மே 29, நண்பகல் 12.00 மணி (இந்திய நேரம்)
ஒரு சிறு இடைவேளைக்குப் பின் கேரளச் சுற்றுப் பயணம் தொடர்கிறது. கெளரி ரெசிடென்ஸ் இலிருந்து அவர்கள் ஒழுங்கு செய்த வாடகைக் கார் மூலம் கொச்சின் நோக்கிப் பயணப்பட ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். ஆலப்புழாவிலிருந்து கொச்சினுக்கு வாடகைக்கார் ரூ 900 வரை முடிகிறது, ஏனெனில் திரும்பிவரும்போது வண்டி வெறுமையாக வரவேண்டியதால் தான் இந்த இரட்டைக்கட்டணம். நான் மேலதிகமாக 5 மணி நேரம் கொச்சினைச் சுற்றிப்பார்க்கவும் இதே காரைப் பாவிக்கலாமேயென்று மொத்தமாக 1500 ரூபா செலவில் கார் ஒழுங்கு செய்யப்பட்டது. காரில் அமர்கின்றேன். கொச்சின் ஹனீபாவைத்தவிர (பாசப்பறவைகள் இயக்குனர், நடிகர்) வேறொன்றுமே கொச்சின் பற்றி அறியாத எனக்கு, அந்தப் புது உலகம் தேடி என் மனம் ஆலாய்ப் பறக்கப் பயணப்படுகிறது கார் கொச்சின் நோக்கி.
கேரள நகரங்களில் நான் கண்ட ஒரு விஷயம் ஒவ்வொரு நகரமும் எதோ ஒரு வகையில் பண்பாட்டு ரீதியாகவோ அல்லது சுற்றுச் சூழல் அமைப்பிலோ சில மாறுதல்களோடு இருக்கின்றன. காரில் போய்க்கொண்டிருக்கும் போது எதிர்ப்படும் இயற்கைக் காட்சிகளை அனுபவித்தவாறே பயணிக்கிறேன். வழக்கம் போல நிறைய மலையாளப் படங்கள் பார்த்துக் கோர்த்துவைத்த மலையாளச் சொற்களைக் கலந்து தூவி வாகனச் சாரதியோடு பேச்சுக் கச்சேரியும் சேர்ந்துகொள்கிறது. பசுமைப் புரட்சி செய்தது போல வழியெங்கும் எதிர்ப்படும் தென்னை, கமுகு (பாக்கு), மாமரங்கள் சாட்சியங்களாக வீதியோரங்களில் கை கோர்த்து நிற்கின்றன.
முன்னர் நான் திருவனந்தபுர வலத்தில் சொன்னது போல மலையாளமும் தமிழும் கலந்த பெயர்ப்பலகைகள் தான் அதிகம் தென்படுகின்றன. TEA /சாய் என்ற ஒரு பெயர்ப்பலகையும் கள்ளு என்று தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகையும் கண்ணாற் கண்ட சில சான்றுகள்.
கொச்சின் போனதும் முதலில் நேரே போனது Mattancherry Palace என்ற இடம்.
இது 1555 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை பின்னர் கொச்சின் ராஜாவாக இருந்த வீரகோளவர்மாவிற்கு (1537 - 1561) அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. தங்களால் அழிக்கப்பட்ட கோயில் ஒன்றிற்கு மாற்றீடாக இலஞ்சமாகவே இதனைப் போர்த்துக்கேயர் இந்த மன்னனுக்குக் கொடுத்ததோடு கூடவே தாம் சில சலுகைகளையும் நன்மைகளையும் பெறவேண்டும் என்பதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. பின்னர் 1663 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் இந்தப் பிரதேசத்தைப் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றி இந்த மத்தன்சேரி பாலஸ் என்ற பெயரையும் Dutch Palace என்று மாற்றிக்கொண்டார்கள்.
இந்தக் கோட்டையை ஒட்டிய தகவற் பலகை மூலம் இதை அறிந்துகொண்டேன்.நுளைவுச் சீட்டை வாசலில் இருக்கும் அன்பர்களிடம் பெற்றுக்கொண்டு உள்ளே நுளைகிறேன். இங்கே Cental Hall , Coronation Hall ஆகிய பகுதிகள் உள்ளன. 1864 ஆம் ஆண்டிலிருந்து கொச்சினை ஆண்ட மகாராஜாக்களின் உருவங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு சுவற்றை நிறைக்கின்றன. உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்பதால் அவற்றைச் சுடமுடியவில்லை.
ராமாயணம், மகாபாரதம், கிருஷ்ண லீலை போன்ற இதிகாசக்கதைகளின் நிகழ்வுகள் சுவர்ச் சித்திரங்களாக (murals) இன்னொரு பக்கம் நிறைக்கின்றன. பழங்கால நாணயங்கள், பல்லக்கு, முத்திரைகள், அதிலும் குறிப்பாக ராஜா ராம வர்மா (1914 - 1939), ராஜா ரவி வர்மாவின் படம் பொறித்த முத்திரைகள். 1897, 1783 ஆண்டுக்காலப் பகுதியில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள் கண்ணாடிப் பெட்டிகளில் அணி செய்கின்றன. மலபார் பிரதேசத்தின் அன்றைய எல்லை வரைபடமும் இருக்கின்றது. இந்த வரைபடம் JAN THIN என்பவரால் இது ஆக்கப்பட்டு 1687 ஆம் ஆண்டு மீள் புதுப்பிக்கப்பட்டதாகக் குறிப்பொன்று அதிலே சொல்கின்றது. எவ்வளவு பழமை வாய்ந்தது பார்த்தீர்களா?
மேலும் 1696 ஆம் ஆண்டில் இருந்த கொச்சினின் வரைபடம், ANNO என்பவரால் கீறப்பட்ட 1677 ஆம் ஆண்டு காலகட்டத்தினதும், 166ம் ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் காலத்துக் கொச்சினின் வரைபடமும் தென்படுகின்றன. சோபா, ப்ரெய்லி(braille) எழுத்தில் விளக்கப்படும் கலாச்சாரப் பிரிவுகள், தலைப்பாகை, வாட்கள், ஊஞ்சல், குடைகள், ஆபரணங்கள் போன்றவையும் வரலாற்றின் சாட்சியப் பதிவுகளாக இருக்கின்றன. பார்வதி, சிவன் திருமணம் கீற்று ஓவியமாக வரையப்பட்டிருக்கின்றது.
கடற்கரையை ஒட்டிய இந்த மாளிகையின் அருகே ஒரு இந்து ஆலயம் உள்ளது. (பார்க்க படம்) இந்த ஆலயத்திற்கு இந்துக்கள் மட்டுமே அனுமதி என்றும் வெளியே உள்ள தகவற் பலகை சொல்லுகின்றது.
திருச்சு வரும்.......
Saturday, January 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
கள்ளுக்கடை பார்த்தது சரி.... அடிச்சு பாக்கேலை என்று நினைக்கிறன்... என்ன இருந்தாலும் நம்ம ஊர் பங்குனி கள்ளு மாதிரி வராது எண்டு நினைக்கிறன்.. எங்கடை ஊர் வழிய உதை தவறணை என்று சொல்றவை..தவறணை தமிழ் சொல்லோ...
பிரபா!
அதென்ன? தமிழில் பெரிசாக இருக்கிறது. இது "கள்" ஆ; "கள்ளு" வா??
ஏன்? குடிச்சுப் பார்க்கவல்லை? படங்கள் குளுமையாக இருக்கிறது;
சின்னக்குட்டியர்! தவறணை என்பது பரவலாக ஐரோபியர் மதுபானக் கடைகளுக்குப் உபயோகிக்கும் சொல்லின் திரிபு; நானறிய "கள்' எனில் அது கொட்டில் தான்.
உலாத்துங்க!!
யோகன் பாரிஸ்
பிரபா!
முதற் பின்னூட்டத்தில் tavern எனும் சொல்லைத் தவற விட்டுவிட்டேன். என நினைக்கிறேன்.
யோகன் பாரிஸ்
"கள்ளுக் கடைப் பக்கம் போகாதே- உன் காலைப் பிடித்துக் கெஞ்சு கெஞ்சுகிறேன்"
நான் சொல்லேலை, நித்தி கனக ரத்தினம் சொன்னவர்
//sinnakuddy said...
கள்ளுக்கடை பார்த்தது சரி.... அடிச்சு பாக்கேலை என்று நினைக்கிறன்... என்ன இருந்தாலும் நம்ம ஊர் பங்குனி கள்ளு மாதிரி வராது எண்டு நினைக்கிறன்.. எங்கடை ஊர் வழிய உதை தவறணை என்று சொல்றவை..தவறணை தமிழ் சொல்லோ... //
சின்னக்குட்டியர்
ஊரில அப்பத்துக்கு விட்ட கள்ளோட சரி, தனியாக அருந்திய அனுபவம் கிடையாது ;-)
தவறணை எண்டு கள்ளுக்கடையோடு ஒட்டி உறவாடும் அன்பர்கள் அதிகம் பாவிக்கும் ஒரு பிரியமுள்ள சொல். "எணேய், கள்ளுக்கடைக்குப் போறது தவறணை" இதுதான் மருவியிருக்குமோ?
வணக்கம் யோகன் அண்ணா
மலையாளிகள் பேசும் வழக்கிலேயே "கள்ளு" என்று எழுதியிருக்கிறார்கள். கேரள நாட்டில் தமிழ்ப் பெயர்ப்பலகை கண்ட ஆனந்தத்தில் சுட்டுவிட்டேன்.
தவறணைக்கு நீங்கள் தந்த விளக்கம் மிக்க பயனுடையதாக இருந்தது, நன்றிகள்.
//செல்லி said...
"கள்ளுக் கடைப் பக்கம் போகாதே- உன் காலைப் பிடித்துக் கெஞ்சு கெஞ்சுகிறேன்"
நான் சொல்லேலை, நித்தி கனக ரத்தினம் சொன்னவர் //
வணக்கம் செல்லி
மெல்பனிலை நித்தி அண்ணையைக் கண்டால் சொல்லிப்
போடாதாங்கோ ;-))
//"எணேய், கள்ளுக்கடைக்குப் போறது தவறணை"//
:))
//Kanags said...
//"எணேய், கள்ளுக்கடைக்குப் போறது தவறணை"//
:)) //
அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன், யோகன் அண்ணா நல்ல விளக்கம் தந்திருக்கிறார். ;-)))
அழகான பதிவு.
கள்ளுக்கடையை பிரதானப்படுத்தியதற்கு கண்டனங்கள்... :)
இறுதிப்படம் நல்லூர் மந்திரிமனையின் சாயலில் உள்ளது.
//Kanags said...
//"எணேய், கள்ளுக்கடைக்குப் போறது தவறணை"//
சிலேடை நன்றாக இருக்கிறது. கள்ளுக்கடைக்குப் போவது தவறு என்பது இதன்பொருள்.. :)))
Post a Comment