Social Icons

Pages

Sunday, July 22, 2012

லண்டன் நகர் வலம்

லண்டனில் வந்திறங்கிய இரவு எட்டு மணிக்கே கண்ணைச் சொக்கியது காரணம் சிட்னியில் அந்த நேரம் நடுச்சாமம் தாண்டியிருந்தது. அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே எழுந்துவிட்டேன். காலை எழுந்தவுடன் படிப்பு என்பது போல, காலை எழுந்தவுடன் உலாத்தலும் எனக்குப் பொருந்தும். காலை ஏழு மணிக்கெல்லாம் குளித்து முடித்து ஊர் சுற்றக் கிளம்பிவிட்டேன். தனியாளாக ஊர் சுற்றுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. காரணம், விரும்பிய நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம், ஆசைதீரப் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்துத் தள்ளலாம். ஆனால் லண்டனுக்குப் போகும் வரை அங்கே எதையெல்லாம் பார்க்கவேண்டும் என்று எந்தவிதமான திட்டமும் இல்லாமல் தான் இந்தப் பயணம் அமைந்திருந்தது.

நான் இருந்த ஊர் North Cheam, அங்கிருந்து பஸ் மூலம் தான் Morden என்ற ரயில் நிலையத்தை எட்டவேண்டும். North Cheam இல் இருந்து காலையில் ஐந்து நிமிட இடைவேளையில் பஸ் போக்குவரத்து இருந்தது. ரயில், பஸ், மற்றும் படகுச் சேவை முக்கியமான போக்குவரத்து ஊடகங்களாக இருக்கின்றன.
ஒவ்வொரு வலையங்களாகப் (Zone) பிரித்து வலையம் 6 வரை எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன. வலையம் 1 (Zone 1) லண்டனின் பெருநகரப்பகுதியோடு சேர்ந்த பகுதியாகவும், வலையங்கள் கூடக் கூட அவை புறநகர்ப்பகுதிகளாகவும் அமைந்துள்ளன. Zone 6 என்பது அண்மைய வருஷங்களில் லண்டன் பெரும்பாகத்தோடு இணைக்கப்பட்ட பகுதிகளாகவும் விளங்குகின்றன. Oyster Card எனப்படும் பயணச்சீட்டை நீங்கள் விரும்பிய வலையத்துக்கு ஏற்ப வாங்க முடியும். சுற்றுலா செல்வோர் அனைத்து வலையங்களுக்குமானது வாங்கினால் விரும்பிய நேரம் விரும்பிய இடத்துக்குப் போய் வர இந்தப் பயணச் சீட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

லண்டன் நகர பஸ்


அங்கு பயன்பாட்டில் இருக்கும் பஸ்கள் எல்லாமே இரண்டு அடுக்குக் கொண்டவை. சின்னப்பிள்ளையின் ஆசையோடு மேல் அடுக்கில் போய் உட்கார்ந்து கொண்டேன். ஒவ்வொரு தரிப்பாக நிற்கும் போது Morden ரயில் நிலையம் வந்துவிட்டதா என்று எட்டிப்பார்த்தேன். ஒரு முப்பது நிமிட வாக்கில் ரயில் நிலையத்தை அடைந்து விட்டேன். வடபிராந்திய ரயில் சேவையின் கடைசி ரயில் நிலையம் இது. அங்கே ரயில் போக்குவரத்து நிலத்துக்குக் கீழான போக்குவரத்திலும் (underground) அதிக சேவையில் ஈடுபடுகின்றது.
காலையில் அதிக கூட்டம் இல்லை. படுத்துக் கொண்டே போகலாம் போல, லண்டனில் சனக்கூட்டம் அதிகம் என்றார்களே என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் என் நினைப்பில் மண். ஒவ்வொரு ரயில் நிலையமாக கும்பல் கும்பலாக ஏறினார்கள். இறுதியில் நான் இறங்கவேண்டிய Bank என்ற முக்கிய தரிப்பில் வரும்போது ரயில் கொள்ளாத அளவு கூட்டம். கிட்டத்தட்ட தி.நகர் ரங்கநாதன் சாலை மாதிரி.

இன்னும் பழமை பேணும் பொதுத் தொலைபேசி நிலையங்கள்
லண்டனில் ஓடும் Taxi பெரும்பாலும் Fiat தயாரிப்புக்கள்

லண்டனின் கேந்திர முக்கியத்துவம் பெற்ற பகுதியாக Bank என்ற இடம் விளங்குகின்றது. முக்கியமான வங்கிகளின் அலுவலகங்களும் அமைந்துள்ளன. ரயிலில் இருந்து இறங்கியாச்சு, கெளரவம் சிவாஜி கணக்கில் "நான் எங்கே போவேன் எப்படிப் போவேன்" என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். ஆபத்பாந்தவராய் அங்கே கடமையில் இருந்த போலீஸ்காரரை அணுகி பக்கத்தில் ஏதாவது சுற்றுலாப்பயணிகளுக்கான தகவல் நிலையம் உள்ளதா என்று கேட்டேன். அவர் காட்டிய வழியில் ஒரு பத்து நிமிட நடையில் St Paul's Cathedral ஐ அடைந்தேன், அதற்கு அருகாமையில் தான் சுற்றுலாப்பயணிகளுக்கான தகவல் நிலையம் உள்ளது.
வானைத் தொடும் St Paul's Cathedral ஐ ஆவென்று பார்த்தேன். என்னைப் போல ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் இன்னபிற சுற்றுலாப் பயணிகள். லண்டன் சுற்றுலாவின் முக்கியமானதொரு ஸ்தலமாக இந்த St Paul's Cathedral விளங்குகின்றது. கி.பி 1675 and 1710 காலப்பகுதியில் கட்டப்பட்ட இந்தத் தேவாலயம் பல முக்கியமான நிகழ்வுகளை நடத்திய பெருமைக்குரியதானது. விக்டோரியா மகாராணி 1897 ஆம் ஆண்டில் தனது வைரவிழா ஆண்டையும், இரண்டாவது எலிசபெத் மகாராணி 2006 ஆம் ஆம் ஆண்டில் தனது 80 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியதும் இங்கே தான், அத்தோடு முழு உலகே தொலைக்காட்சியில் கண்டு கழித்த சார்ல்ஸ், டயானா திருமணக் கொண்டாட்டம் நடந்ததும் இங்கே தான். உள்ளே சுற்றிப்பார்க்க நுழைவுக்கட்டணமாக 15 இங்கிலாந்து பவுண்ட் அறவிடப்படுகின்றது.

பிரபல கவிஞர், சட்டவல்லுனர் இந்த St Paul's Cathedral இன் பரிபாலகராக இருந்த John Donne (கி.பி 1572 - கி.பி 1631) இன் உருவச் சிலை இந்த ஆலய வளவில் அமைக்கப்பட்டுள்ளது.

வந்தவேலையை விட்டு தேவாலயத்தைச் சுற்றுகிறானே என்று மூளை சொல்லியது. அங்கிருந்து கிளம்பி பொடிநடை தூரத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் நிலையம் சென்றேன். அங்கே புன்னகையை முகத்தில் குத்திக் கொண்டே ஒரு ஆடவரும் இரு அம்மணிகளும். லண்டனைச் சுற்றிப் பார்க்கவேண்டும் விபரமான தகவல் தரமுடியுமா என்று கேட்டேன். கையில் இரண்டு தகவல் புத்தகங்களைத் திணித்து விட்டு, இங்கிருந்து இரண்டு சுற்றுலாப் பேரூந்துக்கள் பயணப்படுகின்றன. அவை ஒவ்வொரு முக்கியமான இடங்களையும் தொட்டுச் செல்லும். The Original Tour எனப்படும் பஸ் கம்பனி நாள் ஒன்றுக்கு 23 பவுண்ட்களை அறவிடுகின்றது, ஒரு நாள் முழுக்கப் பயன்படுத்தலாம், இன்னொன்று Big Bus Sightseeing Tour என்ற பஸ் கம்பனி இரண்டு நாள் பாஸ் முறையில் 29 பவுண்ட்களை அறவிடுகின்றது. ஆனால் அந்த இரண்டு நாட்களும் தொடர் நாட்களாக இருக்கவேண்டும் என்றார்.

நாளை நடப்பது யாருக்குத் தெரியும் என்று The Original Tour இல் பயணப்படுவதற்கான டிக்கெட்டை வாங்கிக் கொண்டு பஸ் தரிப்பை அடைந்தேன். ஐந்து நிமிடத்தில் பஸ் வந்தது. மேலே அரைப்பாகம் மூடிய பஸ், மேல் பாகம் சென்று அமர்ந்து கொண்டேன். ஒவ்வொரு இருக்கைக்கும் இயர்ஃபோன் ஒன்று கொடுக்கிறார்கள். அதைக் காதில் செருகிவிட்டால் பஸ் பயணப்படும் ஒவ்வொரு வழித்தடத்திலும் இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பற்றி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு மூலம் சொல்லப்படுகின்றது. உண்மையில் இது மிகவும் பயனுள்ளதொரு விஷயமாக இருக்கின்றது. ஒவ்வொரு இடத்திற்கும் பஸ் கடக்கும் போது அச்சொட்டாக அந்த இடம் குறித்த வரலாற்றுப் பின்னணியைக் கொடுப்பது மிகுந்த சுவாரஸ்யம் கொண்டதாக அமைந்தது.

அப்படி நான் கடந்த இடங்கள் அடுத்த உலாத்தல் பதிவில்

10 comments:

சஞ்சயன் said...

அப்படியே சூரியன் மறையாத நாட்டுக்கும் வந்து போங்க தலீவா..

Anonymous said...

//அத்தோடு முழு உலகே தொலைக்காட்சியில் கண்டு கழித்த சார்ல்ஸ், டயானா திருமணக் கொண்டாட்டம் நடந்ததும் இங்கே தான்//
marriage-took-place-in-Westminster-Abbey-not-in-St.Pauls.There-are-6-zones-not-5.

கானா பிரபா said...

Zone 6 திருத்திவிடுகிறேன், சார்ல்ஸ், டயானா திருமணம் இங்கே தான் இதோ மேலதிக தகவல் http://en.wikipedia.org/wiki/Wedding_of_Charles,_Prince_of_Wales,_and_Lady_Diana_Spencer

கானா பிரபா said...

சஞ்சயன் அண்ணை அடுத்த தடவை வாறம் 

தனிமரம் said...

அப்படியே பாரிஸ் வந்தால் நாங்களும் பார்ப்போமே பிரபா!

துளசி கோபால் said...

கொசுவத்தி ஏத்திட்டீங்க!

செயிண்ட் பால் தேவாலயத்துக்குள் போக கட்டணமா?

நாங்க போனபோது (1999) அப்படி ஒன்னும் இல்லையே!

கோபிநாத் said...

வண்டி இப்பதான் ஸ்டார் ஆகுதா...ரைட்டு..ரைட்டு ;))

K.Arivukkarasu said...

#..ஏற்கனவே பதிவு செய்யப்பட்டஒலிப்பதிவு மூலம் சொல்லப்படுகின்றது. உண்மையில் இது மிகவும் பயனுள்ளதொரு விஷயமாக இருக்கின்றது.# .... பல சுற்றுலா தளங்களில் அதன் முக்கியத்துவம் தெரியாமல் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்துவிட்டு, இங்கு ஏந்தான் வந்தோமோ என்று பலர் நொந்து கொள்கிறார்கள்..

நெல்லைக் கிறுக்கன் said...

//தனியாளாக ஊர் சுற்றுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. காரணம், விரும்பிய நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம், ஆசைதீரப் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்துத் தள்ளலாம். //

உண்மை தல, தனியாக செல்வதில் நிறைய சௌகரியங்கள் உண்டு. லண்டன் முருகன் கோவிலுக்கு போனீங்களா? உணவு வகைகள் பற்றிய உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்.

Anonymous said...

பிரபா.. நலமா? எங்களைப்போன்ற கனவிலும் நினைத்து பார்க்கமுடியாத இடங்களை கண்களூக்கு குளிர்ச்சியான படங்களூடன் படையல் படைச்சிருக்கீங்க... இன்னும் படஙக்ளூடன் பார்த்து படிக்க காத்துக்கொண்டிருக்கிறேன்.

என்றும் அன்புடன் கோவை ரவி