Social Icons

Pages

Tuesday, April 22, 2008

கைமர் பேரரசு (Khmer Empire) - முதற் தொகுதி மன்னர்கள்

சென்ற பதிவில் பல்லவ மன்னர்கள் குறித்த அறிமுகத்தை வரலாற்று ரீதியான உசாத்துணைகளோடு கொடுத்திருந்தேன். அதற்குக் காரணம் தொடர்ந்து வரும் பதிவுகள் இந்தப் பல்லவ மன்னர்களின் ஆதிக்கம் கம்போடியாவில் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தியிருந்தன என்றே தொடரவிருக்கின்றன.

தேதிவாரியாக என் பயணத் தொடரைக் கொடுப்பது வழக்கம். சற்று விதிவிலக்காக என் கம்போடியப் பயணத்தின் இறுதி நாளன்று சென்று பார்த்த அங்கோர் நூதன சாலையில் (Angkor Museum) நான் இந்தத் தொடருக்கு உதவும் என்ற வகையில் எடுத்துக் கொண்ட குறிப்புக்களின் அடிப்படையில் இப்பதிவு அமையவிருக்கின்றது. பயணத்தின் கடைசி நாளன்று அங்கோர் நூதன சாலையில் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் செலவழித்திருப்பேன். அவவளவுக்கு அங்கே வரலாற்று ஆதாரங்களும், செய்திக் குறிப்புக்களுமாக முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நூதனசாலையில் இருக்கும் விடயங்கள் குறித்த பதிவைப் பின்னர் தருகின்றேன்.

எதிர்வரும் காலங்களில் கம்போடியாவுக்குப் பயணப்படுவோருக்கு ஒரு ஆலோசனை மட்டும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். உங்கள் பயணத்தின் முதல் நாளே இந்த அங்கோர் நூதனசாலைக்குச் (Angkor Museum) செல்லுங்கள். காரணம் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் நீங்கள் பார்க்கப் போகும் ஆலயங்கள், வரலாற்றுச் சுவடுகள் குறித்த முழுமையான பார்வையை இந்த நூதனசாலை கொடுக்கின்றது. எனவே இந்த நூதனசாலையில் நீங்கள் பெறும் அறிவையும், தகவல்களையும் வைத்துக் கொண்டு குறித்த ஆலயங்களைப் பார்க்கும் போது மிகவும் இலகுவான விளக்கத்தை அவை உங்களுக்குத் தானாகவே கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.

கம்போடியாவில் அமைந்த கைமர் பேரரசின் (Khmer Empire) முதல் மன்னனாய் முதலாம் ஜெயவர்மன் (Jayavarman I) கொள்ளப்படுகின்றான். இவன் கி.பி 657 இலிருந்து கி.பி.681 வரை ஆட்சி செய்ததாகவும், இரண்டாம் பாவவர்மன் (Bhavavarman II) இந்த ஜெயவர்மனுக்கு முற்பட்ட காலத்து அரசன் என்றும், முதலாம் ஜெயவர்மனைத் தொடர்ந்து ஜெயதேவி என்னும் மகாராணி ஆட்சிப் பீடம் ஏறியதாகவும் விக்கிபீடியாவின் வரலாற்றுக் குறிப்புக்கள் தகவல் பகிர்கின்றன.

ஆனால் அங்கோர் நூதனசாலையில் பொறித்திருக்கும் அரசர்கள் பட்டியலில் முன் குறிப்பிட்ட மன்னர்களைத் தொடர்ந்து ஆட்சிப்பீடம் ஏறியவர்களையே முக்கியத்துவப்படுத்தி, இந்த மன்னர்கள் குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு ஒரு காரணம் இந்த மன்னர்களின் திருப்பணியில் அமைந்த ஆலயங்களே இன்று முக்கியமான வரலாற்று ஆதாரங்களைத் தரும் சான்றாக அமைந்திருக்கின்றன.


எனவே தொடர்ந்து அங்கோர் நூதனசாலையில் எடுத்துக் கொண்ட குறிப்புக்களின் அடிப்படையில் கைமர் பேரரசில் (Khmer Empire) குறிப்பிடப்படும் முக்கியமான பல்லவமன்னர்களும், அவர்கள் தலைநகராகக் கொண்டு செயற்பட்ட இடங்கள், குறித்த மன்னர்கள் அமைத்த ஆலயங்கள் போன்ற விபரங்களைத் தருகின்றேன்.

இரண்டாம் ஜெயவர்மன் (Jayavarman II)

ஆட்சிக்காலம்: கி.பி 802 - கி.பி. 850

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடங்கள்:

இந்திரபுர (Indrapura) , ஹரிஹராலயா(Hariharalaya) , அமரேந்திரபுர (Amerendrapura), மகேந்திரபுர (Mahendrapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

KULEN Style


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Damrie Krap, O Pong, Khting Slap, Rup Areak, Neak ta, Trong Khla, Khonum, Krus Prea, Aram Ring chon, Mahendra Parvatha (Kulen Mountain)

ஜாவா மன்னர்களை விரட்டியடித்து ஆட்சியமைத்த மன்னனாகக் கொள்ளப்படுகின்றான்.

இந்த இரண்டாம் ஜெயவர்மன் இறந்தபின் பிறீ பரமேஸ்வரா (Preah Parameswara)என்று பெயர்சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

இந்திரவர்மன் (Indra varman I)

ஆட்சிக்காலம்: கி.பி 877 - 889

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

ஹரிஹராலயா (Hariharalaya)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

PREAH KO Style


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Preah Ko, Bakong, Baray Indiratata ka

இந்த நாட்டின் சமுதாய சமயப் பணிகளைச் செய்த முக்கிய மன்னர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றான். இவரின் புரோகிதர் சிவசோமாவின் (Sivasoma) வழிகாட்டலில் இவற்றைச் செய்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த முதலாம் இந்திரவர்மன் இறந்தபின் இஸ்வரலோகா/ஈஸ்வரலோகா (Iswaraloka) என்று பெயர்சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

யசோவர்மன் (Yashovarman)

ஆட்சிக்காலம்: கி.பி 889 - 910

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடங்கள்:

ஹரிஹராலயா (Hariharalaya), யசோதபுர/அங்கோர்(Yashodhapura/Angkor)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

BAKHEND Style


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Loleu, Bakhong, Phom Khon, East Baray, Prea Vihear, Phom Bok, Phom Krom (Trimoorthy god)
முதலாம் இந்திரவர்மன் மகன் தான் இந்த யசோவர்மன் என்று சொல்லப்படுகின்றது.

இந்த யசோவர்மன் இறந்தபின் பரம சிவலோகா (Parama Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

நான்காம் ஜெயவர்மன்(Jeyavarman IV)

ஆட்சிக்காலம்: கி.பி 921 - 941

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

கோ கெர் (Koh Ker)
முன்னர் யசோவர்மனின் ஆட்சியில் தலைநகராக இருந்த அங்கோர் (Angkor) இருந்து இவன்(நான்காம் ஜெயவர்மன்) தன் தலைநகரை மாற்றிக் கொண்டான்.

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

KOH KER Style



இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:
Koh Ker group, Neang KhMao, Choeung An

யசோவர்மனின் சகோதரி ஜெயதேவியை மகாராணியாக்கிக் கொண்டவனே இந்த நான்காம் ஜெயவர்மன் என்று சொல்லப்படுகின்றது.

இந்த நான்காம் ஜெயவர்மன் இறந்தபின் பரம சிவபாத (Parama Sivapada)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

ராஜேந்திரவர்மன் (Rajendravarman)

ஆட்சிக்காலம்: கி.பி 944 - 968

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர/அங்கோர் (Yashodapura/Angkor)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

Pre Rup Style


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Pre Rup, Prasad East Mebon, Bat Chum, Bantea Srei, Baksei, Chamkrong,

இந்த ராஜேந்திரவர்மன் என்ற மன்னன் மகேந்திரவர்மன், மகேந்திர தேவியின் மகனாகக் கொள்ளப்படுகின்றான். ராஜேந்திர வர்மனின் தளபதியாக இருந்த கவிந்திரவிமதன (Kavindravimathana) பெளத்த அமைச்சராகவும் கொள்ளப்பட்டிருக்கின்றான்.

இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

இந்த கைமர் பேரரசின் மன்னர்கள் வரிசை நெடியது, எனவே அடுத்ததும் நிறைவானதுமான தொகுதி மன்னர்களை அடுத்த பகுதியில் தருகின்றேன். இங்கே ஒவ்வொரு மன்னர்கள் அமைத்த ஆலயங்களில் பெரும்பாலானவற்றைக் கண்டு தரிசிக்கும் வாய்ப்பும் எனக்கு இருந்ததால் பதிவில் குறிப்பிட்ட ஆலயங்களைத் தனித்தனியாகப் பின்னர் பார்ப்போம்.

15 comments:

ஆ.கோகுலன் said...

மிகுந்த முன்தயாரிப்போடு நிரம்பவே முயற்சி செய்து தகவல்கள் திரட்டி மிக விரிவான 'உலாத்தலை' தருகின்றீர்கள். மிகவும் நன்றி கானா பிரபா.

கானா பிரபா said...

வணக்கம் கோகுலன்

இயன்றவரை சிரத்தையெடுத்துத் தருவதன் மூலம் பலருக்கும் பயன் கொடுக்கும் என்ற ஆதங்கம் தான் காரணம், வாசித்து உங்கள் கருத்தை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

கோபிநாத் said...

நிறைய கோவில்கள் இருக்கும் போல!!

ஒவ்வொரு படமும், அதன் தகவல்களும் சூப்பர் தல ;)

TBCD said...

கானா,

உங்கள் முன் தயாரிப்பும், ஆலோசனையும் அருமை...

இந்த அரசர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள். எந்த காலக் கட்டத்தில் சைவ மதம்/வைனவம் அங்கே வந்தது என்று ஏதேனும் தகவல் கிட்டியதா...?

(தாய்லாந்திற்கும் இதுப் போன்று இருக்கா...)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நேரமெடுத்து விவரமாகப் பதிவிடுவதற்கு நன்றி பிரபா.
அங்கோர் வாட் வளாகத்திலேயேவா மற்றக் கோயில்களும்? அல்லது வெவ்வேறிடத்திலேயா?

கானா பிரபா said...

// கோபிநாத் said...
நிறைய கோவில்கள் இருக்கும் போல!!

ஒவ்வொரு படமும், அதன் தகவல்களும் சூப்பர் தல ;)//


கம்போடியா எங்கெங்கு காணினும் கோயில் என்று சொல்லவேண்டும், அவ்வளவு கோயில்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொன்றாகத் தருகின்றேன் தல.

HK Arun said...

கடாரம் வென்ற தமிழன் அன்று,
கடாரம் சென்று தகவல் திரட்டும் தமிழன் உங்கள் பணி நன்று.

அப்படியே கடாரம் வென்ற வரலாற்று சுருக்கத்தையும் வழங்கினால் இந்த ஆக்கங்களுக்கு இன்னும் அதிக வலு சேர்க்கும் என்று நினைக்கின்றேன்.

உலாத்தலை தொடருங்கள்.

நன்றி

கானா பிரபா said...

// TBCD said...
இந்த அரசர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள். எந்த காலக் கட்டத்தில் சைவ மதம்/வைனவம் அங்கே வந்தது என்று ஏதேனும் தகவல் கிட்டியதா...?(தாய்லாந்திற்கும் இதுப் போன்று இருக்கா...)//

இவர்கள் பொத்தம் பொதுவில் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்ற தகவல் குறிப்புக்களே அதிகம் கிடைக்கின்றன, ஆனால் நான் சென்று பார்த்த இடங்களில் இருந்த சுவடுகள் பலவற்றை வைத்து சில எடுகோள்களை என்னால் எடுக்க முடிந்தது. அவற்றை அந்தந்த ஆலயங்களைப் பற்றிச் சொல்லும் போது விரிவாகத் தருகின்றேன்.

வைணவமும் சைவமும் பரம்பல் நான் குறிப்பிட்ட இந்த மன்னர் காலத்தில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. அதை அடியொற்றியே வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன,

தாய்லாந்திலும், லாவோஸிலும் இதையொத்த இன்னும் பல வரலாற்று அம்சங்கள் இருப்பதாக வழிகாட்டி மூலமும், அங்கு போன வெளிநாட்டவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோதும் அறிந்தேன். அவை தான் என் அடுத்த இலக்கும் கூட.

கானா பிரபா said...

// `மழை` ஷ்ரேயா(Shreya) said...
நேரமெடுத்து விவரமாகப் பதிவிடுவதற்கு நன்றி பிரபா.
அங்கோர் வாட் வளாகத்திலேயேவா மற்றக் கோயில்களும்? அல்லது வெவ்வேறிடத்திலேயா?//


மிக்க நன்றி மழை

அங்கோர் வாட் என்பது தனித்த ஆலயம், கம்போடியா செல்லும் பலர் அதிகம் பார்க்க நினைப்பதும் அதுவே. ஆனால் அங்கோர் வாட் தவிர்ந்த ஏராளமான ஆலயங்கள் இந்த நாட்டின் பல பாகங்களில் குறிப்பாக சியாம் ரீப் நகரத்தில் இருக்கின்றன.

ஜோ/Joe said...

//அங்கோர் வாட் என்பது தனித்த ஆலயம், கம்போடியா செல்லும் பலர் அதிகம் பார்க்க நினைப்பதும் அதுவே. ஆனால் அங்கோர் வாட் தவிர்ந்த ஏராளமான ஆலயங்கள் இந்த நாட்டின் பல பாகங்களில் குறிப்பாக சியாம் ரீப் நகரத்தில் இருக்கின்றன.//

அங்கோர் என்பது கிட்டத்தட்ட 30 கோவில்கள் அமைந்துள்ள 20 கிமீ சுற்றளவுள்ள பகுதியின் பொதுப்பெயர் என நினைக்கிறேன் .

அங்கோர் வாட் அவற்றில் முதன்மையான ,கம்போடியா தேசிய கொடியில் இடம்பெற்றிருக்கும் விஷ்ணு கோவில் .இது தவிர அங்கோர் தோம் இன்னும் பல தெய்வங்களுக்கு அர்பணிக்கப்பட்ட கோவில்கள் சிதறி கிடக்கின்றன.

கானா ,சிவன் கோவிலுக்கு சென்றீர்களா ?

கானா பிரபா said...

// Arun said...

அப்படியே கடாரம் வென்ற வரலாற்று சுருக்கத்தையும் வழங்கினால் இந்த ஆக்கங்களுக்கு இன்னும் அதிக வலு சேர்க்கும் என்று நினைக்கின்றேன்//

வணக்கம் அருண்

மற்றைய தென்கிழக்காசிய நாடுகளுக்குப் பயணப்ப்டும்போது இது முழுமை பெறும் என்று நினைக்கின்றேன். என்னால் முடிந்தளவு விபரங்களைத் தருகின்றேன். உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி


//ஜோ / Joe said...
அங்கோர் என்பது கிட்டத்தட்ட 30 கோவில்கள் அமைந்துள்ள 20 கிமீ சுற்றளவுள்ள பகுதியின் பொதுப்பெயர் என நினைக்கிறேன் .//


வாங்க ஜோ

நீங்கள் சொல்வது சரி, ஒட்டுமொத்த சியாம் ரீப் ஐயே பலர் அங்கோர் என்ற பொதுப்பெயரில் அழைப்பார்கள், அதற்குப் பின்னால் உள்ள ஒரு சுவையான செய்தியை கைடு மூலம் அறிந்தேன், சொல்வேன்.

ஆமாம், சிவன் கோயில் அங்கோர் தோம் எல்லாம் சென்றேன்.

ரசிகன் said...

படங்களுடன் நல்ல விளக்கம். நன்றி:)

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

சிங்கை நாதன்/SingaiNathan said...

அன்புள்ள பிரபா


//நூதன சாலையில் // - நாங்கள் அருங்காட்சியகம் என்போம். நூதனம் என்பதை புது வித என்ற முறையில் பயன் படுத்துவோம்.

KULEN Style என்பதன் கீழே போட்டுள்ள படம் நீங்கள் எடுத்ததா ? அதில் தேவியின் சிலை சிதைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது.இதை சென்ற பதிவின் பின்னூட்டத்தில் கூறிய விஜய குமாரின் இழையில் ஒரு நீர் நிலையின் அருகே பார்த்துள்ளேன். மேலும் இன்னோர் காலத்தில் எடுத்த படத்தில் விஷ்ணுவின் உடலும் இடுப்பு வரை சிதைக்கப்பட்டதையும் பார்த்தேன். இரு வேறு சமயங்களில் மொத்தமாக களவாடப்பட்டுள்ளது. அப்படி இருக்க உங்கள் படத்தில் எப்படி விஷ்ணுவின் உடல் சிதைக்கப்படாமல் உள்ளது ? அல்லது இது வேறு இடமா ? அந்த படத்தை தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைக்கவில்லை. புதசெவி. :)


அன்புடன்
சிங்கை நாதன்.

கானா பிரபா said...

வணக்கம் சிங்கைநாதன்

அருங்காட்சியகம் என்பதும் எமது ஊர் வழக்கில் உள்ள சொல், பெரும்பாலான பெயர்ப்பலகையில் நூதன சாலை என்று இட்டிருப்பார்கள்.

இந்தத் தொடரில் இடும் படங்கள் அனைத்துமே நான் எடுத்தவை தான். குலேன் பாணி அமைப்புக்குக் கீழே இருந்த விஷ்ணு சிற்பம் கூட நான் குலேன் மலைச்சாரல் சென்றபோது எடுத்தது. அவற்றைப் பற்றி இன்னும் விரிவாகச் சொல்லவுள்ளேன்.

விஜயகுமாரின் பதிவில் வந்த விஷ்ணு சிலை வேறு கோயிலில் எடுக்கப்பட்டிருக்கலாம். என்னுடைய படத்திலும் பாருங்கள் அந்த தேவியின் முகம் சிதைக்கப்பட்டிருக்கின்றது.

ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றி நான் பேசும் போது இன்னும் விரிவாக அவை பற்றிச் சொல்லவுள்ளேன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி