்தாலும், தற்போது அவற்றில் அதிகமானவை உணவகங்களாகவும், தங்குமிடங்களாகவும் மாறிவிட்டன. உலகில் எல்லா புறங்களில் இருந்தும் சனம் இங்கே வரும். காரணம்: எல்லாவித உணவு வகைகளும் இங்கே உண்டு. 100 டொலரில் இருந்து தங்குமிடங்களும் இங்கே தான் உள்ளன. 4 ஆம் மாடியில் "South Indian Food" எனும் சிறப்பான உணவகமும் உண்டு.
தமிழர் ஹொங்கொங் எங்கும் சிதறி வாழ்ந்தாலும், ஒன்று கூடும் இடம் இந்த சுங் கிங் மென்சன் கட்டிடம் தான்.
உங்கள் எழுத்து நடை வாசிக்கும் ஆவலை உண்டு பன்னுகின்றது.
நன்றி!
அன்புடன்
அருண் HK Arun
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மங்கை அக்கா
வணக்கம் அருண்
அடுத்தமுறை விட்ட இடங்களைப் பார்ப்பேன் உங்கள் உதவியோடு, மிக்க நன்றி
வணக்கம் கானா பிரபா
உங்கள் கூற்றுக்கு இணங்க நீண்ட காலத்திற்கு பின் மீண்டும் விக்கிப்பீடியாவில் சுங்கிங் மென்சன் கட்டடம் எனும் கட்டுரையை எழுதியுள்ளேன். சுங்கிங் மென்சன் தொடர்பான முழுமையான தகவல்களும் அங்கே உள்ளடக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன். இன்னும் நிழல் படங்கள் இணைக்க வேண்டியுள்ளன.
உங்கள் "ஹொங்கொங்கில் ஒரு குட்டி இந்தியா" ஆக்கத்திற்கும் இணைப்பு வழங்கியுள்ளேன்.
நன்றி!
அன்புடன்
அருண் HK Arun
இப்போது தான் பார்த்தேன் விரிவாகவும் சிறப்பாகவும் தந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி அருண்
கலக்கீட்டீங்க
அன்பின் கானா பிரபா..
ஹாங்காங்கை அப்படியே சுற்றி காண்பித்து விட்டீர்கள்..
உங்களைப் பார்க்க ஹாங்காங்க் நான் வந்தா அது உங்களோட செலவு...
இல்ல
ஹாங்காங்க் நான் வந்தா, உங்களை பார்க்க வருவது என்னோட செலவு...
சரி விடுங்க... காதலர் தின வாழ்த்துக்கள்.. கானா பிரபா...
நட்புடன் இளங்கோவன், சென்னை
வருகைக்கு நன்றி தமிழ்த்தோட்டம்
அன்பின் இளங்கோவன்
உங்களுக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் ;-)
ஒருமுறை ஹாங்காங் போய்ப்பாருங்க
நன்றாக இருக்கிறது இந்தப்பதிவு
வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக
வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு.....
Post a Comment