Social Icons

Pages

Thursday, September 24, 2015

தமிழகத்தின் மடி தேடி - மாங்காடு அம்மன் தரிசனம்


கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டுப் பயணம் ஏதுமில்லை. இந்த ஆண்டு இலக்கியாவின் முதலாவது பிறந்த தினம் எம் தாய்நாட்டிலேயே அமைய வேண்டும் என்று நினைத்துக் கடந்த மார்ச் மாதமே இலங்கைக்கான பயண ஏற்பாடுகளைச் செய்தாயிற்று. அப்போது புது வேலையில் சேர்ந்த சமயம் புது நிறுவனத்தில் எனது முதல் வேண்டுகோளே செப்டெம்பரில் அமையும் 3 வாரப் பயணம் குறித்ததாக அமைந்திருந்தது.

நமது எண்ணம் பரிபூரணமாக இருந்தால் மீதி எல்லாமே நாம் திட்டமிட்டதுக்கும் மேலாக அமைந்து விடும் என்பதை எனக்கு மீளவும் நிரூபித்து விட்டது இந்தப் பயணம்.

இலக்கியாவை எம் பெற்றோருக்குக் காட்ட வேண்டும். எங்களுக்குக் குழந்தைச் செல்வன் கிட்டவேண்டும் என்று எங்களை விட அதிக கரிசனையோடு இருந்த நண்பர்கள் நேர்ந்த நேர்த்தியை முடிக்க வேண்டும் இவை தான் இந்தப் பயணத்தின் இலக்கு.
முதலில் இலங்கைக்குப் போவோம். அங்கிருந்து இந்தியா செல்லும் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தான் முதலில் திட்டம். காரணம் சிட்னியில் இந்திய விசா விண்ணப்பிக்க வீணாக இரண்டு வேலை நாட்களைத் தின்று விடும். அவ்வளவு பெருங்கூட்டம் எப்போதும் இந்திய விசா முகவர் நிலையத்தில்.  ஆனால் என்னுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக இலங்கையிலுள்ள இந்திய விசா முகவர் நிலையத்தில் அனுபவம் அமைந்துவிட்டது. முதலில் இந்திய விசாவுக்கான புகைப்படத்தை எடுத்துக் கொள்வோம். எதற்கும் ஒரு உதவியாக அந்தப் படங்களை சீடியிலும் பதிவு பண்ணுவோம் என்று கொழும்பில் அந்த விடிகாலையில் திறக்கப்படாத புகைப்படக் கடைகளையெல்லாம் தட்டி ஒருவாறு காலை ஒன்பது மணிக்கே (கவனிக்கவும் கே) 
கடையைத் திறந்து வைத்திருந்த புண்ணியவானிடம் முகத்தைக் காட்டிப் படமும் எடுத்து ஆட்டோவில் இந்திய விசா முகவர் நிலையம் போனால் அங்கே கல்யாணக் கூட்டம். ஒரு வித்தியாசம், விசா விண்ணப்பிக்க வந்தவர்களை விட விண்ணப்பப் படிவமும் கையுமாக நின்று வாறவர் போறவரை எல்லாம் அமுக்கும் கூட்டம் தான் அது. அதையும் கடந்து முகவர் நிலையம் நுழைந்தால் ஒரு இளைஞன் வரவேற்று இன்னொரு அறையைக் காட்டினான். அங்கே இன்னொருத்தர் புகைப்படக்கருவி சகிதமாக. 
"300 ரூவாவுக்கு விசா விண்ணப்பம் நிரப்பித் தரலாம் அண்ணை றோட்டில நிக்கிறவங்கள் கூடக் கேப்பான்கள் ஏமாந்து போவிடாதேங்கோ அந்தா தெரியுது பில்டிங் அங்கை எங்கட ஆட்கள் நிக்கினம் போங்கோ என்று அவன் கையைக் காட்ட மீண்டும் வெளிப்பிரகாரச் சுற்று, 300 ரூபா தள்ளு கையில் விண்ணப்பப் படிவம் இந்தா பிடி.
மீண்டும் பழைய இடத்துக்கு வந்து நிற்க, மேல போங்கோ அண்ணை அங்க தான் விசா விண்ணப்பம் எடுப்பினம். மேலே போனால் எல்லாம் மீசை முளைக்காத இளைஞர் கூட்டம் வேலை பார்த்துக் கொண்டிருந்தது.
எட்டிப் போய் ஒருத்தரிடம் கேட்டேன்,
"நான் அவுஸ்திரேலியன் பாஸ்போர்ட் எவ்வளவு நாள் விசா வர எடுக்கும்? யாழ்ப்பாணமும் போகோணும் வெறுங்கையோட ஓமந்தையில் கால் வைக்கேலாது" 

"குறைந்தது ஏழு நாள் எடுக்கும்" என்றார் அதில் இருந்த பொடிப்பையர்.
ஏழு நாள் என் பாதி விடுமுறையைத் தின்னுமே என்று வாயைப் பிழியாமல் ஏமாற்றத்தோடு வெளியில் வந்தேன். அப்போதுதான் அண்ணர் சொன்ன செய்தி ஞாபகத்துக்கு வந்தது. இந்த ஆகஸ்ட் 15 முதல் அவுஸ்திரேலியா உட்பட சில நாடுகள் e-Visa வுக்கு apply பண்ணலாமாம். அந்தப்  புது நடைமுறையில் ஏன் இறங்குவான் என்றிருந்த நான் சரி இதுதான் கடவுள் விட்ட வழி என்று குட்டி யாழ்ப்பாணம் வெள்ளவத்தையை நோக்கிப் போய் ஒரு netcafe பிடிச்சு புகைப்பட சீடியை கணினியின் வாயில் அமுக்கி online இல் இந்திய e-Visa விண்ணப்பத்தை நிரப்பினேன். சலக்கடுப்பு கண்டவன் சிறு நீர் கழிப்பது போன்ற இணைய வேகத்தில் வெந்ததும் வேகாததுமாக விறு விறுவென்று காரியத்தை முடித்துவிட்டு வெளியே இறங்கினேன்.
அடுத்த நாள் காலை iPad இல் கண் விழிக்கும் போது எனது இந்திய விசா பரிசீலிக்கப்பட்டு வழங்கப்பட்டதாக மின்னஞ்சல் வந்தது.

உடனேயே விமானச் சீட்டைப் பதிவு பண்ணிவிட்டு எனது ஆஸ்தான ஓட்டல் நண்பரை அழைத்தேன். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் நண்பர் அனுப்பிய கார் காத்திருந்தது.
"ஓட்டலுக்குத் தானே சார்?" வெற்றிலைக் கறையேறிய சாரதி என்னிடம் திரும்பி

"மாங்காடு மாரியம்மன் கோயில் இங்கிருந்து பக்கமாங்க?"

"போயிடலாம் சார் முக்கால் மணி நேரம் ஆகும்"
கணக்குப் போட்டுப் பார்த்தேன். சென்னையில் இருப்பதே மூன்று நாட்கள். எனவே மாங்காடு அம்மன் கோயிலில் எனக்காக நேர்த்தி வைத்த நண்பரின் வேண்டுகோளின் படி அங்கேயே முதலில் போகலாம் என்று நினைத்து

"சரி அங்கே எடுங்க"
கொத்தவால்சாவடி எல்லாம் தாண்டி கார் மாங்காடு நோக்கிப் பயணித்தது.
தீ மிதிப்பு ஒன்றுக்கு ஆளுயர நடிகர் விஜய் கட் அவுட் போட்டு அவரின் ரசிக சிகாமணிகள் தீ மிதிப்போரை வாழ்த்தியிருந்ததைக் கண்டதும் மனதுக்குள் கவுண்டர் "மொதல்ல இவனை நான் மிதிச்சிட்டு வர்ரேன்" என்று அந்த நேரம் சிரிப்பு மூட்டினார்.

வழக்கம் போல வாகனச் சாரதியோடு நட்புப் பாராட்டிப் பழக்கம் பிடிக்கும் கதை இம்முறையும் இருந்தது. பக்கா சென்னைத் தமிழன் அவர். அவர் காரோடிக் கொண்டே என்னிடம் பேசப்பேச "மச்சி மன்னாரு மனசுக்குள்ள பேஜாரு" என்று என்னுயிர்த் தோழன் இளையராஜா பாடிக் கொண்டிருந்தார். 

மாங்காடு அம்மன் கோயிலின் பக்கவாட்டு வாசலில் இருந்த சாலையில் காரை நிறுத்திவிட்டு சாரதி நண்பரும் என்னுடன் கூட வந்தார்.
"தங்கச்சி! சார் வெளியூர்ல இருந்து வர்ரார் நேர்த்தி ஆக்கணும் பூஜை ஜாமன்களை எடுத்து வையீ" என்று கோயிலுக்கு நெருக்கமாக இருந்த ஒரு பூக்கடைப் பெண்ணிடம் நம் சாரதி கேட்க
"இந்தாங்க சார்  மாலை, பழம், இந்தாங்க இந்த வெள்ளித் தட்டுல வச்சிடுங்க" வெள்ளித்தட்டொன்றைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்து விட்டு நீட்டினார் பூ விற்கும் பூவை.

"எவ்ளோம்மா கணக்கு" 
"பூ மாலை, பழம், பூவு, தேங்கா" என்று அந்தப் பெண் எண்ணிக் கொண்டே காசுக் கணக்கைப் பார்த்து முடிப்பதுக்குள்
"நூத்து இருவது ரூபா கொடுங்க தம்பி" உள்ளே இருந்து பாரதிராஜாவின் ஏதோவொரு கிராமியப் படத்தை ஞாபகப்படுத்தும் தொங்கல் காதுக்குள் ஊஞ்சலாடும் கடுக்கண் மின்ன தாய்க் கிழவிவின் குரல் .

"நீ சும்மா இர்ம்மா" அந்தப் பெண் சினந்து விட்டு மீண்டும் காசுக் கணக்கைச் சரி பார்த்து 
"ஆமாங்க நூத்து இருவது தான் ஆவுது" 

"பாத்தியாம்மா உங்கம்மா எவ்ளோ பார்ஸ்டு பெரிசு பெருசுதான்" என்று நம் சாரதி நக்கலடிக்க வெட்கித்தார் அந்தப் பெண்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயிலுக்குள் பக்தர் கூட்டம் அள்ளியது. நீண்ட குழாய்த்தடுப்பு வழியே ஊர்ந்து ஊர்ந்து கடந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு தம்பதி அவர்களுக்கும் நீண்ட வருடங்களுக்குப் பின் மகள் பிறந்திருக்க வேண்டும். சுமார் இரண்டு வயசு மதிக்கத்தக்க அந்தச் சுட்டிப் பெண் வேடிக்கை காட்டினார். "காமாட்சிம்மா" "காமாட்சிம்மா" என்று அந்தக் குழந்தையின் பெயரைச் சொல்லி அன்பொழுகக் கவனித்துக் கொண்டிருந்தார் தந்தை.

வரிசையில் கலந்து மூல விக்கிரகங்களாக வீற்றிருக்கும் மாங்காடு காமாட்சி அம்மன்
தரிசனம் நிறைவாகக் கிட்டியது. ஆண்டவருக்கு நன்றி சொன்னேன்.
உட்பிரகாரத்தைச் சுற்றும் போது பால் கலந்த ஒரு வகை நைவேத்தியம் கிட்டியது.
நேர்த்தி வைக்கும் இடத்திலும் சுற்றி முடித்து விட்டு வெளியே வந்தேன்.
பூக்கடைக்குப் போய் இந்த வெள்ளித் தட்டைக் கொடுக்க வேண்டும் என்று அந்தப் பக்கம் நடந்து போய் பூ விற்கும் பெண்ணிடம் தட்டை நீட்டினேன்.

"காப்பித் தண்ணி ஏதாச்சும் குடிச்சுட்டுப் போங்க தம்பி" பூக்கடையின் முதுகுப்புறம் நீண்ட அந்த வீட்டின் உள்ளேயிருந்து தன் பொங்கை வாய்ச் சிரிப்போடு அதே மூதாட்டி.
நெகிழ்ந்து போனேன் நான். ஊர் பேர் தெரியாது ஏதோ ஒரு ஓர்மத்தில் தனியே கோயில் தரிசனம் காண வந்த எனக்கு இப்படி ஒரு உபசரிப்பா?
"இல்லைம்மா ரொம்ப நன்றி" கை கூப்பினேன்.
மாங்காடு அம்மன் தரிசனம் இதோ இப்போது கிட்டியிருக்கிறது என்று மனது சொன்னது.

3 comments:

Yarlpavanan said...


மாங்காடு மாரியம்மன் கோயில் சென்று
வழிபட்டு வந்த சுகம்
பதிவைப் படித்ததும் கிட்டியதே!

வெங்கட் நாகராஜ் said...

மாங்காடு தரிசனம் - உங்களால் எங்களுக்கும்... நன்றி நண்பரே.

துபாய் ராஜா said...

ஓ..பிரபா வந்துட்டுப் போயாச்சா... உங்கள் பயண விபரம் கேட்டு தனிமடல் இட்டிருந்தேன். விடுமுறைப் பரபரப்பில் பார்த்திருக்க மாட்டீர்கள். பயணப்பகிர்வு வழக்கம் போல அருமை.