Social Icons

Pages

Sunday, July 08, 2007

நிறைவான கேரள உலாத்தல்
மே 29, 2006 மாலை 6.00 மணி (இந்திய நேரம்)

கொச்சினில் உள்ள யூத ஆலயம் சென்று தரிசித்து இரவு 7 மணிக்கு கொச்சினில் இருந்து பெங்களூர் செல்லும் விமானத்தை எடுக்க ஏற்பாடு செய்திருந்தேன். எனவே மாலை ஆறு மணிக்கெல்லம் கொச்சின் உள்ளூர் விமான நிலையம் அடைந்துவிட்டேன் முற்கூட்டியே நான் சந்திக்கப்போகும் சோதனையை அறியாமல். கழிந்த நாட்கள் கேரளபூமி கொடுத்த சுற்றுலா இன்பம் என் மனதை நிறைக்க தொடர்ந்த பயணக்களைப்பே தெரியவில்லை. ஏற்கனவே இணையமூலம் பதிவு செய்திருந்த Air deccen விமானத்தின் E-ticket பிரதியை எடுத்துக்கொண்டு Air deccen விமானத்துக்கான Boarding pass வழங்கும் பகுதியை ஏறிட்டேன். நீண்டதொரு சன வளையல் இருந்தது. இதுவே இன்னும் ஒரு மணி நேரம் போனால் விமான நிலைய கார் தரிப்பு நிலையம் வரை கூட பயணிகள் வரிசை கடக்கலாம் என்று மனதுக்குள் புலம்பியபடி நானும் அந்த வரிசையில் பங்காளி ஆகின்றேன். அந்த வரிசையில் கொச்சினில் இருந்து Air deccen மூலம் நாட்டின் மற்றைய பகுதிகளான டெல்லி, சென்னை, கோவா என்று மற்றும் பல தரிப்பிடங்களுக்கான பயணிகள் நிறைந்திருந்தார்கள் என்றாலும் Boarding pass counter ஒரு எலி கூட இல்லை. அதாவது ஒரு Air deccen பணியாளர்களோ தென்படவில்லை. வேடிக்கை என்னவென்றால் இந்த வரிசையில் மாலை 5 மணிக்கு புறப்படவேண்டிய விமானத்தின் பயணிகளும் அடக்கம்.

ஆறு மணி ஏழாகி எட்டைத் தொட அரை மணி நேரமே பாக்கி. வரிசையில் இருந்த குழந்தைகள் அடம்பிடித்து அழ ஆரம்பிக்கின்றன. பெரியவர்களுக்கே பொறுமையின் எல்லையைக் கடந்த நிலையில் பாவம் சிறுவர்கள் என்ன செய்வார்கள்?
பயணிகள் வரிசையில் இருந்த ஒரு சிலர் பலராகி, வரிசையை விட்டு விலகி வந்து விமான நிலைய ஊழியர்களிடம் எங்கே ஒரு Air deccen ஊழியரையும் காணவில்லையே என்று கேட்டோம். அவர்கள் கையை விரித்து தெரியாது என்று பாவனை காட்டிக் கருமமே கண்ணாயினர்.

கொச்சின் விமான நிலையத்தில் பெரும்பாலான விமான நிறுவனங்களுக்கான பிரத்தியோக அலுவலகம் உண்டு. அந்த வகையில் Air deccen அலுவலகமும் நம் கண்ணில் தென்பட எட்டிப்பார்த்தோம். உள்ளே தொலைபேசி அழைப்புக்கள் தான் வருகின்றன, அலுவலகத்தில் ஆட்களே இல்லை. ஒரு பயணி கோபங்கொண்டு மூர்க்கமாகக் கதவைத் திறக்கின்றார், சாவி போடாத கதவு பட்டென்று திறந்து கொள்ள அவர் உள்ளே நுளைந்து அந்த அலுவலத்தில் இருந்த தொலைபேசி இலக்கப்பட்டியிலில் தென்பட்ட Air deccen இன் தலைமைத் தொலைபேசி இணப்பகத்துக்கு எடுத்து ஏதோ கோபமாகப் பேசுகின்றார். அவரிடமிருந்து நல்ல பதிலை எதிர்ப்பார்த்து வெளியே காவல்கிடக்கின்றோம். வெளியே வந்த அந்தப் பயணி "இன்று Air deccen இன் கொச்சின் மூலமான அனைத்துச் சேவைகளுமே இரத்துச் செய்யப்பட்டுவிட்டனவாம், இன்று பதிந்தவர்கள் நாளை காலை வரும் Air deccen விமானமூலமே நாட்டின் பிறபாகங்களுக்குப் போகமுடியுமாம்" என்று சினத்தோடு பொரிந்து தள்ளிவிட்டுப் போய்விட்டார். இவ்வளவு பேரும் மணிக்கணக்கில் காத்திருக்க என்னதொரு மொத்தனமான செயல் இது என்று ஒவ்வொருவருமே புலம்பினோம்.


ஒவ்வொருவரும் ஏமாற்றத்தோடு மற்றைய விமானச் சேவைகளின் கதவைத் தட்டுகின்றோம். King Fisher, Jet Airways என அந்த விமானச் சேவைகளின் இன்று இரவுக்குச் சொற்பமான இருக்கைகளே மீதம் இருக்கின்றன. கடைசி நேரக் கொள்வனவு என்பதால் முன் கூட்டிய விலையை விட பலமடங்கு அதிகமென்றார்கள். இன்று இரவு இங்கேயே ஒரு தங்குமிடம் போய் தங்கி நாளை வருவதை விடக் கிடைக்கின்ற விமானத்தை எடுத்துக்கொண்டு ஓடுவோம் என்ற ஆவலில் ரூ 7500 க்கு Jet Airways மூலம் பயணச் சீட்டை எடுத்துக் கொண்டு கொச்சின் விமான நிலையத்தின் பயணிகள் காத்திருப்பு பகுதிக்குள் நுளைகின்றேன். ஏதோ அரண்மனைக்குள் நுளைந்தது போன்று அந்தப் பயணிகள் இருக்கைகள் சுத்தமான ராஜ சபை இருக்கைளை நினைவுபடுத்தும் பாங்கில் அமைக்கப்பட்டிருகின்றன.

" காசு போனாலும் பரவாயில்லை, இனிமேல் தரமான விமான சேவையில் தான் என் பயணம் இருக்கவேண்டும்" என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே. இரவு பத்து மணியை தொடுகின்றது. பெங்களூர் விமானத்துக்கான பயணிகளை ஏற்றும் ஆயத்தங்களை ஒலிபெருக்கி சொல்ல ஆரம்பிக்கின்றது.

................................................................................................


கடந்த 2006 ஆம் ஆண்டு மே 26 ஆம் திகதி கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம் வந்திறங்கி சுற்றிப்பார்த்தலோடு , மே 28 ஆம் நாள் ஆலப்புழாவின் படகுப் பயணத்துக்காக அங்கே உள்ள கெளரி ரெசிடென்ஸ் இல் இருந்தபோது தான் கேரளாவில் நான் அனுபவித்த இனிய பயண நினைவுகளைப் பதிவாக்கவேண்டும் என்று எண்ணினேன். உடனேயே நான் தங்கியிருந்த இடத்தில் இருந்த கணினியில் உலாத்தல் என்ற இந்த வலைப்பூவையும் சமைத்தேன். தொடர்ந்து என் பயணத்தில் இந்தப் பயணப்பதிவுகளுக்காகவே விசேடமாகப் படங்களையும் எடுத்துக் கொண்டேன். குறிப்பாக ஆலப்புழாவில் அமைந்த படகுப்பயணத்தில் ஒவ்வொரு கோணமாக நான் எடுத்த ஏராளமான புகைப்படங்களுமே என் கடந்த பகுதிகளில் இடம்பெற்று விட்டன.


நமது ஈழத்து நண்பர்கள் மட்டுமன்றித் தமிழக நண்பர்கள் கூட தமது நாட்டில் இப்படியான எழில் கொஞ்சும் பிரதேசம் குறித்த மகிமையை என் பதிவுகள் ஊடாக வாசித்து அவ்வப்போது என்னை எழுதத் தூண்டியிருந்தீர்கள். ஒரு சில நாட்கள் அமைந்த இந்தப் பயணம் ஒருவருடத்துக்கு மேலான காலப் பதிவுகளாக இழுத்துவிட்டனவே என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் சொல்லப் போனால் எனக்கு இந்தக் கேரளப் பயணம் தாயகத்தில் என் ஊரில் அனுபவிக்கும் இனிய சுகத்தைத் தான் தந்தது. அதை நான் அனுபவித்தே ஒவ்வொன்றாக இரசித்து இரசித்துப் பதிவுகளாகத் தந்திருந்தேன். கேரளத்தின் திருவனந்தபுரம், ஆலப்புழா, கொச்சின் ஆகிய இடங்களைத் தான் என் கடந்த பயணத்தில் அனுபவிக்க முடிந்தது. எனவே இந்தக் கேரள உலாத்தலுக்கு இது தற்காலிக ஓய்வு தான். அடுத்த வருடம் நான் போகவிருக்கும் எஞ்சிய கேரளப் பிரதேசங்களை இதே போன்ற நடப்பு, மற்றும் வரலாற்று அம்சங்களோடு கலந்து தர எனக்கு ஆவல் விஞ்சியிருக்கின்றது.

இந்தக் கேரளப் பதிவுகளைக் கண்ணுற்ற அவுஸ்திரேலிய "உதய சூரியன்" மாத சஞ்சிகை ஆசிரியர், தனது சஞ்சிகைக்கு ஏற்றவிதத்தில் இந்தத் தொடரை ஆக்கித் தரக்கேட்டார். இப்போது கடந்த முன்று இதழ்களைக் கடந்து கேரள உலாத்தல் 'உதயசூரியன்" சஞ்சிகையின் வாசகர்களையும் சென்றடைகின்றது. என்னைக் கண்ட சிலர் ஆலப்புழாவுக்கான தமது பயணம் ரெடி என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. எழுத்துச் சுமை பறந்து போகின்றது.

கடந்த கேரள உலாத்தல் பதிவுகள் முழுதும் எப்படி அமைந்திருந்தன என்பது குறித்த உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவல் கொண்டுள்ளேன்.


எனவே தற்காலிகத் தரித்தலோடு விடைபெறும் கேரள உலாத்தலைத் தொடந்து, என் உலாத்தல் பதிவுகளில் தொடர்ந்து பார்க்கவிருக்கும் பிரதேசம் கர்னாடகாவின் சில அமைவிடங்கள். கர்னாடகா உலாத்தலில் நான் உங்களைச் சந்திக்கும் வரை இப்போது உங்களிடமிருந்து விடை பெற்று மீண்டும் வருகின்றேன்.

நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா

10 comments:

கோபிநாத் said...

\\எழுத்துச் சுமை பறந்து போகின்றது.
\\\

தலைவர்ன்னா சும்மா ;)))

வாழ்த்துக்கள் தலைவா ;))

கோபிநாத் said...

\\\எனவே தற்காலிகத் தரித்தலோடு விடைபெறும் கேரள உலாத்தலைத் தொடந்து, என் உலாத்தல் பதிவுகளில் தொடர்ந்து பார்க்கவிருக்கும் பிரதேசம் கர்னாடகாவின் சில அமைவிடங்கள். கர்னாடகா உலாத்தலில் நான் உங்களைச் சந்திக்கும் வரை இப்போது உங்களிடமிருந்து விடை பெற்று மீண்டும் வருகின்றேன்.\\

கேரள உலாத்தில் அதிகம் படிக்கவில்லை...(நேரம் கிடைக்கும் போது மற்ற பதிவுகளை படிப்போன்)

கர்நாடகா உலாத்தில் கண்டிப்பாக நானும் கூடவே வருவோன்.

மீண்டும் வாழ்த்துக்கள் தலைவா ;))

usha said...

பிரபா,
கர்நாடகாவில் மங்களூர் பக்கம் என்றால் கொல்லூர்,தர்மஸ்தலா, சுப்ரமண்யா, சிருங்கேரி என்று ஒரு ஆன்மீக பயணம் போடுங்க. கோவில்களில் சாப்பாடும் கிடைக்கும். நேத்திராவதி நதியின் அழகும், கேரளாவை ஒத்த காடுகளுமாய் அருமையாய் இருக்கும். அடுத்து தலைக்காவேரி, கூர்க் அதையும் பார்த்துவிடுங்கள்.
கர்நாடகா டூரிசம் வெப் சைட் பாருங்க.

கானா பிரபா said...

வாங்க கோபி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ;-)

கானா பிரபா said...

வணக்கம் உஷா

பரிந்துரைகளுக்கு நன்றி, ஆனால் நான் ஏற்கனவே செய்த பயணத்தின் அடிப்படையில் தான் பதிவுகளைத் தருகின்றேன். நீங்கள் குறிப்பிட்ட எல்லா இடங்களையும் பார்க்க முடியவில்லை, அடுத்த பயணம் கைகொடுக்கும் என்று நம்புகின்றேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
முதற் படத்தில் உள்ள பஞ்ச வாத்தியம் அல்லது கெண்டை மேளம் நேரே கேட்க மிக விருப்பம்.
நல்ல விறுவிறுப்பாக இருக்கும் யூ ருயூப்பில் பார்த்தேன்.

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

செண்டை மேளக்கச்சேரியை நேரில் கேட்டு இரசிக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். அருமையாக இருந்தது. செண்டை மேளக்கச்சேரி சீடியிலும் இருக்கின்றது.

G.Ragavan said...

ஏர்டெக்கன்...அதில் பயணம் செய்ததும் இல்லை. இப்போதைக்குச் செய்யும் எண்ணமும் இல்லை. இதுவரை யாரும் உருப்படியாக அதைப் பற்றிச் சொன்னதில்லை. கேட்டதெல்லாம் பிரச்சனைகள்தான். என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல...வலைப்பூவில் முதலில் துளசி டீச்சர். இப்பொழுது நீங்கள்.

அடுத்து கர்நாடகவா? காத்திருக்கிறோம்.

மறவன் said...

நல்ல பதிவு அண்ணா தொடர்ந்து எழுதுங்கோ

அன்புடன்
மறவன்

Eelan said...

Kerala remembers Jaffna in some ways. However, when I read your air travel experience, I don't see any difference between other parts of India and Kerala - Mismanagement, irregularities etc. If you bribe, things would have been very easier for anything in India.