Social Icons

Pages

Thursday, August 03, 2006

படகுவீட்டுப்பயணம் ஆரம்பம்

மே 28, மதியம் 12.00 மணி (இந்திய நேரம்)
நான் முன்னர் சொன்னது போல ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த படகு வீட்டுப் பயணத்துக்கான நேரமும் வந்தது. நான் தங்கியிருந்த அறையைப் பூட்டி என் சூட்கேசை கெளரி ரெசிடென்ஸ் இன் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டுக் காத்திருந்தேன். அந்த விருந்தினர் விடுதி இளைஞர்கள் ஓடி ஓடிப் படகுப் பயணத்துக்காகக் காத்திருந்த என்னைப் போன்ற விருந்தினர்களை பொருத்தமான படகுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து பதிவேட்டில் குறிக்கின்றார்கள். இங்கே வங்கி அட்டைப் பணக்கொடுப்பனவு இல்லாததால் 3,500 ரூபாவிற்கான இந்திய நோட்டுக்களை நீட்டுகின்றேன். தன் ஈரக்கைகளைத் தன் கட்டிய வேட்டியில் தடவி விட்டுச் சுறுக்காகப் பணத்தை வாங்கிப் பெட்டியில் போடுகின்றார் கெளரி ரெசிடென்ஸ் மேலாளரான அந்த இளைஞர். ஆட்தொகைக்கு ஏற்ப கார்களிலும் ஜீப்பிலும் படகு வீடு காணப் போகும் விருந்தினர்களை அள்ளியேற்றிவிட்டுப் பயணப்படுகின்றார்கள்.
குறுகலான சந்துக்குள்ளால் பயணப்பட்டுப் பின் ஒரு வேலிப் பொட்டுக்கு முன்னால் ஜீப் நின்றது. என் படகுவீட்டுக்குப் பொறுப்பான கடலோடி நண்பர்கள் எனக்காகக் காத்திருக்கின்றார்கள். கொட்டும் மழைச் சாரல் வழிந்தோடும் தம் முகத்தைப் புறங்கையால் துடைத்து எறிந்துகொண்டே வாயெல்லாம் பல்லாக வரவேற்கின்றார்கள், இவர்களில் ஒரு கிழவனார், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு இளைஞன் அடக்கம்.
மழைவெள்ளத்தில் புதையாமல் இருக்க என் சப்பாத்துக்களைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டே வருமாறு பணித்தார் ஒருவர். குச்சொழுங்கை இருபக்கமும் வேலி மறைக்கக், செம்பாட்டுத் சதுப்பில் கால்கள் பொத்துப் பொத்தென வெள்ள நீருக்குள் புதைய நடப்பதும் இனிமை. நான் சின்னப் பிள்ளையாக இருக்கும் போது பள்ளிக்கூடம் விட்டுவரும் போது வெள்ளம் காணும் பக்கம் எங்கும் என் கால்கள் அலைந்து அலைந்து வெள்ள நீரைத் துளாவியதும், வீட்டுக்கு வந்ததும் பாட்டா செருப்பிலும் என் காற்சட்டையிலும் ஒட்டிக் கிடந்த சேற்றுப் படலங்களையும் கண்ட என் அம்மா தந்த கிள்ளுப் பரிசும் ஞாபகத்துக்கு வந்து உள்ளுரச்சிரித்தேன்.
ஒருவாறு படகுத்துறையை வந்தடைந்தோம், இதற்கு ஐந்து நிமிட நேரமும் பிடித்திருக்காது. ஆலப்புழாவின் பிரசித்திபெற்ற அந்தத்துறையில் பரந்த கரையெங்கணும் படகு வீடுகள், போருக்குத் தயாராகக் காத்து அணிவகுத்து நிற்கும் வீரர்கள் போலக் கம்பீரமாக நிற்கின்றன. எல்லாப்படகுகளுமே மதியம் 12 மணிக்குத் தான் புறப்படுமாம். உங்களின் வசதிக்கேற்ப அரை நாள் அல்லது முழு நாள் வாடகைக்கு இவற்றை நீங்கள் ஒழுங்கு செய்யலாம். அரை நாள் வாடகைக்குக் கட்டணமும் பார்க்கும் இடங்களும் குறைவு. நான் ஒரு நாள் வாடகையாக இப்படகுவீட்டை ஒழுங்கு செய்திருந்தேன். அதாவது முதல் நாள் நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த நாட் காலை 10 மணி வரை. இப்படகு வீடுகள் அழகான நேர்த்தியான கைவேலைப்பாடுகளுடன் உள்ளன. நடுத்தர வயதுக்காரர் எட்டிப் பாய்ந்து படகினுள் ஏறிவிட்டு என்னைக் கை தூக்கி உள்ளே அனுப்புகின்றார். நான் ஒப்பந்தம் செய்த படகு வீடு காதலர்களும் புதிதாகக் கல்யாணமாகித் தேனிலவு வருபவர்களும் விரும்பித் தேர்தெடுப்பதாம். படகு வீட்டு இளைஞன் இதைச் சரளமாக ஆங்கிலத்தில் சொல்லியவாறேப் படகின் அருமை பெருமைகளை அள்ளிவிட்டான், இங்கு சமையல் செய்பவரும் கூட இவன் தான். சுத்தமான ஒற்றைப் படுக்கையும், கழிப்பறையும் கொண்டதாக இருந்தது என் புகலிடம். ஹோர்ண் அடித்துச் சல்யூட் செய்தவாறே பக்கத்துப் படகுக்காரர்களும் இணையப் பயணம் ஆரம்பமாகின்றது. இளைஞர்கள் சைக்கிள்களில் சம பயணத்தில் இரட்டைச் சவாரி செய்வது போல இருக்கிறது. உற்சாகமும் மகிழ்ச்சியும் எனக்குள் பரவ, ஒரு குழந்தை போல எட்டிக் கடலைப் பார்க்கின்றேன். அரைகுறை ஆடை பூண்டு இருக்கும் காட்டு ராணிகள் போலக் கடற் தாவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதக்கின்றன. கரையெங்கணும் தென்னை, விலாட் மா மரங்கள், வாழை, பூவரச மரங்கள் சாமரம் வீசுவதுபோல நிரையாக நிற்கின்றன. அட... கடந்து போன கடலை ஒட்டிய குட்டிச்சுவர்களைக் கூட அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் நிரப்பியிருக்கின்றன. பாலத்துறை பொலிஸ் ஸ்டேசன் B டிவிஷன் தெரிகின்றது. கரைப் பாதையில் எழுந்து நிற்கும் மின்சாரத்தூண்கள் இந்தக் கடற்கழிப் பிரதேசத்திலும் மின்சாரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கடற்கழிப் பரப்பு நன்னீர் ஓடையாக உள்ளதாம். சந்தன நிற வேட்டிகளோடு தூரத்தே புள்ளிகளாகக் கேரளத்துச் சேட்டன்கள். கரையை ஒட்டிய வீட்டு முற்றங்களை சுங்க இலாகா அதிகாரிகள் போலச் சல்லடை போடுகின்றன அவர்களின் வளர்ப்புப் பிராணிகளான வாத்துகளும் கோழிகளும். கடற்கழியை ஒட்டிய கிராம வாழ்க்கையைக் கைபிடித்துக் கொண்டு காட்டும் சுற்றுலா வழிகாட்டி போலப் படகும் மெதுவாகத் தள்ளாடியவாறே அமைதியாகப் பயணிக்கின்றது.


ஞான் இவிடே வரும்.....

9 comments:

கொங்கு ராசா said...

சிறு திருத்தம் : //Snake Boat என்று சொல்லப்படும் இப்படகு வீடுகள்// snakeboat என்பது படகு போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் நீளமான படகுகள். இந்த படகு வீடுகளும் அவையும் ஒன்றல்ல..

வேம்பநாட்டு ஏரியின் நடுவில், மழைநேரத்தில்.. பிரபா சொர்கத்தை அனுபவத்தீர்களா? :)

http://www.keralabackwater.com/festivals-in-kerala-backwaters/snake-boat-races-in-kerala.html
http://www.alappuzha.com/boatraces.htm

கானா பிரபா said...

வணக்கம் ராசா

தங்கள் வருகைக்கும், அந்தப் பிழைதிருத்திற்கும் என் நன்றிகள். ஆம் எனப்படும் படகுகள் வேறானவை. அவை பற்றியும் சொல்ல இருக்கிறேன். இக்குறிப்பினை எடுத்த நாள் இரண்டையும் சேர்த்துக் குழப்பிவிட்டேன். இப்போது திருத்தப்பட்டுள்ளது. மழை நேரப்படகுப்பயணம் வித்தியாசமானதாகவும், இதமானதாகவும் இருந்தது:-)

G.Ragavan said...

அருமையான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். மனசு மயங்கி மௌன கீதம் பாடியிருப்பீர்களே! :-)

ஓ சமைத்துக் கொடுக்கவும் அமைப்பும் ஆளும் இருக்கிறதா! சைவ அசைவப் பாகுபாடு பார்க்கிறார்களா? இல்லை...மீனைக் கண்முன்னே பிடித்து...பொரித்துக் கொடுக்கிறார்களா?

கானா பிரபா said...

வணக்கம் ராகவன்
படகு வீட்டுச் சமையலின் சிறப்பை அடுத்த பதிவில் சொல்லவிருக்கின்றேன். கடற்கழிப் பயணத்தில் அசைவம் தான், அசைவம் தவிர வேறில்லை:-)

johan -paris said...

பிரபா!
இந்த படகுவீட்டுக்கும்; கேரள மருத்துணெய்க் குளியலுக்கும்;பிரான்சின் ஓர் முன்னாள் அமைச்சரும் வாடிக்கையாளர். இவற்றை நான் தொலைக்காட்டியில் பார்த்துள்ளேன். படகுப் போட்டி உட்பட; இதே வகைப் படகுப் போட்டிகள் தாய்லாந்து; கம்போடியாவிலும் உண்டு.அடுத்து இந்த ஓடையிலுள்ள ஆகாயத்தாமரைகள் உலகின் நன்னீருக்குப் பெரும் சவால் என தாவரவியலாளர்கள் கூறுகிறார்கள்.இவை பெருந்தொகையான நீரை உறிஞ்சி ஆவியாக்கும் தன்மையுடையதால்; நைல் போன்ற நதிகளைக் கூட அச்சுறுத்துகின்றன.
பார்க்கும் படமெல்லாம் மழையும் பசுமையும் ;ரம்மியமாக இருக்கிறது. இளமையில் மழை வெள்ளத்தில் நலைந்து; நீர்ச்சிரங்கு வந்து இரவு பூரா பாயுடன் காலைத்தேய்த்து;அழுததும்; அம்மா "சொல்லுக் கேட்காமல் வெள்ளத்தில் விளையாடியதுக்கு ,உனக்கு வேணும்" என்று கூறிவிட்டு; கால் நகக் கிடுக்கில் மண்ணெய் பூசிப் படுக்கவைத்ததை மறக்கமுடியாது.
யோகன் பாரிஸ்

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா
மேலதிக தகவல்களுக்கும் என் நன்றிகள். எனக்கும் கூட நீர்ச்சிரங்கிற்கு மண்ணெண்ணை தான் மருந்தாகக் கிடைத்தது.

சின்னக்குட்டி said...

.... ஒரு அநுபவத்தை அநுபவித்ததை மற்றவர்களும் அநுபவிக்கிற மாதிரி எழுத்தில் வெளிப்படுத்தும் பிரபாவுக்கு பாராட்டுக்கள்

கானா பிரபா said...

தங்கள் தொடர்ந்து ஊக்குவிப்புக்கு மிக்க நன்றிகள் சின்னக்குட்டியர்.

Covai Ravee said...

அன்பு பிரபா சார்... நானும் எனது கல்லூரி நண்பர்கள் சிலருடன் இந்த பயணத்தை அனுபவித்து இருக்கிறேன். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். நண்பர்களூக்கு மட்டும் மறக்க்க்க்க்க்க்க முடியாத பயணம் (என்னென்று புரிந்து இருக்கும்?)