Social Icons

Pages

Sunday, June 15, 2008

Angkor Wat கண்டேன்

அங்கோர் வாட்டின் முகப்புப் பரப்பை நோட்டமிட்டுக்கொண்டே அங்கே தூண்களிலும், வாயில்களிலும் உள்ள சிற்பச் செதுக்கு வேலைப்பாடுகளையும், உடைந்து போன கற்சிலைகளையும் பார்த்துக் கொண்டிருக்க, என் வழிகாட்டி டேவிட் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

கம்போடியாவின் கோயில்களுக்கும், முக்கிய மடாலயங்களுக்கும், சிற்பச் செதுக்கு வேலைகளுக்கும் ஏற்பட்ட அழிவு இயற்கையாக ஏற்பட்டதன்று. இந்த நாட்டின் இந்த அனர்த்தம் ஏற்பட முக்கிய காரணமே மனிதன் தான். அவ்வப்போது நிகழ்ந்த உள்நாட்டு யுத்தங்களும், மாறி மாறி அமைந்த அரசுகளின் மாறுபட்ட மதக் கோட்பாடுகளுமே இந்த அனர்த்தங்களின் மூல காரணி. ஆரம்பத்தில் இந்து அரசிலிருந்து மாற்றம் கண்ட பெளத்த அரசுகளும், பின்னாளில் கம்யூனிச சித்தாந்தத்தில் மதங்களைப் புறந்தள்ளிய பொல்பொட்டின் (Pol Pot) க்மருச் அமைப்பின் அரசுமே இவ்வகையான அழிவின் மூலகாரணிகள்.

தென் கிழக்காசியாவின் செழிப்பும் வளர்ச்சியும் கி.பி முதலாம் நூற்றாண்டில் இருந்தே ஆரம்பிக்கின்றது. மேற்குலகத்திலிருந்து கீழைத்தேய நாடுகள், குறிப்பாக சீனர்களின் வர்த்தக மைய்யமாக இது விளங்கியிருக்கின்றது. சீன, இந்திய வாணிபர்கள் பெருமளவில் இந்தப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். அதில் கம்போடியாவும் அடக்கம். இந்த வாணிபர்களுடன் பயணித்த அந்தணர்கள் மூலம் இந்து மதத்தின் பரம்பலும் இங்கே அதிகரித்தது.

அங்கோர் என்பதற்கு தலைநகரம் அல்லது புனித நகரம் என்று பொருள்படும். கி.பி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை முக்கியமானதொரு நகராக இது விளங்கியிருக்கின்றது. உலகளாவிய ரீதியில் புகழ்பெறும் அங்கோர் வாட் ஆலயம் குறித்த வரலாற்றுத் தகவலைப் பார்ப்போம். இந்த ஆலயம் கி.பி 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இரண்டாம் சூர்யவர்மனால் நிர்மாணிக்கப்பட்டது. இந்த மன்னன் குறித்த தகவல்களை இங்கே முன்னர் இட்டிருக்கின்றேன். அங்கோர் வாட் ஆலயத்தின் பிரமாண்டமும் அதன் உருவாக்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எடுத்துக் கொண்ட சிரத்தையும் பார்ப்போர் கண்களை வியப்பில் ஆழ்த்தும். பிரமிட் வடிவினை ஒத்த மூன்று அடுக்குகளையும், தாமரை வடிவினதான ஐந்து கோபுரங்களையும் தாங்கிய அமைப்பில் இவ்வாலயம் நிர்மாணிக்கப்படிருக்கின்றது. இந்தக் கோபுரங்கள் நிலமட்டத்தில் இருந்து 65 மீட்டர் நீளமானவையாகும்.

இரண்டாம் சூர்யவர்மன் இந்து மதத்தைப் பின்பற்றிய அரசனாவான். எனவே இந்த ஆலயம் ஒரு இந்து ஆலயமாகவே அதாவது விஷ்ணுக்கடவுளுக்காக அவனால் அமைக்கப்பட்டதாகும். பொதுவாகவே இந்திய நாட்டின் கோயில்களின் கட்டிடக்கலையையும் கிரேக்கக் கட்டிடக்கலையையும் கலந்த ஒரு அமைப்பிலேயே இவ்வாலயம் இருக்கின்றது. அங்கோர் வாட்டின் கட்டிட அமைப்புக்கு சலவைக்கல்லே பயன்பட்டிருக்கின்றது.

ஆலயத்தைச் சுற்றி அகழியும், பெருமதிலுமாக 1300 மீட்டர் X 1300 மீட்டர் அளவில் அரணாக அமைந்திருக்கின்றன. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஆலயத்தின் முழுப்பகுதியும் அமைந்திருக்கின்றது. ஆலய உட்பரப்பில் நுழைந்ததுமே வலதும் இடதுமாக இருபக்கமும் உடைந்து போன இரு நூலகங்கள் இருக்கின்றன. கம்போடியாவில் நான் கண்ட பெரும்பாலான ஆலயங்களில் இப்படி இருபக்கமும் அமைந்த நூலகங்களோடு தான் இருக்கின்றன.


அங்கோர் சகாப்பதத்தினைப் பறைசாற்றும் சிற்பக்கலைக்கும் தனித்துவமான உதாரணமாக மதிற்சுவர்களிலும், கோயில் உட்புறப்பரப்புகளிலும் விதவிதமான சிற்பவேலைகள் விளங்குகின்றன. 36 வடிவில் 2000 வகையான அப்சரா என்னும் தேவதைகளின் சிற்பவடிவங்கள் இந்த ஆலயத்தில் மட்டுமே இருக்கின்றன.

அத்தோடு இந்து புராணக்கதைகளின் முழுமையான வரலாற்றை கோயிலின் உட்புறச்சுவர்களில் சிற்பமாகவே வடித்திருக்கின்றார்கள். உதாரணமாக தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்னும் மலைப்பாம்பை மத்தாக வைத்து பாற்கடலைக் கடையும் வரலாற்றின் ஆரம்பம் முதல் முடிவு வரை நீண்டதூரப்பரப்பில் சிற்பச் செதுக்காகக் காட்டப்ப்பட்டிருக்கின்றது. இவற்றை கமராப்பெட்டிக்குள் அடக்கமுடியாமல் பகுதி பகுதியாக எடுக்கவேண்டிய அளவிற்கு இவ் இதிகாசவரலாற்றுச் சிற்பவேலைகளின் நீளம் இருந்தது. இவ்வாறு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது ஏற்பட்ட களைப்பை மறக்கடிக்கும் விதமாக பாற்கடலில் இருந்து தோன்றி களி நடனம் புரிந்தவர்களே அப்சரா என்னும் தேவதைகள் என்பதையும் இச்சுவரில் பதிந்திருக்கும் சிற்பவேலைகள் காட்டுகின்றன.

அத்தோடு மகாபாரதப் போரில் பாண்டவர்களின் அணி, கெளரவர்களின் அணி என்று அத்தனை பேரையுமே சிற்பங்களாக வடித்து, குருஷோத்திரப்போரின் உச்சமும் காட்டப்படுகின்றது.

சிற்பங்கள் சிலவற்றில் செயற்கையாக சிவப்பு போன்ற வர்ணங்கள் மேற்பூச்சாக அமைந்திருந்தன. இது தாய்லாந்து நாட்டில் இருந்து படையெடுத்த சியாம் அரசின் கைங்கர்யம். தாய்லாந்துக்காரர்களுக்கு சிற்ப அமைப்புக்களை இயற்கையாக விடாமல் அவற்றுக்கு வர்ணம் தீட்டிப் பார்க்கும் ஆசை இருந்திருக்கிறது. அதையே இங்கும் காட்டியிருக்கிறார்கள்.

17 comments:

Jayakumar said...

பதிவிற்கும் புகைப்படங்களுக்கும் நன்றி.

வடுவூர் குமார் said...

பல சிற்பங்கள் இந்தியாவில் காணப்படுகிற மாதிரியே இருக்கு.

கோபிநாத் said...

தல

வகுப்பில் உட்கார்ந்து படம் படிப்பது போலவே இருக்கு ;))

படங்கள் எல்லாம் சூப்பர் ;)

ஆ.கோகுலன் said...

//இவ்வாறு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது ஏற்பட்ட களைப்பை மறக்கடிக்கும் விதமாக பாற்கடலில் இருந்து தோன்றி களி நடனம் புரிந்தவர்களே அப்சரா என்னும் தேவதைகள்//

எல்லாவற்றுக்குமே ஒரு refreshment தேவைப்படுகிறது. என்ன..! :)

பதிவு சட்டென்று முடிந்து விட்டது..!

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ஜே.கே

வடுவூர் குமார்

இந்திய அரசர்கள் தானே நிர்மாணித்தார்கள் எனவே அதன் தாக்கம் நிச்சயம் இருக்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காபி அண்ணாச்சி
படங்கள் சூப்பர்! நீங்க வகுப்பு எல்லாம் கூட எடுப்பீங்களா?
மாணவிகள் மட்டும் தானா? இல்லை எங்களைப் போல மாணவர்களுக்கும் இடம் உண்டா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கம்யூனிச சித்தாந்தத்தில் மதங்களைப் புறந்தள்ளிய பொல்பொட்டின் (Pol Pot) க்மருச் அமைப்பின் அரசுமே இவ்வகையான அழிவின் மூலகாரணிகள்//

பரிதாபம்!
தொழிலாளர்கள் நலன் கருதும் சித்தாந்தம், பல்லாயிரம் தொழிலாளர்களின் கை வண்ணத்தை உருக் குலைய வைக்கிறது என்றால்???

மதத்தைப் பின்னுக்குத் தள்ளும் போது, மனிதனையும் தள்ளி விடுகிறோமோ என்பதைப் பார்க்கத் தவறுவதால் தான் ஆத்திக சித்தாந்தங்களும் சரி, நாத்திக சித்தாந்தங்களும் சரி, சில நாளில் அழிந்து பட்டுப் போகின்றன! :-(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பெரும்பாலான ஆலயங்களில் இப்படி இருபக்கமும் அமைந்த நூலகங்களோடு தான் இருக்கின்றன//

அருமை! அருமை!

தமிழ்நாட்டில் சில இடங்களிலும், கர்நாடகத்தில் மேலக்கோட்டை போன்ற இடங்களிலும்,
ஆலயத்துடன் attached library/dispensary என்ற ஒன்று இருக்க வேண்டும் என்பதைப் புதிதாகக் கட்டப்படும் ஆலயங்களுக்கு ஒரு விதியாகவே விதித்தாராம் இராமானுசர்!

இன்னிக்கு அவை பெரும்பாலும், மாடு கட்டும் கொட்டகைகளாக மாறி்ப் போனது தான் சோகம்!

மேலக்கோட்டை, திருவரங்கம், மதுராந்தகம், வானமாமலை போன்ற இடங்களில் இன்னும் நூலகங்களைக் காணலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாற்கடலைக் கடையும் போது ஏற்பட்ட களைப்பை மறக்கடிக்கும் விதமாக பாற்கடலில் இருந்து தோன்றி களி நடனம் புரிந்தவர்களே அப்சரா என்னும் தேவதைகள்//

கானா அண்ணாச்சி பதிவைப் படித்துப் பின்னூட்டம் போட்டு, நாங்களும் தான் களைச்சிப் போயிருக்கோம்!

எங்க களைப்பை எல்லாம் நீக்க யாராச்சும் தோற்றுவிக்க மாட்டீங்களா அண்ணாச்சி? என்ன மாப்பி கோப்பி, நீயும் ஒன்னும் கேக்குறதில்லையா? :-)

ஆயில்யன் said...

படங்களை பார்க்கையில் தமிழக கோவில்கள் போன்றே காட்சியளிக்கின்றன!

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
காபி அண்ணாச்சி
படங்கள் சூப்பர்! நீங்க வகுப்பு எல்லாம் கூட எடுப்பீங்களா?
மாணவிகள் மட்டும் தானா? இல்லை எங்களைப் போல மாணவர்களுக்கும் இடம் உண்டா? :-)
//

ஆங் புஸ்க்கு! ஏற்கனவே நாங்க அட்மிஷனுக்கு வெயீட்டீஸ் நீங்கள்லாம் அடுத்த வருஷம்தான்! (மாணவிகள் உண்டு! உண்டு!!)

மாயா said...

படங்கள் அருமை

கானா பிரபா said...

//கோபிநாத் said...
தல

வகுப்பில் உட்கார்ந்து படம் படிப்பது போலவே இருக்கு ;))//

தல

கட் அடிக்காம ஒழுங்கா வகுப்புக்கு வரணும் ஓகேவா

//ஆ.கோகுலன் said...
எல்லாவற்றுக்குமே ஒரு refreshment தேவைப்படுகிறது. என்ன..! :)/

ஓமோம் அதெண்டா உண்மைதான் ;)

கண்ணபிரான்

இந்த உழைப்பின் பின்னால் இருந்த ஆயிரம் ஆயிரம் தொழிலாளர் இரத்தமும் வேர்வையும் மறக்கடிக்கப்பட்டது அவலம். இதே போன்ற பிரமாண்டங்களை என் அடுத்த தமிழ் நாட்டு விஜயத்தின் போது பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

ஆயில்ஸ்

கண்ணபிரானுக்கு மட்டும் சீட் கொடுபோம் ;-)

வருகைக்கு நன்றி மாயா

SurveySan said...

எந்த ஏர்லைன்ஸ், எங்க தங்கினீங்க, எவ்ளோ செலவு ஆகும், சீடோஷண நிலை என்ன, இத்யாதி இத்யாதி மேட்டரெல்லாம் போட்டா நல்லாருக்கும்.

கானா பிரபா said...

சர்வேஸ்

அந்தத் தகவலை எல்லாம் முன் பதிவுகளில் சொல்லியிருக்கேன். சுட்டிகள் இதோ


http://ulaathal.blogspot.com/2008/03/blog-post.html

http://ulaathal.blogspot.com/2008/03/blog-post_30.html

rahini said...

உங்கள் ஒவ்வொரு பதிவுகளும் அருமையாகவே
உள்ளது வாழ்க வளமுடன்.
அன்புடன்
ராகினி

கானா பிரபா said...

வணக்கம் ராகினி

பதிவுகளை வாசித்து உங்கள் கருத்தை இட்டமைக்கு மிக்க நன்றிகள்

J S Gnanasekar said...

அங்கோர் வாட்டில் நான் எடுத்த புகைப்படங்கள் இவை:

https://goo.gl/photos/oMALxobJM2C2XApq8

- ஞானசேகர்