இம்மாதிரிப் படகுவீடுகள் மலையாள நடிகர்களான ஜெயராம், திலீப் போன்றவர்களிடம் சொந்தமாக உண்டாம். திலீப் வைத்திருக்கும் படகுவீடு ஒரு மாளிகைக்கு ஒப்பானதாக அதிகவசதிகளோடு உள்ளதாம். அதன் ஒரு நாள் வாடகையே 1 லட்சம் ரூபா வரை செல்லும் என்று சிஜி சொன்னார். இயக்குனர் பாசில் 16 படகுவீடுகளைச் சொந்தமாக வைத்துப் படகுச்சேவையில் அவற்றை ஈடுபடுத்திவருகின்றாராம். யம்மாடி.
படகுப் பயணம் தொடர்ந்தது, கொஞ்சத்தூரம் சென்ற பயணம் சூரியன் வேலை முடித்துச் செல்ல ஆயத்தமாகும் வேளை தரை தட்டியது படகு. இன்றிரவு இங்கேயே தங்கிவிட்டு நாளை காலை தான் மீண்டும் பயணத்தை ஆரம்பிப்பது வழக்கம் என்று சொன்னார் சிஜி. அதை ஆமோதித்தது போல என் பயணத்தில் கூடவே வந்த படகு வீடுகள் சற்றுத்தொலைவான துறைகளில் தங்கியிருந்தன.என் படகுவீட்டுக்காரர்கள் அக்கரையில் இருந்த வீட்டில் இருந்து தற்காலிக மின்சார இணைப்பு கொடுத்ததும் படகில் இருந்த மின்விளக்குகள் எரியத்தொடங்கின. அதோடு கழிப்பறை போன்றவற்றிற்குத் தேவையான நீரையும் மோட்டார் பம்ப் மூலம் படகில் இருந்த நீர்த்தாங்கியில் நிரப்பினார்கள். கொஞ்சம் வெளியே சென்று நடப்போம் என்று நினைத்து வெளியே வந்தேன்.படகு தரித்த கரையின் முகப்பில் இருந்த வீடு நம்மூர்ச் சூழ்நிலையை நினைவு படுத்தியது. காரணம் தென்னை மரங்களும் , தீனி தேடும் கோழிகளும், இரைமீட்கும் ஆடுகளும் அந்த இடத்தில் நீக்கமற நிறைந்திருந்தன. சதுப்பான பாத்திகளூடே நடந்து போனேன். சிறு கோயில் ஒன்று தென்பட்டது, சுற்றுப்பிரகார மூர்த்திகளுக்கான பிரகாரங்கள் அரைகுறைச்சீமெந்து தடவிய செங்கற் சுரங்கமாக இருந்தன. கொஞ்ச நேரம் அந்தச்சூழ்நிலையில் நின்றுவிட்டு மீண்டும் படகுவீடு போய் அடைக்கலமானேன். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் இரண்டாம் சனிக்கிழமை நடக்கும் பிரமாண்டமான படகுப்போட்டி இங்கிருந்து தான் ஆரம்பமாகுமாம்.நேரு கோப்பை என்று அழைக்கப்படும் இந்தப்படகுப் போட்டி புன்னமடா என்ற வாவியில் ஆரம்பிக்கும். ஆலப்புழா மக்களுக்கு ஒரு கலாச்சாரவிருந்தாக இருக்கும் இந்தப் படகுப்போட்டி உலகின் பல பாகங்களிலிருந்து படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு களியாட்டமான விளையாட்டு விருந்தாக அமைகின்றது. 16 பெரிய படகுகள், 125 ஆட்கள் என்று இந்தப் படகுப்போட்டியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். நேரு கோப்பை என்று அழைக்கப்படும் இந்தப்படகுப் போட்டி புன்னமடா என்ற வாவியில் ஆரம்பிக்கும். ஆலப்புழா மக்களுக்கு ஒரு கலாச்சாரவிருந்தாக இருக்கும் இந்தப் படகுப்போட்டி உலகின் பல பாகங்களிலிருந்து படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு களியாட்டமான விளையாட்டு விருந்தாக அமைகின்றது.1952 ஆம் ஆண்டு திருவங்கூர் மற்றும் கொச்சினுக்கு வந்த பண்டித ஜவகர்லால் நேரு, கோட்டயத்திலிருந்து ஆலப்புழாவிற்குப் பயணப்படுகையில் பாம்புப் படகுகளின் போட்டியும் சிறப்பு விருந்தளித்தது, அதில் வெற்றியிட்டிய வீரருக்கு நேரு சுழற்கேடயம் வழங்கிக் கெளரவித்தார். அன்றிலிருந்து ஆரம்பித்த இப்போட்டிகள் வருடா வருடம் ஆகஸ்ட் 2 ஆம் சனிவாரம் நேரு கிண்ணப் போட்டிகளாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பாம்புப் படகுகள் சுண்டான் என்று அழைக்கப்படுகின்றன. (படகுப்போட்டிப் படங்கள் & தகவல் உதவி நேரு கோப்பைக்க்கான இணையம்)
சூரியன் தான் போவதாகப் போக்குக் காட்டியவாறே செல்ல தென்னைமரம் ஒன்றிலிருந்து ஒருவர் கள் இறக்கியவாறே இருந்தார், படகுவீட்டுக்காரர்கள் கரையில் இருந்து வலை போட்டு மீன் பிடித்துப் பிடித்தவற்றை இரவு உணவுக்காகச் சுத்தமாக வெட்டிக் கொடுக்க சிஜி இரவுச் சமையலை ஆரம்பித்தார். மீன் பொரியல், தேங்காய்ப் பூ கலந்த காரட் சம்பல், தேங்காய்ச் செட்டுத் துண்டம் கலந்த பயற்றங்காய்த் துவையல், இவற்றுடன் அரிசிச் சோறும் சப்பாத்தியும் சூடாகப் பரிமாறப்பட்டது.இரவாக ஆக நுளம்புகளின் அட்டகாசமும், ஈசல்களின் ஆக்கிரமிப்பும் படகுவீட்டுக்குள் கொட்டமடித்தன. ஆனால் முன்னெச்சரிக்கையாக நான் வாங்கிச் சென்ற Mortein நுளம்புத்திரியைக் காலுக்கடியிலும் மேசையிலுமாகப் பற்றவைத்தேன், புகைக்குழல் இதமாக ஆடியவாறே நுளம்புகளை விரட்டத்தொடங்கியது. இப்படியான இரவுத் தங்கல் நண்பர் குழாமாக வந்து குடித்துக் கும்மாளமடிப்போருக்கு மிகவும் ஏற்றது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.மாலை 7.30 மணிக்குத் தரித்து நின்ற படகுவீடு அந்த இரவு முழுவதும் ஓய்வெடுத்துக்கொண்டது.சுபராத்ரி....
10 comments:
பிரபா அண்ணை,
நிறைய உலாத்துங்கோ..உங்களின் உலாத்தல்களை ஒன்று விடமால் படிக்கிறன். நல்ல சுவாரசியமாய் எழுதுறீயள்
வணக்கம் நிலவன்
தங்களைப் போன்றவர்களின் கருத்து எனக்கு உற்சாகமூட்டுவதாக உள்ளது, வருகைக்கு என் நன்றிகள்.
பிரபா, உங்கள் உலாத்தல் பதிவுகள் அருமையாகப் போகின்றன. குளிர்ச்சியான படங்கள் அனைத்தும் பதிவுக்கு அழகு சேர்க்கின்றன.
// இப்படியான இரவுத் தங்கல் நண்பர் குழாமாக வந்து குடித்துக் கும்மாளமடிப்போருக்கு மிகவும் ஏற்றது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.//
அடுத்தமுறை கூட்டிக்கொண்டு போங்கோ:))
//இப்படியான இரவுத் தங்கல் நண்பர் குழாமாக வந்து குடித்துக் கும்மாளமடிப்போருக்கு மிகவும் ஏற்றது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்//
ஏங்க அசட்டுத்தனமான ஒன்னும் தெரியாத ஆளாய் இருப்பீங்க போலிருக்கு....
ஏன் மனதுக்குள்ளை மட்டும் நினைச்சு பொருமிறீங்க......ஜாலியா..ஜமாய்க்க வேண்டியது தானே...
(பிரபா...தமாசுக்கு...கண்டுக்காதையுங்க)
பிரபா,
வழக்கம்போல பதிவும், படங்களும் அருமை.
//சிஜி கேட்டயத்தைச்...//
அந்த ஊர்ப்பேரு கோட்டயம்
Kanags said...
பிரபா, உங்கள் உலாத்தல் பதிவுகள் அருமையாகப் போகின்றன. குளிர்ச்சியான படங்கள் அனைத்தும் பதிவுக்கு அழகு சேர்க்கின்றன.
// இப்படியான இரவுத் தங்கல் நண்பர் குழாமாக வந்து குடித்துக் கும்மாளமடிப்போருக்கு மிகவும் ஏற்றது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.//
அடுத்தமுறை கூட்டிக்கொண்டு போங்கோ:))
தங்கள் வருகைக்கு நன்றி அண்ணா
அடுத்தமுறை கட்டாயம் ஒரு படையைக் கொண்டு போகிறேன்.
// சின்னக்குட்டி said...
ஏங்க அசட்டுத்தனமான ஒன்னும் தெரியாத ஆளாய் இருப்பீங்க போலிருக்கு....
ஏன் மனதுக்குள்ளை மட்டும் நினைச்சு பொருமிறீங்க......ஜாலியா..ஜமாய்க்க வேண்டியது தானே...//
சின்னக்குட்டியர் அடுத்தமுறை உங்களையும் கூட்டிக்கொண்டு போறன்:-))
//துளசி கோபால் said...
பிரபா,
வழக்கம்போல பதிவும், படங்களும் அருமை.
//சிஜி கேட்டயத்தைச்...//
அந்த ஊர்ப்பேரு கோட்டயம் //
துளசிம்மா, தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.
தட்டச்சும் போது கோட்டை விட்டுவிட்டேன், இப்போது திருத்திவிட்டேன். :-))
படங்கள் அத்தனையும் நெஞ்சைக் கொள்ளை அடிக்கின்றன கானா ப்ரபா..உலா விவரங்களும் அருமை.இனிய அனுபவம் தான் இதெல்லாம் இல்லையா?
ஷைலஜா
வணக்கம் ஷைலஜா
கேரளாவின் அமைதிகலந்த ரம்யம் தான் இந்தத் தொடரை நான் எழுதத்தூண்டியது. எத்தனை முறையும் செல்லலாம் அலுக்காது.
Post a Comment