Tuesday, March 25, 2008
கம்போடிய உலாத்தல் ஆரம்பம்
பத்து நாள் குறுகிய கால விடுமுறையாக ஈஸ்டரை ஒட்டி எனக்கு வாய்த்தது. இரண்டுவருட இடைவெளியாகி விட்டது. வெளிநாடு எங்காவது கிளம்பலாம் என்றால் எனக்கு முதலில் தோன்றியது கேரளாவில் கடந்தமுறை விடுபட்ட பகுதிகள் தான். ஆனால் இருக்கும் பத்து நாளுக்கு இதுவெல்லாம் தேறாதென்று திடீரென்று முடிவு கட்டி கம்போடியா, சிங்கப்பூர், மலாக்கா போன்ற இடங்களுக்கு என் விடுமுறையை மாற்றிக் கொண்டேன். ஏற்கனவே கம்போடியாவுக்குச் சென்று திரும்பியவர்களிடமும் சில தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். தனியே கம்போடியா பயணம் என்றால் முழுமையான வரலாற்றுச் சுற்றுலாவாக வந்துவிடும் என்று நினைத்து, இடையே கொஞ்சம் நம் கேளிக்கைகளுக்கும், பொழுதுபோக்கிற்கும் உதவும் மலேசியா, சிங்கப்பூரையும் சுற்றுலாப் பட்டியலில் சேர்த்துக் கொண்டேன். நான் செல்லவிருக்கும் நாடுகளுக்கு விசாச் சிக்கல் என்பதும் பெரியதாக இல்லை என்பதும் இந்தக் குறுகிய காலப் பயணத்துக்கு உதவியாக இருந்தது.
மலேசியா, சிங்கப்பூருக்கு மேலதிக விசா தேவையில்லாமல் இருந்தது. கம்போடியாவுக்கு மட்டுமே விசா எடுக்கவேண்டியிருந்தது. அதிலும் இன்ப அதிர்ச்சி ஒன்று கிடைத்தது. கம்போடியாவுக்கான விசாவினை அந்த நாட்டின் குடிவரவு இணையத்தளத்தில் விண்ணப்பித்தே எடுக்கமுடியும். கம்போடியாவின் இந்த e-Visa வினை எடுக்க ஒரு பாஸ்போர்ட் அளவு உங்கள் புகைப்படமும், இணைய மூலம் பணம் கட்டும் வசதியும் ( 25 அமெரிக்க வெள்ளிகள்) இருந்தால், அவர்களின் இணையத்தளத்திலேயே பத்து நிமிடங்களுக்குள் விண்ணப்பித்து, படத்தையும் அந்த இணைய விண்ணப்பத்திலேயே இணைத்தும் விடலாம். இதை நான் ஒரு நாள் இரவு பத்துமணிக்கு விண்ணப்பித்தபோது அடுத்த நாட்காலை ஒன்பது மணி வாக்கில் என் மின்னஞ்சலைப் பார்த்தபோது விசாவை என் புகைப்படம் இணைத்து அனுப்பியிருந்தார்கள். இந்தத் துரிதமான செயற்பாடே இந்த நாட்டுக்குப் பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகள் இன்றைய காலகட்டத்தில் பயணிப்பதற்கு ஒரு காரணமும் கூட. இந்தப் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு கூட இணையத் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு இதுவோர் உதாரணம். ஆனால் விதிவிலக்காக இந்த நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளவர்கள் அந்தந்த நாட்டில் இருக்கும் கம்போடிய தூதுவராலயம் மூலமே விசாவினை விண்ணப்பிக்க முடியும்: Afghanistan, Algeria, Arab Saudi, Bangladesh, Iran, Iraq, Pakistan, Sri Lanka, Sudan.
மேலதிக விபரங்களுக்கு
அடுத்த வேலையாக Lonely Planet இன் கம்போடியா குறித்த சுற்றுலா வழிகாட்டி நூலை வாங்கிக் கொண்டேன். இணையமூலமாக எத்தனையோ தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதிலும், இந்த நூலின் வசதி என்னவென்றால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த ஒரு தகவல் களஞ்சியமாக ஒருக்கின்றது. கூடவே அந்தந்த நாடுகளில் உலாவும் போதும் கையோடு எடுத்துச் சென்று மேலதிக விபரங்களையும், மற்றவர்களைக் கேட்காமலேயே பெற்றுக் கொள்ள முடியும்.
பொதுவாக கம்போடிய பயணம் மேற்கொள்வோர் தம் பயண ஏற்பாட்டைச் செய்யும் போது விமானச் சீட்டு முகவர்கள் அந்த நாட்டுத் தலைநகர் Phnom Penh என்ற இடத்தையே சேருமிடமாகப் போட்டு விடுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை என் பயணம், கம்போடியக் கோயில்கள் நோக்கிய உலாத்தல் என்பதால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும்/கட்டாயம் போகும் Siem Reap என்ற இடத்தையே சேருமிடமாக உறுதிப்படுத்திக் கொண்டேன். Siem Reap இல் தான் தொன்மை மிகு ஆலயங்களும், வரலாற்று நினைவிடங்களும் கொட்டிக் கிடக்கின்றன.
காலை 8.50 மணி, மார்ச் 14, 2008
சிங்கப்பூர் விமான சேவையின் புதிய Air bus A380 என்ற மகா வானூர்தியில் செல்லப் போகின்றோமே என்ற சந்தோஷமும் உள்ளுர ஒட்டியிருந்தது. இருபது நிமிடத் தாமதிப்பில் விமானம் தரையை விட்டு வானுக்குத் தாவியது. எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்து சுற்றும் முற்றும் பார்க்கின்றேன். அவ்வளவு பெரிய மாற்றம் ஒன்றையும் காணவில்லை. ஊத்தை படியாத Remote control கருவியைத் தவிர.
வர்த்தக, மற்றும் முதற்தர வகுப்பு ஆசனங்களில் இருப்போருக்கு மேலதிக வசதிகள் இருக்கும் போல.யாரோ ஒரு புண்ணியவான் பரிந்துரையில் வேல், மருதமலை, மலைகோட்டை போன்ற மூன்றாந்தரக் குப்பைகள் ஓடும் திரையில் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு ஹெட்போனை மாட்டி விட்டு சீனி கம் பாடல்களை ராஜா இசைய வைக்க, உள்ளூர் நூலகத்தில் எடுத்த சுஜாதாவின் "புதிய பக்கங்களை" பிரித்துப் படிக்கின்றேன்.
ஏற்கனவே தாமதித்து விமானம் கிளம்பியதால் Siem Reap இற்கு போகும் அடுத்த விமானத்துக்கான நேரம் நெருங்கிவிட்டது. சிங்கப்பூரில் இறங்கி Siem Reap செல்லும் விமானத்தை எங்கே பிடிப்பது என்று கணினித் திரையில் பார்த்தால், அடுத்த Terminal இற்கு உள்ளக ரயில் மூலம் தான் செல்லவேண்டுமாம். பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு கழுத்தில் கொழுவியிருந்த பயணப் பொதியுடன் ஓட ஆரம்பித்தேன். ரயில் பிடிக்கும் இடத்திற்கு இளைக்க இளைக்க ஓடிவந்து எதிர்ப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பணிப்பெண்ணிடம் " என் விமானம் கிளம்ப 10 நிமிடம் தான் பாக்கி, ஏதாவது செய்யமுடியுமா? " என்று கேட்டேன். தன்னிடம் இருக்கும் வயர்லெஸ் கருவி மூலம் அவர்களுக்கு என் வருகையைத் தெரியப்படுத்துவாள் என்ற நப்பாசை தான் காரணம். அவளோ "ரயில் பிடித்துப் போய் முயற்சி செய்த்து பார்" என்று சொல்லிவிட்டு தன் செல்லில் யாரோடோ கிசுகிசுக்க ஆரம்பித்தாள். திரும்பவும் நற..நற..
என்னைப் போலவே இன்னும் சில பேதைகளும் தாமதமாகவே சேர்ந்ததால், Siem Reap செல்லும் விமானம் எமக்காகக் காத்திருந்து தாமதித்தே கிளம்பியது. சிங்கப்பூர் விமான சேவையின் Silk Air என்ற சேவை அது. அதில் வீடியோவும் கிடையாது, பாட்டும் இல்லை. சுஜாதாவின் "நில்லுங்கள் ராஜாவே" யை எடுத்துப் படிக்கின்றேன்.
"வியட்னாமில் போதைப் பொருட்களைக் கடத்துவோருக்குக் கடும் தண்டனை கிடைக்கும்" என்ற அறிவித்தலை ஒரு பணிப்பெண் ஒலிபெருக்கி மூலம் விடுக்கின்றாள்.
"உவளென்ன Siem Ream செல்லும் விமானத்துக்கு வியட்னாம் எண்டு சொல்லுறாள், வியட்னாம்காரி போல " என்று எனக்குள் சிரித்துக் கொண்டே படிப்பதைத் தொடர்கின்றேன்.
விமானம் தரையைத் தொடுகின்றது. போன 2006 இல் ஊருக்குப் போனபோது போன இரத்மலானை விமான நிலையம் போல ஒரு தோற்றத்தில், ஆங்கிலமில்லாத ஏதோ ஒரு மொழியில் விமான நிலையத்தில் சுற்றும் முற்றும் எழுதியிருக்கின்றது. பக்கத்தில் ஒரேயொரு வியட்னாம் விமானம் மட்டும் தரித்து நிற்கின்றது. வியட்னாமுக்கு பக்கத்தில் கம்போடியா இருப்பதால் அதன் செல்வாக்கு அதிகம் போல என்று நினைத்துக் கொண்டே விமானத்தில் இருந்து இறங்கி, விமான நிலைய குடிவரவுப் பகுதிக்கான பஸ் பிடித்துப் போய் குடிவரவுப்பகுதிக்கான வரிசையில் முதல் ஆளாக ஓடிப் போய்ச் சென்று அங்கிருந்த பெண் அதிகாரியிடம் என் பாஸ்போர்ட்டையும், e-Visa பிரதிகளையும் ஒப்புவிக்கின்றேன். எல்லாவற்றையும் திரும்பத் திரும்பப் பார்க்கின்றாள். "என்ன கோதிரிக்கு இவள் கன நேரம் மினக்கெடுத்துறாள்" என்று உள்ளுக்குள் பயணக்களைப்பில் புழுங்கினேன்.
தூரத்தே இருந்த ஆஜனுபாகுவான ஒரு போலிஸ்காரரை அழைத்தாள். இரண்டு பேரும் தம் மொழியில் ஏதோ பேசுகின்றார்கள். அவர்கள் சாதாரணமாகப் பேசினாலே சண்டை பிடிப்பது போலிருக்கின்றது. தன் பேச்சை அவனிடம் இருந்து துண்டித்து என்னிடம் அரைகுறை ஆங்கிலத்தில் " நீங்கள் இறங்கியிருப்பது வியட்னாம் நாட்டில்" என்றாள்.
எனக்கு உடம்பெல்லாம் ஒரே நேரத்தில் வியர்க்க ஆரம்பித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
கேரளாவப் பற்றி உலாத்தல் போட்டிங்கள் சரி, நானும் போயிட்டு வந்திட்டன். இப்ப கம்போடியா உலாத்தலா? நான் எப்படி போவது?
சீக்கிரம் வியட்னாமிலிருந்து எப்படி தப்பினீர்கள் என்று சொல்லுங்கள்.
ஆஹா.....
அங்கோர்வாட் க்குக் காத்துருக்கேன்.
"நீங்கள் இறங்கியிருப்பது வியட்னாம் நாட்டில் "
Waiting for Next Artical . . . .
பணி காரணமாக கம்போடியாவில் பல மாதக்கணக்கில் தங்கியிருக்கிறேன்.
அங்கோர் வாட் கோவிலுக்கும் சென்றிருக்கிறேன்.
கம்போடியா பற்றி என் பழைய பதிவொன்று..
http://cdjm.blogspot.com/2005/12/blog-post.html
ஆஹா அருமையான பயணக் கட்டுரை சுஜாதா நாவல்கள் போல் சஸ்பென்சில் விட்டுவிட்டீர்களே? உடனடியாக அடுத்த பகுதியை எழுதவும்.
அடுத்த பதிவைத் தாருங்கள்.
//வேல், மருதமலை, மலைகோட்டை போன்ற மூன்றாந்தரக் குப்பைகள் ஓடும் திரையில் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு ஹெட்போனை மாட்டி விட்டு சீனி கம் பாடல்களை ராஜா இசைய வைக்க, உள்ளூர் நூலகத்தில் எடுத்த சுஜாதாவின் "புதிய பக்கங்களை" பிரித்துப் படிக்கின்றேன்.//
உங்க பயண கட்டுரை நல்லாதாங்க இருக்கு. பட் இந்த மூணாந்தர குப்பைக்குள்ளார எத முத்தா எடுக்கிறீங்க என்னுதான் புரிஞ்சிக்க முடியல. மூணாந்தர குப்பைக்குள்ளார தானே சுஜாதாவோட வசனமும் ராஜவோட பாட்டும் கிடக்கு அல்லது இவங்களுக்குள்ளார மூணாந்தர குப்பை இருக்கா? ஒரே குழப்பமா இருக்குங்க.
//வெயிலான் said...
கேரளாவப் பற்றி உலாத்தல் போட்டிங்கள் சரி, நானும் போயிட்டு வந்திட்டன். இப்ப கம்போடியா உலாத்தலா? நான் எப்படி போவது?//
வாங்க வெயிலான்
கம்போடியா போவது அப்படியொன்றும் அதிகம் செலவாகும் விடயமில்லை, காத்திருங்க சொல்றேன் இன்னும்.
//துளசி கோபால் said...
ஆஹா.....
அங்கோர்வாட் க்குக் காத்துருக்கேன்.//
வாங்க துளசிம்மா
அங்கோர்வாட் பற்றி நிறையவே சேகரிச்சிருக்கேன். அவை தொடர்ந்து வரும்.
//மாயா said...
Waiting for Next Artical . . . //
வருகைக்கு நன்றி மாயா
// ஜோ / Joe said...
கம்போடியா பற்றி என் பழைய பதிவொன்று..
http://cdjm.blogspot.com/2005/12/blog-post.html//
வாங்க ஜோ
இப்போது தான் உங்கள் பதிவைப் பார்க்கக் கிடைத்தது. மிகவும் விரிவாக சமகால நிகழ்வுகளோடு எழுதியிருக்கீங்க, அருமை.
//வந்தியத்தேவன் said...
உடனடியாக அடுத்த பகுதியை எழுதவும்.//
//இறக்குவானை நிர்ஷன் said...
அடுத்த பதிவைத் தாருங்கள்.//
வாங்கோ வந்தியத்தேவன் மற்றும் நிர்ஷான்
வாரம் இரண்டாக இவற்றைத் தருகின்றேன்.
//Anonymous said...
உங்க பயண கட்டுரை நல்லாதாங்க இருக்கு. பட் இந்த மூணாந்தர குப்பைக்குள்ளார எத முத்தா எடுக்கிறீங்க என்னுதான் புரிஞ்சிக்க முடியல.//
வருகைக்கு நன்றி நண்பரே
உண்மைதான், சுஜாதாவும் ராஜாவும் கூட விதிவிலக்கில்லை. ஆனால் புத்தகம் மற்றும் பாட்டுக்களை எமக்குப் பிடிச்சதை மட்டும் படிக்கவோ/கேட்கவோ வசதியுண்டு. அதனால் தான் வேல், மருதமலை வகையறாக்களை ஒதுக்கினேன்.
வியட்னாம்ல இருந்து கம்போடியாக்குப்போக தனியா மறுபடி விசா எடுக்க வேண்டியிருந்ததா?
வயித்தெரிச்சலா இருக்கு பிரபா! இஙக கொழும்பில இருந்து கதிர்காமம் போறதெண்டாலே, கந்தன் விட்டாலும் இஞ்ச கடன்காரர் விடாத வாழ்க்கைல இருந்து கொண்டு, உதையெல்லாம் வாசிச்சா வயித்தெரிச்சல் வராம வேற என்ன வரும்.
எங்கட ஆக்கள் கனபேர் திரைகடல் ஓடுகினம், ஆனால் திரவியம் தாறது உங்களைப் போல கொஞ்சப் பேர்தான்
வாழ்த்துக்கள் பிரபா
கம்போடியா பற்றி அறிந்து கொள்ளலாம்னு வந்து பார்த்தால்....
ஒரே மர்மமா இருக்கு, சீக்கிரம் அடுத்த பகுதி பதியுங்க.....
அங்கோர்வாட் க்குக் காத்துருக்கேன்.
//எனக்கு உடம்பெல்லாம் ஒரே நேரத்தில் வியர்க்க ஆரம்பித்தது.//
இந்த அளவுக்கு பயம் வரக் காரணம் என்ன?? தவறாக இறங்கியதைப் புரியவைக்க முடியாதா??
அத்துடன் மூக்குத் தொடும் படம் அருமை.
மங்கோலிய, துருவ மக்களிடம் கைகுலுக்குவதுபோல் மூக்கை மூக்கால் முட்டும் பழக்கம் உண்டு.
//elayathambi said...
வயித்தெரிச்சலா இருக்கு பிரபா! இஙக கொழும்பில இருந்து கதிர்காமம் போறதெண்டாலே, கந்தன் விட்டாலும் இஞ்ச கடன்காரர் விடாத வாழ்க்கைல இருந்து கொண்டு, உதையெல்லாம் வாசிச்சா வயித்தெரிச்சல் வராம வேற என்ன வரும். //
எல்லாத்துக்கும் கதிர்காமக் கந்தன் ஒருநாள் வழிவிடுவார் அண்ணா.
ஐரோப்பா பக்கம் போனால் மாமன், மச்சான், சித்தி, சித்தப்பா குடும்பங்களோடையே காலம் போய் விடும் என்பதால் தான் இப்படியான இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றேன். ஏற்கனவே திட்டமிட்டதால் நிறையப்படங்களையும், தகவல்களையும் எடுத்து வந்திருக்கின்றேன். என் சக்திக்குட்பட்டு அவற்றைத் தருகின்றேன்.
//சின்ன அம்மிணி said...
வியட்னாம்ல இருந்து கம்போடியாக்குப்போக தனியா மறுபடி விசா எடுக்க வேண்டியிருந்ததா?//
வாங்க சின்ன அம்மணி
உங்களுக்கான பதில் அடுத்த பதிவில் ;-)
//பேரரசன் said...
அங்கோர்வாட் க்குக் காத்துருக்கேன்.//
வாங்க பேரரசே
அங்கோர்வாட் பற்றி இன்னும் இரண்டு பதிவுகளின் பின் வரும். அதற்கு முன் சில அறிமுகங்கள் கொடுக்கவேண்டும்.
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இந்த அளவுக்கு பயம் வரக் காரணம் என்ன?? தவறாக இறங்கியதைப் புரியவைக்க முடியாதா??//
வணக்கம் அண்ணா
எத்தனையோ நாடுகளுக்குப் போனலும் இந்தக் குடிவரவு நுளைவிடத்தைக் கண்டால் எனக்கு எப்பவுமே பயம் பிடித்துவிடும். என் அவசரபுத்தியும், விமானத்தின் தாமதமுமே இந்தப் பயணத்தில் சிக்கலுக்கு காரணம்.
மூக்கைத் தொடுவதும் புகைப்படத்தில் சிறப்பாக வந்துவிட்டது. ஆனால் ஒன்று தெரியுமா அந்தச் சிலை சில அடிகள் தள்ளி கொஞ்ச தூரத்தில் தான் இருந்தது. புகைப்படம் எடுக்கும் போது இணைந்தது போல காட்சியமைந்து படமாக்கப்பட்டு விட்டது.
////் " நீங்கள் இறங்கியிருப்பது வியட்னாம் நாட்டில்" என்றாள்.
எனக்கு உடம்பெல்லாம் ஒரே நேரத்தில் வியர்க்க ஆரம்பித்தது./////
ஆஹா!!!
நல்லா கெளப்புறாய்ங்கைய்யா பீதிய!!
சமீபத்துல ஒருத்தரு பாஸ்போர்ட் விடா ஏதும் இல்லாம வளகுடாவில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கியதாக கேள்வி பட்டேன்!!
இப்போ இதுவா?? :P
சூப்பரு பயணக்கட்டுரை அண்ணாச்சி!!
காமெடி கலக்குது!
சீக்கிரம் தொடருங்க!! :-)
//" நீங்கள் இறங்கியிருப்பது வியட்னாம் நாட்டில்" என்றாள்.
எனக்கு உடம்பெல்லாம் ஒரே நேரத்தில் வியர்க்க ஆரம்பித்தது//
அந்த கால பி.டி .சாமியின்ரை மர்ம நாவலில் வர்ற மாதிரி திகில் பரபரப்பாக முடிச்சிருக்கிறியள்;)
வணக்கம் பிரபா..... ராஜராஜ சோழன் , ராஜேந்திர சோழன்மார்கள் யாரேயும் அங்கை கண்டனீங்களே ;))
ஓவ்.. இது மர்மதேசம் மாதிரி ஒரு திகில் கதையா?
நல்லா இருக்கு...
அதுக்காக மெகா சீரியல் மாதிரி நல்ல இடத்தில தொடரும் போடுவது நல்லாயில்ல..:-))
//CVR said...
இப்போ இதுவா?? :P
சூப்பரு பயணக்கட்டுரை அண்ணாச்சி!!
காமெடி கலக்குது!
சீக்கிரம் தொடருங்க!! :-)//
வாங்க தல
நமக்கு விசா, பாஸ்போர்ட் இருந்தும் வித்தியாசமான அனுபவம் ;-)
// சின்னக்குட்டி said...
வணக்கம் பிரபா..... ராஜராஜ சோழன் , ராஜேந்திர சோழன்மார்கள் யாரேயும் அங்கை கண்டனீங்களே ;))//
வணக்கம் சின்னக்குட்டியர்
பி.டி சாமி அளவுக்கு உயர்த்தி விடாதேங்கோ ;-)
அங்கே கண்ட அனுபவங்க ஒன்றா , இரண்டா, காத்திருங்கள் சொல்கின்றேன்.
//U.P.Tharsan said...
ஓவ்.. இது மர்மதேசம் மாதிரி ஒரு திகில் கதையா? //
யூபி
இது மர்மதேசமும் இல்லை கன்னித்தீவும் இல்லை, அடுத்த பதிவில் விட்ட குறை தொடரும் ;-)
ஆஹா...இன்னும் சில வாரங்கள் நல்லா கதை கேட்கலாம் ;)
\\நீங்கள் இறங்கியிருப்பது வியட்னாம் நாட்டில்" என்றாள்.
எனக்கு உடம்பெல்லாம் ஒரே நேரத்தில் வியர்க்க ஆரம்பித்தது.\\
ஆகா...இதை தான் பெரிய கதைன்னு சொன்னிங்களா!!!
சூப்பராக இருக்கும் போல இருக்கே! ;))
:)
கானா பிரபா கட்டாயம் அங்வாட் சூரியக்கோயில் பாத்திருப்பீங்கள் நொம்பென்னில் நகரிலும் அங்கிருந்து 30 கி .மீ தூரத்தில் ஒரு கிராமத்தில் (பெயர் மறந்து விட்டது)போல் பொட்டின் ஆட்சிக்காலத்ததில் இருந்த சித்திரவதை கூடங்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் பல லட்சம் மண்டையோடுகள் என்பன முன்னர் காட்சிக்காக வைத்திருந்தனர் நான் சொல்வது 92ம் ஆண்டளவில் போய் பார்திருக்கிறேன் பின்னர் அவைகளை ஜ.நா சபை அழித்து விட்டதாக செய்திகளில் படித்த ஞாபகம்.இப்பவும் இருந்ததா??
அட, ஆட்டம் ஆரம்பிச்சாச்சா? :)
சீக்கிரம்...சீக்கிரம்...அடுத்த பகுதிக்கு போங்க ... :)
எல்லாரும் அவசரப்படுத்தறாங்களேன்னு ஓடாதீங்க. நின்னு நிதானமா எல்லா விபரமும் சொல்லிக் கூட்டிக்கிட்டுப் போங்க.
நாங்களும் உங்க சுற்றுலாவில் இணைஞ்தாச்சு.. சீக்கிரம் கிளம்புங்க. :-)
//கோபிநாத் said...
ஆஹா...இன்னும் சில வாரங்கள் நல்லா கதை கேட்கலாம் ;)//
வாங்க தல, கதை கேட்க எல்லாரும் இங்கே வந்து உட்கார்ந்துக்குங்க ;-)
//ILA(a)இளா said...
:)//
உங்க சிரிப்பின் அர்த்தம் புரியுது இளா ;)
//சாத்திரி said...
கானா பிரபா கட்டாயம் அங்வாட் சூரியக்கோயில் பாத்திருப்பீங்கள்//
வாங்கோ சாத்திரி
அங்கோர்வட், மற்றும் இன்னும் பல ஆலயங்களைப் பார்த்தேன், எல்லாமே தொடர்ந்து படங்களோடு வரவிருக்கின்றன.
பொல் பொற்றின் அராஜகங்கள் தாங்கிய மனித மண்டையோடுகளின் குவியல் இன்னமும் Killing field என்ற இடத்தில் பார்வைக்காக வைத்திருக்கின்றார்கள். அவை அழிக்கப்படவில்லை.
//தஞ்சாவூரான் said...
அட, ஆட்டம் ஆரம்பிச்சாச்சா? :)//
வந்தவுடனேயே ஆட ஆரம்பிச்சிட்டோம்ல ;)
என்ன புததரின் மூக்கா... உங்களின் மூக்கா பெரியது என்று பாக்கிறதுக்கா படம் எடுத்தனீங்கள்?... படம் நல்லாய் இருக்குது...
நீண்ட நாட்களின் பின்னர்... எனது படிப்புத் தொடர்பான கட்டுரைய அவசர அவசரமாக முடித்துவிட்டு உங்கட தொடரை வாசிப்பமெண்டால்... என்னையுமெல்லே நற நற எண்டு கடிக்க வைச்சுப் போட்டீங்கள்
//இலவசக்கொத்தனார் said...
எல்லாரும் அவசரப்படுத்தறாங்களேன்னு ஓடாதீங்க. நின்னு நிதானமா எல்லா விபரமும் சொல்லிக் கூட்டிக்கிட்டுப் போங்க.//
வாங்க நண்பா
இந்தத் தொடரை இனிமேல் கம்போடியா போகும் அன்பர்களுக்குத் தேவையான குறிப்புக்களோடு, வரலாற்றுச் சங்கதியையும் சேர்த்துக் கொடுக்கவிருக்கின்றேன். எனவே இயன்றவரை நிதானித்து, முழுமையாகக் கொடுக்கவேண்டும் என்பதே என் ஆசையும்.
//.:: மை ஃபிரண்ட் ::. said...
நாங்களும் உங்க சுற்றுலாவில் இணைஞ்தாச்சு.. சீக்கிரம் கிளம்புங்க. :-)//
ரொம்ப நன்றி சிஸ்டர் ;-)
//Haran said...
என்ன புததரின் மூக்கா... உங்களின் மூக்கா பெரியது என்று பாக்கிறதுக்கா படம் எடுத்தனீங்கள்?... //
மூக்கின் மேல் கோபம் வரவைக்காதேங்க தம்பி. எப்படிப் படிப்பெல்லாம் போகுது ;-)
இரண்டொரு நாளில் தொடரும் பதிவு
அன்பின் கானாபிரபா,
மிக நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு பயணக்கட்டுரை படித்து உங்களுடனே பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இறுதிப் பந்தியில் இப்படிப் பதறவைத்தல் தகுமா நண்பரே?
வணக்கம் ரிஷான்
இந்த வாரமே அடுத்த பதிவும் வரும், வருகைக்கு நன்றி ;)
//மலேசியா, சிங்கப்பூருக்கு மேலதிக விசா தேவையில்லாமல் இருந்தது. கம்போடியாவுக்கு மட்டுமே விசா எடுக்கவேண்டியிருந்தது. //
இந்திய கடவுச்சீட்டுக்கு தலைகீழ் .மலேசிய ,சிங்கப்பூருக்கு விசா எடுத்துச் செல்ல வேண்டும் .ஆனால் கம்போடியாவுக்கு விசா எடுக்காமல் சென்று விமான நிலையத்தில் விசா பெற்றுக்கொள்ளலாம் ( 20 அமெரிக்க டாலர்கள்)
உங்களது எல்ல்ல்ல்ல்ல்லா பதிவுகளுமே ரொம்ப அழகாக இருக்கிறது பிரபா...keep writing
வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி லதா
started reading this ullathal today. this is nice. Whats the meaning of கோதிரி?
Post a Comment