Pages

Monday, March 26, 2007

தொட்டிற் பழக்கம் - ஒரு weird பதிவு


பதிவர்கள் ஒவ்வொருவராக தம் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பித் தம் தனிக்குணங்களைக் காட்டும் வேளை இது.சகோதரி உஷாவின் அழைப்பில் நானும் களமிறங்குகின்றேன். தொட்டிலில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள், என்னைப் பொறுத்தவரை
இங்கே நான் சொல்லப்போகும் என் தனிக்குணங்கள் இனிமேலும் மாறுமா என்பது சந்தேகமே ;-))

இங்கே என் மனச்சாட்சியின் குரலாக என் குணாதிசயங்கள் வெளிவருகின்றன. இவற்றில் பலவற்றை முதன்முதலாக இன்னொருவருடன் நான் பகிரும் என் தனிப்பட்ட விஷயங்களாகவும் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை குழந்தைப் பருவத்திலிருந்து தொடரும் சில பழக்கங்களோடு இடையே புகுந்த சில பழக்கங்களாகவும் இவை இருக்கின்றன.

என்னுடைய அம்மா, கூடவே இரண்டு சகோதரிகள், ஒரு தம்பி (இரண்டு மூன்று வயது இடைவெளியில்) என்று பெத்துப் போட்டுவிட்டு அவர்களின் இளவயதிலேயே தாத்தா (அம்மாவின் அப்பா) இறந்துவிட்டார். எனவே என் அம்மாவைப் பொறுத்தவரை ஒரு பெண்ணின் இளமைக்கால எதிர்பார்ப்புக்கள் ஆசாபாசங்கள் மட்டுப்படுத்தப்பட்ட உண்ண உணவு, உடுக்க உடை, படிப்பு என்ற எல்லையோடு சாதாரண வாழ்க்கையாகவே கழிந்து போனது. அவரின் அடிமனதில் இருந்த சங்கீதம், நடனம் போன்ற நுண்கலைகள் மீதான ஆசை, ஆசை அளவிலேயே நின்று , ஒரு ஆசிரியையாக மட்டும் தன்னை வளர்த்துக்கொண்டார். சரி, என்னுடைய ஆசைகளைப் பெண் குழந்தை பிறந்தால் அவளுக்கு என் விருப்பம் போல வளர்த்துவிடலாம் என்ற என் அம்மாவின் நினைப்பில் விழுந்தது மண். இரண்டு அண்ணன்மாருடன் மூன்றாவதாக நான் பிறந்தேன். அதனாலோ என்னவோ இயன்றவரை என் பிள்ளைப் பிராயத்திலிருந்தே ஒரு பெண்பிள்ளை போல வளர்த்து வந்தார். அதுவே பின்னாளில் என்னுடைய சில குணாதிசயங்களில் பெண்களுக்கே உரிய சில பண்புகளும் வாய்த்துவிட்டன.

1. பயங் கொள்ளல்

ஆயிரம் ஜெனமங்கள் என்றொரு பாழாய்ப்போன படத்தை என் சிறுபிராயத்தில் பார்த்துத் தொலைத்துவிட்டேன். அது முதல் இரவு வேளைகளில் அம்மா காவல் காக்க ஓண்ணுக்குப் போவது, கை கால் மறைத்து தலையின் மூக்கு வாய்ப்பாகம் மட்டும் வெளியே தெரிய
போர்வையால் மூடிக்கொண்டே தூங்குவது, பேய்ப்படங்களின் பாடல்கள் வானொலியில் வந்தால் இருகாதிலும் விரலால் இறுகமூடிக்கொள்வது சில உதாரணங்கள். ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் வரும் வெண்மேகமே பாடலை இன்றும் எனக்குக் கேட்டால் குலை நடுங்கும். ( வெளிநாடு வரும் வரை அம்மா தான் சாப்பாடு ஊட்டிவிட்டார்)

என்னுடைய பதினோராம் ஆண்டில் ( பிளஸ் ஒன்) படிக்கும் போது ஆச்சி (அப்பாவின் அம்மா) இறந்தபோது தான் நான் முதன்முதலில் ஒரு மரணவீட்டுக்கே போனேன். இதுவரை நான் மரணவீடுகளுக்குச் சென்ற எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். புலம்பெயர்ந்து வந்த பின் நான் தவிர்க்கமுடியாது சென்ற மரணச்சாலைகளில் பார்வைக்காக வைக்கப்படும் உடலைப் பார்க்கும் வரிசையில் நின்று உடலைப் பார்க்காமல் அந்தக் கணம் மட்டும் கண்ணை மூடிக்கொள்வேன். விதிவிலக்கு மலரக்காவின் இறுதிச்சடங்கு.

2. பாட்டு கேட்டல்

என்னைப் பொறுத்தவரை சினிமாப்பாடல்களைப் படங்களில் வரும் இடைச் செருகலாக இல்லாமல் என்னை ஆக்கிரமிக்கும் சோகங்களுக்கான ஒத்தடமாகவும், அதி உச்சபட்ச மகிழ்ச்சியின் போது பங்கு போடும் பங்காளியாகவும் பல தடவை அனுபவித்திருக்கின்றேன். காதல் அரும்பிய காலங்களில், இளையராஜாவின் எண்பதுகளில் வந்த படப்பாடல்களை ரேப்றெக்கோடரில் போட்டுக் கேட்டுக்கொண்டே மேசையில் தலைசாய்த்துக் கனவு காண ஆரம்பித்துவிடுவேன்.

ஒன்று சொன்னால் சிரிக்காதீர்கள். பாடலில் வரும் ஆண் குரலாக நானும் பெண்குரலாகக் காதலியையும் உருவகப் படுத்தி அப்பாடலை ஒரு படப்பாடல் போலத் தான் பகற்கனவு காண்பேன். என் ஜீவன் பாடுது படத்தில் வரும் எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற இளையராஜாவின் பாடலைத் தலை சாய்த்துக் கேட்கும் நாள் என் காதலியை டியூசனில் நான் காணாத நாள் என்பது என் ரேப் றெக்கோடருக்குத் தெரியும்.

3. படம் பார்த்தல்

சிம்பு தனுஷ் காலமும் வந்துவிட்டது, இளையராஜாவின் மகன் யுவனும் இசையமைக்க வந்துவிட்டார். ஆனால் எனக்கு இன்னும் பிடித்தவை எண்பதுகளில் ராமராஜன் நடித்த படங்களும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே, அரண்மனைக் கிளி வகையறாக்கள். கரகாட்டக்காரன் வீசீடி போதாதென்று டீ.வீ.டியும் வைத்திருக்கிறேன். என் காரில் ஐந்து இசைத்தட்டுக்களைப் பொருத்திக் கேட்கலாம். அந்த ஐந்தும் பெரும்பாலும் எண்பதுகளில் ராஜா போட்ட மெட்டுக்கள்.
அதிகம் சென்ரிமென்ற் கலந்த அன்பே சிவம், பிளாக் போன்ற படங்களைப் பார்த்தால் கண்ணீர் வருவது என்னை மீறிய சக்தி ;-).




4. குழந்தைகள் மீதான நேசிப்பு

Finding Nemo என்ற படத்தை வெள்ளைக் குழந்தைகள் தம் பெற்றோருடன் தியேட்டர் வந்து பார்க்கும் போது தனி ஆளாக அந்தக்கூட்டத்தில் படம் பார்த்த பயல் நானாகத்தான் இருப்பேன். Lion King மூன்று பாகங்களையும் டீவீடியில் வாங்கிப் பொக்கிஷமாக வைத்திருக்கின்றேன். கூடவே Madagascar, டிஸ்னியின் பெரும்பாலான கார்ட்டூன் தொகுப்பு வீடியோக்கள் இன்னும் சில உதாரணங்கள்.

என்னுடைய படுக்கையில் tickle me Elmo என்ற பொம்மை இருக்கிறது (பார்க்க படம் ), அதனுடைய வயிற்றை அமுக்கி அது குலுங்கிக் குலுங்கிச் சிரித்து ஓய்ந்த பின் தான் எனக்குத் தூக்கம் வரும்.

ஊரில் இருக்கும் போது பக்கத்து வீட்டுப் பிள்ளைகளைப் பிராய்க்குக் காட்ட உப்பு மூட்டை, நுள்ளுப்பிறாண்டு கிள்ளுப் பிறாண்டு விளையாட்டுக் காட்டிய பழக்கம் இன்னும் தொடர்கிறது. வார இறுதி நாட்களில் காலை 10 மணிக்கு முன் Mc Donalds சென்று அங்கு காலை உணவு சாப்பிட வரும் குழந்தைகளை வேடிக்கை பார்ப்பது ஒரு சுகம். விருந்து நடக்கும் வீடுகளில் பெரும்பாலும் பெரியோரின் பேச்சுக் கச்சேரியைத் தவிர்த்துக் குழந்தைகளோடு விளையாட்டுக் காட்டி அவர்கள் சிரிப்பதை ஆயுள் முழுவதும் பார்க்கப்பிடிக்கும்.

சமீபத்திய சாதனை: கடந்த இரு வாரம் முன் ஒரு கலியாண இரவு விருந்தில், பிறந்து பத்து மாதமான ஒரு குழந்தையோடு வந்த பெற்றோர் இசைக்கு ஆடத் தொடங்கத் தனியே தன் வண்டியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை வாரியெடுத்து என் தோளில் சாய்த்து தூக்கம் கொள்ளவைத்து விருந்து முடிவிற் தான் அதன் தாயிடம் கொடுத்தேன்.

5. வாசிப்பும் உலாத்தலும்



1995 ஆம் ஆண்டு நான் அவுஸ்திரேலியா வந்த நாள் முதல் ஆனந்த விகடனைச் சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. உதாரணத்துக்கு இப்பதிவில் நான் மேலே இணைத்துள்ள ஆனந்த விகடன் வெளிவந்த ஆண்டுகளைப் பாருங்கள். இன்னும் எனக்கு காமிக்ஸ் புத்தகங்கள் கொள்ளைப் பிரியம் (பார்க்க படம்). 1995 ஆம் ஆண்டு மணிச்சித்ரதாளு படம் வெளிவந்து ஷோபனாவுக்குத் தேசியவிருது அறிவித்ததை ஒரு ஆனந்த விகடனில் வாசித்துத் தெரிந்துகொண்டு முதன் முதலில் மணிச்சித்ர தாளுவில் ஆரம்பித்த மலையாளப் படம் பார்க்கும் அவா இன்னும் தொடர்கிறது. அதுவே பின் என் கேரள உலாத்தலாகவும் மாறிவிட்டது. கேரளாவில் கொஞ்சக் காலம் வாழக்கூடாதோ என்பதே இப்போது முளைத்திருக்கும் என் weird நினைப்பு.


போதுமா உஷா ;-)))

46 comments:

  1. பிரபா!

    நல்லதோர் சுயபார்வை. வித்தியாசமான ரசனைகள்.

    நன்றி!

    ReplyDelete
  2. பாடலில் வரும் ஆண் குரலாக நானும் பெண்குரலாகக் காதலியை உருவகப் படுத்தி அப்பாடலை ஒரு படப்பாடல் போலத் தான் பகற்கனவு காண்பேன்.

    நல்லதொரு மனதை திறந்து சொல்லும் பதிவு நன்றிகள்.

    ReplyDelete
  3. மலைநாடான்

    உங்களையும் சிந்தா ந்தி கேட்டிருக்கிறார், கெதியாப் பதிவைப் போடுங்கோ.

    //சின்னக்குட்டி said...
    நல்லதொரு மனதை திறந்து சொல்லும் பதிவு நன்றிகள். //

    சின்னக்குட்டியர்

    தனிப்பட்ட அழைப்பிதழ் நான் கொடுக்கவில்லை, நீங்களும் கட்டாயம் எழுதவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

    ReplyDelete
  4. பிரபா!
    முதலாவது நமக்குக் குறைவு!
    பாடல் ரசனை தியாகராஜ பகவதரில் தொடங்கிவிட்டது; ஏனையவை மிகப் பொருந்துகிறது. என்னுடன்.
    நம்ம தோஸ்துதான் ;வயது தான் வித்தியாசம்.
    இதைப் பேணவும்; திருமணத்தின் பின்பும்...

    ReplyDelete
  5. பிரபா
    ஆகா,அருமை!
    //இரவு வேளைகளில் அம்மா காவல் காக்க ஓண்ணுக்குப் போவது, கை கால் மறைத்து தலையின் மூக்கு வாய்ப்பாகம் மட்டும் வெளியே தெரிய
    போர்வையால் மூடிக்கொண்டே தூங்குவது//
    // வெளிநாடு வரும் வரை அம்மா தான் சாப்பாடு ஊட்டிவிட்டார்)//
    //உடலைப் பார்க்கும் வரிசையில் நின்று உடலைப் பார்க்காமல் அந்தக் கணம் மட்டும் கண்ணை மூடிக்கொள்வேன்.//

    //அதிகம் சென்ரிமென்ற் கலந்த அன்பே சிவம், பிளாக் போன்ற படங்களைப் பார்த்தால் கண்ணீர் வருவது என்னை மீறிய சக்தி//
    //விளையாட்டுக் காட்டிய பழக்கம் இன்னும் தொடர்கிறது.//
    //என் தோளில் சாய்த்து தூக்கம் கொள்ளவைத்து விருந்து முடிவில் தான் தாயிடம் கொடுத்தேன்.//
    இத்தனையும்
    உள்ளபடி உள்ளத்தில்
    உள்ளதை கள்ளமின்றி
    உதிந்துவிட்ட வார்த்தைகளில்
    பகிர்ந்தநற் பதிவிது.
    நன்றி, பிரபா

    ReplyDelete
  6. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    பிரபா!
    முதலாவது நமக்குக் குறைவு!
    பாடல் ரசனை தியாகராஜ பகவதரில் தொடங்கிவிட்டது; ஏனையவை மிகப் பொருந்துகிறது. //

    யோகன் அண்ணா,

    இன்றும் வெளியூர்ப் பிரயாணங்களில் -ஹேட்டல்களில் தங்கும் போது மின்விளக்கை எரிய வைத்து டீ.வியை போட்டுவிட்டுத் தான் தூங்குவேன். நம் ரசனை பல இடங்களில் ஒத்துப் போகின்றது ;-)

    ReplyDelete
  7. //செல்லி said ...
    இத்தனையும்
    உள்ளபடி உள்ளத்தில்
    உள்ளதை கள்ளமின்றி
    உதிந்துவிட்ட வார்த்தைகளில்
    பகிர்ந்தநற் பதிவிது.//

    மிக்க நன்றிகள் செல்லி

    எழுத முன்பு நிறைய யோசித்தேன். எல்லா உண்மைகளையும் அவிட்டு விடுகிறேனோ என்ற பயமும் இருந்தது. இப்போது மடியில் கனமில்லை ;-)

    ReplyDelete
  8. பிரபா
    என்னுடைய "வியேட்" பதிவில், மற்றவர்களின் வியேட் பதிவுகளுடன் உங்க பதிவுக்கும் தொடுப்புக் குடுத்திருக்கிறேன்.
    நன்றி, பிரபா.

    ReplyDelete
  9. சர்வேசன் உடனே ஒரு சிறந்த வியர்ட் யார் என்று கருத்துகணிப்பு நடத்தவும்.
    பிரபா, ஏமாற்றமில்லை வழக்கப்படி
    :-) ஆனாலும் பேயீகதை எல்லாம் ரொம்ப அதிகம், ஆமாம் ஜாவர்சீதாராமன் எழுதிய உடல்பொருள் ஆவி கதை படிச்சிருக்கீங்களா? கிடைச்சா ராத்திரி நேரமா படிங்க. சிக்ஸ்த் சென்ஸ் படம் பார்த்துட்டீங்களா? அதையும் தனியா உட்கார்ந்து ராத்திரில பாருங்க :-)
    எனக்குக்கூட அந்த நிமோ கார்ட்டூன் படம் ரொம்ப பிடித்த ஒன்று.

    ReplyDelete
  10. தொடுப்புக் கொடுத்ததற்கு மிக்க நன்றிகள் செல்லி

    வணக்கம் உஷா

    பேய்க்கதை பக்கம் தலை வச்சும் படுக்கமாட்டேன். வேணாம் விட்ருங்க ;-)

    ReplyDelete
  11. //பயங் கொள்ளல்//
    இப்பிடிப் பயப்பிடுற இன்னொராளையும் எனக்குத் தெரியும். காரோட்டிக் கொண்டு போகேக்க தெருவில ஏதாவது உயிரினம் உயிர் இல்லாமக் கிடந்தால் ஸ்டியரிங் வீலிலயிருந்து கையை எடுத்துக் கண்ணைப் பொத்திக் கொள்ளுவீரோ?? :O))

    //பெரும்பாலும் பெரியோரின் பேச்சுக் கச்சேரியைத் தவிர்த்துக் குழந்தைகளோடு விளையாட்டுக் காட்டி அவர்கள் சிரிப்பதை//
    உணமை. நானும் இதையே செய்கிறேன்

    ReplyDelete
  12. பிரபாண்ணா எல்லாத்தையும் சொல்லிட்டீங்கிள்...ஒருதரும் கடிக்காம விட்டிருக்கினம் உண்மை சொன்னதாலயோ:-)

    உங்கட அம்மான்ர ஆசை நியாயமானதுதானே...எங்கட அம்மாக்கு ஆம்பிளைப்பிள்ளை இல்லை என்ற கவலை இல்லை ஆனால் அப்பாக்கு இன்னும் இருக்கு.

    மரணவீடுகளுக்குப் போவது எனக்கும் பிடிக்காது பயம் என்றில்லை எனக்கு அழுகை வராது அதால அங்க போய் புதினம் பார்த்துக்கொண்டு நிக்க விருப்பமில்லை.

    Finding Nemo,Lion King ஓட நிப்பாட்டிட்டிங்கள்..Lighting mcqueen,ice age,happy feet இதெல்லாம் இல்லையா:-))))

    நானும் கொஞ்ம் பேய்ப்படங்களைப் பற்றிச்சொல்லி பார்க்கச் சொல்லுவம் என்று நினைச்சன் பட் வேணாம் என்றீங்கள்.

    ReplyDelete
  13. சொல்ல மறந்திட்டன் முனி படத்தில லாரன்ஸ் அவற்ற அம்மா(சரளா)வைக் கூட்டடிக்கொண்டு போவார் வோஸ்றூம் போறதுக்கு அவாக்கு சரியான நித்திரை தூக்கம் கதவுக்கு வெளில நின்றுகொண்டு நித்திரை தூங்குவா பின்ன லோரன்ஸ் உள்ளுக்க நின்றுகொண்டு

    "எம்மா அங்க நிக்கிறியா"

    "ஓமடா நிக்கிறன்"

    "ஏம்மா பேசாம நிக்கிறாய் ஏதாவது பேசேன்"

    "நானே வருவேன்...." ஒரு பேய்ப்பாட்டு பாடுவா

    "நீ தாயா இல்லாட்டி பேயா"

    ReplyDelete
  14. ஷ்ரேயா

    நீங்கள் சொல்லுற ஆள் ஆரெண்டு தெரியும் ;-)
    பெரியாக்களோடு பேச்சுக்கச்சேரி வச்சால் முடிவில் வீண் சண்டை தான் மிஞ்சும். சின்னனுகள் சோலி இல்லாததுகள்.

    உங்களையும் weird பதிவு போட இப்போது அழைக்கிறேன். மறுக்காமல் எழுதவும்.

    ReplyDelete
  15. //பெரும்பாலும் பெரியோரின் பேச்சுக் கச்சேரியைத் தவிர்த்துக் குழந்தைகளோடு விளையாட்டுக் காட்டி அவர்கள் சிரிப்பதை//
    உணமை. நானும் இதையே செய்கிறேன்//

    அதுவும் சரிதான் வயசு போனவை பெரும்பாலும் தங்கடை வயதொத்த ஆக்களுடன் சேருவதில்லைத் தான். அதுவே உலக நியதியுமாகும்.

    ReplyDelete
  16. வணக்கம் பிரபா ;-)

    எல்லாத்துக்கும் First Class மார்க் போடலாம் ;-))

    ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்க. உங்களுக்கும் எனக்கும் நிறைய விஷயங்கள் ஒத்து போகிறது, அதுவும் 1,4,5.

    ReplyDelete
  17. \\சமீபத்திய சாதனை: கடந்த இரு வாரம் முன் ஒரு கலியாண இரவு விருந்தில், பிறந்து பத்து மாதமான ஒரு குழந்தையோடு வந்த பெற்றோர் இசைக்கு ஆடத் தொடங்கத் தனியே தன் வண்டியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை வாரியெடுத்து என் தோளில் சாய்த்து தூக்கம் கொள்ளவைத்து விருந்து முடிவிற் தான் அதன் தாயிடம் கொடுத்தேன்.\\

    படிக்கும் எனக்கே இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் போது அனுபவித்த உங்களுக்கு இது ஒரு சாதனை தான் பிரபா ;-))

    \நான் அவுஸ்திரேலியா வந்த நாள் முதல் ஆனந்த விகடனைச் சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. \\

    எனக்கும் இந்த பழக்கம் இருக்கு....இன்னும் எங்கள் வீட்டில் ரெண்டு பெரிய பைகள் இருக்கின்றன. எனக்கு பிடித்த பக்கங்கள் அனைத்தும் வெட்டிவைத்துக் கொள்வேன்.

    ReplyDelete
  18. \\ஆரம்பித்த மலையாளப் படம் பார்க்கும் அவா இன்னும் தொடர்கிறது. \\

    தற்போது பார்த்த மலையாள திரைப்படம் எது?

    ReplyDelete
  19. சினேகிதி வணக்கம்

    //
    பிரபாண்ணா எல்லாத்தையும் சொல்லிட்டீங்கிள்...ஒருதரும் கடிக்காம விட்டிருக்கினம் உண்மை சொன்னதாலயோ:-)//

    அந்தப்பயம் இருந்தது, குறிப்பா கொழுவி ஏதாவது வில்லங்கத்தோட வருவார் எண்டு, உங்கட பின்னூட்டத்துக்கு கீழ வந்து தன்ர விளையாட்டை ஆரம்பிச்சிட்டார்.

    நான் சொன்ன கார்ட்டூன் படங்கள் சிலவே. இன்னும் இருக்கின்றன. முனி படம் பார்க்கும் ஆசை இந்த ஜென்மத்தில் இல்லை.


    //கொழுவி said...
    அதுவும் சரிதான் வயசு போனவை பெரும்பாலும் தங்கடை வயதொத்த ஆக்களுடன் சேருவதில்லைத் தான். அதுவே உலக நியதியுமாகும்.//

    வந்துட்டாருய்யா, வந்துட்டாருய்யா ;-)))

    ReplyDelete
  20. வணக்கம் கோபிநாத்

    மலையாளப்படம் பார்க்கும் விஷயத்தில் தான் நாம் ஒத்துப் போகின்றோம் என்றால் இப்போது இங்கும் கூடவா ;-) எனக்கு ஒரு தோஸ்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

    அந்தக் குழந்தையை எடுத்து என் தோளில் சாய்த்து அதன் முதுகைத் தடவிய போது அடம்பிடிக்காமல் தூங்கியபோது எனக்கு வந்த அந்தச் சின்னச் சந்தோஷம் இருக்கிறதே , அப்பப்பா சொல்லமுடியாது.

    கடந்த சனிக்கிழமை "நந்தனம்" பார்த்தேன். வழக்கம் போல் சாதாரண களம், நவ்யா நாயர் என்னமாய் நடித்திருக்கு, நவ்யாவுக்காகப் பார்க்கலாம்.

    ReplyDelete
  21. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்வீர்கள் போல!!

    கர்நாடக சங்கீதத்தை மூலமாகக் கொண்ட மலையாள படங்கள் சில சொல்ல முடியுமா?

    ReplyDelete
  22. வணக்கம் இலவசக்கொத்தனாரே

    மலையாளப்படங்களில் கர்நாடக இசை தழுவிய படங்களைத் தேடிச்சென்று பார்க்கும் அனுபவம் இதுவரை இல்லை. ஆனால் ரவீந்திரன் இசையில் வரும் படங்களில் கர்நாடக இசை இன்பம் பருகலாம். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, பரதம் குறிப்பிடத்தக்கவை. பரதம் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த படம். அது பின்னாளில் கார்த்திக் நடிக்க சீனு என்று தமிழில் எடுத்து ஒரு வழி பண்ணிவிட்டார்கள்.

    ReplyDelete
  23. பிரபா பலதையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.


    ஒரு சில விசயங்களில் என்னுடனும் ஒத்து போகிறீர்கள்.

    ReplyDelete
  24. பிரபா,

    கிண்டலடிக்க நிறையத் தீனி குடுத்திருக்கிறியள். இங்க, இப்ப வேணாம். இன்னொரு நாளைக்கு தனியா வச்சுக்கொள்ளுறன்.

    இப்போதைக்கு நீங்கள் பார்க்க, படிக்க சில பரிந்துரைகள்.

    1. சிக்ஸ்த் சென்ஸ், சைன்ஸ் பாருங்க.
    2. the exorcist - புத்தகம் + படம்
    3. ju-on: the grudge - Japanese original. not the american english version.

    சீரியஸா சொல்லுறதுன்னா, ghost பார்த்திருக்கீங்களா? பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். பழைய படந்தான். கட்டாயம் பாருங்க.

    'யார் நீ'ன்னு ஒரு படம் பார்த்து பயந்த ஆள் எழுதின பின்னூட்டந்தாம் இது. ;)

    ஆ.. சொல்ல மறந்திட்டன். என்னட்ட அந்த சிவாஜி படம் போட்ட ஆ.வி. மட்டும் இருக்கு. பத்திரமா வச்சிருக்கிறன்! ஜோ'ட்ட இருக்கான்னு கேக்கணும்.

    -மதி

    ReplyDelete
  25. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் விஜே, மற்றும் மதி
    உங்கள் இரண்டு பேரிடமிருந்தும் இதே மாதிரிப் பதிவை எதிர்பார்க்கின்றேன்.

    விஜே

    என்னென்ன குணங்கள் ஒத்துப்போகுது எண்டும் சொல்லலாம் தானே, பாதுகாப்பு உணர்வு போல ;-)

    மதி

    Ghost பார்த்திருந்தேன், டெமி மூர் என்ன அழகாய் நடித்திருந்தார், ஏனோ அப்படம் எனக்குப் பயத்தை உண்டுபண்ணவில்லை. ஆவியாகிப் போன காதலனைப் பார்த்து ரொம்பவே கவலைப்பட்டேன். கல்யாணராமன் போல ஆவிப் படங்களில் பயத்தை ஏற்படுத்தாத படமாக இதைப் பார்க்கின்றேன்.

    தாயீ, பேய்களின் சவகாசமே வேண்டாம் என்று சொல்ல நீங்கள் பட்டியலே தருகிறீர்கள். ஓமன் படம் மட்டும் லிஸ்டில் இல்லை ;-)

    எல்லாரும் மெளனமாக இருக்கும் போதே நினைச்சேன் , என் பலவீனக்களைத் தங்கள் பலமாக உபயோகிக்கக் காத்துக்கொண்டு நிக்கிறாங்கள் எண்டு :-(

    ReplyDelete
  26. பிரபா, உங்கள மாதிரி யாராவது சொந்த செலவில சூன்யம் வைப்பாங்களா? ;)))

    எனக்கெல்லாம் உங்கட அளவு தைரியம் இல்லையப்பு. ஆனா, பல கிறுக்கர்கள் என்னுடைய கிறுக்குகளையும் சொல்லியிருக்கீனம். என்ர வீட்டில பாத்ரூமிலயும் புத்தகம் இருக்கு. :) நீங்களும் என்ர கிறுக்கில ரெண்டைச் சொல்லியிருக்கிறீங்கள். குட்டீஸோட சேர்ந்து ஃபைண்டிங் நீமோல இருந்து மடகாஸ்கர் வரைக்கும் பார்ப்பேன். குறிப்பாக மடகாஸ்கர் பற்றி பசங்களுக்கு எடுத்துச்சொல்லிச்சொல்லி எல்லாரையும் கிளப்பிவிட்ட ஆள் நான். திரும்பி வீட்ட போகேக்க அக்கான்ர மகனுக்குப் போட்டியா "I Like To Move It, Move It" பாட்டுவேற. அவன் அதுக்கப்புறம் என்னைப்பார்த்தாலே அந்தப் பாட்டுப்பாடிக்கிட்டே வரவேற்கிற அளவுக்கு காருகுள்ள கூத்து. ;)

    ஸ்ஸ்ஸ்ஸ் பாருங்க கிறுக்குத்தனமெல்லாம் சொல்லமாட்டன் சொல்லமட்டன் எண்டு சொல்லியண்டே கொட்டத்தொடங்கிற்றன். சரி, விட்ட வேலையத் தொடரப்போறன். பிறகு பாப்பம்..

    naanae varuvaen

    -மதி

    ReplyDelete
  27. //இன்றும் வெளியூர்ப் பிரயாணங்களில் -ஹேட்டல்களில் தங்கும் போது மின்விளக்கை எரிய வைத்து டீ.வியை போட்டுவிட்டுத் தான் தூங்குவேன்.//

    அட நானும் இப்படித் தான் செய்வேன்.

    வழமை போல மிக நல்ல பதிவு.

    ReplyDelete
  28. மதி

    நீங்கள் இணைத்த பாட்டு என்னவென்று எனக்குத் தெரியும், எனவே கேட்க மாட்டன் ;-)
    உங்கட மற்றக்கிறுக்கையும் சொல்லுங்களேன்.

    முந்தி ரூபவாகினியில் Woody wood becker கார்ட்டூன் பார்த்து அது போலவே வுடி வுட் பெக்கர் என்று நான் கனைப்பதுண்டு. Scooby-Doo வில் வரும் நாய் மாதிரிச் சிரித்துப் பழகுவதுண்டு ;-)

    ReplyDelete
  29. //முந்தி ரூபவாகினியில் Woody wood becker கார்ட்டூன் பார்த்து அது போலவே வுடி வுட் பெக்கர் என்று நான் கனைப்பதுண்டு. Scooby-Doo வில் வரும் நாய் மாதிரிச் சிரித்துப் பழகுவதுண்டு ;-) //

    praba, dont tell me your name's Mathy. :)))

    ReplyDelete
  30. கோபிநாத், பிரபா சமீபத்தில் பார்த்த மலையாளப்படம் "சாந்து பொட்டு"
    :-))))))))))

    ReplyDelete
  31. //ஜோ / Joe said...
    அட நானும் இப்படித் தான் செய்வேன்.

    வழமை போல மிக நல்ல பதிவு.//

    வணக்கம் ஜோ

    உங்கள் பதிவில், சின்னப்பையனா இருக்கும் போது உங்க மாமா கிட்ட "நீ சும்மா இருலே " என்று சொன்னதை நினைச்சு இப்பவும் சிரித்துக் கொண்டிருக்கிறேன். வாசித்துக் கருத்தளித்தமைக்கு நன்றிகள்.

    //மதி கந்தசாமி (Mathy) said...
    woody wood pecker

    you can listen/watch this.

    PEACE! ;) //

    ஆகா, நமக்குப் போட்டியா நிறையப் பேர் இருக்கிறாங்கள் போல ;-)

    //ramachandranusha said...
    கோபிநாத், பிரபா சமீபத்தில் பார்த்த மலையாளப்படம் "சாந்து பொட்டு" //

    உஷா

    ஒரு உண்மை சொல்லவேணும், இந்தப் பதிவின் முகப்பில் "சாந்துப்பொட்டு" படத்தின் திலீப் ஸ்டில் தான் போட இருந்தேன். ஜனங்கள் ஏதாவது சொல்லுவாங்களோ என்று போடவில்லை. சாந்து பொட்டு பற்றி பதிவு போட உள்ளேன்:-))

    ReplyDelete
  32. \\Scooby-Doo வில் வரும் நாய் மாதிரிச் சிரித்துப் பழகுவதுண்டு ;-) \\

    enga veedilaum ondu iruku...venum endal serthu viduran unga list la.

    ReplyDelete
  33. weird க்கு என்ன ஒழுங்கான தமிழ் பிரபா? :(, கன பேர் இத பத்தி எழுதி இருக்காங்க 2/ 3 பேரொடது தான் வசிச்சன்.
    என்ன நீங்க சொன்ன பயம்,குழந்தைகள், காட்டூன்... இவை பிடிக்கும் எனக்கும்...

    நீங்க கேட்ட மாதிரி எழுதலாம், ஆனா கொஞ்சம் தயக்கம் என்ன எழுத ?
    உடன எழுத அதிகம் நேரம் வராது, பொறுமையா ஆறுதலா எழுத வேணும்... பாப்பம்

    ReplyDelete
  34. சினேகிதி,

    ஸ்கூபி டுவிலும் போட்டிக்கு ஆளா

    வி.ஜே

    weird இற்கு கிறுக்குத்தனமான, மற்றவர்களிடம் இருந்து பெரும்பாலும் தனித்து நிற்கும் குணம், இயல்பை மீறிய செய்கைகள் என்று பல விதத்தில் எடுக்கலாம். ஏதாவது ஒன்றில் 1000 சொல்லுக்குமிகைப்படாமல் ஒரு கட்டுரை வரைக.

    ReplyDelete
  35. பிரபா.... நான் எனது பங்குக்கு பயப்படுத்திறன்... அந்த காலத்தில் கிருஸ்த்தோப்பர் அலி நடித்த ட்ரகுலா படங்கள் பாருங்கள் என்னும் பயப்படுவியள்.

    அந்த காலத்தில் கொழும்பிலுள்ள மெஜசிஸ்ட் தியேட்டர் தான் நல்ல ஒலித்தரமுள்ள தியோட்டர். இந்த அலியின் படத்தை தனிய பார்பீர்களா என்று சிலர் பந்தய கட்டுவதுண்டு

    ReplyDelete
  36. ஆஹா இப்பவே கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்களே :-(
    சின்னக்குட்டியர், நீங்கள் என்னதான் சொல்லுங்கோ நான் கடைசிவரையும் பேய்ப்படங்களைக் கோடி குடுத்தாலும் பார்க்கமாட்டன்.

    ReplyDelete
  37. \\கடந்த சனிக்கிழமை "நந்தனம்" பார்த்தேன். வழக்கம் போல் சாதாரண களம், நவ்யா நாயர் என்னமாய் நடித்திருக்கு, நவ்யாவுக்காகப் பார்க்கலாம்.\\

    ஆஹா...அப்படியா!!!! நானும் இங்கு வந்து இந்த படத்தை மூன்று முறை பார்த்து விட்டேன். மிக எளிமையான கதைகளம். நவ்யாவின் நடிப்பும் மிக அருமை....இந்த படத்தை வைத்து நானும் ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்...பார்க்கலாம் ;-))))

    இந்த படத்தில் பாடகி சித்தராவிற்க்கும் ஒரு சென்டிமென்டல் டச் இருக்கின்றது.....தெரியுமா உங்களுக்கு ;-)))

    ReplyDelete
  38. \\ramachandranusha said...
    கோபிநாத், பிரபா சமீபத்தில் பார்த்த மலையாளப்படம் "சாந்து பொட்டு"
    :-))))))))))\\

    மாங்காப்பறி.....சலக்குத்து.... தானா ;-))))
    (பிரபா சும்மா கிண்டலுக்கு தான் கேவிச்சுகாதிங்க)


    வணக்கம் உஷாக்கா....
    நீங்களும் எங்களை போல தானா (மலையாளப்படம் பார்ப்பதில்). விரைவில் உங்களை சந்திக்கிறேன்.... பதிவுகளில் ;-)))

    ReplyDelete
  39. கோபிநாத்

    திலீப் ரேஞ்சுக்கு நாமெல்லாம் ஆகமுடியாது ;-)

    நந்தனத்துக்கும் சித்ராவுக்கும் என்ன விஷேஷ தொடர்பு என்று நான் அறியவில்லை, உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள ஆசை.

    நந்தனம் பற்றியும் எழுதுங்களேன்

    ReplyDelete
  40. முதலாவது குணம்தான் வாசிக்க சிரிப்பு வருது..
    ஐந்தாவது என்னோட கொஞ்சம் ஒத்துப்போகுது.. மலையாளப்படத்தில எனக்கு அடியும் தெரியாது, நுனியும் தெரியாது.. ஆனா வாசிப்பு பழக்கம் உங்கள மாதிரித்தான்.. சாப்பிடேக்க கூட வாசிச்சுக்கொண்டுதான் சாப்பிடுவன்..

    இப்பதான் யோசிக்கிறன் இதைப்பற்றி, எனக்கும் ஏதும் கிறுக்குப் பிடிச்சிருக்கோ எண்டு.. :)

    பழைய ஜிமெயில் மாதிரி அழைப்பிதழ் கிடைச்சுதான் எழுதிறதோ? எனக்கு வடிவா தெரியாது..

    ReplyDelete
  41. படியாதவன்

    மூன்று பதிவோட நிக்க்கிறீர், பதிவிலும் இன்னும் படியாதவனோ?
    தனிப்பட்ட அழைப்பிதழை நான் கொடுக்கவில்ல, ஆனால் உங்களையும் இப்படியான பதிவு எழுத அன்புடன் அழைக்கிறேன். அச்சாப்பிள்ளை மாதிரி கெதியா எழுதுங்கோ பாப்பம்.

    ReplyDelete
  42. //கானா பிரபா said...

    படியாதவன்

    மூன்று பதிவோட நிக்க்கிறீர், பதிவிலும் இன்னும் படியாதவனோ?//

    என்னண்ணை செய்யிறது, எனக்கும் இப்ப நிறைய எழுத ஆசைதான்.. ஆனா கம்பஸில விடுறாங்களில்ல.. மாறி மாறி project வேலையோட திரிய வேண்டிக்கிடக்கு, இடைக்கிடை நேரம் கிடைக்கைக்குள்ள எழுதலாம்.. இந்த semester முடிய பிறகு training தான்.. அப்ப கனக்க எழுதலாம், பாப்பம்..

    படியாதவன்

    ReplyDelete
  43. nalla miga arumayinae pathivu...pls keep writing.

    ReplyDelete
  44. வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள் வினோ

    ReplyDelete
  45. you're not alone:) I do all these things and have a huge crush on Kerala:) don't know how it started!

    ReplyDelete