Pages

Sunday, July 12, 2009

சிங்கப்பூரில் எஞ்சிய நாட்கள்

சென்ற பதிவு ஒரே சாப்பாடு ம(ண)யமாக அமைந்து விட்டது அதுவும் நல்லதுக்கு தான் போல. ஏனென்றால் புதிதாக சிங்கப்பூர் போகின்றவர்கள் தவிர சிங்கையில் இருப்போரிலும் உணவகம் பக்கம் திரும்பிப் பார்க்காதவர்களுக்கும் உபயோகப்படும் போல இருக்கின்றது.

மலேசியப் பயணம் பற்றிச் சொல்ல வந்து சிங்கப்பூர் புராணம் பேசிக் கொண்டிருக்கிறாரே என்று நீங்கள் சலிக்காமல் இருக்க இந்தப் பதிவோடு ஒரு முற்றுப் புள்ளி வைக்க இருக்கின்றேன்.


ஒவ்வொரு முறை சிங்கப்பூர் பயணம் சென்றாலும் ஈழநாதனை மட்டும் சந்தித்து விட்டு வரும் வழக்கம் இருந்தது. காரணம் முன்னேயெல்லாம் சிங்கைப் பதிவர்கள் குறித்த அறிமுகமும் கிடையாது அதே போல கோவி கண்ணன் போன்ற ஒரு சிலரைத் தவிர பரவலாக அங்கே பதிவர்கள் தோன்றாமல் இருந்தது இன்னொரு காரணம். ஆனால் இப்போது பார்க்கும் போது சிங்கப்பூர் பதிவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் இருந்து பதிவோரை முந்திச் சென்று விடும் போல இருக்கின்றது. அதை ஓரளவு உறுதிப்படுத்துமாற் போல அமைந்தது எனது சிங்கை வலைப்பதிவர் சந்திப்பு.

போகும் இடத்தில் அங்கிருப்போருக்கு எதற்குச் சிரமம் என்று இப்படியான வலைப்பதிவர் சந்திப்பை தவிர்ப்போம் என்று எண்ணினாலும், முகம் காணாமல் வலை மூலம் நேசத்தை ஏற்படுத்திய உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற அற்ப ஆசை மட்டும் மனதின் சின்ன மூலையில் ஒட்டிக்கொண்டிருந்தது. சிங்கை வந்து இரண்டாம் நாள் நம்ம நிஜமா நல்லவரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரோ சத்தமில்லாமல் ஜோதிபாரதி, கோவி கண்ணன் போன்றோருக்கு சொல்லவும் அவர்கள் சக வலைப்பதிவர்களை மே 14 ஆம் திகதி ஒன்று கூட்டி நான் தங்கியிருந்த லிட்டில் இந்தியா பகுதியில் இருக்கும் காளி அம்மன் கோயிலடிக்கு அழைத்து வந்தார்கள்.

மே 14 ஆம் திகதி வியாழன் மாலை ஏழு மணி வாக்கில் காளி அம்மன் கோயிலடிக்குப் போகின்றேன். அன்று என் பிறந்த நாள் வேறு. அங்கே வழி மேல் விழி வைத்தவாறு நிஜமா நல்லவன், டொன் லீ, மற்றும் சின்னப்பாண்டி ஆயில்யன் சார்பில் அவரின் நண்பர்களுமாக காத்திருந்தார்கள். மெல்ல மெல்ல பதிவர்கள் வருகை ஆரம்பித்தது. கிஷோர், ஜோதிபாரதி, வடுவூர் குமார், கிரி, சிங்கை நாதன், அதிரை ஜமால், இராம் என்று நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள், கோவி கண்ணனை தவிர. கோவியார் வரும் வரை இளநீர் பருகுவோம் என்று கூட்டம் இளநீர் கடையை முற்றுகையிட்டது. இளநீர்க்காரருக்கு நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும் இப்படியொரு கூட்டத்தின் திடீர் வருகையை எண்ணி.

எங்கே இரவு உணவைக் கழிக்கலாம் என்று ஆளாளுக்கு யோசித்த போது சிங்கை நாதன் Moghul Mahal Restaurant என்ற வட இந்திய உணவகத்துக்குச் செல்லலாம் என்ற போது அவரின் பின்னால் அணிவகுத்தது கூட்டம். அந்த உணவகத்தில் இவ்வளவு பேரையும் ஒரே மேசையில் இருத்த முடியாத ஒரு நிர்ப்பந்தம் வந்தபோது கூட்டம் வெளிநடப்பு செய்ய முயற்சித்தது. ஆனால் உணவக உபசரிப்பாளரோ இவனுகளை விடக்கூடாது என்று எண்ணி மேல் தளத்தில் இருக்கும் உபசரிப்புப் பகுதிக்கு அனுப்பினார். ஒருவாறு இடம்பிடித்து எல்லோரும் ஒரே பகுதியில் அமரவும் கோவி கண்ணன் வரவும் சரியாக இருந்தது.

வடுவூர் குமார் கையோடு கொண்டு வந்த இனிப்பு பொதியைத் தருகின்றார். ஆயில்யன் நண்பர்கள் மற்றும் நிஜமா நல்லவன் ஆகியோர் புத்தக பொதிகளை அன்புப் பரிசாக அளித்தனர். நான் தேடிக்கொண்டிருந்த உமர்கயாம் பாடல்கள், டாக்டர் கே.எஸ்.சுப்ரமணியன் எழுதிய "ஜெயகாந்தன் ஒரு பார்வை", பா.விஜய்யின் "வானவில் பூங்கா", பா.விஜய்யின் "நந்தவனத்து நாட்கள்", என்.ராமகிருஷ்ணன் எழுதிய "மார்க்ஸ் எனும் மனிதர்", தபூ சங்கரின் "சோலையோரப் பூங்கா", பசுமைக்குமார் எழுதிய "சார்லி சாப்ளின் 100, ஜெ.பிஸ்மி எழுதிய "களவுத் தொழிற்சாலை" என்று அவர்கள் அளித்த பரிசுகளை அன்போடு ஏற்றுக் கொண்டேன்.

உணவுப் பட்டியல் ஒரு கலைக்களஞ்சியம் ரேஞ்சில் பெரும் சைசில் இருந்ததால் ஆளாளுக்கு புரட்டி மேய்ந்ததில் அரை மணி நேரத்திற்கு மேல் கழிந்தது. அதிரை ஜமால் இவ்வளவு கனமான பெரிய சிலபஸில் என்னால் பரீட்சைக்கு படிக்க முடியாதுன்னு அடம்பிடிக்க ஆரம்பித்தார். உணவக உபசரிப்பாளர் அடிக்கடி சந்தேக கண்ணோடு வந்து முற்றுகையிடவும் சிங்கை நாதன் இரவு உணவுத் தேர்வை கலந்து பேசி தீர்மானித்து நிலமையை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார்.
உணவை வாய்க்குள் தள்ளிக் கொண்டே பதிவுலகம் பற்றிய அலசலை பேச ஆரம்பித்தோம். ஆயில்யன் நண்பர்களுக்கு இந்த பதிவுலக சமாச்சாரங்கள் புரிந்ததா தெரியவில்லை ஆனாலும் அவர்களிடமிருந்து ஆயில்யன் குறித்த இராணுவ ரகசியங்களைப் பெற்றுக் கொண்டேன். வர்களுக்கு சிரமம் ஏதாவது கொடுத்து விட்டோமோ, அலுவலக நாள் வேறு என்று மனதின் ஒரு மூலையில் குத்திக் கொண்டிருந்தது. ஆனால் இந்தத் திடீர்ச் சந்திப்பில் ஏதோ 10 வருஷப் பழக்கம் போல மிகவும் இயல்பாக எல்லா நண்பர்களும் பழகியது நெகிழ்வடையைச் செய்தது. உண்மையில் என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாக இது அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
சகோதரன் "டொன்" லீ இந்தச் சந்திப்பைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கின்றார் இங்கே.

தாயகத்தில் இருந்து என்னோடு வலைப்பதிவினூடக அறிமுகமாகி பின்னர் தற்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் சகோதரன் விசாகனின் சந்திப்பும், அவர் பழகிய விதமும் நாம் இருவரும் ஒரே அலைவரிசையில், ஒத்த ரசனையில் இயங்குவதை மேலும் உறுதிப்படுத்தியது.

தங்கச்சி துர்காவை அவரின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் உணவகத்தில் சந்தித்தேன்.
என்னதான் கூகுள் சாட்டில் ஆளாளுக்கு காலை வாரினாலும் நேரில் அண்ணனுக்கு மரியாதையான தங்கச்சியாக இருந்தார் :)

0000000000000000000000000000000000000000000000000000

சிங்கை லிட்டில் இந்தியாவில் மூலைக்கு மூலை இருக்கும் சிறு பெட்டிக்கடைகளில் தீராநதி, புதிய பார்வையில் இருந்து விகடன் குமுதம் சமாச்சாரங்கள் கிடைக்கின்றன. ஒரு கடையில் கிழக்குப் பதிப்பகத்தின் படைப்புக்களும் தென்பட்டது அவர்களின் வியாபாரப் பரம்பலின் வெற்றியைக் காட்டி நின்றது. சிங்கையில் இருந்த காலம் வரை தமிழ் முரசு பத்திரிகையை தினமும் வாங்கினேன். அப்போது அகோரமாக நடைபெற்று வந்த வன்னி முற்றுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுடச் சுட செய்திகளை வெளியிட்டதோடு இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளையும் சிறப்பு மாலைப்பதிப்பில் இடம்பெற வைத்தது சிங்கை தமிழ் முரசு பத்திரிகை. அளவான பக்கங்கள் என்றாலும் கச்சிதமாக செய்திகளை நிறையவே கொடுத்து வருகின்றது தமிழ் முரசு.

000000000000000000000000000000000000000000000000000000000000

சிங்கப்பூர் வந்து விட்டு முஸ்தபா சென்டர் போகாவிட்டால் கொலைக்குற்றம் போல :0 அங்கும் ஒரு எட்டு நடந்தேன். முஸ்தபாவின் எல்லா தளங்களையும் வலம் வந்தேன். மதிய நேர சாப்பாட்டுக் களைப்பில் துணிக்குவியலுக்கு மத்தியில் ஊழியர்கள் சிலர் கன்னத்தில் கைவைத்து சுகமான கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். சில பகுதிகளில் இருப்போர் வாங்கினால் வாங்கு இல்லாட்டி நகரு என்று பொறுப்புணர்ச்சியோடு தமது வாடிக்கையாளர் சேவையை ஏனோ தானோவென்று நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். புத்தகப் பகுதிகளில் தன்னம்பிக்கை தரும் நூல்கள் தான் இறைந்து கிடந்தன. சிங்கப்பூரர்களுக்கு தன்னம்பிகைக்கு மாத்திரை கூட செய்து விற்பார்கள் போல. சீடிப்பக்கம் தாவி சத்யன் அந்திக்காடு இளையராஜா கூட்டணியில் வந்த "விநோத யாத்ரா" டிவிடியையும் தென்கச்சி சுவாமி நாதனின் "இன்று ஒரு தகவல்" டிவிடியையும் வாங்கினேன். ஆயிரம் தான் இருந்தாலும் ஒரே கூரையின் கீழ் விதவிதமான தெரிவுகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் முஸ்தபாவை விட்டால் கதி ஏது?

000000000000000000000000000000000000000000

ஓவ்வொரு முறை சிங்கப்பூர் வந்தும் Sentosa Island பார்க்க வேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போனதை இந்த முறை மாற்ற வேண்டுமென்று எண்ணி அங்கும் ஒரு நாள் போனேன். கேபிள் காரிலோ, பஸ்ஸிலோ,போகலாம் என்ற போது நான் ஒரு முறையாவது பயணிக்காத கேபிள் காரைத் தேர்ந்தெடுத்தேன்.

Sentosa Island இல் உள்ள நீரடி உலகத்தையும் (Underwater World) 3D magic இல் படம் காட்டும் திரையரங்கத்தையும் சுற்றிப் பார்த்ததோடு இது போதும் என்று திரும்பினேன்.Underwater World மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களைக் காட்சிப்படுத்தியிருப்பது நிறைவாகவும் பயனுடையதாகவும் இருந்தது. இதயக்கோளாறு உள்ளவர்கள், மனசு பலவீனமானவர்கள் தவிர்க்கவும் என்று ஏகப்பட்ட பில்ட் அப் களோடு ஆரம்பித்த 3D magic படம் பெரிசாக பூச்சாண்டி காட்டவில்லையானாலும் சிறப்பானதொரு விருந்து தான்.
சிங்கையின் புகையிரத நிலையங்களில் உள்ள டிக்கட் மெஷின்கள் நாணயங்களை மட்டுமே வாங்குவேன் என்று நாணயமாக இருந்தது கடுப்பேற்றியது. டொலர் நோட்டுக்களை போட்டாலும் துப்பித் தள்ளியது.

00000000000000000000000000000000000000000000000
சிலோன் ரோட் பிள்ளையார் கோயிலுக்கு இரண்டாவது தடவை போக முடிவெடுத்தேன். அதுவும் என் பிறந்த நாளன்று காலை வானம் சிணுங்கிக் கண்ணீர் மழை பொழிய ஒரு வாடகை டாக்சியில் கோயிலை நோக்கிப் பயணித்தேன். கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்து அர்ச்சனை செய்யும் போது எங்களூர் தெய்வீகச் சூழ்நிலையை மீள நினைக்க வைத்தது ஆலய அமைவு. எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஆலயத்தின் நாதஸ்வர மற்றும் தவில் வித்துவான்களாக இருப்பதைக் கண்டு அவர்களிடம் சென்று நானாகவே அறிமுகம் செய்து பேசி மகிழ்ந்தேன்.

என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்தோ என்னவோ எங்கோ இருந்து வந்த கோயிலின் தர்மகர்த்தா "நீங்க சிங்கப்பூருக்கு புதுசா, எங்கிருந்து வரீங்க" என்று ஆரம்பித்தார். என்னைப் பற்றிச் சொல்லவும் உடனே பக்கத்தில் இருந்தவரை அழைத்து ஏதோ சொல்லவும், அவர் கையோடு ஆலயத்தின் சிறப்பு மலரையும், சின்னதாக ஒரு வெள்ளி விநாயகர் சிலையையும் கொண்டு வந்தார். "இந்த ஆலயத்துக்கு முதன் முதலாக வருவோருக்கு நாங்கள் கொடுக்கும் பரிசு இது" என்று அன்பாகச் சொல்லிக் கொண்டே ஆலயத் தர்மகர்த்தா நடந்து கொண்ட விதம் தமிழ் படங்களின் வில்லன் ரேஞ்சில் ஆலயத்தர்மகர்த்தாக்களை கற்பனை செய்யும் பாங்கை மாற்றியது. எனக்கும் குளிர் விட்டுப் போய்" உள்ளே படம் எடுக்கலாமா" என்று அவரிடம் கேட்டேன். "தாராளமா எடுங்க" என்று சொல்லி விடைபெற்றார் அவர். வரும் வெள்ளிக்கிழமை ஈழத்து ஆறுமுக நாவலர் குறித்த சொற்பொழிவு இருப்பதாக அறிவிப்புப் பலகையில் இட்டிருந்தது. நிச்சயம் வரவேண்டுமென்று நினைத்தும் அந்தச் சொற்பொழிவுக்கு போக முடியவில்லை.


தங்குமிடம் திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக இம்முறை வாய்த்த சீனத்து டாக்சிக்காரர் நிறையவே பேசிக்கொண்டு வந்தார். அடிப்படை மருத்துவ உதவிகளுக்குக் கூட பெருமளவில் அரசினை எதிர்பார்க்க முடியாது சாகும் வரை வேலை செய்தே வாழ்க்கை நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலையைப் பற்றியும், அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன் வருவாய் மூலம் பிற்காலத்தில் தம் வாழ்நாளின் இறுதிக்காலத்தைக் கழிக்கலாமே என்ற நினைப்பில் முதலீடு செய்து சமீபத்திய அமெரிக்க பொருளாதாரச் சரிவில் தனது முதலீட்டில் 60000 டொலர் இழப்பையும் பற்றி சொல்லி நொந்து கொண்டார் அந்த முதிய டாக்சிக்காரர். இப்படியான வாழ்க்கை முறை வாய்த்ததால் தான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வோர் தொகை வருஷா வருஷம் அதிகரிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. ஆக மொத்தத்தில் வாழ்வின் கடைசிப்புள்ளி வரை ஓடிக்கொண்டே இருப்பவருக்கே லாயக்கான திரிசங்கு சொர்க்கமாக சிங்கப்பூர் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

மலேசியா நோக்கிய பயணம் அடுத்த சில தினங்களுக்குப் பின்னர் ஆரம்பித்தது.

Sunday, July 05, 2009

சிங்கப்பூரில் தங்கியதும் வயிற்றில் தங்கியதும்

மலாக்கா, பினாங்கு உலாத்தலை ஆரம்பித்த நேரம் சரியில்லைப் போல, இழுபட்டு ஒரு மாதத்தைக் கடந்து இரண்டாவது பதிவோடு ஆரம்பிக்கின்றேன். இந்த இடைவேளை இனி வராமல் பார்த்துக் கொள்வோம் :0

சிங்கப்பூரில் சில நாட்கள் தங்கியிருத்து சொந்த வேலைகள் சிலவற்றையும் முடிக்க வேண்டும் அத்தோடு எப்போது சிங்கப்பூர் வந்தாலும் பரமசிவன் அண்ட் கோ வை பிள்ளையார் சுத்தி உலகத்தையே சுத்தியது போல நானும் முஸ்தபா செண்டருக்கு மட்டும் போய் இதுதான் சிங்கப்பூர் என்று திருப்திப்பட்ட வரலாற்றை இம்முறை மாற்றி எழுதவாயினும் ஒரு சில இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற வேட்கையுடன் சிங்கப்பூருக்குக் காலடி வைத்தேன்.

சிங்கப்பூருக்கு வந்த மூன்று தடவைகளும் மூன்று வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கிய அனுபவங்கள் மீண்டும் அதே ஹோட்டல் வாசலை மிதிக்காமல் பண்ணியிருந்தது. கடந்த முறை Hotel Selegi தங்கிய அனுபவம் கொடுமையின் உச்சமாக இருந்தது. படுக்கையில் என் உடம்பை அசைக்க முடியாத அளவுக்கு நெருக்கமான ஒரு அறையில் என் முழு உடம்பையும் மட்டுமே கவர் பண்ணும் படுக்கையும், ஏசி இருக்கு ஆனா இல்லை என்று என்று ஒரு வஸ்துவும் இருந்தது. எனவே இந்த முறையாவது ஏதாவது உருப்படியான ஹோட்டல் வாய்க்க வேண்டும், அதுவும் லிட்டில் இந்தியா பக்கமாக இருந்தால் காலாறக் கடைத்தெருவையும் சுற்றலாம், சாப்பாட்டு கவலையும் தீர்ந்து விடும் என்று தேடிய போது நண்பர் ஒருவர் சொன்னார் Dickson Road இல் இருக்கும் Hotel 81 இப்போது தான் திறந்திருக்கிறார்கள், அது அருமையான தெரிவு என்றார். இணையமூலம் இந்த ஹோட்டலுக்கு புக் பண்ண நினைத்தால் அது படுத்தியது. சிங்கையில் இருக்கும் இந்த ஹோட்டல் வரவேற்பாளினிக்கு அழைத்து புக் பண்ணச் சொன்னால் "இல்லை இணையம் மூலம் தான் புக் பண்ணுங்கள்" என்று அடம்பிடித்தாள். இரண்டு மூன்று தடவை விக்கிரமாதித்ததனமாக முயன்றும் பயனில்லாமல் போக, அவளோ "சரி ஒரு மின்னஞ்சல் போட்டு விடுங்கள், புக் பண்ணி விடுகின்றோம்" என்றாள். ஒருவாறு ஹோட்டல் சமாச்சாரமும் ஒழுங்கு செய்தாயிற்று. சிட்னியோடு ஒப்பிடும் போது சிங்கப்பூரில் நியாயமான கட்டணத்தில் அதே நேரம் தரமான ஹோட்டல் தேடுவது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது.

சிங்கப்பூருக்கும் வந்திறங்கியாற்று. சும்மா சொல்லக்கூடாது. இந்த ஹோட்டல் உண்மையிலேயே நல்ல தெரிவாகத் தான் இருந்தது. புத்தம் புது அறைகளும், பெயிண்ட் வாசனை மாறாத சுவர்களுமாக. ஆனா நம்ம இராம் தம்பி இந்த ஹோட்டல் குறித்து ஒரு அபிப்பிராயத்தை பதிவர் சந்திப்பில் சொன்னார். சொந்த பாதுகாப்புக் கருதி அதைத் தணிக்கை செய்கிறேன் ;0

லிட்டில் இந்தியா பக்கமாகவே ஹோட்டல் அமைந்திருந்ததால் பயணக் களைப்பை மறந்து மாலையில் காலாற நடக்கின்றேன். எத்தனை வருஷங்கள் கடந்தாலும் செராங்கூன் சாலையின் சூழ்நிலை மாறாது போல. ஆனந்த பவன் போய் ஒரு தேனீர் குடித்தால் தெம்பாகி விடும் என்று போய் ஓடர் கொடுத்தல் சீனி வேறு, வெறும் தேனீர் வேறு என்று வருகிறது கலக்கிறது நாங்களாம். அடுத்த நாளில் இருந்து கோமள விலாசுக்கு ஜாகா வாங்கிக் கொண்டேன். காலைச் சாப்பாட்டும், தேனீரும் கோமள விலாசில் தொடர்ந்தது. கோமள விலாஸ் இன்னொரு குட்டியை கோமளாஸ் என்ற பெயரில் திறந்திருந்தது, அவார்டு படம் ஓடும் தியேட்டர் கணக்காக அது தென்பட்டது.

தினமும் மதியத்துக்குத் தான் காரைக்குடி உணவகத்தில் இருந்து ஒவ்வொரு அசைவ உணவகத்தையும் டேஸ்ட் பார்த்தேன். பொலித்தீன் பைகளில் தேனீரை நிரப்பி Take Away ஆகக் கொடுக்கும் சமாச்சாரம் எல்லாம் எனக்குப் புது அனுபவங்கள். காரைக்குடி உணவகத்தில் வாழையிலை போட்டு மத்தியான சாப்பாடு சாப்பிடும் போது அந்த அனுபவமே தனி தான். சகுந்தலா ரெஸ்டாரண்ட் என்று ஒன்றை புதிதாகப் பிடித்தேன். சோதனை முயற்சியாக ஒரு நாள் மாலை கொத்துப் பரோட்டாவை சகுந்தலாவில் ஓடர் செய்தேன். சும்மா சொல்லக் கூடாது இந்த ரெஸ்டோரண்டில் நியாயமான விலையில் தரமான சுவையான உணவு கிடைக்கின்றது. சிங்கப்பூர் வரும்போதெல்லாம் ஒலி 96.8 இல் போகும் முத்தூஸ் தலைக்கறி விளம்பரத்தை இணையத்தில் கேட்டே வாயூறிப் போன எனக்கு இந்த முறையும் அங்கே போய் அனுபவிக்க கொடுப்பினை இல்லை. Selegi Road பக்கமாக இருந்த பீம விலாஸ் கடந்த முறை ஆட்டுக்கால் பாயாவோடு கொடுத்த விருந்தை இம்முறை அனுபவிக்கவில்லை. கடையையும், பாத்திரங்களையும் அப்படியே 20 வருஷப் பழமையோடு வச்சிருப்பது தான் ஏனென்று தெரியவில்லை. எட்டிப் பார்த்து விட்டு நகர்ந்து விட்டேன்.

Banana Leaf Restaurant சாப்பாடு கலக்கல் என்று ஒரு பட்சி சொல்லியிருந்தது. இடம் மாறி ஒரு நாள் போலியாக இருந்த இன்னொரு Banana Leaf Restaurant க்குப் போனேன். அது ஆந்திரக்காரன் ஹோட்டல் போல. சாதம் வைக்கவா என்று அடுத்த ரவுண்டில் கேட்கும் போது "இலையில் என்னிடம் நிறையவே இருக்கு உனக்குக் கொடுக்கவா" என்று கேட்கலாம் போல இருந்தது. என் சமையல் கூட எவ்வளவு உயர்வானது என்பதை உணர்ந்து கொண்ட தருணமது. Kaaraikudi Banana Leaf Restaurant என்ற உண்மையான ஆளை கடைசி நாளில் தான் சந்தித்தேன். அட இவ்வளவு நாளும் ஒரு அரிய உணவகத்தை மிஸ் பண்ணிட்டோமே என்று நினைக்க வைத்தது அது. பிரமாண்டமான உள்ளரங்கத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெரும் ஊர்களினை ஒவ்வொரு அறைக்கும் இட்டு உள்ளரங்கலாரத்திலும் தமிழகத் தொன்மை மிகு சிற்ப மற்றும் அணிவகைகளை இட்டது சிறப்போ சிறப்பு. அசைவ பட்சணியான எனக்கு Madras Woodlands ஹோட்டலும் சரவணபவனும் எட்டி நடக்கச் செய்தது. நண்பர் நிஜமா நல்லவன் முஸ்தபா பக்கமா ஏதோ ஹோட்டலுக்கு கூட்டிப் போக வேண்டும் என்று கொலைவெறியோடு அடிக்கடி சொல்லியிருந்தார், பெயர் மறந்திட்டேன். off line வந்து சொல்லுவார் என்று நினைக்கிறேன். அந்த பிரபல ஹோட்டல் அஞ்சப்பராம், அஞ்சப்பரை அடுத்த தபா வச்சுக்குவோம். ஹோட்டலுக்கு வட இந்தியச் சுவையோடு சிங்கை நாதனின் பரிந்துரைக்கமைய Moghul Mahal Restaurant இற்குபதிவர் சந்திப்பு நடந்த கதை தனியே சொல்ல வேண்டியது :)

சகுந்தலா உணவகம் படம் உதவி: www.streetdirectory.com
Kaaraikudi Banana Leaf Restaurant படம் உதவி : http://putri-berendam.blogspot.com/