Social Icons

Pages

Tuesday, October 08, 2013

பாரா சார் - இசை போல வாழ்வு

சின்ன வயசிலிருந்தே வேர்க்கடலைப் பேப்பர் சரையில் இருக்கும் எழுத்துக்களையும் தேடிப்படிக்கும் சுபாவம் எனக்கு. அதனாலோ என்னவோ எழுத்தாளர்கள் என்றால் தனி மரியாதை என்பதை விட, இந்த ஆக்க இலக்கியக்காரர்களை நேரில் நடமாடும் பிரம்மாக்களாவும் மனதில் போற்றிக் கொள்வேன். ஈழத்தில் இருந்த காலத்தில் அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முதன் முதலில் "காட்டில் ஒரு வாரம்" என்ற அநு.வை.நாகராஜனின் நூல் வெளியீட்டு விழாவுக்குப் போகிறேன், அந்த நூல் ஒரு சிறுவர் இலக்கியம் என்பதால் அந்த எழுத்தாளர் தன் கையெழுத்துப் பிரதியையே எனக்குக் கொடுத்து வாசிக்க வைத்து அணிந்துரை எழுத வைத்தது தனிக்கதை. புத்தக வெளியீட்டு விழாவில் கண்ணில்பட்டவர்களெல்லாம் சொக்கன், வரதர் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் என்று இன்னும் பல ஈழத்தின் மிகப்பெரும் எழுத்துலக ஆளுமைகள். ஒரு உச்ச சினிமா நட்சத்திரத்தை திரையில் பார்த்துப் பழகிப்போன கடைக்கோடி ரசிகன் நேரில் காணும் போது உண்டான தவப்பலன் போல எனக்கு அது. பின்னாளில் நிறைய எழுத்தாளர்களை நேரிலும், வானொலிப்பேட்டிகளிலுமூடாகத் தரிசித்து விட்டாலும் அந்தச் சிறுவயது பிரமிப்பு கொடுத்த சுகம் இன்னும் அகலவில்லை. 

எப்போதோ எங்கோ ஒரு திசையில் இருந்து எழுதி வைத்தாலும் அந்த எழுத்தாளனின் படைப்பை வாசிக்கும் நேரத்தில் இருந்து தன் எழுத்துகளினூடே வாசகனுடன் அவன் பேசத்தொடங்குகிறான். பிடித்த எழுத்தாளர், பிடிக்காத எழுத்தாளர் என்று வாசகன் இனம் பிரிப்பதும் கூட இங்கே தான் ஆரம்பிக்கிறது. சில எழுத்துகளைப் படிக்கும் போது அட இதை நாமும் கூட நினைத்திருக்கிறோமே என்று கூட எண்ணுவதுண்டு. வாழ்வின் சில தீர்வுகளை ஏதோ ஒரு படைப்பின் வழியாகப் பெற்றுக்கொள்கின்றான் வாசகன். அங்கே தான் எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான ஆத்ம பந்தம் இன்னும் வலுப்பெறுகிறது.

பாரா சார் என்று அன்போடு நாம் அழைக்கும் எழுத்தாளர் பா.ராகவன் அவர்களை சமூக வலைத்தளங்களினூடாகத் தான் அறிமுகம். எப்போது, எப்படி அறிமுகமானார் என்று பலரை நினைப்பதுண்டு. ஆனால் அவர்கள் மீதான நேசம் குறைவதில்லை. உண்மையைச் சொல்லப் போனால் பாரா சாரின் புத்தகங்களை விட தன்னுடைய தளத்தின் வழியாகப் பகிரும் பத்தி எழுத்துகளையே அதிகம் தொடர்ந்து வாசித்து வருபவன். அந்த எழுத்துகளே அவரின் தொடர்ந்து பற்றுக என்று மனம் சொல்ல வைத்தவை. பாரா சார் மீதான மதிப்பு இன்னும் அதிகப்பட இன்னொரு அதி முக்கிய காரணம் ஒன்றுள்ளது, அதுவே என்னை இவ்வாறெல்லாம் எழுதத்தூண்டியது என்றும் சொல்லலாம்.

பொதுவாகவே பிரபலங்கள் தம்மைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத ஒரு நெருப்பு வளையத்தை வைத்திருப்பார்கள். அந்த வளையத்தைத் தாண்டி வர வாசகனையோ, ரசிகனையோ அனுமதிக்க மாட்டார்கள். அதிலும் இன்று சமூக வலைத்தளங்களில் பெருகிவரும் ஏகலைவ எழுத்தாளர்களைக் கண்டால் சிலருக்கு நாசி கடிக்கும். இந்தச் சூழலில் தான் பாரா சாரின் தனித்துவம் வெளிப்படுகிறது. ஒரு எழுத்தைப் படித்தால் அது யார் எழுதியது என்ற ரிஷி மூலம் பார்க்காமல் தனக்குப் பிடித்திருந்தால் நாலு பேருக்குப் பகிர்வார், அதே சமயம் எழுத்துப் பிழை, கருத்துப் பிழை இருந்தால் வலிக்காமல் குட்டுவார். இதையும் தாண்டி, எந்த வித சமரசங்களும் இல்லாமல் நட்போடு பழகுவதில் அவருக்கு நிகர் அவரே. 

கடந்த நவம்பர் மாதம் நான் இந்தியாவுக்குப் பயணப்படுவதாக அறிந்ததுமே "என்னைய்யா இங்க வந்துட்டு என்னைப் பார்க்காமப் போனா தொலைச்சுப்புடுவேன்" என்று அன்புக் கட்டளை பாரா சாரிடமிருந்து. ராப்பகலா எழுத்துப் பணிக்குள்ளும் நம்மை எல்லாம் சந்திக்க நேரம் ஒதுக்குகிறாரே என்ற இன்ப அதிர்ச்சியோடு, சென்னையில் இருந்த அந்த இரண்டு நாட்களில் ஒரு நாள் காலைப்பொழுதில் வட பழனி முருகனைச் சேவித்து விட்டு பாரா சாருக்கு அழைப்பிடுகிறேன். "இதோ இப்பவே வர்ரேன்" என்றவாறு வட பழனியிலுள்ள சரவணபவனில் சந்திப்பதாகக் கூறிவிட்டு விரைகிறார். காலைச் சாப்பாட்டை வாங்கிப் பரிமாறியவாறே தங்கு தடங்கலின்றிப் பேசுகிறோம். சரவணபவனில் சந்திப்பு முடிந்ததும் வேறு சில நண்பர்களைச் சந்திப்போம் என்று நினைத்தால், "இவ்வளவு தூரம் வந்திருக்கே, நம்ம வீட்டுக்கு வராமப் போகக்கூடாது" என் பதில் வார்த்தைக்குப் காத்திராமல் முன்னே பறக்கிறார். எனக்கோ அவரின் பொன்னான நேரத்தைத் திருடுகிறோமே என்ற குற்ற உணர்வு. பாரா சார் வீட்டிலும் அன்பான உபசரிப்பு தந்தையின் குணத்தில் வீட்டுக்கு வந்த விருந்தாளியையும் முகம்கொடுத்துக் கனிவாகப் பேசும் மகள் வேறு. எங்கள் பேச்சுக்கச்சேரி மூன்று மணி நேரங்கள் கடந்த பின்னரும் நான் மொள்ள பிரியாவிடை கொடுத்தாலும் "கானா கானா என்ன ஆளுய்யா நாள் முழுக்க நம்ம வீட்ல இருந்துட்டுப் போறது தானே" எனச் செல்லமாகக் கடிந்தார். சிரித்துக்கொண்டே விடைபெற்றேன்.

ஒருமுறை இகாரஸ் பிரகாஷ், புத்தக வடிவமைப்பில் பாரா சார் கொண்டிருக்கும் சிரத்தை குறித்த ஒரு அனுபவப் பகிர்வைக் கொடுத்திருந்தார். லே அவுட் சமாச்சாரத்தில் சமரசம் கொள்ளாது விடாது வாங்கிக் கொள்ளும் அந்தச் சம்பவக்குறிப்பு இப்போதும் ஏதாவது ஒரு Project செய்யும் போது என் மூளைக்குள் ஓடும் அளவு அது பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. 

பாரா சார் நல்லதொரு இசை ரசிகர் என்பதைப் பல தருணங்களில் கண்டுணர்ந்தாகிவிட்டது. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அவருக்கு விலை உயர்ந்த பரிசு என்று ஏதும் உண்டெனில் அது இந்தப் பாட்டாகத் தான் இருக்கும். 
இசையில் தொடங்குதம்மா 

http://youtu.be/ox0gJGCasZc


No comments: