Social Icons

Pages

Monday, March 08, 2010

அயோத்தியாவில் கண்ட Wat Phu Khao Thong

இந்த தொடர் எந்த முகூர்த்தத்தில் ஆரம்பித்தேனோ தெரியவில்லை. அடிக்கடி தொடரைத் தொடரத் தாமதப்பட்டுக் கொண்டே வருகின்றது. இனியாவது இடைவெளி கொடுக்காமல் தொடர எண்ணியிருக்கிறேன். முந்திய பதிவுகளில் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் பகுதியில் அமைந்த சில சுற்றுலாத்தலங்களைப் பகிர்ந்து கொண்டேன். விடுபட்டவை இன்னும் இருக்கின்றன. ஆனால் அடுத்து பாங்கொக் நகரில் இருந்து விலகி, அயோத்யா என்ற பிராந்தியத்தில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் சிலவற்றைப் பகிரவிருக்கின்றேன்.

தாய்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா வந்தவர்கள் அயோத்தியாபுரி என்ற பிராந்தியத்துக்கு வராமல் விட்டால் முழுமை பெறாது என்பது வெள்ளிடைமலை. அயோத்தியா என்ற பிராந்தியம் தொன்மை மிகு தாய்லாந்து இராச்சியமாக விளங்கி வந்ததோடு, செழுமையான வரலாற்றுப் பின்னணியும் கொண்டிருக்கின்றது. கி.பி 1351 ஆம் ஆண்டிலிருந்து 1767 ஆண்டுவரையான காலப்பகுதியில் தாய்லாந்து தேசத்தின் தலைப்பட்டினமாக இந்தப் பிரதேசம் இருந்திருக்கின்றது. முதலாம் Ramathibodi இன் ஆட்சியில் ஆரம்பித்து ஐந்தாம் Boromaracha வின் காலப்பகுதி வரை இப்பிரதேசம் இராசதானியாக நிலவி வந்திருக்கின்றது. இந்த அயோத்தியா என்ற தலைப்பட்டினத்தின் எவ்வளவு தூரம் நிலையானதொரு செழுமை மிகு ஆட்சி இருந்திருக்கின்றது என்பதற்குத் தொடர்ந்து வரும் பதிவுகளில் நான் தரப்போகும் வரலாற்று விழுமியங்களே சான்று பகிர இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் பதிவினூடா நான் தரப்போவது Wat Phu Khao Thong என்ற ஆலயம் குறித்து.

அயோத்தியா நகருக்கான ஒரு முழு நாட் சுற்றுலாவுக்காக தனியார் சுற்றுலா முகவர் நிலையத்தில் ஏற்கனவே பதிந்து வைத்திருந்தேன். அவர்களின் ஏற்பாட்டில் குறித்த நாளன்று என் தங்குமிடம் வந்து வாகனம் என்னைக் கவர்ந்து அயோத்தியா நோக்கிப் படையெடுத்தது. கூடவே மற்றைய விடுதிகளில் தங்கியோரும் உள்ளடங்கலாக. அயோத்தியாவிற்கு வந்ததும் தன் பணியைச் செய்தோம் என்று வாகனச் சாரதியும், கூட வந்த உதவியாளரும் ஒதுங்கிக் கொள்ள, அந்த நகரில் சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் ஒரு முதியவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இனித் தொடர்ந்து வரும் அயோத்தியா நகரச் சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று அவை பற்றிய வரலாற்றுப் பின்னணியைத் தருவதாக அவர் கூறிக் கொண்டார்.

தாய்லாந்தில் இருக்கும் புத்த ஆலயங்கள் பொதுவில் கம்போடிய , பர்மிய, சிறீலங்கா நாடுகளின் பாதிப்பில் அமைந்த விதமாக பேதம் காட்டக் கூடிய கட்டிட அமைப்பில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து Wat Phu Khao Thong பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

Wat Phu Khao Thong, இந்த ஆலயம் அயோத்தியாவின் மிக முக்கியமானதொரு ஆலயமாகக் கருதப்படுகின்றது. வரலாற்றுக் குறிப்புக்களின் படி இந்த ஆலயம் Ramesuan (முதலாம் Ramathibodi) இனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. தாய்லாந்து நாட்டின் இராசதானியாக விளங்கிய அயோத்தியா நகரினை பர்மிய அரசன் Bhueng Noreng 1569 ஆம் ஆண்டில் கைப்பற்றுகின்றான். இந்த வெற்றியின் முகமாக பெளத்த பகோடா ஒன்றினை ஆலயச்சூழலில் நிறுவினான். 80 மீட்டர் (260 அடி) உயரமான Chedi Wat Phu Khao Thong, அல்லது Golden Mount என்று இன்றும் அழைக்கப்படுகின்ற இந்த தூபி அயோத்தியா நகரின் மிக உயரமான பகோடாக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

"அரைமணி நேரத்தில் மீண்டும் எமது இடத்துக்குத் திரும்பிவிடுங்கள், இப்போது நீங்கள் கலைந்து செல்லலாம்" என்று வழிகாட்டிக் கிழவர் சொன்னதுதான் தாமதம் ஆளாளுக்குத் திக்குத் திக்காகச் செல்கின்றோம்.
ஆலயச் சூழலில் இறந்தவர்களுக்கான சமாதிகள் சிலவும் தென்படுகின்றன. ஆங்காங்கே இடிபாடான சிறிதும் பெரிதுமான பகோடாக்கள், சிரிக்கும் புத்தர் என்று நிறைந்திருக்கின்றன.
இன்றும் தொடர்ந்து பராமரிப்போடு வழிபாட்டிடமாகக் கொள்ளப்படுவதோடு விதவிதமான புத்தர் சிலைகளோடு பிள்ளையார் சிலைகளும் தென்படுகின்றன.
கோயிலுக்குள் குடைந்தவாரே குகை போன்ற அமைப்பில் ஒரு சிறு துவாரம் வழி நடந்தால் அங்கும் இறைவனின் பிரகாரம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
பகோடாவின் உச்சியில் ஏறிக் களைத்து மீண்டும் ஆரம்ப இடத்துக்கு வந்தால் என்னோடு இணைந்து படம் எடுக்க முடியுமா என்று கூட வந்த கூட்டத்தில் இருந்த ஜப்பானிய யுவதி கேட்டாள். சுற்றுலா பார்க்க வந்த இடத்தில் என்னையும் ஏதோ வினோத ஜந்துவாக நினைத்தள் போலும் என்று மனதுக்குள் நினைத்தவாறே, ஒகே என்று சிரிப்போடு போஸ் கொடுத்தேன். சூரியன் எரிச்சலோடு சுட்டெரிக்க அடுத்த இடம் போவதற்கு வாகனத்தில் ஏறினோம்.

தகவல் குறிப்புக்கள் உதவி:
சுற்றுலா வழிகாட்டி
தாய்லாந்து வரலாற்றுத் தளங்கள்

6 comments:

ரவிசாந் said...

வணக்கம் அண்ணா தாய்லாந்துக்கு போய் வந்த மாதிரியே இருக்கு. நல்லா எழுதுறிங்கள். தகவல்களுக்கு நன்றி.

ஆயில்யன் said...

பாஸ் அயோத்தியாவா அல்லது அயூத்யாவா ? :)

புத்தரும் விநாயகரும் - விநாயகரும் அவர்களின் வழிபாட்டு தெய்வமாக இருக்கின்றதா?

பாழடைந்த நிலையில் இருக்கின்ற தூபிக்கள் உள்ளே செல்ல வழி இருக்கிறதா? - அதுவும் கோவிலாக பாவிக்கப்பட்டு வந்திருக்கிறதா?

கானா பிரபா said...

வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி ரவிசாந்

கானா பிரபா said...

வணக்கம் ஆயில்யன்

அயோத்தியா போன்று இராமாயணத்தின் பெரும்பாலான இடங்களையும் பெயர்களையும் தாய்லாந்தில் அவதானிக்கலாம்.

அதுபோல் விநாயகர் முக்கியமானதொரு வழிபாட்டுத் தெய்வமாக இன்றும் நிலவிவருகின்றார்.

பாழடைந்தாலும் உள்ளே சொல்லும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டிருப்பதால் இலகுவில் சுற்றிப் பார்க்கலாம்.

கோபிநாத் said...

அயோத்தியா அப்படின்னு கேட்டவுடனே அட ராமயணாமன்னு இருந்துச்சி...

பிள்ளையார் அங்கையும் கலக்குறாரு போல..;)

கானா பிரபா said...

தல கோபி

பிள்ளையார் அங்கு நீக்கமற நிறைந்திருக்கிறார்