Social Icons

Pages

Tuesday, December 19, 2006

நான் சந்தித்த வலைப்பதிவர்கள்


இந்த ஆண்டு முடிவுக்குள் இந்த வருஷம் நான் சந்தித்த வலைப்பதிவு சந்திப்புக்களை ஒரு தொகுப்பாகப் போட ஆசை வந்தது. பேனா நட்பின் பரிணாம வளர்ச்சி போலத்தான் இந்த வலைப்பதிவு சந்திப்பையும் நான் பார்க்கின்றேன். ஒத்த சிந்தனையோ, ரசனையோ இந்த வலைப்பதிவு சந்திப்புக்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டாலும், ஒவ்வொருவருடைய ரசனைகளோ, சிந்தனைகளோ தனித்து நிற்பதும் அதனால் வரும் சில விசனங்களையுமே வலைப்பதிவு சந்திப்புக்கள் குறித்த பதிவுகளில் அதிகம் பார்க்கின்றேன். ஆனால் நான் சந்தித்த ஓவ்வொரு சந்திப்பையுமே கருத்துப் பரிமாறலுக்கான களமாக அல்லாமல் நட்பு ரீதியான அறிமுகப்படுத்தல்கள் என்ற ரீதியில் எதிர்பார்ப்பு இருந்ததால் எல்லாமே இனிய அனுபவமாக இருந்திருக்கின்றன.

ஒரு சமூக மாற்றத்துக்கான அல்லது ஒத்த சிந்தனைகளின் செயல்வடிவமாக இவ்வலைப்பதிவு சந்திப்புக்கள் அமையும் காலம் வருமா என்பது கூடச் சந்தேகமே. 2004, 2005, 2006 என்று அவ்வப்போது சுனாமியாக வந்து வலைப்பதிவு உலகம் அலுத்து இன்னொரு புதிய முயற்சியில் இறங்கும் பாங்கில் தானே பெரும்பாலான வலைப்பதிவர் செயற்பாடுகள் இருக்கின்றன.சரி சரி, இனி விஷயத்துக்கு வருவோம்.

மார்ச் 30 2006 வியாழக்கிழமை மாலை 6.00 மணி


வலைப்பதிவு சந்திப்பு என்ற வகையில் முதலில் பிள்ளையார் சுழி போட்டது என் மார்ச் 2006 பெங்களூர் விஜயத்தின் போது கோ.ராகவனுடான சந்திப்பு. பனர்கட்டாவில் இருந்த என் Oracle அலுவலகத்திலிருந்து மெயில் போட்டு தொலைபேசி உறுதிப்படுத்தி ஒரு மாலை இளவெயில் நேரம் சந்திப்பதாக முடிவானது. Bangalore Forum இல் இருக்கும் பி.வி.ஆர் சினிமாவின் கோல்ட் கிளாஸ் டிக்கற் கவுண்டருக்கு முன் நிற்குமாறு பணித்த வேண்டுகோளின் படி ராகவனும் காத்திருந்தார். கையில் வேலோடு இருப்பார் என்று பார்த்தால் ஆங்கில நாவலோடு நின்றிருந்தார்.


சினிமாவின் முன்னாக நின்று கொண்டே வலையுலகம் பற்றியும் பாரதி பற்றியும் பேசினோம். ஆன்மீக, இலக்கிய விஷயங்களில் பதிவு எழுதும் ராகவன் தன் எழுத்தைப் போலவே பண்பாக இருந்தார். சில பதிவுகளில் நான் ஈழத்துப் பேச்சுவழக்கைப் பயன்படுத்தும் போது வாசிக்கச் சிரமமில்லையா என்று நான் கேட்டபோது, உங்கள் பதிவில் வரும் உங்களூரின் சோகச் செய்தியைச் சொல்லும் போது மொழி தடையாக இருக்கவில்லை, புரிந்தது என்றார்.


அடுத்து லாண்ட் மார்க் என்ற பல்லங்காடி சென்று புத்தகங்களை மேய்ந்தோம், நமது ரசனைக்குட்பட்டவை அவ்வளவாக இல்லை என்று சினிமா சீ.டீ பக்கம் நகர்ந்தோம். 80 களில் வெளிவந்த சினிமாப் படங்களில் என் கண்கள் போனது, தூரத்து இடி முழக்கம் உட்பட சில படங்களை வாங்கியது என்னவோ ராகவன் தான். காடு (கன்னடம்), மதிலுகள் (மலையாளம்) தேடி என் கண்கள் சலித்தன. சத்தியஜித் ரேயின் கிளாசிக் கலக்சனில் சில டீ.வீ.டிகளை வாங்கினேன்.

ஏதாவது சாப்பிடுவோமா என்றால் எனக்கோ சிட்னி நேரத்துக்குத்தான் பசியெடுக்கும். எனவே இரண்டு கப்பசினோ வாங்கினோம், குளோபஸ் (Globus) சென்று உடுப்பு வகையறாக்களை ஏறெடுத்துப் பார்த்துச் சலித்து அவரவர் வழியில் போக முடிவெடுத்தோம். என்னை ஒரு ஆட்டோவில் என் ஹோட்டலுக்கு வழியனுப்ப ஒழுங்கு செய்துவிட்டு கையில் ஒரு ஆங்கில நாவலோடு ராகவன் தன் பாதையில் பஸ் தேடிச் சென்றார்.ஆக மொத்தத்தில் எமது சந்திப்பு ஒரு நடமாடும் சந்திப்பாக அமைந்துவிட்டது. ஒரு நல்ல வங்க மொழிப்படம் தன்னிடம் இருப்பதாகவும் அடுத்தமுறை வரும் போது தருவதாகவும் சொன்னார் ராகவன். சமயம் வாய்க்கவில்லை இன்னும்.

யூன் 10, 2006, சனிக்கிழமை காலை 10.30 மணி


பெங்களூரிலிருந்து வரும் போது ஒரு நாள் சிங்கப்பூரின் தங்குவதாக முடிவெடுத்தேன். ஆசிய நாடுகள் பலவற்றிற்குச் சென்றாலும் சிங்கப்பூருக்கு இன்னும் செல்லவில்லை என்று வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. எனவே அந்த குறையும் இந்தப் பயணத்தோடு தீர்ந்தது. ( முழுப்பயண விபரம் உலாத்தல் பதிவில் எதிர்காலத்தில் வரும்).
சிங்கப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது (மன்னிக்கவும் விளம்பரம் அதிகம் கேட்ட பாதிப்பு) ஈழநாதன். பெங்களுரில் வைத்து ஈழநாதனுக்கு மடல் ஒன்றைத் தட்டியதன் விளைவு அவரும் ஆவலோடு நான் தங்கியிருந்த Pan Pacific ஹோட்டலுக்கு வந்தார்.


நேராக அவர் என்னை அழைத்துப் போனது சிங்கப்பூர் நூலகத்துக்கு. அங்கு அருகில் உள்ள கலையரங்கில் சிங்கபூர் அரசின் அனுரசணையுடன் பல்லின மக்களின் கலைநிகழ்ச்சி வாரமாக அமைந்திருந்தது அது. சிங்கப்பூர் என்றால் வெறும் வர்த்தக நகரம் என்ற இமேஜை மாற்றும் அரசின் ஒரு கட்ட நடவடிக்கையே இந்தக் கலைநிகழ்ச்சி ஏற்பாடுகளும் ஊக்குவிப்புக்களும் என்றார் ஈழநாதன்.சிங்கப்பூர் நூலகம் சென்றபோது ஓவ்வொரு புத்தகப் பிரிவினையும், சினிமா சம்பந்தப்பட்ட வாடகைக்கைக்கு விடும் சீடிக்கள் பற்றியும் விரல் நுனியில் தகவல்களை வைத்துக்கொண்டே பேசிக்கொண்டு வந்தார். ஆளுக்கும் நூலகத்துக்கும் நல்ல பொருத்தம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்

சிராங்க்கூன் சாலை சென்று ஒரு உணவகத்தில் மீன், கணவாய், இறாலுடன் ஈழநாதன் உபயத்தில் (பெடியன் என் காசுப்பையைத் திறக்கவிட்டாத் தானே?) ஒரு வெட்டு வெட்டினோம். காலாற சிராங்கூன் சாலையை அளந்தவாறே புத்தகம், நாட்டு நடப்பு, வலையுலகம் என்று பேசித் தீர்த்தோம்.

முஸ்தபா சென்டர் சென்று சீ.டிக்களின் பிரிவுக்குள் சென்று ஒவ்வொரு சீ.டியாகத் துளாவினோம். நல்ல சீனத்திரைப்படங்களை ஈழநாதன் அடையாளம் காட்டினார். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா (மலையாளம்) வீ.சி.டியையும், அச்சுவின்டே அம்மா மலையாள இசை சீ.டி (இளையராஜாவுக்காக) நான் வாங்கவும் நம் சந்திப்பும் பிரியாவிடை கொடுத்து நிறைவேறியது. நிறைய வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும் என்பதற்கு தன் இளவயதில் நல்ல இலக்கிய சிந்தையுள்ள ஈழநாதன் ஒரு உதாரணம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

ஜூன் 6, 2006, செவ்வாய்க்கிழமை, மாலை 6.30 மணி


மீண்டும் மே மாதம் அலுவலக வேலையாக பெங்களூர் பயணம், அப்போது சந்திக்கவேண்டும் என்று நினைத்துக் கைகூடியவர் செந்தழல் ரவி. நம் அலுவலகத்தில் தான் முதலில் சந்திப்பதாக இருந்தது பின்னர் ரவி நான் தங்கியிருந்த லீலா பலஸிற்கு பக்கமாகத்தான் தன் வீடு இருப்பதாகச் சொல்லி என் ஹோட்டலில் சந்திப்பதாக முடிவானது. கூடவே ஆதிமூலம் என்ற நணபரையும் அழைத்துக் கொண்டு தன் மோட்டார் சைக்கிளில் ரவி வந்தார்.

ரவி மைக்கல் மதன காமராஜனில் வரும் காமேஸ்வரன் பாண்ட் சட்டையுடன் இருப்பது போலத் தென்பட்டார். குறும்பான அவர் பதிவுகளைப் போல மிகவும் ஜாலியாக முதற் சந்திப்பிலேயே பேசினார்."இப்ப தான் ப்ரண்டு ஒருத்தனுக்கு இன்டர்வியூ கோச்சிங் கொடுத்திட்டு வர்ரேன், நாழியாயிடுச்சு" என்றார், (கவனிக்கவும் வேலைவாய்ப்பு பதிவின் முன்னோடி.

"என்னங்க பிரபா, சிங்களரும் தமிழரும் ஒரே மொழி பேசிக்கிட்டு ஒரே கடவுளக் கும்பிட்டு எதுக்குங்க சண்டை போட்டுக்கிறாங்க"
என்று ரவியின் நண்பர் ஆதிமூலம் அநியாயத்துக்கும் அப்பாவியாகக் கேட்டார்.
பொறுமை பொறுமை என்று என் மனம் கட்டளையிட ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக நான் பதிலளித்துக் கொண்டிருக்க பக்கத்தில் அமரந்திருந்த ரவியின் கண்கள் ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்த பெண்களோடு கடலை போட்டுக்கொண்டிருந்தது. தலைவர் தன் முயற்சியில் சற்று முன்னேறி ஒரு பெண்ணிடம் தீப்பெட்டி வாங்கி (தீப்பிடிக்க....தீப்பிடிக்க) தம் அடித்தார்

இரவு உணவை எங்காவாது வெளியில் எடுக்கலாம் என்றெண்ணி சாலிமர் ஓட்டலிற்கு (Hotel Shalimar) இட்டுப் போகுமாறு என் கார்ச்சாரதிக்குப் பணித்தார் ரவி. வழக்கமாக ஓட்டல் நந்தினியில் ஆந்திரச் சுவைதேடி அலைந்த எனக்கு சாலிமர் ஓட்டலின் அமைப்பும் விருந்தோம்பலும் பிடித்தது. சிரிக்கச் சிரிக்கப் பேசினோம். தமிழக சஞ்சிகைகள் புகட்டிய பாடதில் என் தமிழக அரசியல் சமூக அறிவை வளர்த்துக்கொண்ட நான் அவ்வப்போது அவை பற்றிப் பேசும் போது

" எப்டீங்க சிலோன்காரரா இருந்துக்கிட்டு இதெல்லாம் தெரியுது" என்று வாய்க்குள் புதைந்த ப்ரைட் ரைசை மீறி நண்பர் ஆதி வாய் பிளந்தார். ரவி வழக்கம் போல் கல கல சம்பாஷணை. எல்லாவற்றையும் சொல்லமுடியாது தணிக்கை செய்யப்பட்டுள்ளது.ரவியோடு பேசிய அந்த நிமிடங்கள் ஊரில் என் சகவகுப்புத் தோழனோடு பழகிய இனிய அனுபவமாக இருந்தது.


சம்பிரதாயமாகப் பரிமாறிய சில சைட் டிஷ் தீர்ந்து மீண்டும் ஆடர் பண்ணும் போது சர்வர் அலுப்போடு மெதுவாக நெளிந்தவாறே கொண்டுவந்தார். (எதுக்கு அடிக்கடி சைட் டிஷ் என்பதற்கும் பதில் சொல்லமுடியாது)

லீலா பாலஸ் திரும்பும் போது என்னை வழியனுப்பிய ரவி கொஞ்சத் தூரம் போய் மீண்டும் வந்தார். என் ஜாக்கெட்டை மறந்து போய் வச்சிட்டேன் என்று மீண்டும் வந்து ரிஷப்ஷனில் இருந்த பெண்ணிடம் கடலை போட்டார். ஜாக்கெட் பத்திரமாகக் கொடுக்கப்படவும் "தாங்க்ஸ்" என்றவாறே முறுவலோடு ரவி.
பக்கத்தில் அப்பாவி கோயிந்து வாக நண்பர் ஆதி.
நானும் எனக்குள் சிரித்தவாறே என் ஹோட்டல் அறைக்குத் திரும்பினேன். ரவியை நினைக்கையில் மன்மத லீலையில் கமல் குதிரையில் ஏறி ஸ்லோமோஷனில் பின்னே போவது போலப்பட்டது

உலாத்தல் கேரளப் பயணம் சிட்னி சந்திப்பு வலைப்பதிவிற்குப் பின் தொடரும்...,

16 comments:

G.Ragavan said...

தொடக்கமே நாந்தானா! கிட்டத்தட்ட பத்து மாதங்கள். அப்பொழுதும் மொட்டை. இப்பொழுதும் மொட்டை. பதிவுக்குப் பொருத்தமா :-)

கையில வெச்சிருந்த புத்தகம்....பஸ்சுல வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் படிக்க.

அன்றைக்குப் பேசியவைகளை இன்னும் நினைவு வெச்சிருக்கீங்களே. சூப்பர் நினைவாற்றல்.

நான் சொன்ன அந்த வங்க மொழிப்படம் பஞ்சரமேர் பாகான். பஞ்சரத்தின் தோட்டம் என்று பெயர். மிகச்சிறந்த படங்களில் அதுவும் ஒன்று. அடுத்து பெங்களூர் வருகையில் சொல்லுங்கள். ஒரு காப்பி போட்டு விடலாம்.

கானா பிரபா said...

வணக்கம் ராகவன்

முதற் போணி நீங்க தான். அடுத்த வருஷம் வரும் போது கட்டாயம் இன்னொரு சந்திப்புடன் உங்களிடமிருந்து சுட்ட படம் பஞ்சரமேர் பாகான் கைப்பற்றுகின்றேன்.

ரவி said...

மறுபடி வந்த அந்த ஹோட்டல்ல தான் தங்குவீங்களா :))))

உங்களை சந்தித்தபிறகு ஆதி அவசர அவசரமாக ஒரு பதிவு எல்லாம் ஆரம்பித்தார்...பிறகு அதை மெயிண்டெய்ன் செய்யமுடியவில்லை என்று வழக்கம்போல அனானி பின்னூட்டம் போட ஆரம்பித்துவிட்டார்...(இப்போது ஆதி லண்டனில்)...(ஐப்பி கவுண்டர் இருக்கா உங்களிடம் )

அடுத்தமுறை பெங்களூர் வரும்போது ஜி.ரா "பஞ்சமா பாதகன்" படத்தை காப்பி செய்யும்போது எனக்கு ஒரு காப்பி கொடுப்பாரா என்றும், சிடியை காப்பி செய்வது காப்பிரைட் சட்டப்படி குற்றம் என்றும் இங்கே பதிந்து வைக்கிறேன்...

அந்த தீப்பெட்டியை அப்படியே ( யார் நினைவாக !!) வைத்துள்ளேன் !!

ஹோட்டல் பெயரெல்லாம் அப்படியே நியாபகம் வைத்து சொல்றீங்களே !!! சூப்பர்...

கானா பிரபா said...

மறுபடி வந்தா நிச்சயம் அந்த ஹோட்டல் தான் தல:-)

வங்க மொழிப்படத்தைப் பஞ்சமா பாதகன் ஆக்கிட்டீங்களே. ஆதியும் வலைப்பக்கம் வாலாட்டுகிறாரா, ஐயோ:-(

தீப்பெட்டி காதல் கடிதம் எழுதிய உறவா:-))

மறக்கமுடியுமா ஷாலிமரை

நெல்லைக் கிறுக்கன் said...

உங்க பெங்களூர் சந்திப்பு பத்தின செய்திகள் ரொம்ப நல்லா இருக்கு. நீங்க பெங்களூர் வந்த நேர்ம் நானும் அங்க தான் இருந்தேன். ஆனா நாம் சிட்னியில தான் சந்திக்கனும்னு இருந்திருக்கு போல...

Divya said...

கானா பிரபா, நீங்க சந்திச்ச வலைப்பதிவர்களின் சந்திப்பு பற்றி ஸ்வாரஸ்யமாக எழுதியிருகிறீங்க,
ரவி இவ்வளவு ஜாலியான ஒரு ஆளுன்னு உங்க பதிவு படிச்சுதான் தெரிந்தது!!

Anonymous said...

நாடு நாடா வலைப்பூ நண்பர்களை சந்திச்சிருக்கீங்க போல...

மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்..

கானா பிரபா said...

வணக்கம் நெல்லைக்கிறுக்கரே

நம்ம சிட்னி சந்திப்பு அடுத்த பதிவில் போட இருக்கிறேன். வருகைக்கு நன்றி

கானா பிரபா said...

// Divya said...
ரவி இவ்வளவு ஜாலியான ஒரு ஆளுன்னு உங்க பதிவு படிச்சுதான் தெரிந்தது!! //


வணக்கம் திவ்யா

ரவி தன் எழுத்துப்போலவே குறும்புக்காரர்:-)

கானா பிரபா said...

//ஜி said...
நாடு நாடா வலைப்பூ நண்பர்களை சந்திச்சிருக்கீங்க போல...//

சரியாச் சொன்னீங்க ஜீ , வலையுலகிற்கு வந்த ஒரே வருஷத்தில் இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன.

G.Ragavan said...

// அடுத்தமுறை பெங்களூர் வரும்போது ஜி.ரா "பஞ்சமா பாதகன்" படத்தை காப்பி செய்யும்போது எனக்கு ஒரு காப்பி கொடுப்பாரா என்றும்,//

ரவி, உங்களுக்கு நான் பஞ்சமா பாதகன் குடுத்தால் அது திருநெல்வேலிக்கே அல்வா போல அல்லவா :-))))) அந்தப் பாதகத்தை நான் செய்ய மாட்டேன். ஹா ஹா

// சிடியை காப்பி செய்வது காப்பிரைட் சட்டப்படி குற்றம் என்றும் இங்கே பதிந்து வைக்கிறேன்...//

காப்பி ரைட்டுங்குறீங்களா? சரி..இன்னைக்கே ஒரு காப்பி குடிச்சிர்ரேன். சரிதானா?

Anonymous said...

கானா பிரபா, அருமையாக நல்ல நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள். அனைவரையும் நல்லா அளந்திருக்கிறீர்கள். சிட்னிப் பதிவு வரட்டும் பாப்பம்.

சின்னக்குட்டி said...

.வணக்கம்.பிரபா.... வலைபதிவர் சந்திப்பு பற்றிய பதிவுக்கு நன்றிகள்.....தொடருங்கள்.

கானா பிரபா said...

சிறீ அண்ணா, மற்றும் சின்னக்குட்டி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

கலகல்ப்பான சந்திப்புகள்..

வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..

Anonymous said...

வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துக்கள்!