Social Icons

Pages

Sunday, April 13, 2008

தென் கிழக்காசியா சென்ற பல்லவ மன்னர்கள்: ஓர் அறிமுகம்

கடந்த இரண்டு பதிவுகளிலும் கம்போடியாவிற்கு நான் பயணப்பட்ட அனுபவம் மற்றும் அங்குள்ள தங்குமிட வசதி குறித்து எழுதியிருந்தேன். தொடர்ந்து வரப்போகும் பகுதிகள் கம்போடியாவில் மன்னராட்சி நிலவிய காலகட்டங்களில் நிலவிய செழுமையான ஆட்சியின் எச்சங்களாக விளங்கும் நினைவிடங்கள், ஆலயங்கள், அந்தக் காலகட்டத்துக் கலாசார அரசியல் மாற்றங்கள் பற்றிப் பேசப் போகின்றன. அத்தோடு கைமர் பேரரசில் (Khmer Empire) பல்லவ மன்னர்களில் ஆதிக்கம் குறித்தும் விரிவாகத் தரலாம் என்றிருக்கின்றேன்.

கம்போடியாவில் பல்லவ மன்னர்களின் ஆதிக்கம் குறித்து அறிவதற்கு முன்னர் இந்தப் பல்லவ மன்னர்கள் குறித்த எளிய அறிமுகம் ஒன்று அவசியமாகின்றது. பல்லவ மன்னர்கள் யார் என்பது குறித்த அறிமுகத்தை இந்தியாவில் அவர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் இருந்து கொடுக்கும் போது முழுமை பெறும் என்பது என் எண்ணம். இதற்காக சிட்னி தமிழ் அறிவகம் ஊடாக "தென் இந்திய வரலாறு" (டாக்டர் கே.கே.பிள்ளை முதற்பதிப்பு 1960), "தென்னாடு" ( கா.அப்பாத்துரை எம்.ஏ.எல்.டி, முதற்பதிப்பு 1954 ), தமிழக வரலாறும் பண்பாடும் (வே.தி.செல்லம் (முதற் பதிப்பு 1995) ஆகிய நூல்களை வாசித்து உசாத்துணையாக்கிக் கொண்டேன்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை காஞ்சியை அரசிருக்கையாகக் கொண்டு பல்லவ மன்னர்கள் கி.பி 10 ஆம் நூற்றாண்டு வரை பல நூற்றாண்டுகளாக இவர்கள் தமிழகத்தின் வடக்கில் ஆட்சி செலுத்தினார்கள். பல்லவ மன்னர்களின் பிறப்புக் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வரலாற்று ஆசிரியர்களிடையே இருக்கின்றது.

வடக்கேயிருந்து தென்னாடு வந்தவர்களில் சகர், பார்த்தியர் ஆகியோருடன் பகலவம் அல்லது பாரசீக நாட்டு மக்களாகிய பகலவர் என்ற இனத்தவரும் இருந்தார்கள். பல்லவர்கள் இவர்களின் பிரிவே என்பார் ஒரு சாரார். ஆனால் இவர்கள் ஆந்திரப்பேரரசில் சிற்றரசர்களாகவும் அத்துடன் அவர்களின் கொடியின் சின்னம் ஏறத்தாளச் சோழர்களின் புலிக்கொடியாகவே இறுதிவரை இருந்தது. எனவே பல்லவ மன்னர்கள் சோழர்களுடன் தொடர்பு கொண்ட திரையர் என்போர் ஆவார் என்று சொல்லப்படுகின்றது. பல்லவர், திரையர், தொண்டமான் ஆகிய சொற்கள் தமிழிலக்கியத்தில் ஒருபொருட் சொற்களாகும். முதல் தொண்டமானாக இளந்திரையன் குறிக்கப்பட்டான்.

இன்னொரு கருத்தாக வரலாற்றாசிரியர் சி.இராசநாயகம் அவர்களின் குறிப்புப்படி மணிமேகலை காப்பியத்தை ஆதாரம் காட்டி மணிபல்லவத்து நாககன்னிகைக்கும் தொண்டமான் நெடுமுடிக்கிள்ளி என்ற சோழ இளவலுக்கும் களவொழுக்கத்தில் தோன்றிய தொண்டை மண்டலத்து ஆட்சியாளன் இளந்திரையன் வழி தோன்றியவர்களே பல்லவர்கள் என்றும் மணிபல்லவத்து "பல்லவ" என்ற சொல்லை வைத்து காஞ்சியில் ஆட்சியைத் துவக்கினான் என்று சொல்கின்றார். பல்லவ மன்னர்கள் யார் என்பது குறித்து மா.இராசமாணிக்கனார் எழுதிய விரிவான கட்டுரை, வரலாறு என்ற இணையத்தளத்தில் இங்கே கிடைக்கின்றது.

மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை தென்னாட்டு வரலாற்றில் பல்லவரே நடுநாயகம் வகிக்கின்றார்கள். ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் அவர்கள் பாண்டியப் பேரரசுடன் பல தடவை மோதிக்கொண்டார்கள்.

பல்லவ மன்னர்களுக்கு முற்பட்ட காலமானது களப்பிரர்களது பிடியில் இருந்ததால் பெளத்தம், சமண சமயங்களின் ஆதிக்கமே முன்னர் இருந்து வந்தது. பல்லவர்கள் முதலில் பிராகிருதத்திலும், பின்னர் சமஸ்கிருதத்திலும், இறுதியில் தமிழிலுமாகப் பட்டயம் இயற்றியிருக்கின்றார்கள்.

பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் வாணிகமும் குடியேற்றமும் கிழக்கே கடல் கடந்து இந்து சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் மிகவும் பரந்தது. பல்லவப் பேரரசர் பலர் தாமே கலைஞராக இருந்து ஓவியம், இசை, சிற்பம் போன்ற கலைகளை வளர்த்தார்கள். பல்லவர் ஆட்சிக்காலத்தில் கட்டிட சிற்பக்கலை புதிய பரிமாணம் பெற்று விளங்கியது. இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்து மாமல்லபுரத்து கடற்கரைச் சிற்பங்களும், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாச நாதர் ஆலயமும் பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பைச் சான்று பகிர்கின்றன.

தென்னிந்திய கீழைத்தேய நாடுகளான பர்மா, மலாயா, சுமாத்திரா, ஜாவா, போர்னியோ, சையாம், பூணாம், காம்பூஜா (கம்பூச்சியா அல்லது கம்போடியா), சம்பா ஆகிய நாடுகளோடு ஆரம்பத்தில் ஏற்படுத்திக் கொண்ட வணிகத் தொடர்பு நாளடைவில் தென் இந்திய மக்களும், நாகரீகமும் இந்த நாடுகளில் பரவ வழியேற்பட்டது.

தற்போது கம்போடியா என்று அழைக்கப்படும் காம்போஜ அரசு முன்னர் பூனானின் (Funan) (வியட்னாமிய மொழியில் Phù Nam) ஆட்சியில் இருந்தது. காம்போஜ அரசகுலத்தினை நிறுவியோர் கம்பு முனிவர் மரபினர் எனக்கூறுவர். காம்போஜ நாட்டில் சைவமும் வைணவமும் ஓங்கி வளர்ந்தன. பவவர்மன் என்ற அரசர் தன் தம்பி சித்திரசேனர் உதவியால் சுமார் கி.பி.590 இல் பூனான் (Funan) அரசனைப் போரில் முறியடித்தார். பவமன்னர், சித்திரசேனர் ஆகியோரது கல்வெட்டுக்களும், கி.பி ஏழாம் நூற்றாண்டிலுள்ள பல்லவ மன்னர்களது கல்வெட்டுக்களும் பலவகையிலும் ஒத்திருக்கின்றன. பவமன்னர் சிவபக்தர் என்ற காரணத்தினால் நாட்டில் நான்கு சிவாலயங்களைக் கட்டுவித்தது மட்டுமன்றி நாட்டிலுள்ள பல கோயில்களிலும் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்து மதப்பாடல்களைப் பாடும் படியும், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைப் பாராயணம் பண்ணும்படியுமான வழக்கத்தை ஏற்படுத்தினார். அவருக்குப் பின் வந்த அவர் தம்பி மகேந்திர வர்மன் அண்மையில் இருந்த இந்து நாடான சம்பாவோடு (now southern and central Vietnam) நட்புக் கொண்டிருந்தார்.


மகேந்திரவர்மனுக்குப் பின் வந்த ஈசானவர்மன் மத ஆசாரங்களைக் கண்காணிப்பதற்காக பேரறிஞராகிய வித்தியா விசேட ஆசாரியரை நியமித்திருந்தாராம். கி.பி 548 இலும் கி.பி 549 இலும் உள்ள கல்வெட்டுக்கள் இதைச் சொல்லி நிற்கின்றன. வித்தியா விசேடர் ஒரு கோயில் கட்டி அதில் சிவலிங்கத்தையும், ஹரிஹரர் சிலையையும் பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்தோ சீனாவில் சிவன், விஷ்ணு , சிவனும் விஷ்ணுவும் ஒருங்கே அமையப்பெற்ற ஹரிஹர ஆகிய மும்மூர்த்திகளின் ஆராதனைகள் உயர்நிலையில் இருந்தன என்பதற்கு இவ்வாறான உருவச்சிலைகளும், சாசனங்களும் சான்றாகின்றன.

கி.பி 968 இல் ஐந்தாம் ஜெயவர்மனது ஆட்சிக்காலத்திலுள்ள கல்வெட்டு தஷிணாபதம் அல்லது தக்காணம் சைவசமயத்தின் நடுநிலையாக விளங்கியதைத் தெரிவிக்கின்றது.
கீழைத்தேய நாடுகளில் உள்ள மக்களிடையே தென்னிந்தியப் பழக்கவழக்கங்களும் , கொள்கைகளும் மிகுதியாகப் பரவியிருந்தன. காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களையும், தென்னாட்டில் தோன்றிய சங்கராச்சாரியாரையும் பற்றி அங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிட்டிருக்கின்றன.எனவே இந்த தென் கிழக்காசிய நாடுகளில் குடியேறிய ஆட்சியாளர்களும் சரி, மதத்தலைவர்களும் சரி தமது தாய் நாடு நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இவற்றின் மூலம் புலனாகின்றது.

காம்போஜ நாட்டின் பிற்கால அரசராகிய இரண்டாம் சூர்யவர்மனது ஆட்சியில் (கி.பி 1112- 53)அங்கோர் வாட் என்னும் சிறப்புமிக்க கோயிற்கட்டடப் பணி நடைபெற்றது. தென் இந்திய முறைப்படி கட்டப்பட்ட அவ்வாலயம் திருமால் கோயிலாகும். அதில் மகாபாரதம், இராமாயணம், ஹரிவம்சம் முதலான உருவச்சிலைகள் உள்ளன. அங்கோர் வாட் சிற்பப்பணிகள் போராபுதூர் சிற்பங்களை விட மேலானவை என்பது ஆய்வாளர் கூற்று.

ஆரம்பத்தில் சைவ, வைணவ மதங்களின் எழுச்சியும், செழுமையுமாக இருந்த கம்போடியாவின் சமயப்பண்பாடு நாளடைவில் உள்நாட்டு ஆட்சி, அரசியல் மாற்றங்களால் பெளத்த மத வழிபாட்டிற்கு தாவியது. ஆனாலும் சாதாரண குடிமக்கள் தவிர்ந்த உயர்தர வகுப்பினரிடையே இன்னும் இந்து மத ஆசாரக்கொள்கைகளும், நம்பிக்கைகளும் இறுக்கமாக இருந்துவந்தது. கம்போடியாவின் தற்போதய தலைநகர் நொம்பெங்(Phnom Peng) இல் மன்னரின் புரோகிதர்கள் இன்னாளிலும் அலுவலர்களுக்கு பணியேற்புரை நடத்துவதோடு ஏனைய சடங்குகளையும் பின்பற்றி வருகின்றார்கள். தென் இந்தியக் கிரந்த எழுத்துக்களிலே எழுதப்பட்ட சற்றுப் பிழையுற்ற சமஸ்கிருத மொழியே ஊடக மொழியாக இருந்திருக்கின்றது. தற்போது கம்போடிய நாட்டு மக்களாகிய கமெரர்கள், இந்தியர்கள் ஆகியோரின் பண்பாட்டுக் கலவையாக ஒரு பொதுப்பண்பாடு உருவெடுத்தாலும் இதன் அடிப்படை மூலம் இந்திய வழி நாகரிகமே என்பதில் ஐயமில்லை.

மேற்கண்ட ஆய்வுக்குறிப்புக்கள் இந்திய, இலங்கை ஆராய்ச்சியாளர்களின் பார்வையாக பதியப்பட்டிருக்கின்றது. நான் கம்போடியாவில் சந்தித்த வரலாற்று அனுபவங்கள் எவ்வளவு தூரம் முன் சொன்ன வரலாற்றுக் குறிப்புக்களோடு இயைந்திருக்கின்றன என்பதை தொடரும் பதிவுகளில் பொருத்தமான படங்கள், நான் குறிப்பெடுத்துக் கொண்ட அம்சங்கள் மூலம் தரவிருக்கின்றேன். அந்த வகையில் அடுத்து வரும் பகுதி கைமர் பேரரசில் இருந்த மன்னர்கள் குறித்த பார்வையாக அமையவிருக்கின்றது.

உசாத்துணை:
1."தென் இந்திய வரலாறு", டாக்டர் கே.கே.பிள்ளை (ஆறாம் பதிப்பு 1994, முதற்பதிப்பு 1958)
2. "தென்னாடு", கா.அப்பாத்துரை, எம்.ஏ,எல்.டி (முதற்பதிப்பு செப் 1954, மூன்றாம் பதிப்பு 1957)
3. "தமிழக வரலாறும் பண்பாடும்", வே.தி.செல்லம் (முதற்பதிப்பு 14, ஏப்ரல், 1995, நான்காம் பதிப்பு ஜூலை 2003

Sunday, March 30, 2008

கம்போடியாவில் காலடி வைத்தேன்

மாலை 6.25(கம்போடிய நேரம்) மார்ச் 14, 2008

நான் இடம் மாறி இறங்கியிருந்தது வியட்னாமின் Da Nang என்ற சர்வதேச விமான நிலையத்தில். இது வியட்னாமின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகும். ஏற்கனவே சிட்னியில் இருந்து புறப்பட்ட விமானம் தாமதமாக இறங்கியது, அடுத்த விமானத்தைப் பிடிக்க இன்னொரு உள்ளக ரயில் எடுத்தது என்று நேரவிரயமாகி இந்தக் குளறுபடிக்குக் காரணமாகி விட்டது. இந்த விமானம் வியட்னாமில் தரித்து அங்குள்ள பயணிகளை ஏற்றிக் கொண்டு போகும் என்று நான் இந்த விமானத்தில் ஏற முன்னரேயே அறிவித்தல் விடப்பட்டிருக்கக் கூடும். ஆனால் எனது விமானச் சீட்டிலோ அல்லது, பயண விபரப் பத்திரத்திலோ (Itinerary) இது பற்றி எந்தத் தகவலும் இல்லை. போதாக்குறைக்கு இந்த Silk Air விமானத்தில் ஒவ்வொரு பயணிக்கும் பிரத்தியோகமான காட்சித் திரையும் இல்லை.

விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிப் பெண் அந்த ஆஜனுபாகு பொலிஸ்காரரிடம் பேசியதைத் தொடர்ந்து அவர் என்னை மீண்டும் ஓடுபாதைக்குச் செல்லும் பஸ் மூலம் மீண்டும் நான் வந்த விமானத்தில் சேர அனுப்பிவைத்தார். அசட்டுச் சிரிப்போடு என் இருக்கையில் அமர்ந்தேன். எனக்குள் ஏதேதோ விபரீதக் கற்பனைகள் செய்து உண்மையில் நான் பயந்து போனேன். ஏறக்குறைய எல்லா ஆசிய நாடுகளுக்கும் முன்னர் பயணித்த அனுபவம் இருந்தாலும் ஒவ்வொரு நாட்டின் விமான நிலையக் குடிவரவுப் பகுதியை அண்மித்தால் தானாகவே ஒரு அலர்ஜி எனக்கு வந்துவிடும்.

மேலதிகமாக புஷ் நாட்டுப் பயணிகள் பலர் ஏறி அமர விமானம் Siem Reap நோக்கிப் பயணித்தது. கம்போடியாவுக்குப் பயணம் செய்யும் மேற்குலகத்தவர்கள் பலர் முதலில் வியட்னாமுக்கும் சென்றே வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

Siem Reap-Angkor சர்வதேச விமான நிலையத்தில் கொஞ்சம் ஓடிப் போய், பின்னர் நிதானமாகத் தன் கால்களைப் பதித்தது Silk Air விமானம். விமானத்தின் இருக்கைச் சன்னல் வழியே அந்த விமான நிலையத்தைப் பார்க்கின்றேன். முன்னர் இருந்த நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முகப்புக் கூரை போல கூம்பு வடிவக் கூரையுடன் கலையழகோடு கூடிய புத்தம் புதிய விமான நிலையமாகக் காட்சியளிக்கின்றது. விமான ஒடுபாதையில் வைத்தே ஆளாளுக்குப் புகைப்படமும் எடுக்கக்கூடிய சுதந்திரத் திருநாடு போல இருக்கின்றது. குடிவரவுப் பகுதியிலும் அதிக கூட்டமில்லை. விசா எடுக்காமல் வந்தவர்களுக்குக்குக் கூட உடனேயே அந்தக் குடிவரவுப் பகுதியில் வைத்தே அனுமதிப் பத்திரத்தில் பதியவைத்து நாட்டின் உள்ளே அனுமதிக்கின்றார்கள். பத்து நிமிடத்துக்குள்ளாகவே எல்லாவிதச் சோதனையும் முடிந்து வெளியேறுகின்றேன். விமான நிலைய உட்புறமே அங்கோர் வாட் பாணியில் சிற்பச் சிலைகளோடு காட்சியளிக்கின்றது. வெளியில் பயணப்பையைப் பறித்து இழுத்துக் கொண்டே வாருங்கள் நம் டாக்ஸியில் போகலாம் என்ற பிக்கல் பிடுங்கல்காரகள் ஒருவரையும் காணோம். அட..ஒன்றிரண்டு பொலிசார் கூட தேமேயென்று பேசாமல் இருக்கின்றார்கள். அதிகார தோரணையையும் காணோம். கையேந்தும் பிச்சைக்காரர்கள் இல்லவேயில்லை.விமான நிலையச் சுற்றுப்புறந்தோறும் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக இருந்தது.

பெரும்பாலான தங்குமிடங்கள் தம் விருந்தினர்களை அழைக்க வாடகைக் காரை ஒழுங்கு செய்துவிடுவார்கள். அதே போல் நான் தங்கவிருக்கும் ஹோட்டலின் சார்பில் வாடகைக்கார்க்காரர் என் பெயர் பொறித்த அட்டையோடு காத்து நின்றார். காரில் அமர்ந்ததும் என் வழமையான சுபாவம் போல் சாரதியிடம் பேச்சுக்கொடுக்க முனையும் போது அவராகவே பேச்சை ஆரம்பித்தார். இந்த விமான நிலையம் போன ஆகஸ்ட் 2006 இல் தான் புதிதாகக் கட்டப்பட்டது. இப்போதெல்லாம் இந்த சியாம் ரீப் நகரைச் சுற்றுலாப் பயணிகள் மொய்க்கின்றார்கள். கடந்த மூன்றாண்டுக்குள் மட்டுமே சின்னதும் பெரியதுமாக ஏறக்குறைய 200 ஹோட்டல்கள் வரை திடீரென்று முளைத்துவிட்டன என்றார். அவரின் கூற்றை மெய்ப்பிப்பது போல விமான நிலையத்தில் இருந்து போகும் வழியெங்கணும் சின்னதும் பெரியதுமாக இருமருங்கிலும் ஹோட்டல்கள்....ஹோட்டல்கள் தான். வேறெந்த வர்த்தக நிறுவனங்களினதும் வானளாவிய கட்டிடங்கள் கண்ணில் தென்படவில்லை. கம்போடிய நாட்டின் முதலிடத்தில் இருக்கும் வருவாயே இந்தச் சுற்றுலாத் தொழில் என்பதை இவை கட்டியம் கூறியன. ஒவ்வொரு ஹோட்டல்களுமே அவை சிறிதோ, பெரிதோ தம் முகப்பில் மட்டும் அங்கோர் காலத்து கட்டிடக்கலையை நினைவுபடுத்துமாற்போல கற்சிலைகளையும் கட்டிட அமைப்பையும் தாங்கி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. Angkor என்ற சொல்லை வைத்தே 99% வீதமான ஹோட்டல்களுக்கும், நுகர்வுப் பொருட்களுக்கும் பெயரிட்டிருக்கின்றார்கள். கம்போடியாவில் ஏகபோக பியர் பானத்தில் பெயர் Angkor Beer.
கம்போடியா குறித்த அறிமுகத்தை புதிதாக வரும் பயணிக்குச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே வந்தார் சாரதி. நான் தங்கவிருக்கும் ஹோட்டலை அண்மித்தது கார்.

ANGKORIANA Hotel இதுதான் நான் தங்க ஏற்பாடு செய்திருக்கும் ஹோட்டல். பயணத்துக்கு முன்னரே Lonely Planet கையேட்டின் உதவியோடு ஒவ்வொரு ஹோட்டலாக ஆய்ந்து கடைசியில் சிக்கிய மீன் இது. காலை உணவுடன் தங்கும் கட்டணமாக 45 அமெரிக்க டொலரை நாளொன்றுக்கு அறவிடுகின்றார்கள். இதை விட மலிவான தங்கும் இடங்களும் இருக்கின்றன. ஆனால் கொடுக்கும் காசு குறையக் குறைய, தங்குமிடத்தின் வசதி குறைந்து, பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என்பது பின்னர் நான் கண்டு தெரிந்த உண்மை. கம்போடியாவில் நாளொன்றுக்கு 10 அமெரிக்க டொலரில் இருந்து 2000 அமெரிக்க டொலர் வரையிலான பலதரப்பட்ட வாடகையோடு தங்குமிடங்கள் இருக்கின்றன. நாளொன்றுக்கு 2000 அமெரிக்க டொலர் கட்டித்தங்கும் Raffles Grand Hotel D'Angkor இன் படம் இதோ. (நமக்கெல்லாம் படத்தில் மட்டுமே பார்க்கலாம் ;-)

பொதுவாக நம் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்கும் போது அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஓரளவு சிறப்பாகவும், இயன்றவரை நாம் சுற்றிப்பார்க்கப் போகும் இடங்களுக்கு அல்லது நகரப்பகுதிக்கு அண்மித்ததாகவோ இருந்தால் சிறப்பாகவிருக்கும். நான் தங்கியிருந்த ANGKORIANA ஹோட்டலுக்கு நேர் எதிரே Angkor தேசிய நூதனசாலை இருந்ததும், பதினைந்து நிமிடத் தொலைவில் Siem Reap பட்டணம் இருந்ததும் எனக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. எனது ஹோட்டலின் உட்புறம் தோறும் கலைநயம் விளையும் ஓவிய, சிற்ப அலங்காரங்களுடன் கொடுத்த காசுக்கு மேலாகவே இந்த ஹோட்டல் அமைந்திருந்தது. இந்த ஹோட்டல் குறித்த மேலதிக விபரங்களை அறிய: ANGKORIANA Hotel


ஹோட்டலின் உள்ளேயிருந்த சில காட்சிப்பொருட்கள்




நான் பயணப்படுவதற்கு முன்னர் சிட்னியில் வைத்தே நானூறு அமெரிக்க டொலர்களாக மாற்றிக் கொண்டேன். அதில் ஐம்பது டொலரில் மட்டும் ஒரு டொலர் நோட்டுக்களாக ஐம்பதை எடுத்துக் கொண்டேன். பணம் மாற்றும் போது வங்கியில் இருந்தவர் கொடுப்புக்குள் சிரித்தவாறே தந்திருந்தார். ஆனால் இது எவ்வளவு தூரம் கைகொடுக்கும் என்பது கம்போடியா போய் வந்தவருக்குத் தான் தெரியும். கம்போடியாவின் நாணயம் ரியால். ஒரு அமெரிக்க டொலர் என்பது சராசரியாக 4000 கம்போடிய ரியாலுக்கு சமன். இந்தக் கணக்கில் பார்த்தால் பயணம் போகும்போது கூடவே ஒரு லாரியை ஒழுங்குசெய்தால் தான் கம்போடிய நோட்டுக்கட்டுக்களை அடுக்க இலகுவாக இருக்கும். இந்த நிலையை வெகுவாக உணர்ந்த கம்போடியர்கள் இப்போதெல்லாம் தேனீர்ச்சாலையில் தேனீர் குடிப்பதில் இருந்து எல்லாவற்றுக்குமே அமெரிக்க டொலரையே புழக்கத்தில் கொண்டுவந்து விட்டார்கள். கழுதை பசித்தால் கூட கம்போடிய நோட்டைத் தொடாது போல. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீப் போத்தல் என்றால் ஒரு டொலருக்கு இரண்டு, பத்து நிமிஷ சவாரி என்றால் ஒரு டொலர். மீட்டர் சார்ஜ் எல்லாம் கிடையாது. எல்லாமே குத்துமதிப்பில் அமெரிக்க டொலராகக் கேட்கின்றார்கள். ஒரு லீட்டர் பெட்ரோலே 4200 கம்போடிய ரியாலுக்கு மேல் போகின்றது. ஹோட்டலில் நிமிடத்திற்கு மூன்று அமெரிக்க டொலரை தொலைபேசும் கட்டணமாக அறவிடுகின்றார்கள். இதுதான் கொஞ்சம் சூடு.

ஹோட்டல் வந்ததும் முதல் வேலையாக வரவேற்புப் பகுதிச் சேவையாளர்களை நட்புப் பாராட்டி வைக்கிறேன். மேற்கொண்டு நான் செய்யப்போகும் பயண அலுவல்களுக்கு இவர்களிடம் ஆலோசனை கேட்க இலகுவாக இருக்கும் என்ற ஒரு சுயநலம் இருந்ததும் ஒரு காரணம். பின்னர் அது மிகவும் கைகொடுத்தது.

Tuesday, March 25, 2008

கம்போடிய உலாத்தல் ஆரம்பம்


பத்து நாள் குறுகிய கால விடுமுறையாக ஈஸ்டரை ஒட்டி எனக்கு வாய்த்தது. இரண்டுவருட இடைவெளியாகி விட்டது. வெளிநாடு எங்காவது கிளம்பலாம் என்றால் எனக்கு முதலில் தோன்றியது கேரளாவில் கடந்தமுறை விடுபட்ட பகுதிகள் தான். ஆனால் இருக்கும் பத்து நாளுக்கு இதுவெல்லாம் தேறாதென்று திடீரென்று முடிவு கட்டி கம்போடியா, சிங்கப்பூர், மலாக்கா போன்ற இடங்களுக்கு என் விடுமுறையை மாற்றிக் கொண்டேன். ஏற்கனவே கம்போடியாவுக்குச் சென்று திரும்பியவர்களிடமும் சில தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். தனியே கம்போடியா பயணம் என்றால் முழுமையான வரலாற்றுச் சுற்றுலாவாக வந்துவிடும் என்று நினைத்து, இடையே கொஞ்சம் நம் கேளிக்கைகளுக்கும், பொழுதுபோக்கிற்கும் உதவும் மலேசியா, சிங்கப்பூரையும் சுற்றுலாப் பட்டியலில் சேர்த்துக் கொண்டேன். நான் செல்லவிருக்கும் நாடுகளுக்கு விசாச் சிக்கல் என்பதும் பெரியதாக இல்லை என்பதும் இந்தக் குறுகிய காலப் பயணத்துக்கு உதவியாக இருந்தது.

மலேசியா, சிங்கப்பூருக்கு மேலதிக விசா தேவையில்லாமல் இருந்தது. கம்போடியாவுக்கு மட்டுமே விசா எடுக்கவேண்டியிருந்தது. அதிலும் இன்ப அதிர்ச்சி ஒன்று கிடைத்தது. கம்போடியாவுக்கான விசாவினை அந்த நாட்டின் குடிவரவு இணையத்தளத்தில் விண்ணப்பித்தே எடுக்கமுடியும். கம்போடியாவின் இந்த e-Visa வினை எடுக்க ஒரு பாஸ்போர்ட் அளவு உங்கள் புகைப்படமும், இணைய மூலம் பணம் கட்டும் வசதியும் ( 25 அமெரிக்க வெள்ளிகள்) இருந்தால், அவர்களின் இணையத்தளத்திலேயே பத்து நிமிடங்களுக்குள் விண்ணப்பித்து, படத்தையும் அந்த இணைய விண்ணப்பத்திலேயே இணைத்தும் விடலாம். இதை நான் ஒரு நாள் இரவு பத்துமணிக்கு விண்ணப்பித்தபோது அடுத்த நாட்காலை ஒன்பது மணி வாக்கில் என் மின்னஞ்சலைப் பார்த்தபோது விசாவை என் புகைப்படம் இணைத்து அனுப்பியிருந்தார்கள். இந்தத் துரிதமான செயற்பாடே இந்த நாட்டுக்குப் பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகள் இன்றைய காலகட்டத்தில் பயணிப்பதற்கு ஒரு காரணமும் கூட. இந்தப் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு கூட இணையத் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு இதுவோர் உதாரணம். ஆனால் விதிவிலக்காக இந்த நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளவர்கள் அந்தந்த நாட்டில் இருக்கும் கம்போடிய தூதுவராலயம் மூலமே விசாவினை விண்ணப்பிக்க முடியும்: Afghanistan, Algeria, Arab Saudi, Bangladesh, Iran, Iraq, Pakistan, Sri Lanka, Sudan.

மேலதிக விபரங்களுக்கு

அடுத்த வேலையாக Lonely Planet இன் கம்போடியா குறித்த சுற்றுலா வழிகாட்டி நூலை வாங்கிக் கொண்டேன். இணையமூலமாக எத்தனையோ தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதிலும், இந்த நூலின் வசதி என்னவென்றால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த ஒரு தகவல் களஞ்சியமாக ஒருக்கின்றது. கூடவே அந்தந்த நாடுகளில் உலாவும் போதும் கையோடு எடுத்துச் சென்று மேலதிக விபரங்களையும், மற்றவர்களைக் கேட்காமலேயே பெற்றுக் கொள்ள முடியும்.

பொதுவாக கம்போடிய பயணம் மேற்கொள்வோர் தம் பயண ஏற்பாட்டைச் செய்யும் போது விமானச் சீட்டு முகவர்கள் அந்த நாட்டுத் தலைநகர் Phnom Penh என்ற இடத்தையே சேருமிடமாகப் போட்டு விடுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை என் பயணம், கம்போடியக் கோயில்கள் நோக்கிய உலாத்தல் என்பதால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும்/கட்டாயம் போகும் Siem Reap என்ற இடத்தையே சேருமிடமாக உறுதிப்படுத்திக் கொண்டேன். Siem Reap இல் தான் தொன்மை மிகு ஆலயங்களும், வரலாற்று நினைவிடங்களும் கொட்டிக் கிடக்கின்றன.

காலை 8.50 மணி, மார்ச் 14, 2008

சிங்கப்பூர் விமான சேவையின் புதிய Air bus A380 என்ற மகா வானூர்தியில் செல்லப் போகின்றோமே என்ற சந்தோஷமும் உள்ளுர ஒட்டியிருந்தது. இருபது நிமிடத் தாமதிப்பில் விமானம் தரையை விட்டு வானுக்குத் தாவியது. எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்து சுற்றும் முற்றும் பார்க்கின்றேன். அவ்வளவு பெரிய மாற்றம் ஒன்றையும் காணவில்லை. ஊத்தை படியாத Remote control கருவியைத் தவிர.
வர்த்தக, மற்றும் முதற்தர வகுப்பு ஆசனங்களில் இருப்போருக்கு மேலதிக வசதிகள் இருக்கும் போல.யாரோ ஒரு புண்ணியவான் பரிந்துரையில் வேல், மருதமலை, மலைகோட்டை போன்ற மூன்றாந்தரக் குப்பைகள் ஓடும் திரையில் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு ஹெட்போனை மாட்டி விட்டு சீனி கம் பாடல்களை ராஜா இசைய வைக்க, உள்ளூர் நூலகத்தில் எடுத்த சுஜாதாவின் "புதிய பக்கங்களை" பிரித்துப் படிக்கின்றேன்.

ஏற்கனவே தாமதித்து விமானம் கிளம்பியதால் Siem Reap இற்கு போகும் அடுத்த விமானத்துக்கான நேரம் நெருங்கிவிட்டது. சிங்கப்பூரில் இறங்கி Siem Reap செல்லும் விமானத்தை எங்கே பிடிப்பது என்று கணினித் திரையில் பார்த்தால், அடுத்த Terminal இற்கு உள்ளக ரயில் மூலம் தான் செல்லவேண்டுமாம். பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு கழுத்தில் கொழுவியிருந்த பயணப் பொதியுடன் ஓட ஆரம்பித்தேன். ரயில் பிடிக்கும் இடத்திற்கு இளைக்க இளைக்க ஓடிவந்து எதிர்ப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பணிப்பெண்ணிடம் " என் விமானம் கிளம்ப 10 நிமிடம் தான் பாக்கி, ஏதாவது செய்யமுடியுமா? " என்று கேட்டேன். தன்னிடம் இருக்கும் வயர்லெஸ் கருவி மூலம் அவர்களுக்கு என் வருகையைத் தெரியப்படுத்துவாள் என்ற நப்பாசை தான் காரணம். அவளோ "ரயில் பிடித்துப் போய் முயற்சி செய்த்து பார்" என்று சொல்லிவிட்டு தன் செல்லில் யாரோடோ கிசுகிசுக்க ஆரம்பித்தாள். திரும்பவும் நற..நற..

என்னைப் போலவே இன்னும் சில பேதைகளும் தாமதமாகவே சேர்ந்ததால், Siem Reap செல்லும் விமானம் எமக்காகக் காத்திருந்து தாமதித்தே கிளம்பியது. சிங்கப்பூர் விமான சேவையின் Silk Air என்ற சேவை அது. அதில் வீடியோவும் கிடையாது, பாட்டும் இல்லை. சுஜாதாவின் "நில்லுங்கள் ராஜாவே" யை எடுத்துப் படிக்கின்றேன்.
"வியட்னாமில் போதைப் பொருட்களைக் கடத்துவோருக்குக் கடும் தண்டனை கிடைக்கும்" என்ற அறிவித்தலை ஒரு பணிப்பெண் ஒலிபெருக்கி மூலம் விடுக்கின்றாள்.
"உவளென்ன Siem Ream செல்லும் விமானத்துக்கு வியட்னாம் எண்டு சொல்லுறாள், வியட்னாம்காரி போல " என்று எனக்குள் சிரித்துக் கொண்டே படிப்பதைத் தொடர்கின்றேன்.
விமானம் தரையைத் தொடுகின்றது. போன 2006 இல் ஊருக்குப் போனபோது போன இரத்மலானை விமான நிலையம் போல ஒரு தோற்றத்தில், ஆங்கிலமில்லாத ஏதோ ஒரு மொழியில் விமான நிலையத்தில் சுற்றும் முற்றும் எழுதியிருக்கின்றது. பக்கத்தில் ஒரேயொரு வியட்னாம் விமானம் மட்டும் தரித்து நிற்கின்றது. வியட்னாமுக்கு பக்கத்தில் கம்போடியா இருப்பதால் அதன் செல்வாக்கு அதிகம் போல என்று நினைத்துக் கொண்டே விமானத்தில் இருந்து இறங்கி, விமான நிலைய குடிவரவுப் பகுதிக்கான பஸ் பிடித்துப் போய் குடிவரவுப்பகுதிக்கான வரிசையில் முதல் ஆளாக ஓடிப் போய்ச் சென்று அங்கிருந்த பெண் அதிகாரியிடம் என் பாஸ்போர்ட்டையும், e-Visa பிரதிகளையும் ஒப்புவிக்கின்றேன். எல்லாவற்றையும் திரும்பத் திரும்பப் பார்க்கின்றாள். "என்ன கோதிரிக்கு இவள் கன நேரம் மினக்கெடுத்துறாள்" என்று உள்ளுக்குள் பயணக்களைப்பில் புழுங்கினேன்.

தூரத்தே இருந்த ஆஜனுபாகுவான ஒரு போலிஸ்காரரை அழைத்தாள். இரண்டு பேரும் தம் மொழியில் ஏதோ பேசுகின்றார்கள். அவர்கள் சாதாரணமாகப் பேசினாலே சண்டை பிடிப்பது போலிருக்கின்றது. தன் பேச்சை அவனிடம் இருந்து துண்டித்து என்னிடம் அரைகுறை ஆங்கிலத்தில் " நீங்கள் இறங்கியிருப்பது வியட்னாம் நாட்டில்" என்றாள்.
எனக்கு உடம்பெல்லாம் ஒரே நேரத்தில் வியர்க்க ஆரம்பித்தது.

Sunday, February 24, 2008

Dr K.J.ஜேசுதாஸின் சாஸ்திரிய இசையருவியில் கலந்தேன்..!

என்னுடைய இத்தனையாண்டு வாழ்வில் சாஸ்திரிய சங்கீதக் கச்சேரிகளுக்கு இதுவரை மினக்கெட்டுப் போன அனுபவமே கிடையாது. வானொலியில் நிகழ்ச்சி செய்யும் போது சில தகவல் துணுக்குகளின் உதவியோடு ஒரே ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப்பாடல்களையும் திரையிசையில் வந்த பாடல்களையும் இணைத்து நிகழ்ச்சி படைத்த அனுபவம் மட்டுமே உண்டு. டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் சிட்னிக்கு வருகின்றார் என்ற விளம்பரங்கள் வந்ததும் இம்முறையாவது ஒரு நேரடி நிகழ்ச்சியைக் காண வேண்டும் என்ற ஆவலில் நேற்று சிட்னி Hills Centre, Castle Hill இல் நடந்த சாஸ்திரிய இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.

வழமையாக இப்படியான இசை நிகழ்ச்சிகளைத் திறம்பட ஒருங்கிணைத்துத் தரும் Sydney Symphony entertainers மற்றும் Pyramid Spice centre ஸ்தாபனத்தாரோடு இணைந்து கொடுத்திருந்தார்கள். மாலை ஆறு மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியின் ஆரம்பப் பகுதியில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த கலைஞர்கள் குறித்த அறிமுகமும் இடம்பெற்றது. கடம் -ராதா கிருஷ்ணன், வயலின் - மகாதேவ சர்மா, மிருதங்கம் - திருவாரூர் பக்தவத்சலம், தம்புரா - பாபு அனில் குமார் என்று அவர்களின் இசைப்பின்னணி குறித்த தகவல்கள் அப்போது தரப்பட்டது. இந்த அறிமுகப் பகுதியில் பக்கவாத்தியக் கலைஞர்கள் மேடைக்கு வராமல் இடம்பெற்றதை தவிர்த்து, ஒவ்வொருவர் மேடையில் அமரும் போது கொடுத்திருக்கலாம்.

தொடர்ந்து கலைஞர்கள் சகிதம் ஜேசுதாஸ் அவர்கள் வந்து அமர்ந்து கொண்டார். முதல் வரிசையில் இருந்த எனக்கு நேர்முன்னே ஜேசுதாஸ் அவர்களைக் கண்டதும் மெய்சிலிர்த்தது. 68 வயது நிரம்பிய சங்கீதப் பாரம்பரியம் ஒன்று கண்முன்னே சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தது.

இப்படியான நிகழ்ச்சிகளை வெளிநாடுகளில் வைப்பதில் உள்ள சவால் என்னவென்றால் பல்வேறு மொழிபேசும் இந்தியர்கள் வந்து கலந்திருப்பார்கள். அவர்கள் எல்லோரையுமே திருப்திப்படுத்தக் கூடியவாறு அந்தந்த மொழியின் பாரம்பரியமான பாடல்களைக் கொடுக்க வேண்டும். இதையே தன்னுடைய அறிமுக உரையில் ஜேசுதாஸ் குறிப்பிட்டு என்னால் முடிந்த அளவிற்கு நான் என் பங்கைச் செய்கின்றேன் என்றார். கூடவே மொழிவாரியான பகுப்பை இந்த இசையில் புகுத்தாமல், ஒருவர் ஹிந்துஸ்தானி படித்தாலோ அல்லது கர்னாடக இசை படித்தாலோ அந்தத் துறையில் தம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுத் தனது சாஸ்திரிய சங்கீத மடையைத் திறந்தார். கர்னாடக இசையினைத் தெளிவுறக் கற்றதால் தான் எனக்கு ஹிந்திப்பாடல்களை அந்த மொழி ரசிகர்களைக் கவரும் விதத்தில் பாட முடிந்தது. காரணம் கர்னாடக சங்கீதம் என்றாலும் சரி, ஹிந்துஸ்தானி என்றாலும் சரி அடிப்படையில் இருக்கும் இசை இலக்கணம் பொருந்தி வரக்கூடியது என்றும் கூறினார்.

எனக்கு சாஸ்திரிய சங்கீதம் குறித்த பரிச்சயம் இல்லையென்றாலும், ஜேசுதாஸின் கணீரென்ற குரலைக் கண்மூடிக் கேட்பதே சுகமாகப் பட்டது."வாதாபி கணபதிம்" கீர்த்தனையை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு, "அழுதோம் அணைக்கும் அன்னை" என்ற பாடலையும், "என்ன புண்ணியம் செய்தனை சற்குரு நாதா" பாடலைக் குருவுக்கும் அர்ப்பணித்தார்.

எமது இசைவளர்த்த முன்னோர்கள் ராகம், தானம், பல்லவி இவற்றுக்கெல்லாம் தனித்தனி நாள் கொடுத்து, ராகத்துக்கு ஒரு நாள், தாளத்துக்கு இன்னொரு நாள் என்று இடைவிடாது தொடர்ந்து தமது சங்கீதத்தை, தம்மை மறந்து இசைத்த காலம் எல்லாம் வரலாற்றில் இருந்தது என்றார். தொடர்ந்து ஹிந்துஸ்தானியில் அமைந்த "நிர்தோனம்" என்ற பாடலை கர்நாடகப் பாணியில் பாடுகின்றேன் என்ற அறிமுகக் குறிப்புடன் தொடர்ந்தார். "மா பவானி துர்கா" பாடலும் பரவசப்படுத்தியது. ஓவ்வொரு பாடலைப் பாடும் போதும் ஒரு பக்கம் அமர்ந்த வயலின் வித்துவானையும், மறுப்பக்கம் அமர்ந்திருந்த மிருதங்க வித்துவானையும் பார்த்து ஜேசுதாஸின் கண்கள் அடிக்கடி முறுவலித்துக் கொண்டிருந்தன. நாங்களும் கூடவே வருகின்றோம் என்று அவர்களும் தம் வாத்திய வல்லமையால் நிரூபித்துக் கொண்டிருந்தார்கள்.

பாடல்களுக்கு இடையில் ஒரு முறை ஏதோ காரணமாக எழுந்த தம்புரா வாசித்த இளைஞர் வேட்டி தடக்கி விழுந்து விட்டார். கொஞ்சம் பதறி விட்டு " நாமளும் சின்ன வயசில் நிறைய சந்தர்ப்பங்களில் இடங்களில் தடக்கி விழுந்து எழுந்தவங்க தான், இப்படி தடக்கி விழுந்து தான் ஒரு உயந்த நிலையை அடைய முடியும் " என்று சடுதியாகச் சொல்லி அரங்கத்தைக் கொல்லிட வைத்தார் ஜேசுதாஸ்.

வயலின்காரரைப் பார்த்து உங்களுக்குப் பிடிச்ச ராகம் எது என்று ஜேசுதாஸ் கேட்க அவரும் "சங்கராபரணம்" என்று சொல்லி வைக்க, தொடர்ந்தது சங்கராபரணம் குறித்த ஜேசுதாசின் சிலாகிப்பு தகுந்த விளக்கங்களோடு தாவியது. இப்படிப் பல இடங்களில் வெறுமனே இசை நிகழ்ச்சியாக இல்லாது கொண்டு போனது புதிதாக இசை கற்பவர்களுக்கும், வெறும் கேள்வி ஞானம் இருப்பவர்களுக்கும் நிச்சயம் உபயோகமாக இருந்திருக்கும்.

"எந்தரோ மஹானு பாவலு" என்று திடுதிப்பென்று எந்த அறிமுகமும் கொடுக்காது இவர் தாவியபோது அரங்கம் கரகோசத்தால் நிறைத்தது. அந்த இடத்திலேயே சற்றே நிறுத்தி விட்டு மிருதங்கக்காரரைப் பார்த்து "பார்த்தீங்களா! எந்தரோ மஹானு பாட்டுக்கு சிட்னியில் கூட மகத்துவம் கிடைக்குது இல்லையா" என்று ஜேசுதாஸ் கேட்கவும், அவரும் கண்கள் குவியச் சிரித்தவாறே ஆமோதித்துத் தலையாட்டினார்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பே ஜேசுதாஸ் அவர்கள் முழுமையான சுதந்திரத்துடன், பாடியும் பேசியும் கொடுக்க முடிந்தது முதற்காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் மொழி தெரியாத பாடல்களுக்கெல்லாம் இரண்டு வரி பாடி பின் தமிழிலோ ஆங்கிலத்திலோ அவற்றுக்கு அர்த்தம் கொடுத்து மீளவும் விட்ட இடத்தில் பாடியது வெகு சிறப்பு.

"முன்பெல்லாம் ஒவ்வொரு ஸ்வரங்களின் ஒலிக்குறிப்புக்கள் கொடுத்து எப்படியெல்லாம் இந்த கர்னாடக இசையை பின்னாளில் வரும் தலைமுறைக்கெல்லாம் இலகுவாகப் புரியும் படி கொடுக்கவேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றார்கள் நம்முன்னோர்கள்" என்று விட்டு உதாரணங்களோடு ஒரு குறும் சங்கீத விரிவுரையைக் கொடுத்து "இப்பல்லாம் பாஸ்ட் பூட் கேட்டு வர்ரவங்க தான் ஜாஸ்தி, வேகவேகமா சங்கீதத்தைக் கத்துக்கணும், வேக வேகமா பணம், புகழ் சம்பாதிச்சு செட்டிலாகணும்கிறது தான் இப்ப இருக்கும் யங்கர் ஜெனரேஷனின் மனோபாவம்" என்று தன் ஆதங்கத்தைக் கொடுத்தார்.

"கெளசல்ய குமாரனை தினமும் துதிப்பாய் மனமே" பல்லவியை எடுத்துக் கொண்டு, ஒரு பூ மெட்டை எடுத்து மெது மெதுவாக அதன் இதழ்களைப் பிரித்து விரித்து வைப்பதுபோல நிறையச் சங்கதி கொடுத்து நீண்டதொரு பாயாசப் பந்தியைக் கொடுத்தார். தொடர்ந்து பக்க வாத்தியமாக இருந்த வயலின், மிருதங்கம், கடத்தின் அமர்க்களமான ஆலாபனை களைகட்டி இடைவேளைக்குக் கொண்டு போய் நிறுத்தியது.

இடைவேளையில் எதிர்பாராத அனுபவமாக கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கின்றது. அவரைக் கண்டதும் பேச வாயில் இருந்த வார்த்தைகள் அழிந்து விட்டன. கிடைத்த இருபது நிமிட இடைவேளையில் தன்னை ஆசுவாசப்படுத்த இருந்தவர் சிரித்த முகத்துடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கவும் வருகின்றார். புகைப்படம் எடுத்து விட்டு அவரின் கையை இறுகப் பற்றி விட்டுப் பிரிகின்றேன்.

இந்தக் கச்சேரி இடைவிடாது தொடர்ந்து நிறைவெய்தும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் தொடர்ந்த இடைவேளைக்குப் பின் தனிப்பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைந்த நிகழ்வாக "திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே" யோடு தொடங்கியது. "ஜெப தீப் ஜலே" ஹிந்துஸ்தானிப் பாடலைத் தொடர்ந்து வந்தது "சந்தனம் ஜவ்வாதும் சேர்ந்து மணங்கமிழ".

"சந்தனமும் ஜவ்வாதும்" பாடலுக்கு இசையமைத்தவர் ஜெய விஜயா என்ற இந்து, இந்தப் பாடலை பக்தி மணம் கமிழ எழுதியவர் சிங்கப்பூர் வாழ் ஒரு முஸ்லீம் நண்பர், நான் பிறப்பில் எந்த மதம் என்று உங்களுக்கே தெரியும். ஆனால் மதங்களைக் கடந்து என்னைப் போல எத்தனையோ பில்லியன் மானுடர்கள் வந்து போனாலும் நிலைத்திருக்கும் இறைவன் ஒருவனே, என்னுடைய குரு தட்சணாமூர்த்தி ஸ்வாமிகளை நான் இறைவனாகவே போற்றி வணக்குகின்றேன்" என்று இந்தப் பாடலைத் தொடர்ந்து தகவலோடு கூடிய நல்ல கருத்தை விதைத்துச் சென்றார் ஜேசுதாஸ்.

"என்னைத் தன் வீட்டிலேயே தங்க இடம் கொடுத்து ஆளாக்கி விட்டவர் குருநாதர் செம்பை வைத்யநாத பாகவதர். அவர் இறந்த பின் என்னுடைய கச்சேரிகளுக்கெல்லாம் வரும் போது முன் வரிசையில் இருந்து அந்தம்மா (செம்பை வைத்யநாதர் புத்திரி) தவறாமல் கேட்கும் பாட்டு இது" என்று "தேனினினுமையிலும் ஏசுவின் நாமம் திவ்யமதுரமே" என்ற சுத்தபத்தமான தமிழ்ப்பாட்டைப் பாடிக்கொண்டிருக்கும் போது நாம் எங்கோ அகண்ட வெளிப்பரப்பில் மாசுபடாத சூழ்நிலையில் சுதந்திரப்பறவையாய் பறப்பது போல மனம் இலேசாகியது. "எந்தே கண்ணனு கறுப்பு நிறம்" என்ற மலையாளப்பாடலைப் பாட ஆரம்பித்த போது மூலைகளில் இருந்து எழும்பிய கரவொலிகளைக் கேட்டு ஜேசுதாஸ் முறுவலித்துக் கொண்டு மிருதங்கக்காரரையும், வயலின் காரரையும் கண்களால் வெட்டி விட்டுத் தொடர்ந்தார். இந்தப் பாடல் "போட்டோகிராபர்" என்ற மலையாளப் படத்திலும் வந்திருக்கின்றது. அதைக் காண:


"அன்னபூர்ணி விசாலாட்சி" பாடலைப் பாடும் முன் இந்தப் பாடலை நிறையப்பேர் பாடும் போது "வீசாலாட்சி" என்று நீட்டி முழக்கி அதன் அர்த்தத்தைச் சிதைப்பதாகக் குற்றம் சாட்டி விட்டுப் பாடினார்.

"பம்பை மன்னவன் துணையோடு
செம்பை நாதனின் நினைவோடு
பந்த பாசம் இணையோடு
உலகம் எனக்கொரு தாய் வீடு"

என்ற தமிழிசைப்பாடலும் அர்த்தம் புரியவைக்கும் வரிகளோடு கலந்து சிறப்பித்தது.
"கிருஷ்ணா நீ பேகனே" பாடலை ஓவ்வொரு வித்வான்களும் தமக்கேயுரிய பாணியில் கொடுப்பார்கள். அதையே ஜேசுதாஸும் செய்தார். ஐயப்பனுக்கான ஒரு தோத்திரத்தை எந்த விதமான ஆலாபனையும் இல்லாமல் கொடுத்து விட்டு திடுதிப்பென்று "ஹரிவராசனம் விஸ்வ மோகனம்" என்ற நதியில் கலந்த போது ஏற்கனவே அறிந்த அந்தப் பாட்டு இன்னும் உச்சபட்ச ரசிப்பையும், இறையுணர்வையும் கொடுத்தது.

நிகழ்ச்சி முடியப் போகின்றது என்பதைப் பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு ஜாடையில் சொல்லிவிட்டு அதே ஜாடையை சபைக்கும் காட்டிவிட்டு முறுவலிக்கின்றார் ஜேசுதாஸ். தொடர்ந்து மங்களமும் பாடியாயிற்று. அரங்கம் அசைவற்று இன்னும் யாசிக்கின்றது அவரிடம். ஆனால் மிகுந்த தன்னடக்கத்தோடு "என்னால் முடிஞ்ச அளவுக்கு உங்களைத் திருப்திப் படுத்தியிருக்கேன்" என்று ஜேசுதாஸ் சொன்னதும், அரங்கத்தை நிறைக்கும் கரகோஷமே அவருக்குக் காற்று வழி கைகுலுக்குகின்றது. இது தான் அந்தக் கலைஞனுக்குத் தொடர்ந்தும் கிடைக்கும் உயரிய விருதும் வெற்றியும்.


விழாப்படங்கள் அனைத்தும் என் ஒளிப்படக்கருவியால் சுட்டவை.

Thursday, January 03, 2008

ஒபரா ஹவுஸில் பாடிய நிலா பாலு

உலாத்தல் பதிவுகளில் எனது பெங்களூர் பயணத்தை ஆரம்பித்து விட்டு மற்றைய வலைப்பக்கங்களில் இரு மாதமாகச் செலவிட்டு விட்டேன். எனவே இனியும் நீண்ட இடைவெளி இருக்கலக் கூடாது என்பதற்காக நான் கண்டு ரசித்த இசை நிகழ்ச்சி குறித்த என் பார்வையை இங்கே இடுகின்றேன்.

கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி Sydney Symphony entertainers ஒருங்கிணைப்பில் Pyramid Video & Spice அனுசரணையுடன் சிட்னி ஒபரா ஹவுஸில் ஒரு இசை நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது. இவர்கள் கடந்த 2006 இல் கே.ஜே.ஜேசுதாஸின் இசை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த அந்த நிகழ்வையும் முன்னர் பதிவாக இட்டிருந்தேன். இந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாதனா சர்க்கம், வசுந்தரா தாஸ்,ராஜ் டிவி ராஜகீதம் புகழ் சுஜித்ரா மற்றும் மலையாளப் பாடகர் நிஷாத் ஆகியோர் ஷியாமின் இசைக்குழுவோடு வந்து சிறப்பித்திருந்தார்கள்.


அவுஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் இசை நிகழ்ச்சிக்குப் பின் நடைபெறும் இரண்டாவது தமிழ் நிகழ்ச்சி என்பதால் முன்னர் இந்த அரங்கத்தைப் பார்க்காதவர்களும், முன்னர் ஜேசுதாசின் இசை நிகழ்ச்சியினை நன்கு ரசித்தவர்களுமாக அரங்கத்தை நோக்கிப் படையெடுத்தார்கள். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பே அத்தனை இருக்கைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.


சரி, இனி இந்த இசை நிகழ்ச்சிக்குச் செல்வோம். வழக்கமாக ஒரு கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிக்கும் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு விலக்காக மெளன ராகம் திரையில் இருந்து "மன்றம் வந்த தென்றலுக்கு" என்ற பாடலோடு மேடையில் காட்சி தந்தார் பாலு அவர்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைக் காண வேண்டும் என்று வந்த இசை ரசிகர்களுக்கு இன்னுமொரு இன்ப அதிர்ச்சியாக பி.ஹெச்.அப்துல் ஹமீத் மேடையில் தோன்றினார். அதுவரை எந்த விளம்பரங்களிலுமே ஹமீத் வருவதாக அறிவிப்பும் வராததால் இந்தத் திடீர் அறிவிப்பு விருந்தாளியைக் கண்டதும் முறுவலித்துக் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். வழக்கமாக இசை நிகழ்ச்சிகளில் பாடுபவர் ஒரு மணி நேரம் என்றால் அறுவைப்பாளர் இரு மணி நேரம் எடுத்துத் தன் சாகித்யங்களை எல்லாம் காட்டி எம்மை இருக்கையில் வைத்தே கொலை செய்து விடுவார். ஆனால் ஹமீத் போன்ற மேடை நாகரீகம் தெரிந்தவர் இந்த இசைப்படையலுக்கு வந்தால் சொல்லவும் வேண்டுமா? அதை மெய்ப்பிப்பது போல் நிகழ்ச்சியின் இறுதி வரை அப்துல் ஹமீத் பாலு கூட்டணி அசைக்கமுடியாத கூட்டணியாகப் பயணித்தது. எடுத்த எடுப்பிலேயே "நிலவும் உருண்டை, பாலுவும் உருண்டை" என்றுபாலுவுக்கும் நிலவுக்கும் ஒரு புதிய ஒற்றுமையைக் காட்டிக் கலகலக்க வைத்தார் ஹமீத். தொடர்ந்து மூச்சு வாங்கிப் பாடிய "மண்ணில் இந்தக் காதல் இன்றி" பாடல் வந்தது.

தனது அன்னை Neelatai Ghanekar இடம் ஆரம்பத்தில் இசை பயின்று, இளையராஜா இசையில் "அழகி" திரைக்காக "பாட்டுச் சொல்லி" பாடலைப் பாடிய சாதனா சர்க்கம் "கொஞ்சும் மைனாக்களே" என்று கூவிக் கொண்டு வந்தார். ஸ்வரலயா ஜேசுதாஸ் விருது, உட்பட ஏ.ஆர்.ரகுமானின் பாராட்டு மழை வரை சாதனா சர்க்கத்திற்குக் கிடைத்த பெருமைகளைச் சொல்லி வைத்தார் அப்துல் ஹமீத்.

இனியதொரு ஹோரஸ் கலக்க, நியூ திரையில் இருந்து " காலையில் தினமும் கண் விழித்தாலே" பாடலை மலையாளப் பாடகர் நிஷாத் கலக்கினார்.

தொடர்ந்து பின்னணியிலும் முன்னணியிலுமாக பரத்வாஜ், ஏ.ஆர்.ரகுமான் போன்றோர் இசையில் பாடிய ராஜ் டீவி புகழ் சுஜித்ராவும் எஸ்.பி.பியுடன் ஜோடி போட்டு எஸ்.ஜானகி இல்லாத குறையை நிரப்பிக் கொண்டிருந்தார்.
"ஆறு முறை தேசிய விருது கண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், இவற்றில் சங்கராபரணம் விருது கிடைத்ததால் விருதுக்குப் பெருமை" என்று ஹமீத் அறிவிக்க தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் சங்கராபரணத்தில் தான் பாடிய அந்தப் பசுமை நினைவை அசைபோட்டார். கூடவே அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் உதவியாளராக இருந்த திரு புகழேந்தி அவர்கள் தனக்குக் கொடுத்த கடுமையான பயிற்சி தான் தேசிய விருதாக அங்கீகாரம் பெற்றது என்று புகழ்ந்து, பார்வையாளர்கள் மத்தியில் இருந்த சிட்னியில் வாழ்ந்து வரும் புகழேந்தியின் மகனின் 25 வது திருமண நாள் இன்று என்றவாறே அவர்களை எழுந்திருக்கச் செய்து கெளரவப்படுத்தினார். புகழேந்தியின் மகன், மற்றும் புகழேந்தியின் தாய் இருவரையும் நான் ஒரு வானொலிப் பேட்டி செய்திருக்கின்றேன். புகழேந்தியின் இசை அனுபவங்களை அதில் இருவரும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். நேரம் வாய்க்கும் போது அப்பேட்டியை ஒலியில் பின்னர் தருகின்றேன்.

ஒவ்வொரு பாட்டுக்கும் விதவிதமான ஒளியலங்காரத்தைப் பாய்ச்சியது ஒபரா ஹவுஸ் அரங்கம்.

சிப்பி இருக்குது பாடலைப் பாடும் போது "மயக்கம் தந்தது யார் தமிழோ, கண்ணதாசனோ" என்று இலாகவமாக மாற்றிச் சிறப்பித்தார் பாலு. கூடவே பாடிய சுஜித்ராவும் குறை வைக்கவில்லை. கடந்த யூன் 14, தனது 61வது பிறந்த நாளை எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொண்டாடியபோது கிடைத்த பிறந்த நாள் பரிசுப் பொருட்கள் அனைத்தையுமே மயிலாப்பூரில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு அளித்தார் என்று அப்துல் ஹமீத் அவர்கள் பாடல் இடைவேளையில் சொல்லவும் பாலுவின் மீதான மரியாதை ஒருபடி ஏறியது. தொடர்ந்து காதல் ஓவியம் திரையில் இருந்து "சங்கீத ஜாதி முல்லை" பாடலைப் பாடியபோது அவரின் ராஜாங்கத்தில் மெய்சிலிர்த்தது.

அக்கம் பக்கம் யாருமில்லா (கிரீடம்), மற்றும் சுவாசமே (தெனாலி), வெண்ணிலவே வெண்ணிலவே (மின்சாரக் கனவு) என்று சாதனா சர்க்கம் தொடர்ந்தார். இளங்கோவின் வரிகளில் "மஞ்சக்காட்டு மைனா" பாட்டை சாதனாவும் நிஷாத்தும் அச்சொட்டாகப் பாடிச் சிறப்பித்தனர்.


பாடகர் நிஷாத் புதிய தலைமுறைக்கேற்ற பாடல்களைப் பாடியதோடு கடலினக்கரை போனோரே பாடலையும் பாடி வந்திருந்த சேட்டன்களைக் குளிர்வித்தார். ஆனால் சில தமிழ்ப்பாடல் வரிகளை இவர் சுயிங்கம் மென்றுகொண்டு பாடுவது போல வாயில் வைத்துக் குழைந்தது கண்டு கொண்ட ஒரு குறை.

திடீரென்று நுழைந்த நவநாகரீகமான வசுந்தரா தாஸ் மேடையில் பாடிய அனைத்துப் பாடல்களையுமே புத்தகம் பார்த்துப் படிக்காமல் மனப்பாடத்தோடு மிக இயல்பாகப் பாடினார். -நிகழ்ச்சிக்கு வந்த இளசுகளுக்கு ஏற்ற ஆட்டம் பாட்டமும் வசுந்தரா குத்தகைக்கு எடுத்தது போல் கலக்கினார். தான் பின்னணி பாடியதோடு வசீகரா பாடலையும் சேர்த்துக் கொண்டார்.ஆனால் இவர் இறுதியாகப் பாடிய குரு படப்பாடல் ஒரு கரும்புள்ளி. பாட்டும் சரி, பின்னணியில் ஏற்கனவே ஒலிப்பதிவு செய்து வழங்கிய இசையும் சரி (இந்தப் பாட்டுக்கு மட்டும்) மகா இரைச்சல்.

"பம்பாயில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து இசையமைத்த படம் தளபதி. அதில் வரும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாடலுக்கு 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டன. அதே இசை இங்கே இருக்கக்கூடிய வாத்தியங்களோடு ஷியாம் இசைக்குழு தரப்போகின்றார்கள்" என்ற அறிமுகத்தோடு வந்த அந்தப் பாடலைக் கேட்கும் போது இசையும், குரலும் எம்மை ஒபராவின் மேற்கூரைக்கு மிதக்க வைத்தது. என் கைத்தொலைபேசியில் சிறைவைத்த அந்தக் காட்சியின் ஒரு பகுதி இதோ.


அது போல் அஞ்சலி அஞ்சலி பாடலில் வரும் சாக்ஸபோன் வாத்திய இசையை நடராஜ் வாசித்தபோது பாலுவே நெகிழ்ந்தார். நடராஜ், மெல்லிசை மன்னரின் பாராட்டையும் பெற்றிருக்கின்றாராம். மெளனமான நேரம், போன்ற வழக்கமாக மேடையில் பாடும் பாடல்களைப் பாடும் பாலு, வழக்கமாக அதிகம் மேடையில் பாடாத "ஆயிரம் நிலவே வா" பாடல், மற்றும் நிறைவாக எனக்குள் ஒருவன் திரையில் இருந்து "மேகம் கொட்டட்டும்" என்ற பாடலையும் நிறைவு செய்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் இசை ரசிகர்களிடமிருந்து பலவிதமான விமர்சனங்கள். முதல் தடவை ஒபரா ஹவுசுக்கு வந்து ரசித்தவர்களைப் பெருமளவு திருப்திப்படுத்திய இந்த இசை நிகழ்ச்சி, முன்னர் கே.ஜே.ஜேசுதாஸ் பரிவாரங்களோடு வந்து கொடுத்த ஓணம் படையல் போன்று இல்லை ; எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு இன்னொரு அவர் காலகட்டத்துப் பாடகி வந்திருக்கலாம்; பாலுவே அதிகம் தனியாவர்த்தனம் வைத்திருக்கலாம் போன்ற விமர்சனங்களையும் கொடுத்திருந்தது. இன்னொரு உறுத்தல் கடைசிப் பாடலைப் பாட முன்னரும், பாடிய பின்னரும் ரசிகர்களுக்குத் தகுந்த பிரியாவிடை கொடுக்காமல் நாலு வரி கூடப் பேசாமலே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் போனது இன்று வரை இசை ரசிகர்களுக்கு உறுத்தலாகவே இருக்கின்றது.

தமது பிரத்தியோகப் படங்களைத் தந்துதவிய Sydney Symphony entertainers இற்கு என் நன்றிகள்.