Social Icons

Pages

Friday, November 10, 2006

நிறைவான படகுப்பயணம்

மே 29, காலை 8.00 மணி (இந்திய நேரம்)

விடிகாலை வந்ததை உணர்த்துமாற் போலப் படகுவீட்டின் படுக்கையில் கண்ணயர்ந்த என்னை அந்த இருப்பின் சன்னல் சீலையை ஊடறுத்து வந்த சூரியவெளிச்சம் சுள்ளென்று சுட்டு எழுப்பியது. எழுந்து என்னைத் தயார்படுத்தி வெளியே வந்து பார்க்கின்றேன். சிஜீயும் நண்பர்களும் முன்னதாகவே எழும்பி ஆளுக்கொருவராகத் தம் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் தாமாகவே துடுப்பெடுத்து வலித்துப் போகின்றார்கள். இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பெரும்பாலும் தமக்கெனத் தனியான ஓடம் வைத்துத் தம் அலுவல்களைக் கவனிக்கின்றார்களாம்.

இந்தப் கடற்கழிப் பயணம் போகத் தீர்மானிப்பவர்களுக்கு ஒரு உப குறிப்பு.
பயணம் போகும் போது மறக்காது ஒரு கொழுவர்த்திச் சுருள், தீப்பெட்டி, போதுமான தண்ணீர்ப்போத்தல்கள், போன்றவற்றையும் மறக்காது எடுத்துச் செல்லுங்கள். மதுபானப் பிரியர்கள் என்றார் பியர் சப்ளை உண்டு, தனியாகக் கட்டணம் கொடுக்கவேண்டுமாம்.(இதைப் பற்றி அனுபவ பூர்வமாக ஒன்றும் என்னால் சொல்லமுடியாது.)

தூரத்தில் ஒற்றைப்படகில் வந்த இருவரில் ஒருவர் தன் கையில் இருந்த வலையொன்றைத் துளாவி வீசினார். பின்னர் படகை அப்படியே விட்டுவிட்டு இருவரும் ஏரிக்குள் பொத்தென்று குதித்தார்கள். அவர்களின் கழுத்தைத் தொட்டது அந்த நீர்மட்டம். நீரில் முக்கி எழுந்த அவர்களின் கைகளில் வலையோடு தென்பட்டன துடித்துக்கொண்டிருக்கும் பெரிய மீன்கள். வலையைப் படகில் வீசி அடித்துவிட்டு காக்காய்க் குளியலோடு மீண்டும் வந்தவழியே பயணப்பட்டார்கள் அவர்கள்.

சிஜியின் நளபாகத்தில் முட்டைப்பொரியல் அணிவகுக்க பாண், ஜாம், அன்னாசி நறுக்கல்களோடு கிடைத்தது. உடன் வழக்கம் போல் மசாலா ரீ ஒன்று.
மலையாள இளம் நடிகர் குஞ்சக்கோபோபன் ( காதலுக்கு மரியாதை மலையாளப்பதிப்பில் நடித்தவர்) ஆலப்புழாவில் சொந்தமாக உதயம் ஸ்ரூடியோ வைத்திருக்கிறாராம், தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களின் படப்பிடிப்பு எப்போதும் நடக்குமாம்.


ஒருவர் காலை இறக்கிய தென்னங் கள் முட்டியுடன் படகில் பயணப்படுகின்றார்.

ஊதுபத்தி கொழுத்திப் பக்திபூர்வமாக மீண்டும் படகுச்சேவை ஆரம்பமாகத் தொடங்கியபோது, வானம் சடுதியாகக் தன் மழைக்கர்ப்பத்தைப் பிரசவித்தது.
கரையோர வீடுகளின் முற்றத்தில் நின்ற ஆண்களும் பெண்களும் விறு விறுவென்று தம் வீடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டார்கள். தொடர்ந்த அடைமழையால் காலை 8.30 இற்குப் பயணப்படவேண்டிய படகு தாமதித்து 10 மணியளவில் தான் தூறல் மழையோடு தன் பயணத்தை ஆரம்பித்தது.
முந்தய தினம் எங்களோடு பயணப்பட்ட மற்றும் சில படகு வீடுகள் இரவுப் பொழுதில் வேறு இடத்தில் தரித்திருந்தாலும் காலைப் பயணத்தில் ஒன்றாகக் கூடவே சங்கமித்தன.
கரையோரமாய் சருவச்சட்டியால் தலையை மறைத்த பெண்ணும், குடைக்குள் இருவராக நடைபோடும் ஆண்களும் தென்படுகின்றார்கள். வாழைத்தோப்பையும், இலக்கம் பொறிக்கப்பட்ட கமுகு மரங்களையும் கடந்து படகு பயணப்படுகின்றது.

யூன் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை இருக்கும் மொன்சூன் பருவகாலத்தில் வரக்கூடிய அதீத மழையால் சிலவேளை படகுப்பயணங்களும் ரத்துச் செய்யப்பட்டுவிடுமாம்.

துவாயால் தன்னை மறைத்த குழந்தையொன்று நடுமுற்றத்தில் நின்று கடலைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கின்றது. சிறு பையன் ஒருவன் மூதாட்டி ஒருவர் படகில் இருக்க துடுப்பு வலித்துக்கொண்டு போகின்றான்.படகு வீட்டிலிருந்து எட்டிப் பார்த்த என்னைக் கண்டதும் கொஞ்சம் வெட்கத்தோடு தலைசாய்த்துத் தன் பணியை அவன் தொடர்ந்தான்.

காலை 10.20 இற்கு கரையைத் தொடுகின்றது நம் படகுவீடு. ஈரமான படகின் மரப்படிகளில் கவனமாகத் தாவி வெளியே வந்து, பழையபடி சந்துக்குள்ளால் நடைபோட்டுப் பிரதான வீதியை வந்தடைந்து பின் வாடகைக்கார் மூலம் கெளரி ரெசிடென்ஸ் வந்தடைகின்றேன்.
பயணம் எப்படியிருந்து என்று அன்பாக விசாரிக்கின்றார் கெளரி ரெசிடென்ஸ் முகாமையாளரான அந்த இளைஞன். பெரும் திருப்தியைத் தந்த அந்தப் பயணம் பற்றி வாயாரப் புகழ்ந்து ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.ஆலப்புழாப் படகுப் பயணத்துக்காக அன்றைய காலையில் கூடி நிற்கின்றார்கள் புதிய யாத்ரீகர்கள்.

கெளரி ரெசிடென்ஸ் இலிருந்து அவர்கள் ஒழுங்கு செய்த வாடகைக் கார் மூலம் கொச்சின் நோக்கிப் பயணப்பட ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். ஆலப்புழாவிலிருந்து கொச்சினுக்கு வாடகைக்கார் ரூ 900 வரை முடிகிறது, ஏனெனில் திரும்பிவரும்போது வண்டி வெறுமையாக வரவேண்டியதால் தான் இந்த இரட்டைக்கட்டணம். நான் மேலதிகமாக 5 மணி நேரம் கொச்சினைச் சுற்றிப்பார்க்கவும் இதே காரைப் பாவிக்கலாமேயென்று மொத்தமாக 1500 ரூபா செலவில் கார் ஒழுங்கு செய்யப்பட்டது.

காரில் அமர்கின்றேன். கொச்சின் ஹனீபாவைத்தவிர (பாசப்பறவைகள் இயக்குனர், நடிகர்) வேறொன்றுமே கொச்சின் பற்றி அறியாத எனக்கு, அந்தப் புது உலகம் தேடி என் மனம் ஆலாய்ப் பறக்கப் பயணப்படுகிறது கார் கொச்சின் நோக்கி.

வீண்டும் காணாம்.....

14 comments:

Johan-Paris said...

பிரபா!!
இவர்கள் இத்தாலி வெனிஸ் நகரவாசிகள் போல் வீட்டுக் கொரு படகுடையோர் போல்; படங்கள் நன்று!!
சருவச்சட்டியால் மழைக்கு தலையில் கவிழ்ப்பதை; நினைக்கையில் ஊரில்; பெட்டி;சுழகு,சாக்கு கூட அவசரத்துக்குக் பிடிப்பது நினைவுவந்தது.
யோகன் பாரிஸ்

துளசி கோபால் said...

அருமையான பயணம்தான் பிரபா.
கட்டாயம் ஒருதடவை இதை அனுபவிக்கணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டுட்டீங்க.

சின்னக்குட்டி said...

//வானம் சடுதியாகக் தன் மழைக்கர்ப்பத்தைப் பிரசவித்தது//

கலக்கிறிங்கள்...வசன நடையில்//பியர் சப்ளை உண்டு, தனியாகக் கட்டணம் கொடுக்கவேண்டுமாம்.(இதைப் பற்றி அனுபவ பூர்வமாக ஒன்றும் என்னால் சொல்லமுடியாது//சும்மா சொல்லுங்க...பியர் சப்ளை
மட்டும் தானா...( அநுபவம் உங்களுக்கு இல்லாட்டிலும்)

கானா பிரபா said...

// Johan-Paris said...
பிரபா!!
இவர்கள் இத்தாலி வெனிஸ் நகரவாசிகள் போல் வீட்டுக் கொரு படகுடையோர் போல்; படங்கள் நன்று!!
சருவச்சட்டியால் மழைக்கு தலையில் கவிழ்ப்பதை; நினைக்கையில் ஊரில்; பெட்டி;சுழகு,சாக்கு கூட அவசரத்துக்குக் பிடிப்பது நினைவுவந்தது.
யோகன் பாரிஸ் //

வணக்கம் யோகன் அண்ணா

நீங்கள் சொல்வது சரி அதனால் தான் ஆங்கிலேயர்கள் கிழக்கின் வெனிஸ் என்று ஆலப்புழாவை அழைத்தார்கள்.
எங்களூரில் கையில் எது அகப்படுகிறதோ அது தானே மழைக்குக் குடை:-))

கானா பிரபா said...

//துளசி கோபால் said...
அருமையான பயணம்தான் பிரபா.
கட்டாயம் ஒருதடவை இதை அனுபவிக்கணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டுட்டீங்க. //

வணக்கம் துளசிம்மா

உங்க அடுத்த பயணத்தை ஆலப்புழாவிலேயே வச்சிடுங்க. மிகவும் இதமானதாக இருக்கும்.

அன்பு said...

ரொம்ப கலையான ரசனை உங்களுக்கு...! உங்கள் நிறைவான படகுப்பயணத்தை மிக அழகாக எமக்களித்திருக்கின்றீர்கள்.

விடிகாலை வந்ததை உணர்த்துமாற் போலப் படகுவீட்டின் படுக்கையில் கண்ணயர்ந்த என்னை அந்த இருப்பின் சன்னல் சீலையை ஊடறுத்து வந்த சூரியவெளிச்சம் சுள்ளென்று சுட்டு எழுப்பியது.
என்று ஆரம்பத்திலிருந்து மிக அழகான தமிழில் கலக்கியிருக்கின்றீர்கள்.

கானா பிரபா said...

//சின்னக்குட்டி said
சும்மா சொல்லுங்க...பியர் சப்ளை
மட்டும் தானா...( அநுபவம் உங்களுக்கு இல்லாட்டிலும்)//

வணக்கம் சின்னக்குட்டியர்,

நான் அறிந்தவரை பியர் சப்ளை மட்டும் தான்
:-)), ஆனால் கடலோடி நண்பர் சிஜி சொன்னார் பட டிஸ்கஷனுக்காக இயக்குனர் பலர் இப்படகு வீடுகளைத் தேர்ந்தெடுப்பார்களாம்.

மங்கை said...

அருமையா இருக்கு படங்கள்... உங்க எழுத்தும்...

மலைநாடான் said...

பிரபா!

பதிவுக்கு நன்றி.

நீங்கள் படகுப் பயணத்தில் ரசித்த பல விடயங்களையும், எங்கள் மண்ணிலும் காணலாம். ஆனால் இத்தகைய படகுவீடுகள் அங்கில்லை. வெறும் ஒற்றைப்படகுகள்தான். அந்த இடத்தைப்பற்றி நீங்கள் அறிந்திருந்தீர்களோ தெரியாது. எம்மில் பலரும் அறியவில்லை என்றே எண்ணுகின்றேன். அந்தப்பிரதேசம்தான் தற்போது சிறிலங்கா அரசால் கொத்திக் குதறப்படும் மூதூரும், அதன் சுற்றுட்டாரங்களும். கேரளச்சூழலுக்குச் சற்றும் மாறுபடா மண்வளமும், மக்களும்.

உங்களுடைய இந்தப் பதிவை வாசிக்கும் போது அந்தப்பகுதிகளில் கழிந்த என் அந்தநாள் ஞாபகங்கள் மீண்டும் நினைவிற்கு வந்தன.. கூடவே கண்களில் கண்ணீரும்...

கானா பிரபா said...

//அன்பு said...
ரொம்ப கலையான ரசனை உங்களுக்கு...! உங்கள் நிறைவான படகுப்பயணத்தை மிக அழகாக எமக்களித்திருக்கின்றீர்கள்.//

வணக்கம் அன்பு

என் உலாத்தல் பதிவுகளுக்கு வந்து தங்களின் மேலான கருத்தை வழங்கியமைக்கு என் நன்றிகள்.

கானா பிரபா said...

//மங்கை said...
அருமையா இருக்கு படங்கள்... உங்க எழுத்தும்... //


வணக்கம் மங்கை

தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.

கானா பிரபா said...

// மலைநாடான் said...
பிரபா!

பதிவுக்கு நன்றி.

நீங்கள் படகுப் பயணத்தில் ரசித்த பல விடயங்களையும், எங்கள் மண்ணிலும் காணலாம். ஆனால் இத்தகைய படகுவீடுகள் அங்கில்லை. வெறும் ஒற்றைப்படகுகள்தான்.//

வணக்கம் மலைநாடான்

நீங்கள் சொல்லும் இடங்களை நான் நேரில் பார்த்ததில்லை, ஆனால் இப்போது நீங்கள் இதைப்பற்றிச் சொல்லும் போது மிகவும் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. எங்கள் பூமியின் வளங்கள் நிமிடத்துக்கு நிமிடம் கந்தகத்தால் அழிவதை நினைக்கையில் வேதனை தான் மிஞ்சுகிறது.

Anonymous said...

Hello Praba, wonderfull article about Kerala. When I read all my mind are there. Defintley I will go there some time next august.If I read your article before I would have been there instat of Holiday in Australia. Also I read the article about "Theradiyil Tesikanai Kanden" I am also from Nallur.and far relative to Yogarswamigal, and close relative of Mahatheva Swamigal.Sivathondan Nillayam. He is my Paatta.(his sisters grandson).

Thank you

Siva

கானா பிரபா said...

வணக்கம் சிவா

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள். நான் இந்தக் கட்டுரையில் எதையுமுமே மிகைப்படுத்தாமல் என் பயண அனுபவங்களைத் தந்திருக்கின்றேன். எனவே நீங்கள் கேரளப் பயணம் செல்வதாகச் சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் அதே வேளை என் அனுபவங்களையும் நிச்சயம் பெறுவீர்கள். வேறு ஏதாவது பயணம் தொடர்பில் உதவி தேவைப்பட்டால் எனக்குத் தனிமடல் போடுங்கள்.

யோகர் சுவாமிகள் குறித்த உங்கள் தகவலுக்கும் நன்றிகள். அவர் பற்றிய அறியப்படாத விசயங்கள் இருந்தால் முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.