Social Icons

Pages

Tuesday, July 04, 2006

ரச தந்திரம் - ஆலப்புழாவில் பார்த்த சினிமா

மே 27, மாலை 6.10 (இந்திய நேரம்)
ஆலபுழாவிற்கு மாலை 5 மணிக்கே வந்ததால் இரவு தழுவும் நேரம் வரை கடைத் தெருக்களை வலம் வரலாம் என்று நினைத்துச் சுற்றினேன், மிகச் சிறிய நகர் என்பதால் அதிக நேரம் உலாவத் தேவை இருக்கவில்லை. திடீரென்று ஒரு யோசனை வந்தது. ஆலப்புழாவில் ஒரு சினிமாவில் நல்ல மலையாளப்படம் பார்க்கலாமே என்ற முடிவு தான் அது. ஒரு ஆட்டோக்காரரை வழி மறித்து நல்ல படம் ஓடும் தியேட்டருக்குக் கொண்டுபோகும்படி கூறினேன். அந்தப்பக்கம் அடல்ஸ் ஒன்லி படங்கள் தான் ஓடும் (தயாரிப்பாளர்கள் கவனிக்க), நல்ல தியேட்டர் கொண்டு போகிறேன் என்றவாறே சாந்தி தியேட்டர் என்ற வளாகத்துக்கு அழைத்துச் சென்றார். நல்ல புத்தம் புதுத் தியேட்டராக அது இருந்தது. நான் தியேட்டரை அடைந்தபோது மாலை 6.10, படமோ 6.20 இற்கே ஆரம்பமாகிவிட்டிருந்தது. இருக்கைகள், இதுவரை நான் போன தமிழ் சினிமாத் தியேட்டர்களின் இருக்கைகளை விட நல்ல தரத்தில் இருந்தன. நான் பார்த்த படம், பார்க்கவேண்டும் என்று பிரியப்பட்ட "ரச தந்திரம்".

ரச தந்திரம் என்றால் இரசாயனம் (வேதியியல்) என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திரைப்படத்திற்கு மலையாளத் திரையுலகில் நல்லதொரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் மோகன்லால், மீரா ஜாஸ்மின் இணைமும் முதல் படம், மலையாளத்திரையுலகின் நல்லதொரு இயக்குனர் சத்தியன் அந்திக்காடு மற்றும் மோகன்லால் 12 வருடத்திற்குப் பின் இணையும் படம் என்ற எதிர்பார்ப்புக்களே அவை. கூடவே இசைஞானி இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் வேறு. படமும் அந்த எதிர்பார்ப்புக்களை ஏமாற்றாமல் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது.

படத்தின் கதைக் கரு இதுதான். தச்சுச் தொழிலாளியாக வேலை பார்ப்பவன் பிறேமச்சந்திரன் (மோகன்லால்) , கூடவே தன் தந்தையை மட்டுமே குடும்ப உறுப்பினராகக் கொண்டிருக்கிறான். ஒரு சமயம் இவன் தன் தச்சுத் தொழிலாள நண்பர்களுடன் ஒருவீட்டின் திருத்தவேலைகள் செய்யும் போது அவ்வீட்டுக்காரர்களால் கொடுமைப்படுத்தப் படும் கண்மணி (மீரா ஜாஸ்மின்) என்ற வேலைக்காரி மீது அனுதாபப்படுகின்றான். கண்மணி சேலத்தைச் சேர்ந்த தமிழ்பெண் என்றும், அநாதையாகிப் போன அவள் தன் வயிற்றுப்பிழைப்புக்காகவே இப்படிக் கஷ்டப்படுகின்றாள் என்பதையும் தெரிந்துகொண்ட பிறேமச்சந்திரன் அவளை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றி இன்னோர் இடத்தில் வேலைக்கமர்த்த முயற்சி செய்கின்றான். இதற்கிடையில் அந்தக் குடும்பத்தாரின் தொடர் துன்புறுத்தல்களைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்யமுயற்சி செய்கிறாள் கண்மணி. இதைக் கண்ட பிறேமச்சந்திரன் அவளைக் காப்பாற்றி தற்காலிகமாக ஒரு இடத்தில் மறைத்து வைக்கின்றான். அவளும் விடலைப் பையன் போல மாறுவேடம் பூண்டு நடிக்கிறாள். இதற்குள் கண்மணியைக் காணவில்லை என்று வீட்டார் கொடுக்கும் புகார் , தொடர்ந்த குழப்பங்களால் கண்மணி, தான் பிறேமச்சந்திரன் மேல் கொண்ட காதலால் தான் ஓடி வந்ததாகக் கூறுகிறாள். பின்னர் அவன் மேல் உண்மையான அபிமானமும் அவளுக்கு ஏற்படுகின்றது. ஆனால் கண்மணியின் காதலை ஏற்கமறுத்து விலகி விலகிப் போகும் பிறேமச்சந்திரன் ஒரு கட்டத்தில் தான் ஒரு ஜெயில் தண்டனைக் கைதி என்ற உண்மையைச் சொல்லும் போது படம் இன்னொரு திசையில் பயணப்படுகின்றது.முழுக்கதையையும் சொன்னால் VCD இல் கூட நீங்கள் பார்க்கமாட்டீர்கள்.

படத்தின் முதற்பாதியில் மீரா ஜாஸ்மின் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் , மறுபாதி மோகன்லால் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் காட்டியிருப்பது இந்தப் படத்தின் திரைக்கதையின் சிறப்பு. போரடிக்காமல் நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படமாக சத்தியன் அந்திக்காடு தந்திருப்பது அவரின் இயக்குனர் முத்திரையில் இன்னொரு முத்து.

மலையாளப்படங்களில் கவனிக்கக் கூடிய இன்னொரு அம்சம் , ஒரே நடிகர் குழுவே பெரும்பாலான படங்களில் நடிப்பது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் தம் வித்தியாசமான பாத்திரத்தேர்வைச் செய்வது.

மோகன்லாலின் தச்சுத் தொழில்கூட முதலாளியாக வந்து ஆபாசம்/அடி உதையற்ற நல்லதொரு நகைச்சுவை நடிப்பை வழங்கியிருக்கிறர் இன்னசென்ட் , (இவர் சந்திரமுகி மூலப் பதிப்பான மணிச்சித்திர தாழு படத்தில் வடிவேலு பாத்திரத்தில் வந்தவர்) . இவர் ஒரு காட்சியில் சும்மா வந்து போனாலே தியேட்டர் கதிரைகள் சிரிப்பால் குலுங்குகின்றன.

அதே போல் இன்னொரு நகைச்சுவை நடிகர் ஜெகதி சிறீக்குமார் , மீரா ஜாஸ்மினின் தாய்மாமனாக வந்து தமிழ் பேசிக் கலக்கல் நடிப்பை வழங்கும் போது எம். ஆர்.ராதாவை நினைவுபடுத்துகின்றார்.

படம் முழுக்கவே தனியான நகைச்சுவைக் காட்சி இல்லாது பெரும்பாலான நடிகர்களே கதையோட்டத்தோடு நகைச்சுவை நடிப்பையும் வழங்கியிருக்கிறார்கள்.

கவியூர் பொன்னம்மாவிற்கு வழக்கமாக தமிழ் சினிமாவில் மனோரமா அதிகம் செய்யும் செண்டிமெண்ட் பாத்திரம்.
அநாதை வேலைக்காரியாக அல்லற்படுவதாகட்டும் , டீன் ஏஜ் பையனாக படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பதாகட்டும், மீரா ஜாஸ்மின் பின்னியெடுக்கிறார். குறிப்பாக இவரின் ஆண் வேடம் எவ்வளவு இயல்பானது என்று தெரிந்து கொள்ள, மோகன் லால் கடைக்கு அனுப்பி சாமான் வாங்கிவரச் சொல்லிவிட்டு மாடியின் சாளரம் வழியே அவர் பார்க்கும் போது , இளம் பையன் போல நடை நடந்து கடையில் இருந்து தொங்கும் வாழைக்குலையில், ஒரு பழத்தை எடுத்து இலாவகமாக உரித்து மோகன்லாலைப் பார்த்தவாறே மிடுக்காகச் சாப்பிடும் போது , ஆஹா என்னவொரு இயல்பான நடிப்பு.

ம் தமிழ்சினிமா நாயகர்கள் 60 வயதிலும் உம்மா உம்மம்மா பாடிக்கொண்டும், வீர அரசியல் பேசிக்கொண்டும் இருக்கையில் மோகன்லால் போன்ற மலையாளத்து நாயகர்கள் வியப்பளிக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இப்படமும் ஓர் சான்று. குறிப்பாக ஒரு காட்சியில் தன் நெருக்கடியான சூழ்நிலையிலும் அசட்டுச் சிரிப்பை வரவளைத்து நடிக்கும் காட்சியே நல்ல உதாரணம்.இவர், பாரதியின் " நிமிர்ந்த நன்னடையும்" என்ற கவிதையை மலையாளத்தமிழில் பேசும் போது நெருடலாக இருந்தாலும், மலையாளக் கதாபாத்திரமே அவ்வாறு பேசுவது போலக் காண்பிப்பதால் மன்னித்துவிடலாம்.

80 களில் தமிழ் சினிமா உலகில் இசைச்சக்கரவர்த்தியாக இருந்த இளையராஜா இப்போது கேரளாவின் சக்கரவர்த்தியாகி விட்டார் போலும். மனுஷர் பின்னணி இசையிலும் சரி பாடல்களிலும் சரி பின்னியெடுத்துவிட்டார். இந்தப்படத்துக்கு இளையராஜாவின் இசை இல்லை என்றால் என்ற கற்பனை வந்து பயம்கொள்ள வைக்குமளவிற்கு அவரின் ஈடுபாடு தெரிகிறது. பொன்னாவணிப் பாடம், பூ குங்குமப் பூ, ஆத்தங்கரையோரம், என்று எதையும் ஒதுக்கிவிட முடியாத அருமையான பாடல்கள். இன்னும் மலையாளப் பாடல் தேர்வில் முதல் 10 பாடல்களில் முதலாவாதாகவே பொன்னாவணிப் பாடம் பாடல் இருக்கிறது.

Bangalore Landmark இல் இசைத்தட்டை வாங்கி என் காரில் ஒலிக்கவிட்டிருக்கிறேன். இன்னும் எடுக்கவே மனசு வரவில்லை.
இப்படப்பாடல்களை இணையத்தில் கேட்க
http://www.raaga.com/channels/malayalam/movie/M0000961.html

தந்தை மகன் பாசக்காட்சிகளும் தொடரும் பாடலும் மட்டும் இப்படத்திற்கு ஒரு திருஷ்டிகழிப்பு.

மீரா ஜாஸ்மின் வேலை பார்க்கும் வீட்டின் அரை லூசு மூதாட்டியின் குறும்புகள், இதுவரை நான் எந்தப்படங்களிலும் காணாத பாத்திரம்.

இப்படத்தில் குறிப்பிடவேண்டிய இன்னொரு பாத்திரம் , பண்ணையாராக வந்த ஒடுவில் உன்னிகிருஷ்ணன் பாத்திரம். பல படங்களில் இவரின் குணச்சித்திர நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்படத்தில் வழக்கத்துக்கு மாறாக இவர் முக வீங்கியிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. அடுத்த நாள் ஆலப்புழாவில் வைத்து பத்திரிகை பார்த்தபோது தான் தெரிந்துகொண்டேன். நான் இப்படம் பார்த்த இதே நாள் (27/05/06) ஒடுவில் உன்னிகிருஷ்ணனும் இறந்துவிட்டாராம். அடூரின் தேசிய விருது பெற்ற "நிழல் கூத்து" திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகராக நடித்தமைக்கு விருதும் வாங்கியவர். ரச தந்திரம் நடிக்கும் போதே டயாலிஸிஸ் நோய் கண்டு சிரமப்பட்டே நடித்ததாக இயக்குனர் தன் அஞ்சலியில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தில் இவர் நாதஸ்வரத்தை பொழுது போக்காக வாசிக்கும் காட்சியிலேயே இந்த அற்புதக் கலைஞனின் சிறப்பு விளங்கும். இக்கட்டுரை மூலம் அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

இப்படம் முழுமையான ஒரு மசாலாப் படமாக இருந்தாலும் நுட்பமான மனித உணர்வுகளை அது காட்டத்தவறவில்லை. தொடர்ந்து ஹொலிவூட் படங்களைப் பார்த்துப் பிரதிபண்ணும் தமிழ் சினிமா இயக்குனர் பலர் , கேரளாப் பக்கமும் தம் பார்வையைத் திருப்பினால் நல்ல பல திரைக்கதைகளைத் தமிழ் ரசிகனும் பார்க்கும் வாய்ப்பு அதிகப்படும். அதை விடுத்து படம் வெற்றி பெற வேறொரு தந்திரமும் அவர்கள் செய்யத் தேவையில்லை.

படம் முடிந்து சாந்தி தியேட்டரை விட்டு வெளியேறுகின்றேன். நேரம் இரவு 9.15, ஆலப்புழாக் கடைத்தெருக்கள் இரவின் போர்வையில் தூங்கிக்கிடக்கின்றன.

திருச்சு வரும்.....

19 comments:

ஜோ/Joe said...

நல்ல விமர்சனம்! சுவாரஸ்யமான தகவல்கள்! அருமையான பதிவு!

கானா பிரபா said...

ஜோ,
தங்கள் கருத்துக்கு நன்றிகள்

Anonymous said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் பிரபா.. நான் கூட பார்க்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.

கானா பிரபா said...

கட்டாயம் பாருங்கள் பிரகாஷ்
பார்த்து முடித்ததும் தங்கள் பார்வையை அறிய ஆவல்.

G.Ragavan said...

ரசதந்திரம்.......விளம்பரம் பார்த்தேன். படம் பார்க்கவில்லை. வித்தியாசமான முயற்சிகள் தமிழ் சினிமாவில் ஏன் குறைவு என்று நான் இன்று அலுவலகம் வரும் வழியில் நினைத்துக் கொண்டே வந்தேன். நீங்கள் இப்படியொரு பதிவு போட்டிருக்கிறீர்கள். ம்ம்ம்ம்ம்..

பொன்ஸ்~~Poorna said...

இந்தப் படம் தமிழில் வருதோ? எங்கயோ மீரா ஆண்வேடத்தில் இருக்கும் ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்த நினைவு..
இருந்தாலும் மீராவுக்காகப் பார்க்கணும்..

கானா பிரபா said...

ராகவன்

உங்களுக்கும் இப்படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நீங்களும் ராஜாவின் ரசிகன் தானே.
Landmark இல் இதன் VCD தேடவும்:-)))

ஜோ/Joe said...

///வித்தியாசமான முயற்சிகள் தமிழ் சினிமாவில் ஏன் குறைவு என்று நான் இன்று அலுவலகம் வரும் வழியில் நினைத்துக் கொண்டே வந்தேன்.//

ராகவன்,
இதில் பெரிய சூட்சுமம் ஒன்றும் ஒளிந்திருக்கவில்லை .வித்தியாசமான முயற்சிகள் வெற்றி பெறுவதும் பெறாததும் நுகர்வோர் கையிலே தான் உள்ளது .தமிழில் வித்தியாசமான முயற்சிகளுக்கு எத்தனை வெகுஜன மக்கள் (தியேட்டருக்கு போய் படம் பார்ப்பவர்கள்)ஆதரவு தருகிறார்கள் ? அன்பே சிவமும் ,மகாநதியும் வித்தியாசமான முயற்சி இல்லையா? இவற்றை ஆகா ஓகோ என புகழ்பவர்களில் முக்கால் வாசி பேர் தியேட்டரில் இந்த படங்கள் தூக்கி வீசப்பட்ட பின் VCD -யில் பார்த்து "ஏன் இப்படி படங்கள் வருவதில்லை" என்ரு புலம்புபவர்கள் ..தியேட்டருக்கு போகிறவர்கள் இந்த படங்களை சீண்டுவதில்லை ..படம் எடுக்குறவன் என்ன தர்மத்துக்கா எடுக்க முடியும்..

ஐகாரஸ் பிரகாஷ் போல அறிவுஜீவிகள் கூட சந்திரமுகி முதல் ஷோவே பார்த்துவிட்டு ,அன்பே சிவத்தை 3 ஆண்டுகளுக்கு பிறகு ஓசியில் சன் டிவியில் பார்த்து விட்டு "பேஷ்..பேஷ்..நல்ல படம்" என்று எழுதுகிறார்கள் ..என்னமோ போங்க!

பாலசந்தர் கணேசன். said...

ஒரு மலையாள படத்தின் விமர்சனம் வலைபதிவில் நான் இப்போது தான் பார்க்கிறேன். தமிழிலும் நல்ல படங்கள் வருகின்றன. அதை பற்றியும் எழுதலாம். ஏன் மற்ற மொழி படங்கள் பற்றி உயர்வாக எழுதும் போது தமிழ் படங்களை மட்டம் தட்டி விடுகிறீர்கள்? இந்த ஒரு படம் பார்த்து விட்டு எல்லா படத்தையும் பற்றி ஒரு பொதுப்படையான கமெண்ட் வருகிறது? எனினும் பதிவு நன்றாகவே உள்ளது இந்த ஒரு வரி நெரிடிய போதும்

கானா பிரபா said...

பொன்ஸ்

மீராவுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நான் இப்படத்தைப் பார்க்கத் தயார்.
ஸாரி, ரொம்ப ஜொள்ளீட்டேன்:-))

கானா பிரபா said...

வணக்கம் பாலசந்தர் கணேசன்

நம் தமிழ்சினிமா என்ற ஆதங்கத்தில் தான் எழுதியிருந்தேன். நல்ல தமிழ்ப்ப்டங்கள் பற்றி எழுத நல்ல தமிழ் வலையர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படைப்புக்களில் நானும் அந்தத் தமிழ்ப்படங்களின் சிறப்பைச் சிலாகித்திருக்கிறேன்.

என் விமர்சனத்தின் இறுதியில் குறிப்பிட்டது போன்று, நல்ல பல படைப்புக்கள் இன்னும் தமிழில் வரலாம்.

இதோ
வீடு என்ற தமிழ்ப்படம் பற்றி நான் எழுதிய பழைய பதிவு
http://kanapraba.blogspot.com/2006_02_01_kanapraba_archive.html

Anonymous said...

http://gilli.in/2006/07/04/rasa-thanthiram-review-by-kana-prabha/

கானா பிரபா said...

http://gilli.in/2006/07/04/rasa-thanthiram-review-by-kana-prabha/

முபாரக் said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள் கானா பிரபா!

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். உங்க சொல்ல மதிச்சாவது இந்தப் படத்த பாக்கணும் :)

மேன்மேலும் சிறந்த எழுத்துக்களைப் பதிவு செய்யுங்கள். வாழ்த்துக்கள்

சினேகபூர்வம்
முபாரக்

கானா பிரபா said...

வணக்கம் முபாரக்
தங்கள் அன்பு வாழ்த்துக்கு என் நன்றிகள்
நீங்கள் சென்னையில் இருந்தால், இல் எடுத்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
என் இந்தத் தெரிவு சோடை போகாது என்று நினைக்கிறேன். தங்கள் விமர்சனம் அறிய ஆவல்:-)

பாவூரான் said...

//நல்ல புத்தம் புதுத் தியேட்டராக அது இருந்தது. நான் தியேட்டரை அடைந்தபோது மாலை 6.10, படமோ 6.20 இற்கே ஆரம்பமாகிவிட்டிருந்தது. இருக்கைகள், இதுவரை நான் போன தமிழ் சினிமாத் தியேட்டர்களின் இருக்கைகளை விட நல்ல தரத்தில் இருந்தன//

என்னதான் திருட்டு VCD பார்ப்பதில் வசதியாக இருந்தாலும், தியேட்டருக்குப்போய் படம் பார்ப்பதில் இருக்கும் சுகமே தனி!!!

திருட்டு VCD கள் பெருகுவதற்கு தியேட்டர்களின் மோசமான தரமும் ஒருகாரணம்.

நான் கேரள மாநிலம், காஞ்சிரப்பள்ளியில் பணிபுரிந்தபோது ஓபரா தியேட்டரில் ஓடிய அத்தனை மலயாளபடமும் பார்த்திருக்கிறேன்.

அங்கு கடைசியாக நான் பார்த்த படம் ' வீண்டும் சில வீட்டு கார்யங்கள்' . அதை பார்த்தபோது ஒரு கட்டத்தில் நான் அழுதேன்.

சமீபத்தில் அதே படத்தை asiyanet ல் மனைவியுடன் சேர்ந்து பார்த்தேன். அதே கட்டத்தில் மீண்டும் அழுதேன். திரும்பிப் பார்த்தேன் , என் மனைவியும் அழுதுகொண்டிருந்தாள்.

யாரேனும் அந்த படம் பார்க்கும் போது அழுதிருந்தால் எந்த கட்டத்தில் அழுதீர்கள் என்று சொல்லுங்கள்.

பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

கானா பிரபா said...

வணக்கம் பாவூரான்

வீண்டும் சில வீட்டுக்காரியங்கள் படம் கூட சத்யன் அந்திக்காடு இயக்கத்தில், இன்னொரு தலை சிறந்த இயக்குனர் லோகிதாசின் கதையில் வந்தது. இந்தப்படம் பார்த்து 6 வருடங்களுக்கு மேல், ஆனாலும் திலகன் - ஜெயராமின் தந்தை மகன் பாசம் நெஞ்சை அள்ளும் காட்சிகள்.

Anonymous said...

நாங்கள் இப்படித்தான் படமெடுப்போம் ரசிகர்களாகிய நீங்கள் இதைத்தான்
பாருங்க என்னும் விடாப்பிடியான இயக்குனர்கள் தமிழ்நாட்டில் உள்ளவரை தமிழில் நல்ல சினிமா என்பது ஒரு கனவே. K.விஸ்வநாத்
இயக்கிய சலங்கை ஒலி. சிப்பிக்குள் முத்து சங்கராபரணம் நல்ல முன்னுதாரணம் ஆனால் சாண் ஏறமுழம் சறுக்கும் கதையாக அடுத்து
வரும் சகலகலாவல்லவன் மாதிரியான படஙகள் தயாரிப்பாளருக்கு
பணத்தை கொட்டும் உடனே தொடர்கதையாகிபோகும் தமிழ் சினிமா
மசாலா. இதுதான் தொடர்நிலை.
மாகநதி குறிப்பிட கூடியபடம் ஆனால் அன்பே சிவம் சராசரி தமிழ் சினிமா பார்முலாதான். ஆனால் இந்தியில் BLACK ராணி முகார்ஜி
அமிதாபச்சன் நடித்த படம் சக்கைபோடு போட்டு அவார்ட்டும் வாங்கி விட்டது. கொங்கனா சென்னின் MR AND MRS ஐயர் உலகம் எல்லாம் ஓடி
அவார்ட்டும் புகளும் வாங்கி கொண்டது.(ஆடைவிளம்பரத்துக்கு வரும்
மொடலிங் மனிதனின் நடிப்பு தமிழ் நாட்டில் யாரிடமும்மில்லை)

இன்னும் நிறாயசொல்லாம் அடுத்த பதிவில் தொடர்கிறேன் பிரபா

செல்வா

கானா பிரபா said...

வணக்கம் செல்வா
வழக்கம் போல் விசாலமான பார்வையாக உங்கள் பின்னூட்டம் இருக்கின்றது.