Social Icons

Pages

Sunday, October 18, 2009

பாங்கொக்கில் காலடி வைத்தேன்

தாய்லாந்துக்கு விசா தேவையா இல்லையா என்ற குழப்பத்துடன் நான் இருக்க பாங்கொக்கின் ஸ்வர்ணபுரி விமான நிலையத்தில் தன் கால்களைப் பதித்து சிங்கப்பூர் விமான சேவையின் இயந்திரப் பருந்து. விமான நிலையத்துக்குள் புகும் போது குடிவரவுப் பகுதிக்குள் நுழைய முன்பே எல்லோரையும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கமரா கொண்டு படம் பிடிப்பது புதுமையாக இருக்கின்றது. குடிவரவுச் சீட்டில் உங்கள் வருஷ வருமானம் எவ்வளவு என்றெல்லாம் ஏன் கேட்கிறார்கள், கொழும்பில் கருணா குழு காட்டிய கப்பம் கைவரிசை மாதிரியா? என்றெல்லாம் ஆயிரம் கேள்விக்கணைகள் மனதில் தோன்றி மறையவும் குடிவரவு அதிகாரிக்கு பக்கம் வரவும் சரியாக இருந்தது. துண்டுச் சீட்டைப் பார்த்து விட்டு எல்லாம் சரி என்று விட்டு அவருக்குப் பக்கமாக இருக்கும் இன்னொரு கமரா மூலம் படம் பிடிக்கிறார். அட, மீண்டும் படமா? ஸ்ஸ்சப்பா

மேலே படங்கள் பாங்கொக் ஸ்வர்ணபுரி விமான நிலையத்தினுள் இருக்கும் " நடுவே கிருஷ்ண பரமாத்மா நிற்க தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் மந்தாரமலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலைக் கடையும் காட்சி

விமான நிலையத்திற்குள் சுற்றுலா ஏற்பாடுகளைச் செய்து தருவதற்கான முகவர்கள் கடை விரித்திருக்கிறார்கள். எட்டிப்பார்த்தேன், City & Temple tour ஒரு நாள் சுற்றுலா கண்ணில் தென்பட அதில் பதிவு செய்து கொண்டேன். பின்னர் தான் தெரிந்தது இப்படியான முகவர்களிடம் பதிவு செய்வது எவ்வளவு முட்டாள் தனம் என்று, அதை அடுத்த பதிவில் சொல்கின்றேன். Airport Taxi ஐ வாடகைக்கு அமர்த்தும் பகுதிக்குச் சென்று பதிவு செய்து துண்டுச் சீட்டை வாங்குறேன். நான் போகும் ஹோட்டலுக்கு 500 தாய் பாட் இற்கு மேல் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார்கள். நானும் சரி என்று விட்டு டாக்சியில் அமர்கின்றேன்.

டாக்சிக்காரர் பேச்சுக் கொடுத்தவாறே நட்புப்பாராட்டி வந்தவர் ஒரு பத்து நிமிடம் கழிந்த பயணத்தின் பின் 800 தாய் பாட் கட்டணமாக கொடுக்க வேண்டும் என்று பிட் ஐப் போட்டார். "இல்லையில்லை நான் விமான நிலையத்தில் வைத்து ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டேன். 500 பாட் இற்கு மேல் கொடுக்க வேண்டாம் என்றார்கள்" என்று சொல்லவும்
அவனோ "இன்று சரியான மழை வெள்ளம், கட்டணம் அதிகம்" என்றான். எனக்குப் புரியவில்லை. பெரும் நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருக்கிறோம், மழை வெள்ளத்தின் சுவடே இல்லை என்னடா இவன் என்னை வச்சு காமடி பண்றானே என்று எரிச்சலோடு, "500 பாட் இற்கு மேல் அதிகம் இல்லை" என்று பேச்சை வெட்டினேன். ஒருவாறு 550 பாட் இல் வந்து நின்றது பேரம். அன்று ஆரம்பித்த பேரம் பேசிப் பயணிக்கும் அனுபவங்கள் தாய்லாந்தில் இருந்து விடைபெறும் நாள் வரை தொடர்ந்தது. யோசித்துப் பார்த்தால் இந்தப் பேரம் பேசி குறைக்கும் தொகை வெளிநாட்டு செலாவணியோடு ஒப்பிடும் போது ஒரு டாலரும் கூட இருக்காது. ஆனால் ஏனோ ஆசிய நாடுகளுக்குப் போனால் இந்தப் பேரம் பேசும் வியாதி தானாக ஒட்டிக் கொண்டு விடுகிறது.

நான் முந்திய பதிவில் சொன்னது போல ஒரு நல்ல ஹோட்டலை தங்குமிடமாகத் தெரிவு செய்திருந்தாலும் அதன் அமைவிடம் தான் பெரும் சிக்கலைக் கொண்டு வந்திருந்தது. அதாவது அந்த ஹோட்டல் ஒரு சாலைக்குக் குறுக்காகப் போகும் சின்னச் சந்து வழியாகத் தான் தன்னுடைய நுழைவிடத்தை வைத்திருந்தது. ஆனால் தன் விலாசத்தை மட்டும் குறித்த சாலையாகக் காட்டி இருந்தது. விமான நிலையத்தில் இருந்து பயணித்த டாக்சிக்காரர் குழம்பிப் போய் ஒருவாறு இடத்தைப் பிடித்து டாக்சியை நிறுத்தினார். ஆனால் தொடந்த நாட்களில் இந்த ஹோட்டலுக்கு நான் பயணித்த டாக்சி ஒவ்வொன்றுக்கும் வழிகாட்டிக் களைத்தே போனேன்.

Lamphu Tree House இதுதான் நான் தேர்தெடுத்த தங்குமிடம். நடுத்தர கட்டணத்தில் 1,850 பாட் (55 US dollar ) இலிருந்து கிடைக்கின்றது தங்கும் அறைகள். தாய்லாந்தின் பாரம்பரிய மரவேலைப்பாடுகள் கொண்ட கட்டிட அமைப்பில் தங்குமிடச் சூழலிலும் அறைகளிலும் தாய்லாந்தின் மரவேலைப்பாடுகள் சிற்பங்களாக ஜொலிக்கின்றன. இணையப் பாவனைக்கு அரை மணி நேரத்திற்கு 30 பாட் ஐ அறவிடுகின்றார்கள். நீச்சல் அரங்கம் ஒன்று உண்டு.

இன்னொரு சிறப்பு காலை உணவு buffet முறையில் பாணில் ஆரம்பித்து தாய்லாந்தின் தனித்துவ உணவு வகைகள் சைவ அசைவங்களாக நிறைந்திருக்கும். காலை உணவுக்கான தனிக்கட்டணம் ஏதுமில்லை. அறை வாடகைக்குள் அடங்குகின்றது. விருந்தாளிகளாக அமெரிக்கர்களும் ஒரு சில அவுஸ்திரேலியர்களும் தென்பட்டார்கள். இந்தத் தங்குமிடத்தின் முகாமையாளர் கனிவான சுபாவம் கொண்டவராக , தனது ஹோட்டலில் தங்கி இருப்பவர்கள் கேட்கும் உதவிகளுக்கு அள்ளி அள்ளி ஆலோசனைகளைக் கொடுக்கின்றார். அவர்கள் போக வேண்டிய இடங்களைப் பரிந்துரை செய்கின்றார். கூடவே அங்கிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணிப்பதற்கு அண்ணளவாக எவ்வளவு செலவாகும் என்பதை விரல் நுனியில் வைத்திருந்து சொல்கின்றார். இதனால் ஒரு வாடகைக் காரையோ, ருக் ருக் இனையோ பிடித்துப் பேரம் பேச இலகுவாக அமைந்து விடுகின்றது.

அடுத்த நாட்காலை 9 மணிக்கு ஏற்கனவே விமான நிலையத்தில் ஒழுங்கு செய்த சுற்றுலாப் பணியகத்தின் வழிகாட்டி வர வேண்டும். காலை 8.30 மணிக்கே தயாராக இருக்கிறேன். மணி 9.05 ஐயும் தாண்டி 9.10 க்குள் நுழைகிறது. சலித்துப் போய் தங்கிருந்த ஹோட்டலில் வரவேற்புப் பகுதியில் இருக்கும் பெண்ணிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவள் அந்தச் சுற்றுலாப் பணியகத்தைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டு என்னிடம் "வழிகாட்டி வழி மாறி எங்கோ போய்விட்டாராம், இப்போது வருகிறாராம்" என்றாள்.

வழிகாட்டிக்காக காத்திருக்கிறேன்.

12 comments:

ஆயில்யன் said...

பாற்கடலை கடைவது தொடர்பாக கம்போடியா உலாத்தலில் கூட சொல்லியிருந்தீர்களே! அல்லது இங்கும் அப்படியான இடம் இருக்கிறதா?

ஆயில்யன் said...

ம்ம் ஹோட்டல் ஈர்த்துடுச்சு போல போட்டோக்கள் எல்லாம் பார்த்தால் ஹோட்டலுக்கு ஒரு வெளம்பரம் மாதிரியே இருக்கு! நோட் பண்ணி வைச்சுக்கிடறேன்! :)

சி தயாளன் said...

உந்த பாற்கடல் கடையும் காட்சிப்படுத்தல்கள் நான் நோர்வேக்கு போகும் போது, பாங்கொங் ட்ரான்சிட்டில் பார்த்தனான். இன்னுமா வைத்திருக்கிறார்கள்...? :-))

தாய்லாந்து விமான நிலைய தீர்வையற்ற கடைகளில் சுத்துமாத்து வேலை நடப்பதாக பிபிஸில் கூட செய்தி இருந்தது. இதற்கு பயந்தே நான் கடைப்பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை :-(

கோபிநாத் said...

\\"வழிகாட்டி வழி மாறி எங்கோ போய்விட்டாராம், இப்போது வருகிறாராம்" என்றாள்.\\

தல வழிகாட்டி மாதிரி நீங்களும் வழி மாறி போயிடாதிங்க தல ;)

மாயவரத்தான் said...

அந்த வழிகாட்டி கூட சீக்கிரம் வந்திடுவான் போலருக்கு. நீங்க என்னடான்னா 'ஜூனூன்' மாதிரி தொடரை ரொம்ப இழுக்குறிங்கப்பா!

கானா பிரபா said...

ஆயில்யன் said...

பாற்கடலை கடைவது தொடர்பாக கம்போடியா உலாத்தலில் கூட சொல்லியிருந்தீர்களே! அல்லது இங்கும் அப்படியான இடம் இருக்கிறதா?//

கம்போடியா, தாய்லாந்தில் இந்து மதத்தின் எச்சங்கள் ஒரே மாதிரி இருக்கும் பாஸ், கம்போடியாவிலும் இதே போன்ற பிரமாண்டமான பாற்கடல் கடையும் காட்சி காணலாம்,

கானா பிரபா said...

மாயவரத்தான்.... said...

அந்த வழிகாட்டி கூட சீக்கிரம் வந்திடுவான் போலருக்கு. நீங்க என்னடான்னா 'ஜூனூன்' மாதிரி தொடரை ரொம்ப இழுக்குறிங்கப்பா!//

;) அடுத்த தாய்லாந்து பயணம் வரை தொடரும் பாஸ்

கிடுகுவேலி said...

பாற்கடல் கடைவதை தத்ரூபமாக சிற்பமாக வடித்திருக்கிறார்கள் போலும்.. பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்...!

Anonymous said...

Whenz the next step?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அருமை!
'ருக் ருக்' என்பது சரியல்ல;
டுக் டுக் - சரி!

நிஜமா நல்லவன் said...

/ ஆயில்யன் said...

ம்ம் ஹோட்டல் ஈர்த்துடுச்சு போல போட்டோக்கள் எல்லாம் பார்த்தால் ஹோட்டலுக்கு ஒரு வெளம்பரம் மாதிரியே இருக்கு! நோட் பண்ணி வைச்சுக்கிடறேன்! :)/

ரிப்பீட்டேய்......

அப்புறம் பாஸ் உங்களை ரொம்ப நாளா தாய்லாந்து உலாத்தல் ஆரம்பித்த இடத்திலேயே விட்டுட்டு வந்திட்டேன்....இன்னைக்கு தான் திரும்ப வர முடிந்தது:))

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி கதியால்

நிஜாம்தீன்

ருக் ருக் என்பதை ஈழ மொழி உச்சரிப்பில் எழுதினேன்

நிஜம்ஸ்

இப்ப தான் படிக்கிறீங்களா ;)