Social Icons

Pages

Tuesday, December 14, 2010

Hong Kong இல் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு

இன்றைய வலையுலகச் சூழல் பல கோப்பெருஞ்சோழர்களையும், பிசிராந்தையார்களையும் உருவாக்கியிருக்கின்றது. அப்படி ஒரு முகமறியா நட்புத் தான் இதுநாள் வரை எனக்கும் Hong Kong அருண் இற்கும் வாய்த்திருந்தது. ஈழத்து உறவு என்ற வகையில் பல சந்தர்ப்பங்களில் எனது குணாதிசியத்தோடு பொருத்திப் பார்க்கும் நண்பர்களில் இவரும் ஒருவர். Hong Kong செல்வதற்கு முதல்நாள் தான் இவருக்கு ஒரு மின்னஞ்சல் இட்டிருந்தேன். உடனேயே தொடர்பிலக்கத்தோடு பதில் வந்திருந்தது. அங்கு சென்ற மூன்றாம் நாள் அருண் ஐச் சந்திக்கும் சந்தப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இருந்த Toast Box என்ற தேனீர்ச்சாலையில் தான் சந்திக்க ஏற்பாடானது. அருண் உடன் அவருடைய நண்பர், மட்டக்களப்பைச் சேர்ந்த குமாரும் இணைந்து கொண்டார். வலையுலக நட்பு வாயிலாக ஏற்கனவே ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமானதால் அருணைச் சந்திக்கும் போது முன்னர் சந்தித்துப் பிரிந்த நண்பரை நெடு நாளுக்குப் பின் சந்தித்த உணர்வே ஏற்பட்டது.

தான் சந்திக்கும் முதல் வலைப்பதிவர் சந்திப்பு இதுதான் என்றார் அருண். எனக்கோ Hong Kong இல் முதல் உலாத்தலிலேயே ஒரு வலைப்பதிவர் சந்திப்பும் இணைந்த திருப்தி. நான் நினைக்கிறேன் Hong Kong இல் நடந்த முதல் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு இதுவாகத் தான் இருக்கும்.

கொழும்பில் இந்த ஆண்டில் சந்தித்த தாயக நண்பர்களுடான வலைப்பதிவர் சந்திப்புக்கு அடுத்து Hong Kong அருணை அதே உணர்வோட்டத்தோடு சந்திக்க முடிந்தது. வலையுலகத்தைக் கடந்து நமது தாயகம் என்று சுழன்று பாரத்தை ஏற்றி வைத்த பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம். அருணோடு வந்த குமாரும் சகஜமாக Hong Kong இல் நம்மவர் வாழ்வைப் பற்றிச் சொல்லி வைத்தார்.

படத்தில் இடமிருந்து வலம்: குமார், அருண், நான்

பிரித்தானியர் ஆளுகையில் இந்தியர்கள் பலர் Hong Kong இற்கு வந்து குடியேறியிருக்கின்றார்கள். அவர்களின் தலைமுறைகள் இப்போது ஒரு பக்கம். அதைத் தவிர தொழில் நிமித்தமாக வந்து சேர்ந்த இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என்று ஒரு பக்கம். இவர்களைத் தவிர உலகெங்கும் சிதறுண்டு வாழ்வைத் தேடி வாழ்வைத் தொலைத்த ஈழத்தமிழர்கள் என்று இன்னொரு பக்கமாக இருக்கின்றார்கள். மேற்கத்தேய நாடுகள் பலவற்றில் நிரந்தர வதிவுடமை பெற்று ஓரளவு நிலையான எதிர்காலம் பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்க, கீழைத்தேய நாடுகளில் இருக்கும் இறுக்கமான குடிவரவு நடைமுறைகளால் எதிர்காலம் தேடி நிதமும் காத்திருக்கும் அகதிகளில் இவர்களும் சேர்த்தி. ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கின்றார்கள், எப்போதாவது ஒரு நம்பிக்கை விடிவெள்ளி வருமென்று. பின்னொரு நாளில் எமது தாயக உறவுகள் சிலரைச் சந்தித்தேன், ஓவ்வொருவருக்குப் பின்னாலும் விதவிதமாய் அறுநூறு பக்க நாவல் அளவுக்கு எழுதக்கூடிய கதைகள் இருக்கும்.

நண்பர் அருண், குமார் ஆகியோரோடு மாலை ஏழரை மணி வாக்கில் அமைந்த சந்திப்பு பத்து மணியைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. இன்னொரு தினம் சந்திக்க வேண்டும் என்று பிரிந்து கொண்டோம் அப்போது.


Hong Kong இல் தங்கியிருந்த ஐந்தாம் நாள் மாலை மீண்டும் அருணைச் சந்திக்க ஆவல் கொண்டு அழைத்தேன். அதே உற்சாகமான குரலில் கண்டிப்பாக வருகின்றேன் என்றார். வேலை முடிந்து ஹோட்டலுக்கு திரும்பும் போது வரவேற்புப் பகுதியில் காத்திருந்தார்.

Hong Kong Central புகையிரத நிலையம் வரை ரயிலில் பயணித்து அங்கிருந்து Star Ferry மோட்டார் படகு மூலம் Kowloon பகுதியை வந்தடைந்தோம். அந்த இடத்தில் காலாற நடக்கும் போது எதிர்ப்பட்டது Harbour City. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்காக இப்போதே களை கட்டத் தொடங்கியிருந்தது அந்தப் பகுதி. எங்கும் வண்ண விளக்குகள்,வித விதமான அலங்காரங்களாக ஏதோ புராண திரைப்பட செட் மாதிரி இருந்தது அந்தப் பகுதி. திருவிழாக் கூட்டமாய் எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கிறார்கள் அவ்வூர் மக்களும் வெளிநாட்டு யாத்திரீகர்களும்."இந்த இடத்துக்கு முன்னால் வந்திருக்கிறேன், அதோ தெரிகிறதே மரம், அது மட்டும் இருந்த பகுதி இப்போது அந்த மரத்தை வெட்டாமல் அதைச் சுற்றியே அழகான கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள் பாருங்கள்" என்று இந்த நாட்டினரின் இயற்கைச் செல்வம் குறித்த கவனத்தைச் சிலாகிக்கையில் எனக்கோ எம் தாயகத்தில் சொந்தத் தகப்பனை உயிரோடு சுவரில் மெழுகி மூடிய பரம்பரையின் கதை ஞாபகத்துக்கு வந்தது.

அந்தப் பகுதியின் துறைமுகப்பகுதியை ஒட்டி கூட்டம் கூடத்தொடங்கியது. "இந்த இடத்தில் ஒவ்வொரு நாளும் இரவு 8.10 மணிக்கு லேசர் விளக்குகளின் ஜால விளையாட்டு இடம்பெறும்" என்று அருண் சொல்லி சிறிது நேரத்தில் மெல்ல ஒளிக்கற்றையை கடலின் மறு அந்தத்தில் இருந்த பெருங்கட்டடத்தின் வாயில் இருந்து செலுத்தியது. மெல்ல மெல்ல கலர் ஜிகினாத் துணிகளைச் சுழற்றி ஆட்டுமாற்போலக் கடலின் நடுவிலே லேசர் ஒளி ஆட்டம் நடந்து பார்வையாளர்களைக் கவர்ந்தது.லேசர் ஆட்டம் முடிந்ததும், அங்கிருந்து மெல்ல நகர்ந்தால் சில அடி தூரத்தில் சினிமா உலகின் நினைவுச் செதுக்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. Hong Kong இன் பிரபலமான திரை நட்சத்திரங்களின் கை அடையாளத்தை அவர்களைக் கொண்டே பதிப்பித்து நடைபாதையில் பொருத்தியிருக்கின்றார்கள். Hong Kong இற்கு வெளியே ஹாலிவூட் வரை தடம்பதித்த ஜாக்கிசானின் உடைகளை விற்கும் கடை, ப்ரூஸ்லீயின் நினைவுச் சிலை என்று தொடர்கின்றது. அந்த இடமே ஒரு குட்டி சினிமா நகரில் நுழைந்த பிரமையை ஏற்படுத்த இவையெல்லாவற்றையும் ரசித்தவாறே நடக்கின்றோம். குளிர்காற்று துன்புறுத்தாமல் இதமாக வீசுகின்றது அந்த இரவில்.

Hong Kong இன் உயர்ந்த கட்டிடம் இது

16 comments:

DrPKandaswamyPhD said...

Good Experience.

கார்த்தி said...

சொல்லியிருந்தா நாங்களும் வந்திருப்பமில்ல!

கோபிநாத் said...

வழக்கம் போல கலக்கல் தல...படங்களும் பதிவும் ;)

ஆயில்யன் said...

ஓரே கலர்ஃபுல் போட்டோஸ் :)

அவுட் ஆப் ஃபோகஸ்ல don't forget KICKAPOO joy joice என்னாது டிரை செஞ்சீங்களா?


அனேகமா இந்த ஐட்டம் அக்காமாலா கப்சி மாதிரியா பாஸ் ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

photos ellam super :)

நெல்லைக் கிறுக்கன் said...

படங்கள் அருமை தல. டிவிட்டர், பேஸ்புக் தளங்கள் எல்லாம் சீனா ஹாங்கங்கிலும் தடை செய்திருக்கிறதா?

yarl said...

படங்களும் பதிவும் அருமை பிரபா.

கானா பிரபா said...

DrPKandaswamyPhD said...

Good Experience.//

வருகைக்கு நன்றி


கார்த்தி

என்ன கொழும்பிலிருந்து வந்திருப்பியளோ, அதால தான் சொல்லேல்ல ;)


தல கோபி

வருகைக்கு நன்றி ;)

HK Arun said...

கானா பிரபாவை சந்தித்தது இது தான் முதல் முறை என்றாலும், சந்தித்தப் பின்னர் அவ்வாறான ஓர் எண்ணம் என்னிடம் இருக்கவில்லை. மாறாக சிறு வயதில் ஒன்றாய் ஒரே பள்ளியில் கல்வி கற்று, பலமுறை பார்த்து பழகிய நண்பர் ஒருவரை மீண்டும் சந்தித்தது போன்ற உணர்வே என்னில் இருந்தது.

அத்துடன் இது தான் எனது முதல் வலைப்பதிவர் சந்திப்பாகவும், நான் சந்தித்த முதல் வலைப்பதிவர் கானா பிரபா என்பதும் கூட மறக்க முடியாக நிகழ்வாகும்.

Avenue of Star இல் சுற்றித்திருந்தமை, பின்னர் Yuen Long (ஹொங்கொங் தீவில் இருந்து 40 கிலோ மீட்டர்) சென்றப் போது, தொடருந்து இடைமாற்றகத்தை தவற விட்டுவிட்டமை, தொடருந்தகத்தின் ஊடே கனதூரம் நடக்க வேண்டியேற்பட்டமை, தாயக உறவுகளை சந்தித்தமை எல்லாம் பசுமையாக மனதில் மனப்பதிவுகளாகியுள்ளன.

மீண்டும் சந்திப்போம்!

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

HK Arun said...

@நெல்லைக் கிறுக்கன்

//டிவிட்டர், பேஸ்புக் தளங்கள் எல்லாம் சீனா ஹாங்கங்கிலும் தடை செய்திருக்கிறதா?//

"ஹொங்கொங்" சீனாவின் சிறப்பு நிரவாகப் பகுதியில் ஒன்றாக உள்ளதே தவிர, சீனாவின் அரசியல் கொள்கைகளுக்கும், ஹொங்கொங்கின் அரசியல் கொள்கைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உண்டு.

குறிப்பாக சீனா கம்யூனிசக் கொள்கையை கொண்டுள்ள அதேவேளை, ஹொங்கொங் திறந்த பொருளாதாரக் கொள்கைகளையுடன், முதாளித்துவ ஆட்சிமுறையிலேயே (1997 இல் பிரித்தானியர் வெளியேறியப் பின்னரும்) தொடர்ந்து உள்ளது. அத்துடன் Sino-British Joint Declaration எனும் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டமைக்கு அமைவாக 50 ஆண்டுகளுக்கு (1997-2047) பிரித்தானிய சட்டங்கள் தொடர்ந்து இருத்தல் வேண்டும் எனும் சட்ட அமுலாக்கமும் உண்டு.

எனவே டிவிட்டர், பேஸ்புக் போன்ற எந்தத் தளத்திற்கும் தடைகள் இங்கில்லை.

நன்றி

விசரன் said...

நல்லாத்தான் இருக்கு. அடுத்த முறை நோர்வேக்கு வாங்களேன்.

கானா பிரபா said...

don't forget KICKAPOO joy joice என்னாது டிரை செஞ்சீங்களா? //

ஆயில்ஸ்

அதை பாவிக்கல :(

வருகைக்கு நறி முத்துலெட்சுமி

தல நெல்லைக்கிறுக்கன்

உங்களுக்கான பதிலை நண்பர் அருண் கொடுத்திருக்கிறார்

வருகைக்கு நன்றி மங்கை அக்கா

அருண்

மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி, உங்களைச் சந்தித்த நாட்களை மறக்க மாட்டேன்

விசரன் அண்ணோய்

நோர்வேக்கு றிக்கற் அனுப்புங்கோ வாறன்

நெல்லைக் கிறுக்கன் said...

தகவல்களுக்கு நன்றி அருண்...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புயகைப்படங்கள் அனைத்தும் அசத்தல் . பதிவர் சந்திப்பிற்கு என் வாழ்த்துக்கள்

J.P Josephine Baba said...

ஹாங்காங் சென்று வந்தது போல் இருந்தது. அழகான அருமையான பதிவு. என்று நெல்லைக்கு வரவுள்ளீர்கள்.

குசும்பன் said...

துபாய் பக்கமும் வாங்க பாஸ்!